மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 5

பிப்ரவரி 01-15

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 5

மொழிகளுக்களுக்குள் ஏற்றத்தாழ்வு உண்டா?

ஒவ்வொரு மொழியும் அதற்கான அடிப் படைத் தேவைகளோடு பிறக்கிறது, வாழ்கிறது, அழிகிறது. உலகின் 6500 மொழிகளில் எந்த மொழியையும் சிறந்தது அல்லது மனித உயிரியல் அல்லது உளவியல் பாங்குகளோடு ஒத்திசைவு கொண்டது என்று சொல்ல இயலாது. மொழி மனிதனின்  நிலவியல், சூழலியல் மற்றும் பண் பாட்டியலின் அடிப்படையில் உருவாகி தன்னியக்கமாக வளரும் ஒரு கருவி.

மனித உணர்வுகள் அல்லது மனித உயிரிய லின் இருத்தல் ஒரு பொதுவான கோட்பாடு. தனது இருப்பையும், சமூகப் பாதுகாப்பையும் நோக்கிப் பயணம் செய்த ஆதி மனிதனின் உணர்வுக் குவியலின் வடிவமே மொழி. இதில் ஒருவனது மேலானது அல்லது இன்னொரு வனது தாழ்வானது என்று சொல்வது அறிவியல் வழியாகவும், தார்மீக அடிப்படையிலும் சரியான தாக இயலாது என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மொழி யும் சக மனிதனின் அகம் மற்றும் புறத் தேவை களை நிறைவேற்றும் ஒரு தொடர்பு ஊடகமாக வளர்க்கப்பட்டு வரி வடிவங்களை அடைந்து மனித இனக் குழு வரலாற்றைப் போலவே பல்வேறு சூழலியல் தடைகளைக் கடந்து வந்திருக்கிறது.
மேற்சொன்ன மொழி அடிப்படை அறிவியலை மய்யமாக வைத்து நாம் நம்முடைய நிகழ்கால அரசியலில் மொழியின் பங்கு மற்றும் தாக்கம் குறித்து அறிந்து கொள்ள வேண்டி யிருக்கிறது. தொன்மையையும், வரி வடிவங் களையும் வைத்து ஒரு மொழியைச் சிறப்பான தென்றும், மற்றொன்றைக் கீழானதென்றும் கற்பிதம் செய்வது இந்திய அரசியலில் தீண் டாமையைப் போல சகிக்க இயலாதது என்கிற உண்மையையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் மேற்கொண்டு பயணிக்க வேண்டும். எந்த மனிதனுக்கும் அவனுடைய தாய்மொழி சிறப் பானதாகவும், உயர்வானதாகவும் தோற்ற மளிக்கிறது. அது ஒருபோதும் கேலிக்குரிய பொருள் அல்ல.

அய்ரோப்பியப் பேரினத்தின் உயிரியல் கிளைகளைச் சேர்ந்த பல்வேறு சமூகங்கள் தெற்காசியாவின் நிலவியலில் கிளைத்துப் பரவி இருக்கின்றன. இந்த நிலப்பகுதியில் ஏறத்தாழ 14 மொழிக் கிளைகள் பேசும் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.

1) இந்தோ_ஆரிய மொழி பேசும் மக்கள்

2) ஈரானிய மொழி பேசும் மக்கள்

3) தார்தியர்கள்

4) திராவிடர்கள்

5) ஆஸ்ட்ரோ ஆசிய மக்கள்

6) திபெத்_பர்மிய மக்கள்

7) துருக்கிய_மங்கோலியக் கிளை மக்கள்

8) ஆஸ்த்ரோனேசிய மக்கள்

9) செமிட்டிக் மக்கள்

10) தாய் மக்கள்

11) அய்ரோப்பியர்கள் அல்லது அய்ரோப்பிய ஆசியக் கிளைப்பிரிவு மக்கள்

12) ஆப்ரோ_ஆசிய மக்கள்

13) அந்தமான்-_நிக்கோபார் மக்கள்

14)அட்டவணையில் வராத தனித்த குழுக்கள்

இந்த மொழி அடிப்படையிலான குழுக்களில் எந்த மொழிகளும், நிலவியலும் அடங்குகிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் இன்னொரு மிக முக்கியமான செய்தியை அறிந்து கொள்ள வேண்டும். 1856ஆம் ஆண்டு கால்டுவெல் திராவிடம் என்கிற பதத்தை சமஸ் கிருத மொழியில் இருந்து பெற்றுப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் நீடிக்கும் ஆரிய – திராவிட எதிர்நிலை அரசியல் உயிரியல் இன ரீதியானது அல்ல. மாறாக, உயிரியல் இனங்களுக்குள் உயர்ந்தவை, தாழ்ந்தவை உண்டு என்கிற கோட்பாட்டு வழி யிலானது, பண்பாட்டு வழியிலானது, மொழி வழியிலானது, நிலவியல் மற்றும் சூழலியல் வழியிலானது என்பதை நுட்பமாக உணர்ந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகளாக சமஸ்கிருதம் கடவுளின் மொழி என்றும், இந்திய மொழி களின் தாய், தேவ மொழி என்று நமது பக்கத்து வீட்டு சூரி அய்யரில் இருந்து பிரெஞ்சு அய்யங் கார் சடகோபன் வரைக்கும் தொடர் பரப்புரை செய்து வருவதையும், இன்றைய பாரதிய ஜனதாக் கட்சியின் பல்வேறு கிளைக்குழுக்கள் சமஸ்கிருத மொழியின் வணிக மேலாளர்களாக மாறி வருவதையும் நாம் குற்றம் சொல்லப் போவதில்லை.

அது அவர்களின் மொழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது உயர்வான தென்று அவர்கள் சொல்வதற்கான அடிப்படை உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், நாம் அவர்களை எந்தப் புள்ளியில் எதிர்க்கிறோம் அல்லது முரண் கொள்கிறோம் என்பது முக்கியம். பல்வேறு மொழிக்குடும்ப மொழிகளை அவற்றின் அடிப்படை உரிமை களில் இருந்து தடுக்க  முயற்சி செய்வது, வழி பாட்டு உரிமைகளில் தலையிடுவது, கட்டாய மொழியாக அரசியல் வழியாகத் திணிக்க முயற்சிப்பது, பொதுவான நிலவியல் சார்ந்த மொழி என்று ஒரு மொழியை முன்னிறுத்துவது போன்ற தளங்களில்தான் நாம் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தி போன்ற மொழிகளோடு மாறு படுகிறோம். மேற்சொன்ன காரணங்களுக் காகவே நமது மொழியின் சிறப்புகள் குறித்தும், அது உலகிற்கு வழங்கி இருக்கும் சொற்கொடை  மற்றும் இலக்கியச் செழுமை குறித்தும் நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய அழுத்தத் துக்கு ஆளாகிறோம்.

இந்தோ – ஆரிய  மொழிக்கிளைக் குடும்பம்

இந்தோ – ஆரிய  மொழிக்கிளைக் குடும்பத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் வசிக்கும்  அசாமியர்கள், அவாதியர்கள், வங்கதேச மக்கள், பீகாரிகள், மைதிலியர்கள், மாகுரிகள், பூமிகர், திவேஹியர்கள், குஜராத்திகள், சௌராஷ்டிர மக்கள், ஹிந்த்கோவன் மக்கள், கொங்கணியர்கள், மராத்தியர்கள், முஹாஜிர்கள், இஸ்லா மியர்கள், ஒரிய மக்கள், பஹாரிகள், டோக்ராக்கள், கர்வாளியர்கள், நேபாளியர்கள்  கூர்க்காக்கள், பாஹுன் மக்கள், சேத்ரி மக்கள், தமாய் மக்கள், கமியர்கள், சார்க்கிக்கள், காஸ் மக்கள், குமானி யர்கள், பஞ்சாபியர்கள், கஹாத்ரியர்கள், அரோரா மக்கள், குஜ்ஜர் மக்கள், ஜாட் மக்கள், கம்போஜ் மக்கள், பஞ்சாபி ராஜபுத்திரர்கள், ராஜஸ்தானியர்கள், மார்வாடிகள், மீனாக்கள், அஹிரிக்கள், செரைக்கிகள், சிங்களர்கள், சிந்திக்கள், தாருக்கள் என்று பல சமூக மக்கள் உள்ளடங்குவார்கள். திராவிட மொழிக் கிளைக் குடும்பம் திராவிட மொழிக் கிளைக் குடும்பத்தில் படகர்கள், பியரிக்கள், பில் மக்கள், போண்டாக்கள், ப்ரஹுய் மக்கள், டோங்க்ரியா கொந்தர்கள், கோந்தி மக்கள், இருளர்கள், கன்னடர்கள், கோண்டு மக்கள், கொடவர்கள், குருக்குகள், மலையாளிகள், கொச்சின் யூதர்கள், வட கேரளத்தின் மாப்பிள்ளை இஸ்லாமியர்கள், பெர்சியா அல்லது அரபு நாட்டு வணிகர்களாக வந்து திராவிட மொழிக்குடும்பக் கிளை மொழி யான மலையாளம் பேசுபவர்கள், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவர்கள், சிரியன் மலபார் நஸ்ராநிக்கள், மல்ட்டோ மக்கள், பூர்வகுடித் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இலங்கையில் இருக்கும் இந்தியத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள், தெலுங்கு மக்கள், தோடர்கள் மற்றும் துளுவர்கள் என்று பல சமூக மக்கள் உள்ளடங்குவார்கள்.

– அறிவழகன் கைவல்யம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *