அந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு

ஜனவரி 16-31

சூழவியல்

– ச.முகமது அலி, க.யோகானந்த்

அந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு

முல்லை நிலத்துக்குரிய யானை உள்ளிட்ட உயிரினங்களை குறிஞ்சியை நோக்கி விரட்டிவிட்டு, காட்டையும் அழித்துவிட்டு, யானைகள் அத்துமீறி ஊருக்குள் புகுந்ததாக – அவற்றின் மீதே குற்றப் பத்திரிகை படிக்கும் அளவுக்கு இயற்கை குறித்த பார்வை மங்கிப் போயிருக்கிறது நமக்கு!

மனிதனுக்கும் கானுயிர்களுக்குமிடையிலான மோதல் அத்தனை அறங்களையும் மீறியதாக, பல வடிவில் நடந்து கொண்டிருக்கிறது. கட்டுரையாளர்களின் இந்தப் பயணத்திலும் அப்படி ஒரு சூழல் அமைகிறது…

கோவை பேருந்து நிலையத்தில் சிறுவாணி என்ற பெயர்ப் பலகை இட்ட ஒரு பேருந்தைப் பார்க்கும்போதெல்லாம், எப்போது அங்கு செல்லப் போகிறோம் என்ற ஏக்கம் எழ காரணம் இருந்தது. பேருந்தின் பலகையில்தான் சிறுவாணி என்று இருக்குமே தவிர அதில் உள்ளபடியே அது சிறுவாணிக்கு ஒருபோதும் செல்லாது.

அது மேற்கேயுள்ள பேரூரைக் கடந்து, பல்லுயிரினக் களஞ்சியமான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளின் ஒரு எல்லை ஓரத்திலுள்ள சாடிவயல் என்ற கிராமத்தின் வழியே, தேக்கு மரங்களடர்ந்த, இலையுதிர் காட்டினுள் சுமார் 3 கி.மீ. தொலைவிலிருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர்களின் குடியமைப்பு வரை மட்டுமே சென்று திரும்பும். அந்த இடம், மலை மேல் 3000 அடி உயரத்திலுள்ள சிறுவாணி அணையிலிருந்து குடிநீரைப் பெற்று கோவைக்கு அனுப்பும் இடமாகும்.

1995இல், சிறு ஊனுண்ணிகள் குறித்து நீலகிரி உயிர் மண்டலத்தில் ஆராய்ச்சி செய்து வந்த தோழர் யோகானந்த், சிறுவாணியில் தமது களப்பணியைச் செய்துவந்தபோதுதான் அப்பகுதியைப் பார்த்து, வியக்க வாய்ப்பு வந்தது.

சிறுவாணியில் அன்று பிற்பகல். காட்டுப் பாதையில், இக்கட்டான பயணத்தை முடித்துக் கொண்டு நண்பர் தினேஷ் உட்பட மூவரும் ஒரு சரக்கு வண்டியிலிருந்து இறங்கினோம். குக்குறுவான்களின் பின்னணி ஓசையில் மனத்தில் இனம் புரியா திகைப்பு.

அடர்ந்து செறிந்த காடு. எதிரேயிருந்த பள்ளத்தாக்கை அடுத்திருந்த மழைக்காடு இருண்டு காணப்-பட்டது. ஆங்காங்கே காட்டுக் கோழிகளின் கயாக் கக் என்ற கீச்சுக் கூவல் எதிரொலி.

சின்ன இருவாசிப் பறவைகளின் தனித்த, உரத்த கேவல் மொழி, அங்குமிங்குமாக மலைச்-சிட்டான்கள் என பளபளத்த புதியதொரு பசுமை உலகம். சில்லென்ற காற்றில், எங்கள் வியர்த்த உடல் குளிர்ந்தது. எதிரே விடுதிக் காவலர் ஜோசப் வர, நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

3, 4 நாட்கள் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்த நாங்கள், அந்த ஓங்கிய பெரும் மழைக் காட்டில் விதவிதமான பறவைகள், ஒரு சிறுத்தைப் பூனையின் காலடித்தடம், நீர்நாய்களின் எச்சங்கள், கரடியின் கழிவுகள், பூச்சியினங்கள் பல, ஊர்ந்து சென்ற ஒரு கருநாகம் (King Cobra)ஆகியவற்றைப் பார்த்தோம்.

வெயிலும், மழையும் என அக்காட்டின் மாறுபட்ட தன்மை கிளர்ச்சி-யூட்டியது. இயற்கையின் கோடிக்கணக்கான அர்த்தங்கள் புரிந்தும் புரியா நிலையில், நிம்மதி மேலிட, நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

ஊர் திரும்பும் நாள் வந்தது. பிற்பகல் 3 மணி, பை முதுகில் தொற்றிக் கொள்ள, சற்று தொலைவு நடந்து சென்று, தகரம் வேய்ந்த ஒரே குடிசைக் கடையில், வரத்தேநீர் அருந்திவிட்டு தார் சாலையிலேயே கொஞ்ச தூரம் செல்வோம் என ஆசையுடன் நடக்கலானோம். கடையிலிருந்தவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் பாத்துப் போங்க அந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு!

அஞ்சுவதஞ்சாமை பேதமை என்பது புரியாது சிரித்துக் கொண்டே அவர்களை மறந்து நடைபோட்டோம்… இனிய பருவக் காற்று, மாசுமருவற்ற சூழல், மாலை வேளை, மழைக்காட்டு ஓரம், ஜொலிக்கும் பசுமையான சூழல். தலைக்கு மேல் அடிக்கடி பச்சைப் புறாக்கள் (Emerald dove) வேகமாகப் பறந்தன.

நீண்ட தூரம் நடந்திருப்போம். ஒரு திருப்பம் முடிந்ததும், சாலை நீண்டிருந்தது. மூவரும் சாலை நடுவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம். ஒரு வகை மௌனம். மாலை 5 மணி இருக்கும்.

வீசிய ஈரக்காற்று எங்களைத் தொட்டு முன்னே சென்றபோது, எதிரே வலதுபுறம் சுமார் 60 அடி தூரத்திலிருந்த ஒரு இளம் வேங்கை மரத்தின் கிளைப்பகுதி வெடுக்கென்று பலமாகக் குலுங்கியது. கொண்டைக் குருவிகள் இரண்டு குர்ர்ரோ… கீக் என்ற சந்தேகக் குரல் கொடுத்து ஒரு புதரிலிருந்து விருட்டெனப் பறந்தன.

துணுக்குற்ற நாங்கள், எங்களை அறியாமல் நின்றோம். அந்த இடத்தில் கண்கள் நிலைத்து நோக்க..
பெரிய காட்டு யானை ஒன்று, டைனோசரைப் போல நடந்து வந்து சாலையின் குறுக்கே நிற்கின்றது. எதிர்பாராத பேருருவம்…

அதிர்ச்சியில் யானை என்று கத்தியதோடு சில நொடிகளுக்கே அதைப் பார்க்கும் வாய்ப்பு, ஒரு தந்தம் மட்டுமே அதற்கு இருந்தது. ஒற்றைக் கொம்பன் தலையைத் திரும்பி எங்களைப் பார்த்ததும் வீர் எனப் பிளிறிக் கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தது. அவ்வளவுதான் மூவருக்கும் ஓட்டப்பந்தயம்.

சுமார் 200 அடி தூரம் அப்படி ஓடியிருக்க வேண்டியதில்லை திரும்பி மட்டும் பார்த்திருந்தால். உறைய வைத்த அந்தப் பிளிறல் பேரோசையின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது எங்கள் உடல்கள் நடுங்கின. துடிதுடித்த இதயங்கள் உடல்களைப் படபடக்கச் செய்தன. வியர்த்து மூச்சிறைக்க திரும்பிப் பார்த்தோம்…. அதே வேங்கை மர ஓரத்தில் அந்த யானை எதையோ பறித்துக் கொண்டிருந்தது.

நாங்கள் பீதியுடன் மெல்லச் சிரித்தோம். அடுத்து என்ன செய்வது? எப்படி ஊருக்குச் செல்வது? போன்ற சிந்தனைகளுடன் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினோம். 2 கி.மீ. வந்து ஒரு பாலத்தின் பக்கச் சுவரில் அமர்ந்தோம். ஜோசப் வருவதாகச் சொல்லியிருந்த இன்டேக் பகுதியில், இன்னும் அந்த லாரி காத்திருக்காது. மணி 6.15… பொழுது போய்விட்டது. வேறு ஏதாவது யானைகள் வந்துவிடுமோ…?

தகரக் குடிசைத் தேநீர் விடுதிக்கே சென்று விடலாம் என எழுந்து புறப்பட… ஒரு ஆச்சரியம். ஏதோ ஒரு வண்டி வரும் ஓசை கேட்டது. இரண்டு நிமிடங்களில் ஒரு பழைய ஜீப் முனகிக் கொண்டே வர, நிறுத்தச் செய்து, கீழே சாடிவயல் வரை செல்லக் கேட்டுத் தொற்றிக் கொண்டோம். உள்ளே மொத்தமாக 12 பேர், யானை விஷயத்தை ஓட்டுநரிடம் சொல்ல அவர் முகம் விகாரமடைந்தது. ம், வண்டியில ஹார்ன் வேற இல்ல… என்ற மலையாள வார்த்தைகள் மெல்ல வந்தன.

நாங்கள் வந்த வழியே சிறிது நேரம் ஓடியது வண்டி. பிறகு அந்தத் திருப்பத்தில் வண்டி திரும்பியது. அங்கே… அதே ஒற்றைத் தந்த யானை, கிறீச்சிட்டு நின்றது ஜீப். சகிக்க முடியாத அவ்வொலி கேட்ட யானை பிளிறிக் கொண்டு முன்னே ஓடி வரத் தொடங்கியது. ஜீப்பை இவன் பின்னெடுக்க, உள்ளிருந்த ஆட்கள் கோவென கூச்சலிட, நாங்கள் மூவரும் நடு வண்டிக்குள் பாதுகாப்பாக இரசித்துக் கொண்டிருந்தோம்.

தலையை உயர்த்தி, காதை விரித்துக் கொண்டு 20_30 அடிகள் விரட்டிய யானை, வந்த வேகத்தில் திரும்பி ஓடி, பழைய இடத்துக்கே போய் நின்றது. எதைச் சொன்னாலும் கேட்க மறுத்த ஜீப் ஓட்டுநர் எங்களையெல்லாம் கத்தச் சொல்லியபோது, காத்திருந்தவர்கள் போல விதவிதமான குரல்களில் கடும் கூச்சல் போட்டனர் ஏனையோர். தைரியம் பெற வேறு வழி?

30 மீட்டர் தொலைவில் தனது பின்புறத்தைக் காட்டிக் கொண்டிருந்த யானை  அப்போதும் நகரவில்லை. ஓட்டுநரின் எலும்பும் தோலுமாயிருந்த உதவியாளன் எஞ்சின் அணைக்கப்படா வண்டியில் ஒரு காலும், தரையில் ஒரு காலுமாய் நின்றுகொண்டு தன் தொண்டைக்கு மீறிய பெருங்குரலில் அப்பா முருகா எங்களை மன்னிச்சிக்க, வழிய விடு, நாங்க ரொம்ப தூரம் போகணும், புள்ள குட்டிக தேடுவாங்க (மனைவி அல்ல) முருகா வழி விடப்பா என வேண்டினான். பாமர மக்களின் வெகுளித்தனமான வேண்டுதல்களை இரசித்தோம். சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டோம்.

சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு எங்களால் இடையூறுக்குட்பட்ட அந்த யானை தனது பெரும் உடலை மெல்ல அசைத்து இடது பக்கமுள்ள ஒரு மேட்டில் ஏறி நின்றது. இப்பொழுது ஜீப் செல்ல வழியுண்டு. பயத்தில் உடல் நடுங்கினாலும் ஒருவாறு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் மெல்ல வண்டியை ஓரத்தில் நகர்த்தி, சற்று வேகத்தைக் கூட்டி, முடிந்தவரை வலதுபுற ஓரமாக ஓட்டிச் செல்ல அந்த இடத்தருகே வந்தபோது, நாங்கள் யானையை மிக அருகே பார்த்தோம்.

நீட்டிய அதன் தும்பிக்கை முனைக்கும் வண்டிக்கும் சுமார் 20 அடிகளே இருந்தன. சட்டென வேகம் பிடித்த ஜீப், எங்களுக்கும், யானைக்கும் பெரிய நிம்மதியைத் தந்தது.

காடுகளில் பலமுறை யானைகளைச் சந்தித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆனால் வாழ்வில் மறக்கமுடியாத மேற்கண்ட சம்பவத்தின் ஒவ்வொரு முனையிலும் நாங்களே தவறு செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் கூர்ந்தறிதல் வேண்டும். யானைகளுக்கு மக்கள் நினைப்பதுபோல சூதும், வாதும், பழி உணர்வும் இருக்குமேயானால் இந்நூல் எழுத நாங்கள் இல்லை அல்லவா?

உயிரினங்கள் வாழும் காடுகளை நாம் கிள்ளுக் கீரையாக நினைத்துக் கொண்டிருக்-கிறோம். நமக்கு நமது வீடுகள் போலவே அவற்றுக்குக் காடுகளே வீடுகள் என்பதையும், கானகம் நமது சுற்றுலாத் தலமல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இந்த வரையறைக்கும் நாம்தாம் காரணம்: மக்கள்தொகையைப் பெருக்கியதும், காடுகளின் பரப்பளவைக் குறுக்கியதும், காட்டுயிர்களைக் கொன்று குவித்ததும் மனிதர்தானே?

தனியுடைமை, ஊழல், தாழ்மை, அறியாமை, ஜாதி, மதவெறி போன்ற நெருடலான நமது சூழலில் யானைகளைக் காப்பாற்றுவது எளிதல்ல. சட்டம், கையொப்பம், உத்தரவு, சம்பளம், மிரட்டல், தண்டனை ஆகியவையே இன்று யானைகளைக் காப்பாற்றி வருகின்றன என்பதைவிட, இப்புவிச் செழிப்பின் சின்னமான அப்பேருயிரின் அழிவைச் சற்றுத் தள்ளிப்போட மட்டுமே அவை உதவுகின்றன எனலாம்.

இந்நிலை மாற மக்கள் மனம் மாற்றப்பட வேண்டும். இதை வழக்கம்போல் அரசுக்கு ஓயாது சொல்லிக் கொண்டிருப்பதைவிட வேறு என்ன செய்துவிட முடியும்? ஒரு வேளை அரசு தீவிரச் செயலில் இறங்கும்போது, கடைசி யானையின் பாடம் செய்யப்பட்ட பஞ்சடைத்த உடல் அருங்காட்சியகத்தில் வைக்கப்-பட்டிருக்கலாம்.

முடிவாக ஒன்றைக் குறித்… டுமீல் அதோ கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியடைந்த, இப்புவியில் வாழும் உரிமையை நமக்கு முன்பே பெற்றுவிட்ட, தந்தம் தாங்கிய மேலும் ஒரு கம்பீரமான ஆண் யானை சுடப்பட்டு, காடே எதிரொலிக்கும் கதறலுடன் பிணமாகச் சாய்கிறது. இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

இயற்கை வரலாறு அறக்கட்டளையின் வெளியீடான அழியும் பேருயிர்: யானைகள் நூலிலிருந்து…
நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க: 9894140750

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *