கால மாற்றத்திற்கேற்ப புதிய யுத்திகள்- தொழில்நுட்பங்கள் தமிழுக்குத் தேவை

பிப்ரவரி 16-28

கடந்த (2015) ஜனவரி 29,30,31 பிப்ரவரி 1ஆம் நாள் ஆகிய நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  (9th International Conference  – Seminar on Tamil Studies) பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி அமைப்பான (International Association for Tamil Research (IATR) சார்பில், மிகச் சிறப்பாக சுமார் இரண்டாயிரம் பேராளர்களுக்கு மேல், உலகின் 20 நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

எட்டாவது  மாநாடு தமிழ்நாட்டில் 1995இல் நடந்த பிறகு மாபெரும் இடைவெளி ஏற்பட்டது.

(தி.மு.க.ஆட்சிக் காலத்தில் மாண்பமை முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்த அக்குழுவினர் என்ன காரணத்தாலோ, அனுமதிக்காததன் விளைவாக, கோவையில் பெருஞ் சிறப்புடன் தமிழக அரசால் கலைஞர் பொறுப்பேற்று நடந்த அம்மாநாடு செம்மொழித் தமிழ் மாநாடாகவே நடைபெற்றது).

20 ஆண்டு இடைவெளிக்குப் பின் முற்றிலும் மாறிய உலகச் சூழலில், இந்த 9ஆவது மாநாடு கோலாலம்பூரில், மலேசிய அரசின் ஆதரவோடு; மலேசியப் பல்கலைக்கழகமும் இந்த அமைப்புடன் இணைந்து நடத்தப்படுவதற்கு மலேசிய அமைச்சர் தகுதியில் உள்ள இந்தியா மற்றும் தெற்கு ஆசியா கூட்டமைப்புத் துறை ஏற்பாட்டு ஆற்றலாளர் மாண்பமை டத்தோசிறீ, உத்தாமா சா. சாமிவேலு அவர்களது வற்றாத ஆர்வமும், வழிநடத்தும் திறமையுமே காரணமாகும்.

மலேசிய தலைமை அமைச்சர், மாண்புக்குரிய டத்தோ சிறீ மகம்மது நஜீப் பின்துன் இராசக் அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உலக மாநாட்டைத் துவக்கி வைக்க இசைவு தந்ததோடு, வருகை புரிந்து, மிக அருமையாக உரையையும் நிகழ்த்தினார்.

திருக்குறள் ஒரு உலகப் பொது நூல் என்று பறைசாற்றியதோடு, தமிழின் தொன்மை, வளம் பற்றிக் கூறியதோடு, மலேசிய அரசாங்கம் நாடெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க வேண்டுமென்பதற்காகவே 540க்கு மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை மலேசிய அரசே நடத்தி வருகிறது.

தமிழ் மொழிப்  பாதுகாப்பிலும், தமிழர்களின் நலத்திலும் அக்கறை செலுத்தும் அரசாக மலேசிய அரசு இருக்கும் என்றும், டத்தோ சிறீ மாநாட்டுத் தலைவர் சாமிவேலு அவர்களின் ஆற்றல், தொண்டு பற்றியும், தமிழர்கள் ஒற்றுமையின் அவசியத்தைக் குறித்தும் மிகவும் நகைச்சுவை கலந்த ஒரு சிறப்புரையாற்றி, ஒரு மில்லியன் மலேசிய வெள்ளிகளை (10 லட்சம்) அரசின் சார்பாக மாநாட்டிற்கு நன்கொடை அறிவித்து, பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள், பிரதமருக்கும், வந்துள்ள தமிழ் அறியா மற்ற இனத்துப் பெரு மக்களுக்கும் புரியும் வண்ணம் பேசினார். தமிழின் சிறப்பு, இத்தகைய மாநாட்டை மலேசிய அரசின் உதவியுடன் நடத்துவது இது மூன்றாவது முறை என்பது பெருமைக்குரியது என்றார்.

டான்சிறீ பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.

(முதல் மாநாடு, ஆறாவது மாநாடு இந்த ஒன்பதாவது மாநாடு – மலேசியத் தலைநகரில் மூன்றாவது தடவையாக இப்பொழுது நடத்தப்படுகிறது) தமிழ்நாட்டில் மூன்று முறை (1968, 1981, 1995) நடத்தப்பட்டுள்ளது.

இருபது ஆண்டு இடைவெளி இந்த மாநாட்டின் மூலம் மூடி நிரப்பப்பட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் ஒன்றுபட்ட கருத்துப் பரிமாற்றத்தை உலக வளர்ச்சிக்கேற்ற, தமிழ்மொழி நவீனத்துவம் அடைவதில் அக்கறை செலுத்த வேண்டுமென்று  விரும்பி – தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிடையே கலந்து கலந்து பேசி, மகிழ்வித்தார்.

தனித்தனி அமர்வுகள், ஆய்வரங்கங்கள் ஆங்காங்கே மூன்று நான்கு நாள்களும் நடைபெற்றன.

இந்த நான்கு நாள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட என்னால், ஜனவரி 30, 31, பிப்.1 ஆகிய நாள்களில் மட்டுமே கலந்து கொள்ளும் வாய்ப்பு – எனது சுற்றுப் பயணத் திட்டம் காரணமாகக் கிட்டிற்று.

சில அமர்வுகளுக்குச் சென்று கலந்து கொண்ட பிறகு 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு பொது அரங்கத்தில் டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் தலைமையேற்க, பேராசிரியர் முனைவர் குமரன் வரவேற்க, மோகன்தாஸ் இராமசாமி அவர்கள் நன்றி கூறிட, நான் மாநாட்டின் வரவேற்பு குழுவினர் தந்த தலைப்பாகிய உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் சுமார் 60 மணித் துளிகள் (1 மணி நேரம்) உரையாற்றினேன்.

அறிவார்ந்த அந்த அரங்கத்தில் பெரியார் வாழ்நாள் மாணவனாகிய நான் அவரது கருத்துகளைத்தான் எடுத்துரைக்க, ஒரு சமுதாயத் தொண்டனாக நான் வந்து உரையாற்றுகிறேன் என்ற தொடக்கத்துடன் கூறி பல்வேறு கருத்துகளை தமிழின் பழம் பெருமை என்பது முக்கியமில்லை; கால மாற்றத்துக்கு ஏற்ப கருத்து மாற்றமும் – அதற்கு வழி காண மொழி என்ற கருவியின் புதுமை நோக்கும், புதிய உத்திகளும் தேவை;

தமிழ் மொழி இணையத்தில் கன்னித்தமிழ் இன்று கணினித் தமிழாக வளரும் நிலைக்கு தந்தை பெரியாரின் எழுத்துச் சிக்கனம் கை கொடுத்து உதவியது பற்றிக் கூறி, தமிழ் வழி – புத்தாண்டு  பொங்கலை ஒட்டியது என்று மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்கப்பட்டது – முதன்முதலில்! அதற்காகப் பாராட்டிப் பெருமையுடன் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

வேதங்களே வடமொழியான சமஸ்கிருதத்தில் முதலில் எழுதப்பட்டவை அல்ல; வேதத்தில் (ருக் வேதத்தில்) உள்ள பல சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்பதை தமிழ் ஆராய்ச்சி அறிஞர்கள் மட்டுமல்ல; இலங்கையின் ஈழத்துப் பெருமகனார் நவாலியூர் நடராசன் எழுதிய வடமொழி வரலாறு நூல் உட்படக் கூறுகிறது என்பதைக் கூறி தமிழைப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பது பற்றி விளக்கினேன்.

இந்தக் கருத்துகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது!

தலைமை தாங்கிய டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் தமது பொது வாழ்க்கையின் துவக்கம் திராவிடர் கழகத்திலிருந்து தான் என்றும், அவ்வியக்கம் ஒரு அருமையான எடுத்துக்காட்டான இயக்கமாகும்;

இன்று தமிழ்நாட்டில் தனித்தன்மையோடு இயங்கி மக்களுக்குத் தொண்டறம் புரிந்து வருகிறது என்றும் எடுத்துக் கூறி, அருமையான உரையாற்றி முடிவுரை நிகழ்த்தினார்  எனதுரை பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது; நேரிலும் பாராட்டினர், முகநூலிலும் பாராட்டுகளை  அறிய முடிந்தது.

31ஆம் தேதி பிற்பகல் 5 மணியளவில் மன்னை அம்பிகாபதி அவர்கள் தலைமை தாங்கிய ஒரு அமர்வு; பாரதியார் பற்றிய கருத்தரங்க அமர்வில் பார்வையாளராக டத்தோ சிறீ, நாமும் கலந்துகொண்டு அமர்ந்து கேட்டோம்.  தமிழ் மாணவி (மலேசியாவைச் சார்ந்த சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்தவர்) புதுமைக் கோணத்தில் ஆண் ஆதிக்கம் பாஞ்சாலி சபதப் பாடலில் இருந்ததுபற்றி கட்டுரை வாசித்தார்; இது ஒரு புதுமை நோக்கு.

மறுநாள் காலை 11 மணி அளவில் சிங்கப்பூர் பேராளர்கள், டாக்டர் சுப. திண்ணப்பன் தலைமையில் ஒரு ஆய்வரங்கத்தில் பார்வையாளராக இருந்து கேட்டேன்.

புதுவையில் 1846இல் எளிய நடைக் கவிதை மூலம் அறநூல் அறிவுரைக் கவிதை வழங்கிய சிங்கப்பூர் இலக்கிய முன்னோடி நாராயண நாயகர்பற்றிய ஆய்வுக் கட்டுரை, சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழக (ஷிமிவி) வரலாற்றுப் பேராசிரியர் சண்முகம்   சிங்கப்பூர் நாட்டின் பூர்வ கட்டுமானம், இந்தியாவின் கைதிகள் அரசியல் கைதிகளைக் கொணர்ந்து கட்டப்பட்ட வரலாற்றையும் பற்றி மற்றொரு ஆய்வு  சிறப்பாகப் தரப்பட்டது.

பின் என்னைப் பரிசளிக்க அழைத்தனர் – சிறு பாராட்டுரையுடன் பரிசுகளை வழங்கினேன்.

பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலிருந்தும் வந்திருந்தவர்களின் ஒருங்கிணைந்த சந்திப்பு – கலந்து உறவாடலுக்கு அதிக வாய்ப்பில்லாதது ஒரு வருத்தமே!

என்றாலும் ஓரளவு  இயன்றது; தமிழ்-நாட்டிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் தாண்டவன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.எம். முத்துக்குமார், தமிழ்த் துறைச் செயலாளர் டாக்டர் இராஜாராமன் அய்.ஏ.எஸ்., சட்டமன்ற உறுப்பினர் வைகைச் செல்வன், கோவை கவிதாசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் கணேஷ்ராம் தலைமைப் பேராசிரியர்கள், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரி (சென்னை அடையாறு) தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியை அபிதா சபாபதி, சட்டக் கதிர் ஆசிரியர் சம்பத், டாக்டர் விஜி.சந்தோஷம் போன்ற  பலரும் கலந்து கொண்டனர்.

என்னுடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் வந்திருந்தார்.

இறுதிநாளின் நிறைவு நிகழ்ச்சியில் மொரிஷியஸ் ஆறுமுகம் பரசுராமன் போன்றோர் பேசினர். சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் குறும் உரைகளை நிகழ்த்தினர்.

பேராசிரியர் டான்சிறீ மாரிமுத்து, முனைவர் கந்தசாமி, முனைவர் இராமசாமி ஆகியோர் உரையாற்றினர்.

டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் மலேசிய  துணைப் பிரதமர் சார்பில் இரண்டாம் கல்வி அமைச்சர் திரு. யூசுப் அவர்களும், கமலநாதன் அவர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில் உலகத் தமிழர்களின் பங்கேற்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் மலேசிய அரசு பாதுகாப்பாக இருந்து வளர்ச்சி அடையச் செய்வது உறுதி என்றும் கூறி தமிழ் வளர்ச்சிக்கு மலேசிய அரசு செய்தவற்றைப் பட்டியலிட்டார்.

மலேசியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மலாய்கார அம்மையார் ஒருவரும் பங்கேற்றார்.

அதன்பின் முக்கிய விருந்தினர்களுக்குத் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அங்கே முக்கிய மேசையில் தேநீர் அருந்த என்னையும் அமைச்சர் திரு பரசுராமன் அருகே அமர வைத்து சிறிது நேரம் உரையாடியபின் விடை பெற்றனர்.  மாநாடு வரலாறு படைத்தது என்றாலும் இவ்வளவு பெரிய மாநாட்டில் சிற்சில குறைகள் இருந்தன என்பது பொருட்படுத்தக் கூடாதவை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நினைவூட்டிக் கொண்டு, அடுத்த மாநாடு 2017இல் சிகாகோவில் நடத்த அவர்கள் விடுத்த வேண்டுகோளை – அழைப்பை டாக்டர் மாரிமுத்து அறிவித்தது மகிழ்ச்சிக்குரியதாகும்.

தமிழ் மாநாட்டு ஆய்வுகள் ஒரு வற்றாத (ஜீவ) நதியாக ஓடிக் கொண்டிருந்தன.
இதனைச் சிறப்பாக நடத்திட உழைத்த ஆசிரியர்கள் – தோழர்கள், தமிழன்பர்கள் தொண்டறம் மிகவும் நன்றியோடு பாராட்டத் தகுந்தது!

முழுக் குவளை நீர் இல்லையே என்று வருந்துவதைவிட, தாகத்தால் தவித்தவர்களுக்கு அந்நேரத்தில் முக்கால் குவளை நீர் கிடைத்தது  – மகிழ்ச்சிக்குரியதே!

கால் குவளை குறையை எண்ணி வருந்தி, நம் மகிழ்ச்சியைத் தொலைப்பது கூடாது!
உதவிய மலேசிய அரசு, மலேயா பல்கலைக்கழகம், தமிழ் அமைப்பினர் குறிப்பாக டத்தோ சிறீ சாமிவேலு, டான்சிறீ  மாரிமுத்து, பதிவாளர் புண்ணிய மூர்த்தி, பேராசிரியர்கள் கந்தசாமி, குமரன், மோகன்தாஸ் இராமசாமி போன்ற அனைவருக்கும் நமது பாராட்டுகள்!

கி.வீரமணி, ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *