என்னதான் இருக்கிறது மாதொருபாகன் நூலில்?

பிப்ரவரி 01-15

கடவுளை வணங்குபவன் காட்டு-மிராண்டி என்று பெரியார் சொன்னபொழுது சாதாரணமாகத் தோன்றினாலும், ஆராய்ந்து பார்க்கும்பொழுது அதன் ஆழமான பொருள் புரியும்.

மாதொருபாகன் நாவலைப் படித்து முடித்தவுடன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி மட்டுமன்றி, பக்தி வந்தால் புத்தி  போகும் என்ற கூற்றின் உண்மையும் புலப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டு சமூக விஞ்ஞானியின் கூற்று எவ்வளவு சரியென்று புலப்படுகிறது. இந்தச் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற எண்ணற்ற நம்பிக்கைகளை விவாதத்திற்கு உட்படுத்தி, பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் அத்தகைய ஒன்றினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கதை நடந்த காலம் சுதந்திரம் வருவதற்கு முந்தைய ஒன்று. கதை நடக்கும் இடம் திருச்செங்கோட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிராமம். கிராமங்களில் ஜாதியின் இறுக்கத்தில் வாழும் குடும்பங்களைப் பற்றிய கதை. இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்று காந்தி சொன்னார்.

ஆனால், அந்த இதயம் எந்த அளவிற்குச் சீர் கெட்டுப்போய் உள்ளது என்பதை யாரும் உணரவே இல்லை. மக்கள் கிராமங்களை வெறுத்து நகரங்களை நோக்கி ஓடுவதற்கு வெறும் பொருளாதாரம் மட்டும் காரணம் அல்ல. அங்குள்ள சமூகச் சூழல்தான் பெரும் காரணம். நகரத்திலே முற்றிலுமாக ஜாதி வேற்றுமை கிடையாது என்று சொல்லமுடியாவிட்டாலும், பெருமளவு இல்லை என்பது உண்மை. நகரத்தில், அவரவர்தம் உழைப்புக்கு ஏற்ற வருமானம் அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. நகரங்களில் கூட்டுக் குடும்பங்கள் கிடையாது. அது ஒரு குறையாகக் கருதப்பட்டாலும் இன்னொரு வகையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகிறது.

கூட்டுக் குடும்பம் எழுத்தளவில் வேண்டுமானால் சிறந்த சமூக அமைப்பாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் பல்வேறு சங்கடங்களையும், அழுத்தங்களையும் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் செலுத்துகிறது என்பதுதான் உண்மை.

மாதொருபாகன் கதையில் ஆசிரியர் அதனை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். குழந்தை இல்லாத பென்னா – காளி தம்பதியினருக்கு அப்படி ஒரு சமூக அழுத்தம். தங்களுக்குக் குழந்தை இல்லையென்றால் என்ன, ஒருவருக்கு ஒருவராக குழந்தையாக இருந்துவிட்டுப் போறோம் என்ற மனநிலை கொண்டிருந்தாலும், ஜாதி, சமூகம், உறவு அவர்களை நிம்மதியாக இருக்க விடவில்லை. குழந்தைப்பேறு இல்லாத பெண்ணை உலர் நிலமாகவும், இல்லாத ஆணைக் கேலியாகவும் கிண்டலாகவும் அவனது ஆண்மைத் தன்மையைக் கேள்விக்குரிய ஒன்றாகவும் சித்தரிக்கிறது.

இத்தம்பதியினர் வேண்டாத தெய்வங்கள் இல்லை. செல்லாத கோவில்கள் இல்லை. ஆனால், எந்தக் கடவுளும் கண் திறந்து வழி காட்டவில்லை (இருந்தால்தானே கண் திறப்பர்!). அவர்கள் வசிக்கும் பகுதியில் வழிவழியாக ஒரு நம்பிக்கை உண்டு. ஊர்த் திருவிழாவின் பதினான்காம் நாளன்று, குழந்தை இல்லாத பெண்கள், கோவிலுக்கு வரும் எந்த ஆணுடனும் உறவு கொண்டு கருத்தரித்துக் கொள்ளலாம். அப்படி அவளுடன் உறவு கொள்பவன் கடவுளுக்குச் சமமானவன். அவளுக்குப் பிறக்கும் குழந்தை கடவுளுக்குப் பிறக்கும் குழந்தையாகக் கருதப்படும்.

அப்பெண்களும் தன்னோடு கலவி கொண்டவனை இன்னொரு ஆண்மகனாகக் கருதாமல் கடவுளாக(?) கருதுவார்கள். மலடியாக சமூகத்தில் ஏச்சும், கிண்டலும், புறக்கணிப்பும்  பெற்றவர்களுக்கு கடவுளின் குழந்தை வரமாகக் கருதப்பட்டது. பதினான்காம் நாள் இரவு, இளைஞர்களுக்கும், நடுவயதினர்க்கும், முதிர்ந்த வயதானாலும் இளமை நினைப்பில் வாழ்பவர்களுக்கும் காமக் களியாட்டம்தான். இதில், அவர்களுக்குள் போட்டியும் நடக்கும், யாதெனில், யார் அவ்விரவில் அதிகமான பெண்டிர்க்கு வரம் அளித்தார்கள் என்று. கதைநாயகன் காளி திருமணத்திற்கு முன் தனது நண்பனுடன் இந்த விளையாட்டில் கலந்து கொண்டவன். ஆகவே, அவனுக்கு இதன் உண்மையான மகத்துவம் தெரியும்.

காளி_பென்னா தம்பதியினருக்கு அவர்தம் பெற்ற தாயினரே பதினான்காம் நாள் திருவிழாவில் கலந்து கொள்ளத் தூண்டும்பொழுது, காளியின் மனசு ஏற்றுக் கொள்ளவில்லை. தன் உயிருக்கு உயிரான வாழ்விணையை இன்னொருவன் பெண்டாளுவதை அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

ஆனால், பென்னா குழந்தைப் பேறுக்காக  அக்காரியத்தைச்  செய்யத் துணிந்துவிடுகிறாள். அதைவிட முக்கியக் காரணம், குழந்தை இல்லை என்பதினாலேயே உற்சாகத்தைத் தொலைத்துவிட்ட கணவனை மீட்டெடுப்பது. இந்த உணர்ச்சிக் குவியல்களைச் சரிவர இந்த நாவல் வெளிப்படுத்துகிறது.

கதாசிரியர் பெருமாள்முருகன் மிக நேர்த்தியாக உணர்வுப்பூர்வமாக இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். கொங்குநாட்டு வட்டார மொழியினை  எளிமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

இந்நாவல் ஒரு மாஸ்டர் பீஸ் என்ற அளவிற்கு இல்லை என்றாலும் தமிழ் இலக்கியச் சூழலில்  சிறந்த கதை என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.  நம் சமூகத்தில் இன்னும் இதுபோன்ற நாவல்கள் பல வெளிவர வேண்டும். மூடநம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். பெரியார் என்னும் அறிவொளி பாயும்பொழுது அறியாமை என்னும் இருள் அகலும்.

– கோ.ஒளிவண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *