உற்சாக சுற்றுலாத் தொடர் – 2
மாச்சுபிச்சு மட்டுமல்ல…
அக்டோபர் 7ஆம் தேதி விமானப் பயணம் வாசிங்டன் டல்லஸ் விமான நிலையத்திலிருந்து ஆரம்பமானது. விமான நிலையத்தின் ஒரு தனிப் பகுதியில் இருந்து நாங்கள் ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதிப் பயணம் விமானத்தின் முன் பகுதி இருக்கை எண் 2 ஏ&பி, கையிலிருந்த அய்-பேடில் பயண விவரங்கள், செல்லும் இடங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் இருந்தன. அங்கிருந்து 6 மணி நேரத்தில் தென்அமெரிக்கா பெரு நாட்டின் தலைநகரம் ‘லீமா’ வந்தடைந்தோம். விமானத்தில் இரண்டு பேராசிரியர்கள் அலெக்சு மர்பி, சேக் டால்டன் பெரு நாட்டின் பழங்கால அரசியல் பற்றியும், இன்கா இனத்துக்கு முன் வாழ்ந்த மனிதர்களைப் பற்றியும், இன்கா இனத்தைப் பற்றியும் படங்களுடன் சொற்பொழிவு ஆற்றினார்கள்.
கையிலுள்ள அய்-பேடில் படங்களும் எழுத்துகளும், காதில் தனி ஒலிவாங்கி மாட்டிக்கொண்டு பேசுவதை விமானத்தின் இரைச்சலின்றி நன்றாகக் கேட்க ஏற்பாடு. ஏதாவது சரியில்லையென்றால் கையைத் தூக்கினால் உடனே வந்து சரி செய்வார்கள். கல்லூரிப் பாடம் போல் ஆனால் நகைச்சுவை யுடன் பல செய்திகள் கற்றுக் கொண்டோம்.
நடுவிலே தனி சமையல்காரர் தயாரித்த பல்வகை உணவு, புன்னகையுடன் வரிசையாகத் தரப்பட்டது. பயண விவரங்கள் தங்கும் விடுதி பற்றிய அறிவிப்பு, பயண அட்டை, மருத்துவ மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி அட்டை என்று விவரங்கள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக கைப்பை தவிர ஒரு பெரிய பெட்டியும், தள்ளுப் பெட்டியும் பற்றிக் கவலை இல்லை. அவை விடுதி அறைக்கே நேரே வந்துவிடுமாறு ஏற்பாடு. நேரம் போனதே தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்அமெரிக்கா பற்றி பயணக் கட்டுரை எழுதியிருந்தேன். ஆகவே இந்தத் தடவை மாச்சு பிச்சு பற்றி நிறைய எழு தாமல், அந்த நாட்டில் பார்த்த முக்கிய மாற்றங் கள் பற்றி எழுத விழைகிறேன்.
லீமா விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் சென்றோம். சிற்றுண்டி அருந்தி விட்டு ஒரு அருங்காட்சியகம் சென்றோம். அங்கே அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்ட ஆயிரக்கணக்கான அழகிய மண்பாண் டங்கள், பொன், வெள்ளி, வெண்கலச் சாமான் களைப் பார்த்தோம். ஒரு தனி மனிதரின் சேகரிப்பு. இவையெல்லாம் இன்கா மக்களுக்கு முந் தைய நாகரிக மக்களுக்கு உரியதாகும் என்றனர். இன்கா மக்கள் ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் இனத்தவரை அடிமை ஆக்கியவர்கள் ஸ்பானியர்கள்.
தற்போது பார்த்த மாற்றங்கள் என்னவென் றால் மேன்மை பெற்ற பொருளாதார நிலைமை, நகரத்தூய்மை, வேலை வாய்ப்பு முன்னேற்றம், மக்களின் முகத்தில் ஒளிவிடும் நம்பிக்கை. இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் மக்களுக்காகப் பாடுபடும் நல்ல அரசியல் தலைவர்கள் என்று அந்த நாட்டுப் பெண் பயண விளக்குநர் (Travel Guide) சொன்னார். மக்களும் தாங்களும் தங்கள்நாடும் முன்னேற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள் என்றார். கல்வி கற்பதிலும் மிக்க முன்னேற்றம் என்றார். பயணிகளாகிய எங்களுக்கு இந்த மாற்றம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அக்டோபர் 8ஆம் தேதி லிமா நகரிலிருந்து
விமானத்தில் குச்கோ நகரம் சென்றோம். அங்கு monestery என்ற விடுதியிலிருந்து அரை மணி தூரத்தில் உள்ள சக்சுகாமன் என்ற இன்காவின் தொன்மையான இடத்தை அடைந்தோம். அந்த இடத்தின் சிறப்பு என்ன வென்றால் மிகப்பெரிய கற்களை (13 அடி உயர முள்ள 200 டன்கள் எடை உடைய) ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கட்டி டங்கள்தான். இதில் ஆச்சரியம் என்ன? இவை கட்ட அந்தக் காலத்தில் சக்கரமோ அல்லது சுமை தூக்கியோ கண்டுபிடிக்கப்படவில்லை. யானைகளும் இந்த நாட்டில் கிடையாது. பிறகு எப்படி இக்கற்களைத் தூக்கி அடுக்கியிருப் பார்கள் என்பது புதிர் அல்லவா? இக்கட்டிடங்களை இன்கா மன்னர் பச்ச கூட்டி என்பவர் கட்டியுள்ளார். இம்மன்னர் இன்கா காலத்தில் மிகவும் புகழ் பெற்றவராக இருந்துள்ளார்.
அன்று இரவு விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் காலை உலக அதிசயங்களில் ஒன்றான மாச்சு பிச்சுக்குப் போகும் வழியில் ஒலாண்டேடாம்போ என்ற இன்கா கோட்டைகளில் ஒன்றான தொன்மைக் கட்டிடத்தைப் பார்க்க ஊர்தியில் சென்றோம். அந்தத் தொன்மையான நகரத்தில் பல நூறு படிக்கட்டுகளைக் கொண்ட கட்டிடங்கள் அரச குடும்பத்தின் இறைவழிபாட்டுக்கும், அரசாங்க நிர்வாகத் திற்கும், தானிய சேமிப்புக் காவலுக்கும் உதவி யாக இருந்ததாகச் சொன்னார்கள். இக்கட்டிடங் கள் பெருங் கற்களை அடுக்கி, கற்களின் இடை யில் சாந்து வைக்கப்படாமல் கட்டப்பட்டவை யாகும். நானூறு ஆண்டுகளாக இக்கட்டிடங்கள் சிதையாமல் இருப்பது, அக்காலக் கட்டிட வல்லுநர்களின் அறிவுச் செறிமையைக் காட்டு கிறது. அதில் மேடைகள் போல் அமைக்கப் பட்ட அடுக்குகளில் பயிர்களும் வளர்க்கப்பட் டனவாம்.
இந்தத் தடவை மாச்சு பிச்சுக்கு உல்லாசப் புகைவண்டியில் சென்றோம். உணவு விருந்து புகைவண்டியில் மிகவும் இன்புறும் வண்ணம் இருந்தது. மாச்சு பிச்சு ஏறக்குறைய 2,453 மீட்டர்கள் உயரத்தில் இருப்பதால் அங்கே உயிர்க்காற்று (ஆக்சிசன்) அழுத்தம் குறைவு. ஆகையால் படிகள் ஏறும் போது மூச்சுவிடச் சிறிது கடினமாக இருந்தது. மாச்சு பிச்சு, இன்கா இனத்தவரால் சுமார் கி.பி.1450ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தொல்பொருளியல் அறிஞர் கள் கூறுகின்றனர்.
இக்கட்டிடங்களை அரசர்கள் நிர்வாகத் திற்கும், இறை வழிபாட்டிற்கும், வானவியல், விவசாய இயல் போன்றவைகளுக்கும் பயன்படுத்தி இருந்திருக்கிறார்கள்.
பிறகு 16ஆம் நூற்றாண்டின் நடுவில் இந்நகரத்தைவிட்டு அகன்றுவிட்டார்கள். இவர்கள் இப்படி ஏன் திடீரெனப் போய் விட்டார்கள் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.
1911ஆம் ஆண்டு தொல்பொருள் அறிஞர் கிரம் பிங்கம் Prof. Hiram Bingam, Yale University) என்பவர் காடுகளால் மூடிக் கிடந்த இந்நகரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். மலை உச்சியில் நூற்றுக்கணக்கான அறைகள் கொண்ட இக்கட்டிடங்கள் மேகங்களின் நடுவில் மிதக்கும் நகரம் போன்ற உணர்வை ஏற்படுத்தின. கட்டிடங்களின் நடுவில் உள்ள மேடை போன்ற புல்வெளிகளில் லாமா என்ற ஒட்டகச் சாயல் உள்ள ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
மனிதர்களைக் கண்டு அஞ்சாத இவ்விலங்கு-களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மலையைச்சுற்றி மழைக்காடுகளும் (Rain Forest), மலை அடிவாரத்தில் உள்ள உறுபாம்பா என்ற ஆறும் கண்களுக்கு இனிமைதான். அன்று இரவு இன்கா இனத்துப் பெண்கள் லாமா கம்பளி நூல் கொண்டு ஆடை நெய்து காண்பித்தார்கள். விடுதிக்குப் பக்கத்தில் உள்ள அருங்காட்சியகத் தில் இன்கா இனத்து தங்க வெள்ளி நகைகள், பாத்திரங்கள், மண் பாண்டங்கள் பார்த்தோம். ஸ்பானியர்கள் இன்கா இனத்துக் கட்டிடங்களை இடித்து அவற்றின் மேல் கட்டிய கிறித்தவக் கோவில்களின் உள்ளே தங்கத்துடனும் வெள்ளி யுடனும் மிளிரும் அழகிய கலை வேலைப் பாடுகளைப் பார்த்தோம். கருவிகள் இல்லாமல் கற்கருவிகளைக் கொண்டு கட்டிய பழைய இயற்கை நாகரிகத்திற்கும், அந்தக் கற்களைத் திருடிக் கட்டப்பட்ட மதவெறி நாகரிகத்திற்கு முள்ள வேறுபாடு நன்கு தெரிந்தது.
இதுதான் முன்னேற்றமா என்ற கேள்வி எழுந்தது. பெரு நாட்டிலே சோளப்பொரி ஒரு சென்டிமீட் டரைவிடப் பெரிதாக இருந்தது. அவர்கள் 200க்கும் மேற்பட்ட சோள வகைகளையும், 2000 வகை உருளைக்கிழங்கு வகைகளையும் பயிரிடு வதாகச் சொன்னது எங்கள் விவசாய இதயங் களைக் கவர்ந்தது.
உறங்கி எழுவோம்
– மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்