பெஷாவர் தாக்குதல்: தலிபான்களும் இந்திய முஸ்லிம்களும்
– எச்.பீர்முகம்மது
கடந்த ஆண்டின் மிகப்பெரிய துயரமாக, பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினர் நடத்தும் ஆர்மி பப்ளிக் பள்ளியில் டிசம்பர் 16 அன்று தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில், 130 குழந்தைகள் உள்பட 160 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் தாலிபான்களின் வளர்ச்சி குறித்தும், இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல் குறித்தும் விளக்குகிறார் எழுத்தாளர் எச்.பீர்முகம்மது.
அண்மையில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து கொடூரமாக பள்ளிக் குழந்தைகளை சுட்டுக்கொன்ற தக்ரீக்-இ- தலிபானின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையைத் தொடர்ந்து தலிபான்கள் குறித்த எதிர் மதிப்பீடு பன்னாட்டு அளவில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் அனைத்துமே தாங்கள் எதற்காகக் கொல்லப்-படுகிறோம் என்பதை அறியாமலே நொடிப் பொழுதில் மரணமடைந்திருக்கிறார் கள். இந்த சோகமயமான தருணத்தில் தலிபான்கள் குறித்த வரலாற்றுப் புரிதல் அவசியம்.
தலிபான்களைப் பொறுத்தவரை சோவியத் ரஷ்யாவின் ஆப்கான் படையெடுப்புக்கு எதிராக அமெரிக்க ஆதரவோடு உருவாக்கப்பட்ட ஒரு புனிதப் போர்ப்படை. சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரான ஆப்கான் உள்நாட்டுப் போரில் ஆதரவு தெரிவிக்க 1979இல் ஆப்கானில் சோவியத் படைகள் நுழைந்த போது, அப்போது பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரியாக இருந்த ஜியாவுல் ஹக் சோவியத் யூனியனைக் கண்டு அதிர்ந்தார்.
தனக்கான பிராந்திய நெருக்கடியாக அதனைக் கண்டார். அவர் சர்வாதிகாரியாக இருந்ததே அதற்குக் காரணம். அதன் பின்னர் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ரீகனின் துணையை ஜியாவுல் ஹக் நாடினார்.
பின்னர் ஜியாவுல் ஹக் பாகிஸ்தானின் மதரசாக்களில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அமெரிக்கத் துணையோடு ஆயுதப் பயிற்சி அளித்து சோவியத் யூனியன் படைகளை எதிர்த்துப் போரிடத் தயார் செய்தார். அவர்களே பின்னாளில் தலிபான்களாக மாறினர்.
தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். பின்னர் 90-களில் அவர்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உதவி வந்தது. 2001 செப்டம்பர் நிகழ்வுக்குச் சற்று முன்னர்வரை அமெரிக்கா தலிபான்களுக்கு உதவியது.
அதற்குப் பிறகுதான் அமெரிக்காவிற்கு எதிரியாக மாறிப்போனது. அமெரிக்காவின் பயங்கரவாத அமைப்பாக மாறியது. உண்மையில் தன் நண்பர்களைக் கூட எதிரியாக மாற்றுவது ஏகாதிபத்தியமாக மாறிய காலம் முதலே அமெரிக்காவிற்குக் கைவந்த கலை.
இந்நிலையில் அமெரிக்காவைத் தாண்டி தலிபான்கள் ஒன்றும் வரலாற்றுப் புனிதர்கள் அல்ல. அவர்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய மதப்பிரதிகளை அடிப்படையாக வைத்து, அதனைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்து அவர்கள் நடத்திய அடிப்படைவாத தகிடுத்தனங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூக அநீதிகள் அனைத்துமே சிறந்த வரலாற்றுப் பதிவுகள்.
ஆண் பெண் உறவு, பெண் கல்வி, பெண் வேலைவாய்ப்பு, பெண்ணின் சுதந்திர நடமாட்டம் போன்ற-வற்றிற்குத் தடை போடுதல், மதச் சுதந்திரத்தைத் தடை செய்தல், ஒற்றை மத ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தி அனைத்து விதமான கலாச்சாரத் சின்னங்களை அழித்தல் போன்றவை எல்லாம் தலிபான்களின் கடந்தகாலச் செயல்பாடுகள்.
இதன் தொடர்ச்சியில் பாகிஸ்தானில் தூய மத அடிப்படைவாத அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதன் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் 2007இல் பஹ்துல்லா மெஹ்ஸுத் தலைமையில் தக்ரீக் இ தலிபான் என்ற பழங்குடிப் பயங்கரவாத அமைப்பு உருவானது.
இந்த தக்ரீ இ தலிபானின் நடவடிக்கைகள் மிகக் கொடூரமானவை. இந்த அமைப்பிற்கும் ஆப்கானியத் தலிபான்களுக்கும் சகோதர உறவுண்டு. எல்லைப்புறமாக இருப்பதால் அது அதிக சாத்தியப்படுகிறது.
உலக அளவில் இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்புகளின் இம்மாதிரியான கொடூரங்கள் நிகழும் போது இந்திய முஸ்லிம்கள் அடையாள நெருக்கடி காரணமாக உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். உலகிலேயே அதிக முஸ்லிம்கள் கொண்ட இந்தோனேசியா-வில்கூட இம்மாதிரி நெருக்கடி இல்லை. ஏன் மலேசியாவில்கூட இல்லை.
இதன் காரணங்கள் வரலாறு மற்றும் அரசியல் ரீதியாக மட்டுமே இருக்க முடியும். ஒருபுறம் அடிப்படைவாத மற்றும் உலகளாவிய மதம் என்பதன் காரணமாக உலகின் எந்த மூலையில் அரபி பெயரில் எது நடந்தாலும் அதன் விபரீதம் புரியாமல் அதற்கு ஆதரவு தெரிவிப்பது.
அந்த மனோபாவத்தைத் தொடர்வது. அந்த இடைவெளியைப் பயன்படுத்தி இந்துத்துவ அமைப்புகள் அதன் துணைப் பரிவாரங்கள் இங்குள்ள முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் எனச் சித்தரிப்பது, உலகில் முஸ்லிம் என்ற அடையாளத்தின் பெயரில் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? என்று அதனை இங்குள்ளவர்-களோடு இணைத்து முடிச்சுப் போட்டு அவர்களைப் பதில் சொல்லப் நிர்ப்பந்திப்பது போன்றவை எல்லாம் 90-களில் இருந்தே இங்கு நடைபெற்று வருகின்றன.
அதற்கான காரணங்களை இவ்வாறாகச் சொல்ல முடியும்.பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவில் முஸ்லிம்களின் சிறுபான்மை அடையாளச் சிக்கல். தொடர்ந்து நடந்த வகுப்புக் கலவரங்கள். அதனைத் தொடர்ந்து அகவய மற்றும் புறவய காரணங்களால் அவர்களின் படிப்படியான மய்ய நீரோட்ட விலகல்.
இந்த இடைவெளியை அதிகப்படுத்தி அதை அநுகூலமாக்கி சமூகப் பிளவை ஏற்படுத்தும் இந்துத்துவ சக்திகள். அதையே தங்கள் குரலாக பெரும்பான்மைப் பொது-புத்தியில் திணிக்க முயலும் சாதுரியம் கொண்ட பார்ப்பனிய ஊடகங்கள்.
இப்படியான காரணங்கள் இந்திய முஸ்லிம்களைப் பயங்கரவாதம் குறித்து கருத்துச் சொல்ல வேண்டிய உளவியல் நிர்பந்தத்திற்கு ஆளாக்குகின்றன.
பள்ளிக் குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்ற தக்ரீக் இ தலிபான்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
பாகிஸ்தானில் மத அடிப்படைவாத அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்டகால இலட்சியத்தோடு பயணிக்கும் இந்தப் பயங்கரவாத இயக்கம் நாளடைவில் மறைந்து விடும் என்பதே உண்மை.
அடிப்படையில் பாகிஸ்தான் எல்லாவித அடிப்படைவாத இயக்கங்களையும், தீவிரவாதக் குழுக்களையும் கொண்ட ஒரு நாடு. அடிக்கடி ராணுவப் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நாடு. நிலையற்ற அரசும், அடிக்கடி உள்நாட்டுப் போரும் அதன் தொடர்ச்சியான வடிவங்கள்.
இந்நிலையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அரசுகள் என்பவை மதத்திலிருந்து முற்றாக விலகி இருக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்போது-தான் இம்மாதிரியான குழப்பங்களுக்கு நிரந்தரத் தீர்வுகாண முடியும். இதனை எல்லாவித மதங்களைப் பின்பற்றுபவர்கள் புரிந்து கொள்வது நல்லது. அதன் மூலம் மட்டுமே அமைதியான உலகம் சாத்தியப்படும்.
—————
பாகிஸ்தானில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு இந்தியா சார்பில் பள்ளிகள்தோறும் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவித்தது மோடி அரசு. இஸ்லாமியர் மீதும், பாகிஸ்தான் மீதும் மோடி அரசு கொண்டுள்ள அக்கறை(!) உலகமறிந்தது. எனினும், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, குழந்தைகள் மனதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று பதியவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டதாக கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இது குறித்து எல்.ஆர்.ஜெகதீசன் எழுதிய கவிதை வரிகளிலிருந்து…
யாருக்காக நான் அழ…?
பாமியான் புத்தர் சிலையை
பீரங்கியால் பிளந்தவர்கள்
பள்ளிக் குழந்தைகளை
துப்பாக்கியால் துளைத்தார்கள்
இரண்டுமே இஸ்லாத்தின்
புனிதப்போரென்று பெருமையும்தான் பட்டார்கள்.
பக்கத்து நாட்டினிலோ
பாபர் மசூதி இடித்து
பகைநஞ்சை விதைத்தவர்கள்
கொழுக்கட்டைப் பிள்ளையாரை
கொலைக்கருவி ஆக்கியவர்கள்
பெஷாவர் பிள்ளைகளுக்கு
அவசர அவசரமாய்
அஞ்சலிக்கச் சொன்னார்கள்
இந்தியாவை இடித்து இந்துராஷ்டிரம் அமைப்பவர்கள்
அண்டை நாட்டின்
அல்லாவின் கொலைகளுக்கு
அனுதாபம் சொரிந்தார்கள்
பேய்கள் செய்த படுகொலைகளுக்கு
அஞ்சலி செலுத்தின பிசாசுகள்
சந்தடி சாக்கில் வந்ததொரு அறிவிப்பு
இனி பகவத் கீதையே
இந்தியாவின் புனிதநூலென்னும்
புத்தம்புது கண்டுபிடிப்பு
தயங்காமல் கொல் தமையனையும் கொல்
எனும் உபதேசம் புனிதமென்றால்
எதற்கிந்த அஞ்சலிகள்?
ஏனிந்த நீலிக்கண்ணீர்?
எங்கிருந்து வந்தது உம் அனுதாபம்?
கீதை உபதேசித்ததை
குரான் செய்து முடித்திருக்கிறது?
பாராட்ட வேண்டாமா
எதற்காக கண்ணீர்?
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
குதூகலிக்கும் குழந்தைகளை
கொண்டாட்டத்தை நிறுத்து
எம் அரசின் புகழ்பாடி
கட்டுரைகள் எழுது என
கட்டளை இட்டவர்கள்
கொடுங்கோன்மை செய்பவர்கள்
குழந்தைகள் கொலைக்காக
சிந்துவது கண்ணீரா?
அனுஷ்டிப்பது அஞ்சலியா?
காட்டுவது அனுதாபமா?
அரசியல், அரசியல்
எல்லாம் அரசியல்
குழந்தைகள் கொலைகூட
கேவலமானது அரசியலால்
பேய்கள் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்றதுவும் இதைத்தானோ?