படைப்புலகம் என்பது இன்று காட்சி வடிவிலானதாக மாறியிருக்கிற சூழலில், இளைஞர்களிடமும், முற்போக்குச் சிந்தனையாளர்-களிடமும் அதற்கான ஆர்வமும், முனைப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வெகு சாதாரணமான நகரங்களிலும், கிராமங்-களிலும்கூட குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் குறித்த விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அவற்றில் முற்போக்குச் சிந்தனை-களையுடைய குறும்படங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.
ஜாதி – மத ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு உள்ளிட்ட தலைப்புகளில் எடுக்கப்படும் குறும்படங்களின் படைப்பாளிகள், பிற்காலத்தில் நல்ல பல படைப்புகளைக் கொள்கை உணர்வோடு தரவல்லவர்களாக இருக்கிறார்கள். தங்களின் சொந்த முயற்சியில் படைப்பை வெளிக்கொண்டுவரும் அவர்களுக்கு, திரையிடல் வாய்ப்புகளை வழங்கி ஊக்கம் அளிக்கவும், அவர்களை ஆற்றுப்படுத்தி, திரைத் துறையில் ஏற்கெனவே இயங்கிவரும் படைப்பாளிகளோடு இணைப்பை ஏற்படுத்தித் தந்து புதிய இளைய தலைமுறை படைப்பு வட்டத்தை உருவாக்கிடவும் சரியானதொரு களம் தேவைப்பட்டு வந்தது.
அந்தத் தேவையை நிறைவு செய்யும் விதமாகத்தான் கடந்த 8.11.2008 அன்று பெரியார் திடலில் மணியம்மையார் அரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சீரிய சிந்தனையில் தோன்றி, பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடங்கப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளில் சென்னை பெரியார் திடலில் மட்டும் 23 திரையிடல்கள் நிகழ்த்தப்பட்டன. இவற்றில் 43 குறும்படங்-களும், 6 ஆவணப்படங்களும் திரையிடப்-பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டில் நடைபெற்ற பெரியார் திரை குறும்படப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்றன. அத்தனையும் மிகச் சிறப்பான கருத்தோட்டத்தில் அமைந்த படங்களாயினும் அவற்றில் அனைவரின் வரவேற்பையும் பெற்ற பொன்.சுதா இயக்கிய நடந்த கதை சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசான ரூ.10000 மற்றும் பெரியார் திரை குறும்பட விருது 2009னையும் பெற்றது.
சொல்யூசன், புனிதம், வன்னி எலி ஆகியவை முறையே இரண்டாம் (ரூ.5000), மூன்றாம் (ரூ.3000) மற்றும் சிறப்புப் பரிசுகள் (ரூ.1000) பெற்றன. மேலும், அய்ந்து குறும்படங்களுக்கு ஊக்கப் பரிசாக தலா ரூ.500 வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் திரை குறும்படப் போட்டி நடைபெறுகிறது.
இந்தத் தொடர் பணியில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தேசிய விருது பெற்ற பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், தொடர்ந்து ஈழத்தமிழர்களின் வரலாறுகளை ஆவணப்படங்களாக வடித்துக் கொண்டு இருக்கும் இயக்குநர் சோமீதரன் ஆகியோரைச் சிறப்பிக்கும் வண்ணம் அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் மூன்றாவது ஆண்டில் திரையிடப்பட்ட ஆவணப்படம் வெடித்த நிலத்தில் வேர்களைத்தேடி.
ஒற்றை வரியில் குறிப்பிட வேண்டுமென்றால், இது படமல்ல பாடம். கலைந்த கனவாகி இருக்கும் ஈழத்தில் இன்று தமிழர்களின் வாழ்விடங்களின் வரலாற்று அடையாளங்களை, சிங்களப் பேரினவாத அரசு திரிபு வரலாற்று அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் சோமீதரன் இயக்கிய வெடித்த நிலத்தில் வேர்களைத்தேடி ஆவணப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
சுமார் மூன்றாண்டுகள் மிகக் கடுமையாக உழைத்து இதனை உருவாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர். இது ஈழம் குறித்த முழுமையான வரலாறு அல்ல; அதற்கான ஒரு சிறு முயற்சியே என இயக்குநர் குறிப்பிட்டாலும், இது ஏறக்குறைய முழுமையான வரலாறாகவே கொள்ளலாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து முள்ளிவாய்க்கால் அவலம் வரையிலும் தக்க ஆதாரங்களுடனும், தெளிவான பின்னணிக் குரலுடனும் ஆவணப்படுத்தியிருக்கிறார். சுமார் 60 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் தமிழர்கள், போராளிகள் படுகொலை செய்யப்பட்டதை அசட்டை செய்துவிட்ட சர்வதேச சமூகம், காட்சி ஊடகத்தின் வாயிலாக மீண்டும் தங்களின் அசட்டைக்குத் தலைக்குனிவைத் தரத்தக்கவகையில் இந்தப் படைப்பு அமைந்திருக்கிறது.
உட்பூசல்களிலேயே உழன்று உழன்று உருப்படியாக ஒன்றும் செய்யாமலும், செய்யவிடாமலும் இருப்பவர்களுக்கும், உரிமைப்போர் உருத்தெரியாமல் ஆக்கப்பட்டுவிட்டதே என்று மனச்சோர்வடைந்திருப்பவர்களுக்கும் இரண்டே முக்கால் மணி நேர இந்த ஆவணப்படம் நாம் செல்ல வேண்டிய பாதையைக் (காட்சி ஊடகத்தின் மூலம்) காட்டுகின்ற படமாக, அல்ல பாடமாகத் திகழ்கின்றது.
இந்த அரிய ஆவணப்படம் மிகக்குறைந்த விலையான ரூபாய் 50க்குக் கிடைக்கின்றது. இதைத் தயாரித்து வெளியிட்டுள்ள ‘Save Tamils’ அமைப்பினரின் பணிகளில் இது தலையாயதாகும். ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் இருக்க வேண்டியதும், வருகிற தலைமுறைக்கு, தான் பெற்ற உத்வேகத்தை அவர்களும் பெறத்தக்கவகையில் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேன்டியதும் நமது கடமையாகும்.
வெடித்த நிலத்தில் வேர்களைத்தேடி ஆவணப்படம் குறித்த
தொடர்புக்கு: செந்தில் 9941931499