தலைமுறை

பிப்ரவரி 01-15

சிறப்பு சிறுகதை – 3

தலைமுறை

– சிங்கப்பூர் கு.சீ.மலையரசி

சிங்கப்பூரில் இடு சிறப்பான சிறுகதை என்று தேர்வு செய்யப்பட்டது – ஆசிரியர்

அம்மாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறியதைக் கேட்டதிலிருந்து தாமரையின் மனம் நிலைகொள்ளவில்லை. 90 வயதை நெருங்கும் அம்மா வடிவம்மாள் தன்னைக் கவனித்துக் கொள்ளும் விதத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் பலமுறை அவரின் மீது சிறிது பொறாமை கொண்டதும் உண்டு. அதை அம்மாவிடம் கூறிச் சிரித்ததும் உண்டு.

2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் தனது 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும்போது தானும் தனது 90ஆவது பிறந்த நாளைச் சேர்ந்து கொண்டாடப் போவதாகச் சொல்லி மகிழ்ச்சிப்பட்டுக் கொண்டிருந்த அம்மா, திடீரென்று ஒரு நாள் அமைதியாக இருந்தார். மருத்துவர்களிடம் காண்பித்த போதுதான் அவருக்கு ஞாபக மறதி நோய் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகச் சொன்னதைக் கேட்டு உடைந்துபோனாள் தாமரை.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அம்மாவிடம் பழைய செய்திகளைப் பேசுவதோடு, அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் சிங்கப்பூரின் வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட கண்காட்சிக்கு அழைத்துச் சென்றால், அவரின் நினைவாற்றல் நல்லமுறையில் மேம்பட உதவும் என்று அழைத்துச் சென்றபொழுதுதான் அங்கு கால் சறுக்கிக் கீழே விழுந்ததில் இடுப்பெலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால், அவர் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டதிலிருந்து சோகத்துடன் அம்மாவின் அருகிலேயே அமர்ந்துகொண்டு, அவரின் கையை வருடிவிட்டபடி, எல்லாம் என் தவறு! என்று மீண்டும் மீண்டும் தன் மனதில் சொல்லிக்கொண்டு தாமரை கலங்கிய கண்களுடன் இருந்தாள்.

அம்மா! என்று அழைத்துக்கொண்டே வந்த கீர்த்தனா என்னம்மா! நீங்க அழுதுகொண்டு இருக்கீங்க. டாக்டர் என்ன சொன்னார்? பாட்டிக்கிட்ட பழைய சம்பவங்களை, அவங்களுக்குப் பிடித்ததைப் பற்றிப் பேசுங்க, அது பாட்டிக்கு உதவியா இருக்கும் என்று சொன்னார். நீங்க என்னன்னா? கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டே மகளைப் பார்த்து, ஆமாம் என்பதற்கு அடையாளமாக தலையாட்டினாள் தாமரை.

கீர்த்தனா! பாட்டிக்குப் பிடித்த அந்தப் பழைய பாடல் காற்றினிலே வரும் கீதம், பூமியல் மானிட ஜென்மம், ஓ… ரசிக்கும் சீமானே அப்புறம் என்றதும் முதல்ல இந்த மூனு பாட்டையும் கணினியில் தேடிக்கொண்டு வரேன், அதுவரை பாட்டிக்கிட்டப் பேசுங்க அம்மா! என்று கூறிக்கொண்டே அறையை விட்டுச் சென்றாள் கீர்த்தனா.

அம்மா! அம்மா! என்று அழைத்துக்கொண்டே நாற்காலியைப் படுக்கைக்கு அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டார் தாமரை. பொது மருத்துவமனையில் தனி அறை என்பதால் வசதியாக இருந்தது.

அம்மா! சோழநாடு, தஞ்சாவூர், உளியின் சத்தம் கேட்கின்றதம்மா, உங்க தாத்தாவின் அருகில் நீங்கள் அமர்ந்துகொண்டு, அவர் சிற்பங்களைச் செதுக்கும்பொழுது எழும் உளியின் சத்தம் பிடிக்கும் என்பதால் அவருடன் இருக்கும்பொழுதெல்லாம் வடிவம்மா! தஞ்சை பெரிய கோவில் கட்டியபோது அதில் பல சிலைகளைச் செதுக்கி வடித்த சிற்பிகளின் பரம்பரை நாம், ஒருமுறை நம் முன்னோர்களில் ஒருவருக்கு இராசராசசோழன் வெற்றிலை மடித்துக் கொடுத்துள்ளார் என்று பெருமையாகச் சொல்லி கேட்டுள்ளதாகச் சொல்வீர்களே அம்மா! அப்படிப்பட்ட பரம்பரை தன்னோடு இந்த சிற்பக்கலையும் முடிகிறதே என்று மனமுடைந்து பலமுறை அழுவதைப் பார்த்து இருப்பதாகவும் சொல்வீர்களே, உங்க அப்பா நடராசன் ஜாதியின் பெயரால் செய்யப்படும் தொழிலைச் செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

அவர் ஈரோடு ராமசாமி நாயக்கரின் பல மேடைப் பேச்சுகளைக் கேட்டுவிட்டு, ஏதாவது வேறு வேலை செய்யலாம் என்று மலாயா சிங்கப்பூர் வந்தார் என்றும் அப்பொழுது உங்களுக்கு மூனு வயசு! அம்மா, அண்ணன், கைக்குழந்தை தம்பி என்ற அனைவரையும் தாத்தா வீட்டில் விட்டுப் போனவர் 5 ஆண்டுகள் கழித்துத் தான் திரும்பி வந்தார். அவர் சம்பாதித்துக் கொண்டு வந்த பணத்தை வைத்து, ஊரில் செய்ய வேண்டியவற்றை எல்லாம் முடித்துக் கொண்டு, உங்க எல்லோரையும் அழைத்துக் கொண்டு நாகப்பட்டினத்தில் 1934ஆம் ஆண்டு கப்பலின் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார்.

அப்பொழுது இங்கு நிறைய தமிழர்கள்தான் வாழ்ந்தார்கள் என்றும், வந்த ஆரம்ப காலங்களில் பாசிர், பாஞ்சாங், தஞ்சோங் பகார் வட்டாரங்களில் ஒட்டுக் குடித்தனத்தில் வாழ்ந்தீர்கள். பிறகுதான் அவ்லோக் (பிணீஸ்மீறீஷீநீளீ ஸிபீ) பகுதியில் சிறிய அறையொன்றை வாடகைக்கு எடுத்தார் உங்க அப்பா நடராசன். அவரும் நண்பர்கள் மூலம் கிடைத்த பல வேலைகளைச் செய்து வந்தார். கடைசியாக சிராங்கூன் சாலையில் பி.கோவிந்தசாமி பிள்ளையின் மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

இங்கு பலரும், பல இனத்தவர்களும் விரும்பி உண்ணும் உணவில் பயன்படுத்தும் லவங்கப்பட்டை, மஞ்சள், மல்லி, அன்னாசிப்பூ, புளி போன்ற வாசனைப் பொருட்களையும், அரைத்த மசாலா வகைகளையும் எடைபோட்டுக் கட்டித் தரும் வேலையைச் செய்து வந்தார். சில நேரங்களில் மாவு அரைப்பானில் உணவுப் பொருட்களை மாவாக அரைத்த மூட்டைகளை வண்டியில் கொண்டு வந்து கடையில் போடுவதும் உண்டு. சிராங்கூன் ரோட்டில் கடை வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் இந்திய சமூகத்தினராக இருந்தனர். அரைத்த பொருட்களின் மணம் தெருவெங்கும் வியாபித்திருந்தது.

இன்று மாவு அரைப்பான் மறைந்துவரும் தொழில் என்பதைப் படித்து மிகவும் வருத்தப்பட்டீர்கள்.

பி.கோவிந்தசாமி பிள்ளை அவர்கள், உங்க அப்பாவின் உழைப்பையும், அவரின் ஒழுக்கமான குணத்தையும் பார்த்து, தன் கடையில் உதவிக் கணக்கராக வேலை கொடுத்தார். அவரின் தயாள சிந்தையை மறக்காமல் நன்றியோடு இருந்தார் நடராசன்.

பி.கோவிந்தசாமி பிள்ளை அவர்கள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த மளிகைக் கடையை வாங்கி வியாபாரத்தைப் பெருக்கினார். 1937ஆம் ஆண்டு இந்திய வர்த்தக சங்கத்தை நிறுவியவரும் இவரே. அவரின் பெருந்தன்மையான குணத்தையும், உழைப்பையும் நம் இளையர்களும் பின்பற்றி வாழவேண்டும் என்று பலமுறை ஆதங்கத்தோடு கூறுவீர்களே!

உங்க மூனு பேருடன், இங்கு வந்த பிறகு பிறந்த இரண்டு பெண்கள் என அனைவரையும் நன்கு படிக்க வைத்தார் உங்க அப்பா. அப்பொழுது இங்கு பல தமிழ்ப் பாடசாலைகள் இருந்ததாகவும், அதில் பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில், நீங்கள் தமிழ் படித்து நன்கு தேறி வந்தீர்கள். அதனால்தான் பிற்காலத்தில் தமிழாசிரியையாக வேலை பார்க்க முடிந்தது என்று பலமுறை கூறியுள்ளீர்கள் என்று அம்மாவின் கன்னத்தை லேசாக தடவிக் கொடுத்தார் தாமரை.

அந்தக் காலக்கட்டத்தில்தான் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் கோ.சாரங்கபாணி அவர்கள் கொண்டாடிய தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து, அவருடன் பல பொதுப்பணிகளிலும் உங்க அப்பா நடராசன், மாமா சுப்பையா தொண்டு செய்து வந்தார்கள். உங்க சகோதரிகளும், நீங்களும் தமிழர் திருநாள் போட்டிகளில் கலந்துகொண்டு கோ.சாரங்கபாணி அவர்களின் கையால் பரிசு வாங்கியதை உங்கள் வாழ்வின் பொற்காலம் என்று சொல்லி பூரித்துப் போவீர்களே!

அம்மா! உங்களுக்குக் கல்யாணம் என்று அன்போடு தலைமுடியை வருடிவிட்ட தாமரைக்கு தாயின் நிலை கண்டு வழியும் கண்ணீரை நிறுத்த முடியாமல் சிரமப்பட்டார். வயதானாலும் ஒரு தாய்க்கு ஈடாக எதுவுமில்லை. கழிவறைக்குச் சென்று முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டவர், தன் கைப்பையில் இருந்த நீர் பாட்டிலை எடுத்து 4_5 வாய் தண்ணீரைக் குடித்தார். அதேநேரத்தில் மருத்துவரும், தாதியரும் வந்து வடிவம்மாளின் உடல்நிலையைச் சோதித்துச் சென்றனர். அதன்பிறகு மீண்டும் தாயின் அருகில் அமர்ந்துகொண்டு அவரின் நினைவுகளை மலரச் செய்தார் தாமரை.

அம்மா! உங்களுக்கு இருபது வயது. அதற்கு முன் யார் வந்து பெண் கேட்டாலும் சம்மதம் தரவில்லை உங்க அப்பா, அப்புறம்தான் தன் நண்பனின் மகன் நல்லதம்பிக்குப் பேசி முடித்தார். அவர் மலர்மாலைகள் கட்டித்தரும் தொழிலைச் சொந்தமாக ஒரு கடை வைத்து நடத்தி வந்தார். இந்தியச் சமூகத்தில் சமயச் சார்பான திருவிழாக்கள் வீட்டில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மலர்மாலைகள் மகத்தான இடம் பிடிக்கின்றன.

நல்லதம்பிக்கும் உங்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் என்பதால் மகிழ்ச்சியோடு தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார் உங்க அப்பா நடராசன். கோ.சாரங்கபாணி அவர்களும், பி.கோவிந்தசாமி பிள்ளை அவர்களும் முன்னிலை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

அன்று நீங்கள் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு அவதிப்பட்டதைப் பார்த்த உங்கள் கணவர் நல்லதம்பி (என் அப்பா) இனிமேல் நைலக்ஸ் புடவை உடுத்தினால் போதும் என்றதும், எவ்வளவு மகிழ்ச்சியடைந்தீர்கள்?

இந்தப் புதிய ரகச் சேலைகள் கட்டுபடியாகக்-கூடிய விலையில் இருந்ததுடன் கண்ணைக் கவரும் நிறங்களில் மெல்லியதாகவும் லேசாகவும் இருந்ததால் நைலக்ஸ் புடவைகளைத் தானே விரும்பி உடுத்துவீர்கள்!

ம்… இன்னொன்று அம்மா! உங்கள் அப்பா நடராசன் வாய்நிறைய வெற்றிலை குதப்பும் பழக்கமுடையவர். அவர் அதை வெளியே உமிழும்போது நிறுத்துங்க…

அப்பா! இந்தப் பழக்கத்தை என்று சொல்லும்போதெல்லாம் அவர் முடியாது கண்ணு வடிவம்மா, மலாய் இனத்தவர்களைப் பார், நம்மைப் போல் அவர்களின் கலாச்சாரத்திலும் வெற்றிலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது? 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து புழக்கத்தில் இருக்கும் வெற்றிலை இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படுகிறது என்று பெருமைப்படக் கூறுவார் என்று சொல்லும் நீங்கள், உங்கள் கணவர் நல்லதம்பிக்கோ ஹஜ் பயண இடைவார் இல்லாமல் முடியாது. அந்தக் காலத்தில் யாராவது ஊரிலிருந்து வந்தாலும் சரி, போனாலும் சரி உடனே அதை வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவார். ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள் அரபு நாட்டில் அணியும் வெண்மையான ஆடையின் மேலே கட்டிக்கொள்ளக்கூடிய, பல வசதிகளைக் கொண்ட இந்த இடைவார் அப்பகுதியில் பலராலும் விரும்பி வாங்கப்பட்டது. இவரும் அதை வேட்டியின் மேல் கட்டிக்கொள்வார். நல்ல மாப்பிள்ளை! நல்ல மாமனார் என்று அடிக்கடி சொல்லிச் சிரிப்பீர்கள்!

அதேமாதிரி, உங்கள் வாழ்க்கையில் ஒரு மைல்கல் நிகழ்வாகச் சொல்வது, 1954ஆம் ஆண்டு பெரியார் சிங்கப்பூர் வந்திருந்தபோது அவரை அனைவரும் நேரில் சென்று பார்த்தபொழுது உங்கள் கணவர் நல்லதம்பியின் கையால் கட்டிய மலர்மாலையை பி.கோவிந்தசாமி பிள்ளை அவர்கள் பெரியாருக்குப் போட்டார்! அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டீர்கள். அப்பொழுது தாமரை, நான் உங்கள் கையில் கைக்குழந்தை. இதோ! அந்தப் புகைப்படம். பாருங்கள் என்று அம்மாவின் முன் காண்பித்துக் கொண்டிருந்தபோது….

(அடுத்த இதழில்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *