கீதை யாருடைய நூல்?

பிப்ரவரி 01-15

பிற இதழிலிருந்து

கீதை யாருடைய நூல்?

– பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

ஸ்ரீமத் பகவத்கீதா
(தத்வவிவேசனீ – தமிழ் விரிவுரை)
ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா எழுதிய விளக்க உரையின் தமிழ் வடிவம்
கோபால் ஸேவா ட்ரஸ்ட், ஈரோடு.

மகாபாரத்தில் அர்ச்சுனன் (பார்த்தன்) கிருஷ்ணன் என்ற இரு கதைமாந்தர்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்விரு கதைமாந்தர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள். இவ்வகையில் இவர்களது உரையாடல்கள் மகாபாரதத்தில் இடம்பெறுவது இயல்பானதே. இதில் முக்கியமான உரையாடல் ஒன்றுண்டு.

பாரதப் போர்க்களத்தில் அர்ச்சுனன் தனக்கு எதிரே அணிவகுத்து நிற்பவர்களை ஒருகணம் பார்க்கிறான். தன் சொந்தப் பெரியப்பாவின் மகன்கள், போர்ப் பயிற்சியளித்த பீஷ்மர், துரோணர் போன்ற ஆச்சாரியார்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அவன் கண்களில் படுகின்றனர். ஆட்சியைப் பெற இவர்களையெல்லாம் கொன்றழிக்க வேண்டுமா என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் தோன்றுகிறது. இவ் எண்ணம் போர் செய்வது குறித்த தயக்கத்தை அவனிடம் ஏற்படுத்துகிறது. அவனது தயக்கத்தைப் போக்கி அவனைப் போரிடத் தூண்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு உபதேசம் செய்கிறார். இதுவே கீதா உபதேசம் அல்லது பகவத்கீதை என்ற நூலாக விளங்குகிறது. இதன் ஆசிரியனாக பகவான் கிருஷ்ணர் குறிப்பிடப்படுகிறார்.

ஒரு வினாவை சிலர் எழுப்புகிறார்கள். பாரதம் என்ற காவியத்தை எழுதிய வியாசர்தானே இவ்விரு பாத்திரங்களின் உரையாடலையும் எழுதியிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கீதா உபதேசத்தின் ஆசிரியராக வியாசரைத்தானே கருத வேண்டும். ஒரு கதாபாத்திரத்தின் படைப்பாக அதை எப்படிக் கருதமுடியும் என்பதே வினாவாகும். இவ்வினாவுக்கு அம்பேத்கர் (1995:130) பின்வருமாறு விடை அளிக்கிறார்

பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு பாகமாகவே இருக்க வேண்டும். ஆனால் மகாபாரதத்தில் இது ஒரு பாகமாகவே காணப்படவில்லை. இதிலிருந்து இது தனிப்பட்ட நூல் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் இன்றுவரை இதன் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.

அருச்சுனனுக்கும் கிருஷ்ணனுக்குமிடையே நடந்த உரையாடலைத் திரிதராஷ்டிரனுக்குக் கூறும்படி சஞ்சயனை வியாசர் கேட்டுக் கொண்டாரென்பது நமக்குத் தெரிகிறது. இதை வைத்து வியாசர்தான் கீதையை எழுதினாரோ என்று சிலர் நினைக்கலாம்.

இது தொடர்பாக, பல அய்ரோப்பிய அறிஞர்களின் கூற்றுகளையும் திலகர், கோசாம்பி ஆகிய இந்திய அறிஞர்களின் கூற்றுகளையும் முன்வைத்து பகவத்கீதையின் காலம் குறித்தும் அவர் ஆராய்கிறார். இதற்குள் நுழையாமல் பகவத்கீதையின் சாரமாக அம்பேத்கர் (1995:109) கூறுவனவற்றை மட்டும் காண்பது பயனுடையதாய் இருக்கும். அவர் குறிப்பிடுவது வருமாறு:

1.    நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன். – கீதை 4:13

2.    ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது. ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது; ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது. கீதை 3:35.

3.    மக்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பும் அறிவாளியானவன், தம் தொழிலில் பற்றுடைய அறிவீனர்களுக்குப் புத்திக் குழப்பத்தை உண்டாக்கக் கூடாது. அவனவன் தமது வருணத்திற்குரிய தொழிலைச் செய்து மற்றவர்களையும் அவ்வாறே செய்விக்க வேண்டும். கற்றறிந்தவன் தன் தொழில் ஈடுபாடு இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் தம் தொழிலில் ஈடுபாடுடைய கல்லாதோரையும் மந்த புத்தியுள்ளவர்களையும் தம் தொழிலை விட்டு வேறு தொழிலைச் செய்வதற்குரிய கெட்ட வழியில் செல்வதற்குக் கற்றறிந்தவன் விட்டுவிடக் கூடாது. கீதை 3:26, 29.

4.    அருச்சுனா! கடமைகளும் தொழில்களுமான இந்தத் தருமம் (நால் வருணமான இந்த மதம்) தளர்வுறும் போதெல்லாம், இந்த இழிவுக்குக் காரணமானவர்களை அழித்துத் தருமத்தை நிலைநாட்டுவதற்காக நானே பிறப்பேன் –

_- கீதை 4:7-_8. அம்பேத்கரின் இக்கருத்துகள் கீதைக்கும் வருணப் பாதுகாப்பிற்குமான உறவைச் சுட்டுகின்றன. நான்கு வருணக் கோட்பாட்டை வலியுறுத்தும், புருஷசூக்தம் என்ற நூல் குறித்து.

இந்த புருஷசூக்தம் இரு அடிப்படைக் கொள்கைகளை அங்கீகரிக்கிறது. சமூகத்தை நான்கு பிரிவாகப் பிரிப்பதைச் சிறந்ததாக ஏற்கிறது. இந்த நான்கு பிரிவாருக்கும் இடையில் சமத்துவமில்லாமல் இருப்பதே சிறந்த உறவுமுறை என்பதையும் அது ஏற்கிறது.

என்று குறிப்பிடும் அம்பேத்கர் (1995:108_-109) இக்கருத்துடன் இயைபுடையதாகவே கீதையைக் காண்கிறார். அத்துடன் மனுஸ்மிருதி எனப்படும் மனுதர்ம சாஸ்திரத்திற்கும், கீதைக்கும் இடையில் வேறுபாடில்லை என்பதை,

கீதை மனுவின் சுருக்கம். மனுஸ்மிருதியை ஒதுக்கிவிட்டுக் கீதையில் புகலிடம் தேடுவோர், கீதையை அறியாதவர்களாக அல்லது மனுஸ்மிருதியை முற்றிலும் ஒத்துள்ளதும் கீதையின் உயிராக உள்ளதுமான பகுதிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதற்குத் தயாராக இருப்பவர்களாக உள்ளனர்.

என்று குறிப்பிடுகிறார் (மேலது 109). பகவத்கீதை, குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் கருத்துகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. இதற்கு ஒரே வழி பகவத்கீதையைப் படித்தறிவதுதான். தமிழில் பகவத்கீதைக்குப் பல மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. அவற்றுள் சிறந்த பதிப்பாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட நூல் அமைந்துள்ளது. 1997ஆம் ஆண்டு தொடங்கி 2001 வரை மொத்தம் இருபத்திமூன்று பதிப்புகள் இந்நூலுக்கு வந்துள்ளன. அய்ந்து ஆண்டுகளில் 2,95,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இதற்குப் பின்னரும் பதிப்புகள் வந்துகொண்டுள்ளன.

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா என்பவர் தத்வவிவேசனீ என்ற பெயரில் இந்தியில் எழுதிய விளக்க உரையின் தமிழ் மொழிபெயர்ப்புடன் இந்நூல் வெளியாகியுள்ளது. பல தமிழ்ப் பதிப்பகங்கள் கீதையை வெளியிட்டிருந்தாலும், இந்து அமைப்பொன்று வெளியிட்ட நூல் என்பதன் அடிப்படையில் இந்நூல் இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி இந்நூலில் இருந்து கீதை சுலோகங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கங்களையும் காண்போம்.

நான்கு வர்ணங்கள் எவ்வாறு உருவாயின என்ற வினாவை எழுப்பி சமூகவியலாளர்கள் விடை தேடுகின்றனர். ஆனால், இத்தேடலுக்கான விடை மிக எளிதாக பகவத்கீதையில் காணப்படுகிறது. நான்காவது அத்தியாயத்தில் பதிமூன்றாவது சுலோகம் பகவான் கிருஷ்ணரின் கூற்றாக,

சாதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகா என்று குறிப்பிடுகிறது.

இதற்கு வேதியர், வேந்தர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணங்கள் கொண்ட ஸமூகம், குணங்களையும் கர்மங்களையும் ஒட்டிய பிரிவுகளாக என்னால் படைக்கப்-பட்டது என்று மேற்கூறிய உரையாசிரியர் உரை எழுதியுள்ளார். இதன்படி வருணவேறுபாடு என்பது சாட்சாத் கிருஷ்ண பகவானால் உண்டாக்கப்பட்டது என்பதாகிறது. இவ்வுண்மையை அவரே மேற்கூறிய சுலோகத்தின் வாயிலாகப் பிரகடனப்-படுத்தியுள்ளார். எனவே வருணப் பாகுபாடை எதிர்ப்பதென்பது கடவுளுக்கு எதிரான செயலாகிறது.

அடுத்து வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறதா? அல்லது செயலை வைத்து முடிவு செய்யப்படுகிறதா? என்ற வினாவை எழுப்பி அதற்கு இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் உரையாசிரியர் பின்வரும் விளக்கத்தைத் தருகிறார்.

பிறப்பு செயல் இரண்டுமே வர்ணப்-பிரிவிற்குத் துணை நிற்பவைதான். ஆகவே, ஒரு வர்ணத்தினர் என்று முழுமையாக நிர்ணயிக்க, பிறப்பு, செயல்கள் இரண்டையும் சேர்த்துத்தான் கணிக்க வேண்டும். ஆயினும் பிறப்பை வைத்துத்தான் ப்ராம்மணர் முதலிய வர்ணப்பிரிவு நடந்து வருகிறது என்று அறிய வேண்டும். ஏனெனில், இவை இரண்டில் பிறவிக்குத்தான் முதன்மை கொடுக்கப்பட்டு வருகிறது.

எல்லோருக்கும் பொதுவான புலன் அடக்கம், மனவடக்கம் முதலியவற்றைக் கடைப்பிடித்து, நல்லொழுக்கம் உள்ள நான்காம் வர்ணத்தவன், யாகம் செய்ய ஆரம்பித்துத் தன் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தால் அவனுக்குப் பாவம்தான் ஸம்பவிக்கும். முதலாவதாக, வர்ண ஏற்பாட்டில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், முழுமையாக அழிந்துவிட்டது என்று கூறமுடியாது. இரண்டாவதாக, ஜீவர்கள் முன்வினைப்பயனை அனுபவிக்க வேண்டும் என்று ஈசுவரன், அவர்களின் முன்வினைக் கேற்றவாறு அந்தந்த வர்ணங்களில் பிறப்பளிக்கிறார். பகவானின் இந்த ஏற்பாட்டை மாற்ற மனிதனுக்கு உரிமையில்லை. மூன்றாவது நடத்தையை மட்டும் வைத்து இன்ன வர்ணத்தவர் என்று தீர்மானிப்பதும் முடியாத செயல். ஒரே பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் நடத்தையிலேயே மிகுந்த மாற்றத்தைக் காண்கிறோம். ஒரே மனிதன் ஒரு நாளில் ஒரு சமயம் ப்ராம்மணன் போலவும், வேறொரு சமயம் மற்ற வர்ணத்தவர் போலவும் நடந்து கொள்கிறான். இந்த நிலையில் எப்படி வர்ணத்தை நிர்ணயிப்பது? தாழ்வை எவர்தான் ஏற்றுக்கொள்வார்? இதனால் உணவுப் பழக்கத்திலும், திருமணம் முதலியவற்றிலும் குழப்பம் ஏற்படும். கடைசியில், வர்ண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வர்ண ஏற்பாடு என்பதே குலைந்து போய்விடும். ஆகவே செயலினால் மட்டும் வர்ண வகுப்பைத் தீர்மானிப்பது சரியன்று.

கீதையின் பதினெட்டாவது அத்தியாயத்தில் இடம் பெறும் 44ஆவது சுலோகத்தில் வைசியர்களும், சூத்திரர்களும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் இடம் பெற்றுள்ளன. இச்சுலோகத்தில் இடம்பெறும் பரிசர்யாத்மகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு உரையாசிரியர் தரும் விளக்கம் வருமாறு:

மேற்குறித்த இரு பிறப்பாளருக்கு அதாவது ப்ராம்மணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்களுக்கு ஸேவை செய்வது, அவர்களுடைய ஆணையை நிறைவேற்றுவது, வீடுகளில் நீர் நிரப்புவது, ஸ்நானத்திற்கு வகை செய்து வைப்பது, அவர்களுடைய வாழ்க்கைப் பணிகளில் வசதி செய்து கொடுப்பது, அவர்களுடைய அன்றாட வேலைகளில் முறைப்படி உதவி செய்வது, பசுக்களைப் பராமரிப்பது, அவர்களுடைய பொருட்களைக் காப்பது, துணி துவைப்பது, முடி திருத்துவது முதலிய அத்தனை ஸேவைகளையும் செய்து மகிழ்விப்பது அல்லது அவர்களுக்குத் தேவையான கருவிகளைத் தன் தொழில் திறமையால் தயார் செய்து கொடுத்து தன் வாழ்க்கையைக் கழிப்பது _ இவையெல்லாமே பரிசர்யை ஆகும்.

மற்ற வர்ணத்தாருக்கு எப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ப கடமைகள் உள்ளனவோ, அவ்விதமே நான்காம் வர்ணத்தவருக்கும்கூட இந்த சேவை என்ற ஒன்றுதான் இயல்பானதாகும். மேலும் பிற வர்ணத்தவர்க்குத் தொண்டு செய்தலே அவர்களது ஒரே கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறார். ஆகவே, அது அவர்களுக்கு இயல்பானதால் எளிதுமாகும்.

இக்கருத்தை மேலும் வலியுறுத்த நான்காம் வர்ணத்தவருக்கு பகவான் ஒரு கடமையைத்-தான் விதித்தார். குறை காணாமல் மூவர்ணத்தாருக்கும் ஸேவை செய்வதே அது என்ற மனுதர்ம சுலோகத்தை (இயல் 1 சுலோகம் 91) மேற்கோள் காட்டுகிறார். இதே அத்தியாயத்தில் 46ஆவது சுலோகம் கூறும் கருத்து வருமாறு.

தத்தம் இயல்பான கடமைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கும் மனிதன் பகவானை அடைதலாகிற ஸிதம்தியை அடைகிறான். தன்னுடைய இயல்பான கடமையில் கருத்துடையவன் தன் செயலை எப்படிச் செய்து பரமநிலையை அடைகிறானோ அந்த முறையை நீ கேள்.

இச்சுலோகத்திற்கு உரையாசிரியர் தரும் நீண்ட விளக்கத்தில் நான்கு வருணத்தாரின் செயல்பாடு குறித்து,

ஷத்திரியன் தண்டனை அளிக்கலாம். ஆனால் அதற்குரிய சட்டத்தை அவன் தானாக இயற்றமாட்டான். ப்ராம்மணர்கள் வகுத்த சட்டத்தின்படி நடக்க வேண்டும். வரி வசூலிக்க வேண்டும்: வசூலித்த வரியை மக்கள் நலனுக்காகச் சரிவரச் செலவழிக்க வேண்டும். விதிக்கப்பட்ட சட்டத்தை நடைமுறையில் அமல்படுத்தி, அதைப் பேணிக் காப்பது அவன் கடமை. சட்டத்தை இயற்றுதல் ப்ராம்மணனின் வேலை. பொது நிதியம் வைசியனிடம் உள்ளது. ஷத்திரியன் சட்டப்படி நிர்வாகம் செய்து பாதுகாப்பவன் மட்டுமே.

இவ்விதம் குணங்களுக்கும், கடமைகளுக்கும் ஏற்ப வர்ணப்பிரிவினை ஏற்பட்டிருக்கிறது என்றால் தமக்குத் தோன்றிய கர்மங்களைச் செய்து தமது வர்ணநிலையை மாற்றிக் கொள்ளலாம் என்பது பொருள் அன்று. வர்ணத்தின் அடிப்படை பிறப்பு, அதன் தன்மையைக் காப்பதில் வர்ணத்தின் கர்மம் முதல் இடம் வகிக்கிறது. ஆகவே பிறப்பு, கர்மம் இரண்டுமே வர்ண அமைப்புக்குத் தேவைதாம். தானாக ஒரு கர்மத்தை ஏற்றுக் கடைப்பிடித்து இந்தக் கர்மத்தை நான் ஆற்றுவதால், தான் இன்ன வர்ணத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்பவர் உண்மையில் வர்ணதர்மத்தை மதிக்கவில்லை. செயலுக்கு ஏற்ப ஒருவனுடைய வர்ணத்தைத் தீர்மானிப்பது என்று ஆரம்பித்தால் ஒரு நாளில் அவன் எத்தனை தடவை வர்ணத்தை மாற்றுவான் என்று கணக்கிட முடியாது. அப்பொழுது ஸமுதாயத்தில் ஒரு பிணைப்போ, கட்டுப்பாடோ இருக்க முடியாது. எல்லா வகைகளிலும் குழப்பம்தான் மிஞ்சும்.

இதே அத்தியாயத்தில் இடம்பெறும் 47ஆவது சுலோகம்,

நன்கு முறைப்படி கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறை உள்ளதாயினும், தன்னுடைய தர்மம் உயர்ந்தது. ஏனெனில் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட தன்னுடைய கடமையைச் செய்கிற மனிதன் பாவத்தை அடைய மாட்டான் என்று கூறி குலத்தொழிலை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதுவே ஸ்வதர்மம் எனப்படுகிறது. ஸ்வதர்மம் என்பதற்கு உரையாசிரியர்.

வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கேற்ப எந்த மனிதனுக்கு எந்தக் கர்மம் விதிக்கப்பட்டுள்ளதோ, அது அவனுக்கு ஸ்வதர்மம்.

நான்காம் வர்ணத்தவரின் கடமைகள் ஷத்ரிய, வைசியர்களின் கடமைகளைக் காட்டிலும் தரக்குறைவாக இருக்கின்றன. இது தவிர அந்தக் கடமைகளை ஆற்றுவதில்  ஏதாவது விட்டுப் போனாலும் அதுவும் குறைபட்ட கர்மம்தான். மேலே சொன்னவிதம் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் குற்றம் குறை இருந்தாலும், அது பரதர்மத்தைக் காட்டிலும் சிறந்ததுதான்.

குற்றமற்ற, குணம் பொருந்திய பரதர்மத்தைக் காட்டிலும் குற்றம் குறையுள்ள ஸ்வதர்மம் சாலச் சிறந்தது

என்று விளக்கமளிக்கிறார். அம்பேத்கர், பெரியார் ஆகியோரும் மார்க்சியவாதிகளும் பகவத்கீதையைக் குறித்து முன்வைக்கும் விமர்சனங்களின் உண்மைத்தன்மை குறித்து பகவத்கீதையைப் படித்து எது உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம். விமர்சனங் களைவிட மூலநூல் அறிவு சிறந்ததுதானே!

வீட்டின்  பூசை அறையிலும், வரவேற்-பறையிலும் கொலு வீற்றிருக்கும் பகவத்கீதை நூலை முறையாகப் படித்துச் சிந்தித்தால் கீதை யாருடைய நூல் என்பதைக் கண்டறியலாம். பழைய சூத்திரர்களும் இவர்களில் இருந்து தாம் வேறுபட்டவர் என்று காட்டிக் கொள்ளும் முகத்தான் சற்சூத்திரர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டோரும் கீதையைப் பூசிப்பதை விட்டுப் படித்துச் சிந்திக்க வேண்டும்.

துணை நின்ற நூல்கள்:

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் (1995) தொகுதி_6 (1995) தொகுதி_7

நன்றி: உங்கள் நூலகம் (ஜனவரி 2015)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *