மரபு வழி – மரண வழியா – 2
தடுப்பூசி வேண்டாமா?
மூடநம்பிக்கைக் கருத்து 2:
குழந்தை-களுக்குத் தடுப்பூசி போட வேண்டாம். ஒரு குழந்தை நலமுடன் வளர்வதற்கான திட்டம் அதன் தாய் கருவுருவதிலிருந்து தொடங்குகின்றது, தாய்க்கு இரும்புச் சத்துக் குறைபாடு, போலிக் ஆசிட் குறைபாடுகளை நீக்குவதிலிருந்து தொடங்கி டெட்டனஸ் தடுப்பூசி கொடுப்பது என பல்வேறு திட்டமிடப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பிரசவத்தின்போது குழந்தை மூச்சுத் திணறல் இல்லாமல் பிறக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து அதற்கேற்ற பிரசவ முறைகளைத் திட்டமிடுதல் அதன் ஒரு பகுதியாகும்.
நமது மரபு வழிச் சிகிச்சையாளர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகளைப் பற்றி எதுவும் தெரியாமல் மேம்போக்காக ‘இயற்கை படைத்ததை இயற்கை காக்கும் என்று பேசி வருகின்றனர். அதனால் எந்தத் தடுப்பூசிகளும் போட வேண்டாம் என்றும் பேசி வருகின்றனர். உண்மையில் இயற்கை படைத்ததை இயற்கை அழிக்கும், டார்வினின் மொழியில் கூறினால் ‘தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கும்’ மற்றவை இயற்கையால் அழிக்கப்படும்.
மேலும், வரலாறு தெரியாமல் பழங்காலத்தில் அனைவரும் நலமுடன் இருந்தனர் என்று ஒரு கற்பனையிலும் உள்ளனர். இதுவும் ஒரு மூட நம்பிக்கையே ஆகும். இந்த மூடர்கள் இப்போது தடுப்பூசிகளுக்கு எதிராக கருத்துகளை ஊடகங் கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்று தடுப்பூசி போட்ட குழந்தை மரணம் என்று செய்தி வெளியிடுகின்றனர். இவர்களின் பரபரப்புச் செய்தி விதிகளின்படி தடுப்பூசி போடும் நாள் அன்று நடக்கும் இறப்பு கள் அனைத்துக்கும் காரணம் தடுப்பூசிகளே!
மனித இனம் இயற்கைப் பேரழிவு மற்றும் நோய்களிலிருந்து தங்களைக் காப்பற்றிக் கொள்வதைவிட இந்த மூடர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டியுள்ளது என்பது வேதனையான ஒன்றாகும்.
கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் இன்று அரிதா??
தமிழர்களின் வரலாற்றில் எவ்வளவு பேர் ஊனமாக, குருடாக, செவிடாக இருந்திருந்தால் அவ்வை அவ்வாறு இல்லாமல் பிறப்பதை அரிது என்று கூறி இருப்பார்? உண்மை யாதெனில், இந்தியாவில் அறிவியல் மருத்துவம் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தும் முன்பு கணிச மான மக்கள் நோய்களால் தாக்கப்பட்டு மாற்றுத் திறனாளியாக இருந்து வந்துள்ளனர். பெரியம்மை நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்திருக்கா விடில் உலக மக்கள் தொகையில் தற்போது பாதிப் பேர் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள்.
இன்று அரசு மருத்துவமனைகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும் ‘தடுப்பூசிகள்’ குழந்தைகளைத் தாக்கும் கொடிய நோய்களான கக்குவான் இருமல், பொன்னுக்கு வீங்கி, போலியோ, டெடனஸ், மீசில்ஸ், ரூபெல்லா ஆகியவற்றிற்கு எதிரானதாகும். நோய் இல்லாத குழந்தைகளுக்கும் ஏன் கொடுக்கப்படுகிறது என்று சில அதிபுத்திசாலிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தடுப்பூசி என்ற வார்த்தையின் அர்த்தமே இதன் விளக்கமாகும். நோய் வரும் முன்பே அதனைத் தடுக்கவே இவை கொடுக் கப்படுகின்றன, இது மண்டை உடையும் முன்பே ஹெல்மெட் அணிவது போலவாகும்.
பெரியம்மை, இதில் மீசில்ஸ் என்ற நோய் தாக்கினால் குழந்தை பார்வை இழக்கலாம், ரூபெல்லா நோய் தாக்கினால் குழந்தைக்குக் காது கேளாமல் போய் அதனால் ஊமையாக ஆகலாம், இதய நோய் வரலாம், போலியோ தாக்கினால் கால்கள் செயலிழந்து ஊன மாகலாம் அல்லது உயிர் இழக்கலாம்.
முற்காலத்தில் பிரசவத்தின் போது தாய் பிழைத்து, குழந்தை பிழைத்து, பிழைத்த குழந்தை ஊனமாக ஆகாமல் அல்லது வளரும் முன்பு உயிர் இழக்காமல் போவதென்பது அரிதான தாகும். இன்றும் நீங்கள் மிகவும் வயதானவர் களைக் கேட்டால் தங்கள் குழந்தைகளில் 2 முதல் 4 குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறுவர்.
போலியோ சொட்டு மருந்து உட்பட பல தடுப்பு மருந்துகள் கோடிக்கணக்கான குழந்தை களை ஊனமாகாமல் காத்து வருகின்றன. பெரும்பாலான இந்த மருந்துகள் இந்திய அரசால் உள்ளூரில் தயாரிக்கப்படுகின்றன. மத்திய சுகாதாரத் துறையின் அமைச்சராக திரு.அன்புமணி இருந்தபோது இந்த அரசு நிறுவனங்களை மூட முயன்றபோது கடுமை யான கண்டனங்களைச் சந்தித்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரம் ‘மருத்துவம் என்ற தர்க்கத்தின்’ முன்பு எடுபடாது. எனவே தர்க்க ரீதியில் அறிவியல்பூர்வமாக இதனை வெல்ல முடியாத மூடநம்பிக்கைக் கூட்டம் ‘புதிய வாழ்வியல்’ என்ற தத்துவத்தின் மூலம் இதனைச் சாதிக்கப் பார்க்கின்றது.
ஏனெனில் மருத்துவமனைக்குப் போகாதே, உன் குழந்தைக்குத் தடுப்பு மருந்து போடாதே என்று அறிவியல்பூர்வமாக இவர்களால் கூற இயலாது. ஆனால் ‘இது எங்க பழக்கம், வழக்கம், எங்கள் வாழ்வியல் முறை, அதனால் நாங்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிடலாம். இதுவே இதன்பின் உள்ள சதியாகும். மாற்று மருத்துவம் என்ற பெயரைக்கூட தற்போது மரபு மருத்துவம் என்று இவர்கள் மாற்றி உள்ளதன் காரணமும் அதுவே. ஏனெனில், மாற்று மருத்துவம் என்றால் தர்க்கரீதியான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும், ஆனால் மரபு என்றால் தர்க்கத் திற்குப் பதில் சொல்லத் தேவை இல்லை. குழந்தைகளுக்குச் ‘சூடு போடுவதுதான் எங்கள் மரபு’, எங்கள் மரபில் யாரும் தலையிடக் கூடாது என்று எளிமையாகக் கூறிவிட்டுப் போகலாம்.
மாற்று மருத்துவ முறைகளால் பாதிக்கப் பட்ட நூற்றுக்கணக்கானோரை நான் சந்தித் துள்ளேன். அவர்களிடம் ஏன் இப்படிச் செய்தீர் கள், முன்பே மருத்துவமனை வந்திருக்கலாமே என்று கேட்டால், பெரும்பாலானோர் ஒரே பதிலைக் கூறுவார்கள்.
அது என்னவெனில், ‘எங்களுக்கு இதெல்லாம் தெரியாது சார், யாரோ சொன்னாங்கன்னு போய்ட்டோம், கவனிக்காம விட்டுவிட்டோம்’ என்பதுதான் அது. இந்த அறியாமையே இதனை வியாபாரமாகச் செய்வோரின் அடிப்படையாகும். பொதுவாகவே இந்தியர்கள் அறிவியலைவிட அமானுஷிய ஆற்றல்களின் மீது பெரும் காதல் கொண்டவர்கள். சிட்டுக் குருவிகள் செல்போன் கோபுரங்களினால்தான் அழிந்து போகின்றன என்று யாராவது சொன்னால் உடனே அதனை நம்பிவிடுவார்கள். ஒவ்வொரு புதிய அறிவியல் கருவிகள் வரும்போதும் ஒரு புரளியைக் கிளப்பி விடுவார்கள்.
‘போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்பதிலிருந்து செல்போன் பேசினால் ஆண்மைக் குறைவு வரும் என்பது வரை இது நீள்கிறது. இணையம் இருப்பதால் இவர்களுக்குத் தற்போது மிகவும் வசதியாக ஆகிவிட்டது, சித்தர் ரகசியம், மூலிகை மர்மம், அமுக்குச் சிகிச்சை போன்று ஏதாவது ஒரு முகநூல் குரூப் ஒன்றை ஆரம்பிப்பது, பின்பு அதில் யாராவது அவருக்கு இருக்கும் நோய் களைப் பற்றிக் கூறினால், அது எதுவானாலும் தங்களிடம் தீர்வு உள்ளது என்று கூறி தொலைப்பேசி எண் முகவரி கொடுத்து முடிந்தவரை வசூல் செய்வது என்று இவர்கள் எத்தர்களாக வலம் வருகின்றனர்.
– ஜானகிராமன்
தொடரும் …