மலைஜாதிப் பெண்
கிள்ளிப் பறித்தாள்
தேயிலையை அங்கே!
கறவைப் பசுவை
பாடிக் கறந்தாள்
பால் வந்ததிங்கே!
கரும்பாலை அலுப்பில்
தினம் அவன் உழைத்தே
சக்கரை சேர்ந்ததிங்கே!
தண்ணீர் கலந்தவன்
என்ன ஜாதியோ?
என்ன எழவோ?
-என யாரும் கேட்டறியேன்.
பாத்திரம் தேய்த்தவன்,
அடுப்பைச் செய்தவன்,
எரிக்கிற எண்ணெய்,
கழுவுகிற சோப்புக் கட்டி,
எதற்கும் ஆதிமூலம் கேட்டறியேன்.
ஜாதி பேசும்
சுத்தபத்தம் எல்லாம்
தேநீர்க் கடை
இரட்டைக் குவளையில்தான்.
இப்பெல்லாம் எங்க சார்
இரட்டை டம்ளர். எல்லாமே பிளாஸ்டிக் டம்ளர்தானே’ என்பவன்
வலிந்து சொல்வான்
இப்பெல்லாம் யாரு சார்?
ஜாதி பாக்குறா! என்று.
– தம்பி. அழ. பிரபு, மதுரை