நடப்பது ராமராஜ்ஜியம் ஒற்றுமையற்ற தேசியம்
-கவிஞர் கலி.பூங்குன்றன்
குடியரசு தின விழாவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருந்த மதச்சார்பின்மை, சமத்துவம் என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை.
1. இது குறித்து சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறும்போது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு சார்பாக வெளியான விளம்பரத்தில் அரசியலமைப்பின் முகவுரை மதச்சார்பின்மை, சமத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது கவனக்குறைவாக நடந்திருந்தாலும் இது வரவேற்கக்கூடியது என்று கூறியதுடன் இந்திய அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். (28.1.2015)
2. மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோட், அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலகட்டத்தில் இந்த வார்த்தைகள் இடம்பெறவில்லை. 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆரம்ப கால நடைமுறைதான் தற்போது பின்பற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய வார்த்தைகள் இல்லாமல் விளம்பரங்கள் வந்துள்ளன என விளக்கம் அளித்தார். (29.1.2015)
3. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், அரசு விளம்பரத்தில் வெளியிடப்பட்டது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரிஜினல் முகப்புரை. அது நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டது. அதில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகள் இல்லை. அவசரநிலை சமயத்தில்தான் இந்த இரு வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன. இந்த வார்த்தைகள் அரசியலமைப்புச் சட்ட முகப்புரையில் இடம் பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம் என்றார். (29.1.2015)
4. மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அளித்த பேட்டியில், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை பா.ஜ. முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறது. மதச்சார்பின்மை இந்தியர்களின் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. அதை அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விளம்பரங்களின் மூலம்தான் நிரூபிக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறினார். (30.1.2015)
5. இது தொடர்பாக பாரதீய ஜனதா நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கத்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்று விளக்கம் அளித்துள்ளது. (30.1.2015)
அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை அமைப்பையே தகர்க்கும் ஒரு வேலையில் மத்திய அமைச்சர்களே ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் முரண்பாடாகப் பேசித் தள்ளுகின்றனர். ஆனால், பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடியோ இதனைக் கண்டு கொள்வதில்லை என்பது ராஜதந்திரமன்று. மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்ற பழமொழியைச் சார்ந்தது.
மதச்சார்பின்மை குறித்து 6 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பு ஒன்றினைத் திட்டவட்டமாக வழங்கியுள்ளது. (14.3.1994)
ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதக் கிளைகள் பற்றியோ ஆட்சியின் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதத்தைக் கலக்கக்கூடாது. அரசுப் பிரச்சினைகளில் மதத்துக்கு இடம் இல்லை.
எந்த ஒரு மாநில அரசும் மதச்சார்-பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ, மதச்சார்பின்மைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதோ அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு!
என்று அந்த அமர்வு ஒருமனதாக வரையறுத்துக் கூறிவிட்டது.
அப்படி இருக்கும்போது அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்ட மதச்சார்பின்மை (Secular) என்ற சொல்லையே தூக்கி எறிந்துவிட்டு அதிகாரப்பூர்வமாக குடியரசு விழாவிற்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு மோசமான செயல்!.
இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு விரோதமாக மாநில அரசு நடந்து கொண்டால் அரசமைப்புச் சட்டம் 356ஆம் பிரிவைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் கலைக்கலாம் என்றால், அதே விதி மத்திய அரசுக்கும் பொருந்தாதா என்பது மில்லியன் டாலர் கேள்வியே!
மதச்சார்பின்மைக்கு விரோதமாக ஆளும் பி.ஜே.பி.யும், அதனை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சும் எப்படி எப்படியெல்லாம் வார்த்தை நச்சுக் கட்டிகளைக் கொட்டுகின்றன -_ செயல்படுகின்றன! இதோ ஒரு சிறு பட்டியல்!
மோகன் பகவத் பேச்சுகள்
ஆகஸ்ட் :
இந்த நாடு இந்து நாடு, இங்கு உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள், ஒருவர் முஸ்லீமாகவோ, கிறித்தவராகவோ இருக்கலாம். அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் இந்த நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே, அவர்கள் இந்துக்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.
அக்டோபர் :
ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை கேசரி, நாதுராம் கோட்சே காந்தியைக் கொல்வதற்குப் பதிலாக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவைக் கொலை செய்திருக்க வேண்டும்.
என்று எழுதியது. ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன்பகவத் பேச்சை விதிமுறைகளை மீறி தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.
நவம்பர்:
இந்துக்கள் அனைவரும் தங்களது பெண்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்நிய மதத்தவனைக் காதலிக்கும் இந்துப் பெண்கள் சரியான முறையில் வளர்க்கப்படாதவர்கள். இந்து மதம் மாறுவது தவறல்ல, அது வழிதவறி வேறு மதத்திற்குச் சென்றவர்கள் தங்கள் தாய்மதம் திரும்புவதை மதமாற்றம் என்று சொல்லக்கூடாது. இந்துக்கள் பிறமதம் மாறுவதுதான் மதமாற்றம். (ஆக்ராவில் பேசியது.)
பாகிஸ்தானையும் இந்து நாடாக மாற்ற வேண்டும்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மதரீதியாக எழும் அச்சுறுத்தல்களின் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதை ஒப்புக்-கொண்டு, மோகன் பகவத் பேசிய பேச்சு: இந்த நாடு இந்து தேசம், இங்கு இருப்பவர்கள் அனைவரும் இந்துக்களே, தற்போது இந்து அரசு அமைந்துள்ளது, இதன் காரணமாக இந்து மதத்திற்குத் திரும்புகின்றனர்.
இஸ்லாமிய அரசர்கள் தங்களின் கத்திமுனையில் மக்களை மிரட்டி கட்டாயமாக இஸ்லாம் மதத்தை ஏற்க வற்புறுத்தினர். ஆனால் அவர்களின் கத்தியின் வலிமை இந்துக்களின் முன்பு தோற்றுவிட்டது. அதனால்தான் அவர்களால் அதிக மக்களை முஸ்லீம்களாக மாற்றமுடியவில்லை.
அதே நேரத்தில் அய்ரோப்பியர்கள் ஏழை இந்துக்களை ஏமாற்றி அவர்களுக்குப் பணத்தாசை மற்றும் தேவையற்ற கல்வியினைக் கொடுத்து ஏமாற்றியதன் விளைவாக அவர்கள் வேற்று நாட்டு மதமான கிறித்தவத்தை ஏற்றுக்-கொண்டனர்.
இத்தனை ஆண்டுகளாக இந்து அமைப்புகளை இயங்கவிடாமல் சில அந்நிய சக்திகள் முயன்றுகொண்டு இருந்தன. தற்போது இந்து அரசு அமைந்துவிட்டது. தற்போது இந்துநாடு விழித்துவிட்டது. இந்து அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படலாம். இந்து அமைப்புகளை எதிர்ப்பவர்கள் இந்த நாட்டின் எதிரிகள் ஆவர்.
நாங்கள் இப்போது இந்து நாட்டை உருவாக்க முயன்றுகொண்டு இருக்கிறோம். எங்களுக்கு இந்து நாடுதான் தேவை, மதச்சார்பின்மை என்பது வாக்கிற்காக நடக்கும் ஒரு ஏமாற்று வேலையாகும், எந்த நாடும் மதத்தைச் சார்ந்தே உள்ளது. அய்ரோப்பாவில் கிறித்தவ நாடு, அரபுகளின் முஸ்லீம் நாடு அப்படி இருக்க இந்து நாடு என்றால் மட்டும் இங்கே சிலருக்குக் கோபம் வருகிறது.
இந்து நாட்டை உருவாக்க முதலில் அனைவரையும் இந்துக்களாக மாற்ற வேண்டும். அதைத்தான் தற்போது செய்துவருகிறோம். மதமாற்றம் எங்களின் அனுமதியுடன்தான் நடக்கிறது, நாங்கள்தான் முன்னின்று செய்துவருகிறோம்.
உங்களுக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை என்றால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவாருங்கள். அதன் பிறகு பார்க்கலாம், இங்கு எந்த அந்நிய மதம் துணிந்து செயலாற்றும்?
பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு முன்பு இந்து நாடுதான், பீஷ்மர் புண்ணிய பூமி, தருமன் தனது வாழ்நாளில் நீண்ட ஆண்டு பாகிஸ்தானில்-தான் வாழ்ந்தார். இவ்வளவு புகழ்வாய்ந்த அந்த நாடு, என்று இந்துக்களின் நாடாக மாறுமோ அப்போதுதான் அங்கே அமைதி ஏற்படும். பாகிஸ்தானை இந்து நாடாக மாற்றும் நடவடிக்கையில் விரைவில் வெற்றி பெறுவோம்.
இந்தியாவில் அந்நிய மதத்தவர்கள் இருக்கும் வரை இந்த நாடு அமைதியுடன் இருக்காது. இந்த நாட்டின் அனைத்து மக்களையும் இந்துக்களாக மாற்ற நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.
கடைசிக் குடிமகன் வரை இந்துவாக மாற்ற நாங்கள் துணை நிற்போம்.
முடிந்தால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்து பாருங்கள் என்று தன்னுடைய உரையில் கூறினார். (டிசம்பர் 21, 2014)
2015 ஜனவரி 5,6,7ஆம் தேதிகளில் அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில், இந்துக்களாக மாற்றுவதை யாரும் தவறு என்று கூறினால், அந்தத் தவற்றை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் வெறியூட்டும் முத்துகள்!
முசாபர் நகர் கலவரத்தில் இந்துத்துவ வாதிகளின் பேச்சு
முசாபர் நகரில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள் _ அமித் ஷா (2014 மார்ச்சில் பேசியது.)
இந்துக்கள் மீது கைவைத்த ஒரு முஸ்லீமும் இங்கு இருக்க வேண்டுமா இல்லையா என்பதை இந்துக்கள் முடிவு செய்வார்கள் (ஆதியநாத் யோகி தேர்தல் பரப்புரையின் போது)
இந்துப் பெண்களை முஸ்லீம்கள் ஏமாற்றி அவர்களைத் தங்களின் இச்சைக்குப் பயன்படுத்தி பிறகு அவர்களை முஸ்லீம்களாக மாற்ற வற்புறுத்துகிறார்கள். குஜராத், அஸ்ஸாம் தற்போது முசாபர் நகர். இவையெல்லாம் மறக்க வேண்டாம், மீண்டும் ஒரு குஜராத் நிலைமை வேண்டுமா? (முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுகிறார் பிரவீன் தொகாடியா -_ மார்ச் 27 2014)
ஒரு இந்து பாதிக்கப்-பட்டால் 10 முஸ்லீம்களைப் பழிவாங்க வேண்டும். இது உண்மையான இந்துக்களின் கடமை _ சங்கித் சோம். (முசாபர் நகர கலவரத்தின் சூத்திரதாரி) பா.ஜ.க. எம்.எல்.ஏ. தற்போது இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. (ஏப்ரல் 2014)
இந்துக்கள் அனைவரும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் _ கிரிராஜ் சிங் _ பிகார் தேர்தல் பொதுக்-கூட்டத்தில் பேசியது _ மே 2, 2014
இந்துக் கோவிலின் ஒரு பகுதியே தாஜ்மகால் _ உத்தரப்பிரதேச மாநில பி.ஜே.பி. தலைவர் காந்த் பாஜ்பாய் (தினமணி 8.12.2014)
ஆதித்யநாத் ஜோதியின் மதவெறிப் பேச்சு
ஒரு இந்துப் பெண்ணை முஸ்லிமாக மாற்றினால் நாம் நூறு முஸ்லிம் பெண்களை இந்துக்களாக மாற்ற வேண்டும்.
சாத்வி நிரஞ்சன் ஜோதி
டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், இந்தியாவில் ராமனை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகள் (ராம் ஜாதி). ராமனை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் (ஹராம் ஜாதி) முறைதவறிப் பிறந்தவர்கள் என்று பேசினார்.
பகவத் கீதை இந்தியாவின் புனித நூல்
டிசம்பர் மாதம் முதல் வாரம் டில்லியில் பகவத் கீதை தொடர்பான விழா ஒன்றில் பேசிய மத்திய வெளிவிவகாரத்-துறை அமைச்சா சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் புனித நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். (டில்லி 8.12.2014)
கிரிராஜ் சிங்
மோடியை ஆதரிக்காதவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குச் சென்றுவிடவேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்த கிரிராஜ் சிங், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு பிகார் மாநிலத்தில் முக்கியப் பொறுப்பு வழங்கப்-பட்டது.
இவரது வீட்டில் இருந்து கடந்த ஜூலை மாதம் கோடிக்கணக்கான கணக்கில் வராத ரூபாய் காவல்துறையினரால் கைப்பற்றப்-பட்டது. கொலைகள் பல புரிந்த ரன்வீர்சேனா அமைப்பின் முக்கியமான ஆதரவாளர்களில் இவரும் ஒருவர்.
அசோக் சிங்காலின் அநாகரிக உளறல்கள்
மதமாற்றம் தொடர்பான சிக்கலில் நாடு மூழ்கிக்-கொண்டு இருக்கும்போது மேலும் மக்களிடையே அச்சத்தை உண்டுபண்ணும் விதமாக, முஸ்லீம் மற்றும் கிறித்தவர்களால்தான் நாட்டில் வன்முறைகள் நிகழ்கின்றன என்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், நமது நாடு மிகவும் புனிதமான நாடு ஆகும். இந்தப் புனிதத்தை முஸ்லீம் மற்றும் கிறித்தவர்கள் களங்கப்படுத்திவிட்டனர். நடக்கும் எல்லா வன்முறைகளுக்கும் காரணம் கிறித்தவர்களும் முஸ்லீம்களும்தான்.
நமது நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரால் வன்முறைக்கு ஆளாகியுள்ளது. மேலைநாடுகள் பணபலத்தால் கிறித்தவத்தின் பெயரால் பிறநாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இஸ்லாமியர்கள் தங்களது மதத்தின் பெயரால் ஆங்காங்கே மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.
மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், தற்போதைய அரசு இந்துக்களுக்கு முழுமையாகப் பாதுகாப்புக் கொடுத்து வருகிறது. இந்த அரசின் காலத்திலேயே நாம் அனைத்து அந்நிய மதத்தவரையும் இந்துக்களாக மாற்ற வேண்டும். தற்போது மோகன் பகவத் அவர்கள் திறந்த மனதுடன் மதமாற்றத்திற்கு ஆதரவு தந்திருக்கிறார்.
இது எங்களுக்குப் புதிய ஒரு ஆற்றலைத் தந்திருக்கிறது. ஆகையால் இனி நாங்கள் முழு வீச்சுடன் செயல்படுவோம் என்று கூறினார். (Navbharat Times 21.12.2014)
நேருவைக் கொன்றிருக்க வேண்டும்!
வரலாற்றைக் கொஞ்சம் நியாயமான மனதுடன் திரும்பிப் பார்த்தால் இந்தியா பிரிவினைக்கு உள்ளானதையும் கோட்சே குறித்தும் தெளிவான முடிவுக்கு வரமுடியும். அப்போது கோட்சே தவறான மனிதரைத் தேர்ந்தெடுத்து விட்டார் என்ற முடிவுக்குத்தான் மக்கள் வருவார்கள்.
இந்தத் தேசம் கண்ட மிக மோசமான சோகங்களுக்கு நேருதான் காரணகர்த்தாவாக இருந்தார். இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதற்கும், காந்தி கொலைக்கும் நேருவின் சுயநலமே காரணம். கோட்சே நெஞ்சில்தான் சுட்டார். ஆனால் நேருவோ காந்தியின் முதுகில் குத்தினார்.
உண்மையில் கோட்சே நேருவைத்தான் சுட்டிருக்க வேண்டும்.
கேரளா – ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் பி.கோபாலகிருஷ்ணன்
முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள் – பிராசி சாமியாரினி
விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான பிராசி சாமியாரினி, இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெறவேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் அரசியல் தலைவர்கள் கூறினால் தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாகச் சித்தரித்து மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.
இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்துராஷ்டிரம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர்களால் நமக்கு என்றென்றும் தொல்லைதான்.
ஆனால் லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர்கள் 40 குழந்தைகளை நாய்களைப் போல் பெற்றுத் தள்ளுகின்றனர்.
இப்படி நாய்களைப் போல் குழந்தை பெறுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்து ராஷ்டிரத்தின் ஒற்றுமைக்கு 4 குழந்தைகளைப் பெறக் கூறினால், அதை எதிர்க்கின்றனர்.
இனிவரும் காலங்களில் எந்தவிதப் பொய்ப் பிரச்சாரங்களையும் இந்துமக்கள் கவனத்தில் கொள்ளக் கூடாது. அவர்களது கடமை 4 குழந்தைகளைப் பெறுவது மட்டுமே, இதைத் தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் நமது நாடு இந்து நாடாக மாறிவிடும்.
மேலும் 4 குழந்தைகளுக்கு மேல் உள்ள இந்துக் குடும்பங்களுக்குப் பாராட்டும் பணமும் வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து இந்துக்களும் 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடமையுணர்ச்சி வரும். இந்தியாவில் உள்ள முக்கிய முஸ்லீம் தலைவர்கள் அனைவரும் தங்கள் தாய்மதமான இந்துமதத்திற்குத் திரும்பவேண்டும் என்று கூறினார். (IBN LIVE 2.2.15)
அடுக்கடுக்கான அலை அலையான அனல் கக்கும் இந்த விஷ ஊற்றுக்கண்கள் எதைப் போதிக்கின்றன? எவற்றை வெளிப்படுத்துகின்றன? இந்தியாவில் ஜனநாயகத்தின் பேரால் அசல் பாசிச பார்ப்பனீய ஆட்சி ஆயிரம் தலை நச்சுப் பாம்பாகப் படம் எடுத்து ஆடுகிறதே!
சங்பரிவார்கள்தானே பேசுகின்றன _ ஆர்.எஸ்.எஸ்.தானே ஆலகால நஞ்சைக் கக்குகிறது _ பி.ஜே.பி. என்ன செய்யும் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிவிட்டது.
பச்சையாக பி.ஜே.பி. தலைவர்கள் ஆர்.எஸ்.எசுக்கு வக்காலத்து வாங்கிப் பேச ஆரம்பித்து விட்டனர். ஆர்.எஸ்.எஸின் பிரதமருக்கான வேட்பாளர்தான் நரேந்திர மோடி என்பதும் வெள்ளையாகிவிட்டது. முக்கியப் பிரச்சினைகளில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கட்டளையிடுகிறார்.
அமைச்சர்கள்அவரை ஓடி ஓடிச் சந்திக்கின்றனர். ஆலோசனைகளைப் பெறுகின்றனர்.
தொலைக்காட்சி விவாதங்களில் அதற்கு முன்பெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பற்றி பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் பி.ஜே.பி.க்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பில்லை என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்வார்கள்.
பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துவிட்ட இக்காலகட்டத்தில் மிக வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வக்காலத்துப் போட்டு ஜம்பமாகப் பேச ஆரம்பித்துவிட்டனர்.
அதிகாரப்பூர்வமாகச் சொல்ல வேண்டுமானால் 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பி.ஜே.பி.க்குத் தேர்தல் அறிக்கை தயாரித்த குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜேஷி பேட்டி கொடுத்தது நினைவில் இருக்கிறதா?
எந்த விஷயத்தில் இறங்குவதாக இருந்தாலும் அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அறிவுரையைக் கேட்பது எங்கள் வழக்கம். எங்கள் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கம் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி (தினமலர் 13.4.2014) தெளிவு-படுத்திய பிறகு வேறு என்ன இருக்கிறது?
சுருக்கமாகச் சொல்லப்-போனால் இந்துத்துவ _ பாசிச _ பார்ப்பனீய ஆட்சி கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது.
ஒடுக்கப்பட்ட மக்களின் கரங்கள் ஓங்கட்டும். தாழ்த்தப்-பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் தோள்கள் சிறுபான்மை மக்களின் சிரங்கள் கிளர்ந்து எழ வேண்டிய தருணம் இது.
மதச்சார்பின்மை சக்திகள் சுதந்திரப் போராட்டமாகக் கருதிக் கிளர்ந்து எழ வேண்டிய கால-கட்டம் இது.
இந்த ராமராஜ்ஜிய நோய்க்கு உடனடியான தீவிர மூலிகை _ மாமருந்து -_ தந்தை பெரியாரியலே!
ஒரு நூற்றாண்டுக்கு முன்னே ராமனைத் தோலுரித்தவர் _ ராமர் படத்தை எரித்தவர் பெரியார்!- ராமராஜ்ஜியத்தின் எதிர் தத்துவம் தந்தை பெரியார் ராமசாமி ராஜ்ஜியம்தானே!
——————
இந்துவாக மதம் மாறினால் 5 லட்சம் ரூபாய்
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் தரம் ஜக்ரன் சமிதி என்ற இந்து அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டது.
அதில் இந்துவாக மாறும் கிறித்தவருக்கு ரூ.2 லட்சமும், முஸ்லீம்க்கு ரூ.5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் தேதி இல்லை. இந்து அமைப்பின் நிர்வாகி ராஜேஸ்வர் சிங் பெயரும், செல்பேசி எண்ணும் இருந்தது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது அது செயல்படாமல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இந்துக்களாக இருந்து பிற மதத்திற்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 40,000 பேர் இந்து மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தக் கடிதம் மேற்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய முசாபர் நகரிலும் விநியோகிக்கப்பட்டது.
இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் கேட்டபோது, நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். தற்போது மீடியாக்கள்தான் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியைப் போல் இந்தக் கடிதத்தையும் பெரிதுப்படுத்துகின்றன. நாங்கள் இதுபோன்ற முகாம்களை வெளியே தெரியாமல் நடத்தி வருகிறோம் என்றனர்.
இந்தக் கடிதம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு உள்ளூர் முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில் மத்திய அரசு இதை மதத் திட்டமா? அல்லது வளர்ச்சித் திட்டமா? என விளக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை முதல்_மந்திரி அகிலேஷ் யாதவ் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஜனவரி 18ஆம் தேதி விஸ்வ இந்து அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
(மாலைமலர், டிசம்பர் 12, 2014)
குறிப்பு: இந்தச் சட்டவிரோதமான செயல்மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.