காவிப் புரட்டு
இந்திய அறிவியல் காங்கிரஸ் – இந்தியாவிற்குத் தலைக்குனிவு
இந்திய அறிவியல் காங்கிரஸ் கழகம் [INDIAN SCIENCE CONGRESS ASSOCIATION] என்பது இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி களை ஊக்குவிப்பதற்காக 1914-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. தற்போது அவ்வமைப்பில் 30,000 விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இது இந்தியாவின் ஓர் முன்னணி அறிவியல் அமைப்பாகும். அவ்வமைப்பால், ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. 102-ஆம் இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் 2015 மும்பையில் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நிகழ்வின் ஒரு பகுதியாக, “சமஸ்கிருதம் மூலம் பண்டைய இந்திய அறிவியல் [Ancient Indian sciences through Sanskrit]” என்ற கருத்தரங்கம் நடந்தது. சமஸ்கிருதம் வழியாக… பண்டைய இந்திய அறிவியல் என்ற தலைப்பே தலைசுற்ற வைக்கிறது அல்லவா? அந்நிகழ்வில் நடந்தேறிய முட்டாள்தனமான, அறிவியல் என்ற பெயரில் வழங்கப்பட்ட வேத அறிவியல் உரைகளில், பகுத்தறிவிற்கு முற்றிலும் முரணான சிலவற்றைக் காண்போம்.
இந்திய அறிவியல் காங்கிரஸில் அரங்கேறிய கேலிக் கூத்துகள்:-
விமானத் தொழில்நுட்பம் பற்றி கேப்டன் ஆனந்த் போடாஸ் பேசினார். அவர், “பண்டைய இந்தியாவில் விமானத் தொழில்நுட்பம் பற்றிப் புராணங்களில் இருக்கிறது என்பது ஒரு கதை அல்ல; அது தொழில்நுட்ப விவரங்களைக் கொடுக்கும் ஒரு வரலாற்று ஆவணம். ரிக் வேதத்தில் பண்டைய விமானங்கள் பற்றிய குறிப்பு உள்ளது. முனிவர்கள் அகத்தியர் மற்றும் பரத்வாஜ் ஆகியோர் விமானக் கட்டுமானத் தைப் பற்றிய அறிவு கொண்டவர்கள் என்று தெளிவாக பல ஆவணங்களில் இருக்கிறது. ஏரோனாட்டிக்ஸ் அல்லது விமானிக்கசாஸ்த்ரா என்பது பரத்வாஜின் யந்திர சர்வஸ்வத்தின் ஒரு பகுதி. விமானிக்கசாஸ்திரத்தில் விமானத் தொழில்நுட்பம் பற்றியும், விமான வடிவமைப்பு பற்றியும், போக்குவரத்துப் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக உள்ளது. விமானத் தொழில்நுட்பம் பற்றி சமஸ்கிருத மொழியில் 100பிரிவுகள், எட்டுஅத்தியாயங்கள், மற்றும் 3000 ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
மிதக்கக் கூடிய, பின்னோக்கியும் பக்கவாட்டிலும் பறக்கும் 200 அடி விமானங்கள் வேத காலத்திலேயே இருந்தன. பரத்வாஜால் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தில் போர்க்காலப் பயன்பாட்டிற்கென 30 என்ஜின்கள் இருந்தன. பரத்வாஜின்ப்ரிஹத் விமானசாஸ்திரத்தில், விமானங்கள் செய்வதற்குத் தேவையான உலோகக் கலவைகள் பற்றியும், விமானிகளை நீர், வைரஸ் மற்றும் அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் சிறந்த உடைகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் விமானசம்ஹிதா என்ற புத்தகத்தில் பரத்வாஜ் குறிப்பிடப்பட்டுள்ள உலோகக் கலவைகளைப் [alloys] பற்றிப் படித்து, ஆய்வு செய்து அவற்றை கண்டுபிடிக்கவேண்டும். மனிதர்களின்தோல், எலும்பு மற்றும் உடலின் பிற பகுதிகளைத் தாக்கும் 25 வகையான வைரஸ்கள் பற்றியும் பரத்வாஜ் கூறியுள்ளார் என்று பேசினார்.
மருத்துவர் அஸ்வின், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நவீன அறுவை சிகிச்சை முறையை இந்தியர்கள் கண்டுபிடித்துவிட்டனர். நவீன அறுவைக் கருவிகளைப் போன்ற இரும்பாலான 100க்கும்
மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகள் இந்தியர்களிடம் இருந்தன என்றார்.
சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவதேகர், மனிதர்களின் முன்னேற்றத்திற்கு சமஸ்கிருத அறிவு தான் தீர்வு என்றார். சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்தியர்கள்தான் பிதாகரஸ் தேற்றத்தையும், அல்ஜீப்ராவையும் கண்டுபிடித்தனர். ஆனால், அப்பெருமை மட்டும் கிரேக்கர்களுக்கு உரிய தாகிவிட்டது. என்றார். எவ்வித ஆதாரமும் இன்றி பிதற்றிக் கொண்டிருந்த வர்தன் கூற்றுக்கு ஆதரவாக, பிதாகரஸ் தேற்றம் கி.மு.800-களில் சுல்பசூத்திரத்தில் போதையனாரால் எழுதப்பட்டுள்ளது என்று மும்பை பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதத் துறைத் தலைவரான டாக்டர் கவுரி மஹுலிகர் பேசினார்.
மாட்டின் உடலில் ஒரு பாக்டீரியா உள்ளது. அந்த பாக்டீரியா, மாடு எதை உட்கொண்டா லும் அதனை 24 காரட் தங்கமாக மாற்றிவிடும். அந்த பாக்டீரியாவைப் பற்றி நாசாவிற்குக் கூட தெரியும் என்றார் ஒருவர்.
மூன்று நாட்கள் நீரில் மிதக்க வைத்து நடத்தப்படும் பிரேத பரிசோதனை முறையும் [AUTOPSY] வேத காலத்திலேயே இருந்ததாம்.
குஜராத் சர்வதேச இந்தியன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் மூன்று சக ஊழியர்களு டன் கிரண்நாயக், மகாபாரதத்தில், செவ்வாய் கிரகத்தில் இரு அரசர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஒருவரின் தலைக்கவசம் கீழே விழுந்து விட்டது. இப்போது நாம் கூகுளில் ஹெல்மட் ஆன் மார்ஸ் என்று தேடினால் நாசா வெளியிட்டுள்ள புகைப்பட ஆவணத்தைக் காணலாம் என்றார்.
திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயிண்டிஃபிக் ஹெரிட் டேஜ் என்ற நிறுவனம் கண்காட்சியில் வைத்தி ருந்த ஓர் புத்தகத்தில், வேதங்கள் அசைவ உணவு உட்கொள்வதால் ஏற்படும் அறிவியல் தீமைகளை நிரூபித்துள்ளது என்றிருந்தது.
ராம் பிரசாத் காந்திராமனின் ஆன்லைன் பெட்டிஷன்:-
இந்திய அறிவியல் காங்கிரஸில், போடாஸின் விரிவுரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, நாசா விஞ்ஞானி ராம்பிரசாத் காந்தி ராமன் ஒரு ஆன்லைன் பெட்டிஷனைத் தொடங்கினார். விஞ்ஞானிகளாகிய நாம் அமைதியாக இருப்பதென்பது, அறிவியலுக்கு நாம் செய்யும் துரோகம் மட்டுமல்ல; நம் குழந்தைகளுக்கும் தான் என்று அதில் குறிப்பிட்டிருந்தார் ராம்பிரசாத். 1000-க்கும் மேற்பட்டவர்களால் அது கையொப்பமிடப் பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் பல விஞ்ஞானிகள் போலி அறிவியலிற்கு இந்திய அறிவியல் காங்கிரஸ் கொடுத்த களத்தைக் கண் டித்தனர். எனினும், 30,000 இந்திய விஞ்ஞானி களை ஒன்றுபடுத்தும் அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், இது இந்திய புனித நூல்களில் உள்ள பரந்த அறிவியல் அறிவிற்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சி என்று நம்பினர்.
புனிதநூல்கள் மற்றும் சமஸ்கிருதம் பற்றிய மெக்காலேவின் பார்வை:-
பிரிட்டனைச் சேர்ந்த சிறந்த கல்வியாளரும், இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவரும், சிறந்த கட்டுரையாள ரும், வரலாற்று ஆய்வாளருமான மெக்காலே [MACAULAY] 1835-ஆம் ஆண்டில் அப்புனித நூல்கள் மற்றும் சமஸ்கிருதத்தைப் பற்றி இந்தியக் கல்வி ஆய்வுக்கூட்டத்தில் கூறியவை:
சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களில் இருந்தும் தொகுக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்கள், இங்கிலாந்தில் ஆயத்தப் பள்ளிகளில் [PREPARATORY SCHOOLS] பயன்படுத்தப்படும் மிகவும் அற்பமான தகவல்களைக் காட்டிலும் குறைவான மதிப்புடையவை தான். அரபு மற்றும் சமஸ்கிருதக் கல்லூரிகளுக்குச் செலவிடப்படும் பணம் உண்மைக்குப் புறம்பான, பிழைகளின் சாம்பியன்களாக மாணவர்களை உருவாக்குவதற்குத்தான். நாம் ஒரு மதத்தோடு தொடர்புடையது என்பதற்காக தவறான வரலாறு, தவறான வானியல் மற்றும் தவறான மருத்துவத்தைக் கற்பிக்கிறோம். [அவர் குறிப்பிடுவது புனித நூல்கள் என்று கூறும் சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள கூற்றுகளைத்தான்.]
நம் புத்தகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் தகுதி சமஸ்கிருதத்திலோ, அரபியிலோ உள்ள ஒரு புத்தகத்திற்குக்கூட இல்லை. நாம் ஆட்சியில் இருக்கும் போது, ஒரு சாமானிய ஆங்கிலயேருக்குக்கூட கேவலமாக இருக்கும் மருத்துவக் கோட்பாடுகளையோ, ஆங்கில உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவியைச் சிரிக்க வைக்கும் வானியலையோ, 30 அடி உயரமான மன்னர்களைக் கற்பிக்கும் வரலாறையோ, இனிப்பான மற்றும் வெண் ணெயால் ஆன பாற்கடலைக் குறிப்பிடும் புவி யியலையோ, 30,000 ஆண்டுகளாக நீண்ட ஆட்சிக் காலத்தைப் பற்றியோ கற்பிக்க வேண்டாம்.
1835-ஆம் ஆண்டு மெக்காலே கூறியவற்றை இந்திய அறிவியல்(?) காங்கிரஸ் நடந்துள்ள இத்தருணத்தில் நாம் அனைவருக்கும் நினைவுப் படுத்த வேண்டும். இந்திய அறிவியல் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டிலிருந்து நடந்த நிகழ்வுகளைப் பார்த்தோமேயானால், இது போன்ற ஓர் அடிமுட்டாள்தனமான அறிவியல்-தொழில்நுட்ப மாநாடு நடந்ததே இல்லை. அப்பெருமை(சிறுமை) இக் காவிக் கும்பலையே சாரும்! இது இந்தியாவிற்கு ஒரு தலைக்குனிவு!
– யாழ்மொழி