Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மில்லியன் டாலர் குட்டு!

ஜனவரி 26 – குடியரசு நாளைக் கொண்டாடும் சாக்கில் பிரதமர் மோடி அவர்கள் தன்னை உலகத் தலைவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்ளும் வகையில் ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட செயல்களில் ஒன்றாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களையே இவ்வாண்டு முக்கிய விருந்தினராக அழைத்துள்ளார்!

இதனால் ஏற்படும் பலன்களும் விளைவுகளும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவையாகும்.

 

ஏற்கெனவே திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், ஒப்புக் கொள்ளப்பட்டாமல் இழுபறியாக இருந்த சில பிரிவுகளும் நம் மக்களுக்குக் கேடு_பாதகம் விளைவிக்கக்கூடிய பிரிவுகளும் சேர்த்து இப்போது பிரதமர் மோடி அரசால் கையொப்பமிடப்பட்டு, முழுக்க அமெரிக்காவின் பக்கமே சாய்ந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அணு உலையினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அமெரிக்கா (வெளிநாடு) எவ்விதத்திலும் பொறுப்பேற்காது; நஷ்டஈடு தராது. மாறாக, அணு உலையை ஏற்படுத்தும் நாடே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரிவை ஒப்புக் கொண்டிருப்பது, நமது முழு சரணாகதியைத்தான் காட்டும். பொதுவாக இதுமாதிரி ஒப்பந்தங்கள் இரு சாராருக்கும் வெற்றி, யாருக்கும் தோல்வி இல்லை என்ற (Win Win Situation) அடிப்படையில் அமைவதே விரும்பத்தக்கது!

அமெரிக்க முதலீடு என்பதால் அதிக லாபம் யாருக்கு? உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிவு (Technical Know) எந்த அளவு வளரும்; பொறுத்திருந்து பார்த்தால் புரியும்.

பொதுவாக இவ்வாட்சி ஒரு பக்கம் மதவாதம்; மற்றொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஏகபோகப் பண்ணையம் இவற்றின் நிலைக்களனாக உள்ளது என்பன மறுக்க முடியாதவை.

அதானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லாக்கள் போன்ற கொள்ளை லாபக் குபேரர்கள் கொழுக்கவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம், நிலங்களைக்கூட அடிமாட்டு விலைக்கு விற்று வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ளும் நிலைதான்; உர மானியம் ரத்து, உணவுக்கான சலுகைகள் ரத்து போன்றவை இதன் உண்மை நிறத்தைக் காட்டும்!

நமது விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். மதவெறியைப் பளிச்சென்று சுட்டிக்காட்டிய-தோடு, சரியான எச்சரிக்கையையும் தந்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத்தாமல் இருக்கும்பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும். அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்-குறியாகத்தான் இருக்கும்.

இந்திய அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமை) 25ஆவது பிரிவு அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடுகிறது. அனைவருக்கும் _ தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாய் பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும்,  பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நமது இரண்டு நாடுகளிலும், அனைத்து நாடுகளிலும் மதச் சுதந்திரத்தைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் உள்ளது.

இப்படி பிரதமர் மோடிக்கும், ஆட்சியிலிருக்கும் அவரது கட்சியினருக்கும் பராக் ஒபாமா இந்திய அரசியல் சட்டப் பிரிவு பற்றி பாடம் எடுத்துள்ளார்!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் முதல் மற்ற மதவாத அடிப்படையாளர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இது டாலர் தேசத்திலிருந்து வந்த மில்லியன் டாலர் குட்டு!

மோதிரக் கையால் குட்டுப்படுவதைவிட டாலர் கையால் குட்டுப்படுவதைப் பெருமையாகக் கருதுவார்களோ? இதைத்தானே நாம் அன்றும் இன்றும் கூறி வருகிறோம்.

– கி.வீரமணி, ஆசிரியர்

 

ஆசிரியரின் இந்தக் கருத்து குறித்து பல்துறை அறிஞர் பெருமக்கள் விவாதிக்கிறார்கள். அடுத்த இதழில்…

 


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: