பொங்கலோ பொங்கலுன்னு
பொங்கனும் மானுடம்
பொல்லாப்பு பொய்களெல்லாம்
பொசுங்கனும் மனிதரிடம்
எரியும் அடுப்பிலே
ஏழ்மை கருகட்டும்
கரும்பின் இனிப்பிலே
கசப்புகள் கழியட்டும்
தோரணத் தொங்கலில்
தோழமை மிளிரட்டும்
அழகுக் கோலங்களில்
அறிவு ஒளிரட்டும்
கபடி உறி விளையாட்டில் கள கட்டிடும் ஊரு
கதிரவனும் அரைத்தூக்கத்தில் கை கொட்டிடும் பாரு
கழனியிலே கதிர்மணிகள்
கவிதைகளாய் வெளிப்படும்
விவசாயியின் வியர்வைத் துளிகள்
விதைகளாய்த் துளிர்விடும்
உழுபவனின் விரல் அசைவில்
உழலும் நரிகள் வழிவிடும்
உழைப்பவனின் கைகளை
உலகம் வணங்கி வழிபடும்
இயற்கைக்கு நன்றி சொல்லும் இயல்பான திருவிழா
இதயங்கள் நலம் கொள்ளும் இதமான பெருவிழா
மாட்டு வண்டி ஓட்டத்தில்
மாவிலையும் குதித்தாடும்
சலங்கை ஒலி ஓசையில்
சகலமும் கூத்தாடும்
பறைகளின் கூட்டிசையில்
பனை மரமும் அசைந்தாடும்
குழந்தைகளின் கூக்குரலில்
குருவிகளும் இசைந்தாடும்
மனிதத்தை முன்னிறுத்தும் மகத்தான திருவிழா
மண்ணுக்கு மரியாதை அளித்திடும் பெருவிழா
மடிப்புக் களையா வேட்டிகள்
மங்கையரை நோக்கிடும்
துடிப்புக் கொண்ட தாவணிகள்
துள்ளலாய்த் தாக்கிடும்
இளையோரின் பானைகளில்
இளங்காதல் வழிந்திடும்
இணையதள காலத்தில்
இயற்கையும் மகிழ்ந்திடும்
தை தை தை என்றே பாடுவோம்
தைத் திங்கள் நாளிதைக் கொண்டாடுவோம்
– மணிமாறன் மகிழினி