இப்படியும் சொல்வாங்க…
ரிக் வேத கால விமானம்! சொய்ய்ய்ய்ங்ங்
ரிக் வேத காலத்திலேயே விமானத் தொழில்நுட்பம் இருந்ததாகவும் பலவகை உலோகங்களைக் கொண்டு இந்தியாவிலேயே விமானங்கள் செய்யப்பட்டதாகவும் ரைட் சகோதரர்கள் 1903ஆம் ஆண்டு விமானத்தைக் கண்டுபிடித்ததுதான் வரலாற்றில் இடம்பெற்று-விட்டது என்றும், ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமஸ்திருத மொழியில் இந்த அறிவியல் தொழில்நுட்பம் குறித்துக் குறிப்புகள் இருப்பதாகவும், எனவே இளைய தலைமுறையினர் வேத அறிவியல் (அய்யோ அய்யோ) பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மும்பை பல்கலைக்கழகத்தில் ஜனவரி 4 அன்று நடந்த Indian Science Congress–ன் ஓர் அமர்வில் ‘Vedic Science Through Sanskrit’ என்ற தலைப்பில் சில அதிமேதாவிகள் பேசியுள்ளதாக செய்தித்தாள்-களில் வந்துள்ளது.
இதைப் படித்த பிறகு கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளேன்.
பார்ப்பனர்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்ற வரலாறு தவறு. அவர்கள் தங்கள் ஆடு, மாடுகளோடு விமானத்தில் நேராக இமயமலையைக் கடந்து இந்திய மண்ணில் லேன்ட் ஆனார்கள் என்பதே உண்மை.
இந்தியாவில் பார்ப்பனர்கள் முதன்-முதலில் விமானச் சேவையை வேத காலத்தில் தொடங்கியபோது, நிச்சயமாக அந்த விமானங்களில் பயணம் செய்ய சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் நிச்சயம் டிக்கெட் கொடுத்திருக்க மாட்டார்கள்.
Vedic காலத்தில் விமானங்களை இயக்க Fuel அக பெட்ரோல், டீசல் போன்றவை இருந்ததா எனத் தெரிய-வில்லை. ஆனாலும், மாட்டுக் கோமியத்தையே அவர்கள் எரிபொருளாகப் பயன்படுத்தி இருக்கக்-கூடும்.
இந்த நவீன அறிவியல் தொழில்-நுட்பத்தில் செய்யப்பட்ட விமானங்களே திடீரெனக் காணாமல் போய்விடுகிறது அல்லது கீழே பொத்தென்று விழுந்து தொலைக்கிறது. ஆனால், வேத கால விமானங்கள் கீழே விழுந்தே இருக்காது. காரணம், முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகளும் இன்னபிற கடவுளர்களும் கீழே விழும் விமானங்களை வானுலகிலேயே தாங்கிப் பிடித்திருப்பார்கள்.
வேத காலத்திலேயே விமானங்கள் இருந்திருந்தும், விநாயகருக்கு எலியையும் முருகனுக்கு மயிலையும் எமதருமனுக்கு எருமை மாட்டையும் வாகனங்களாகக் கொடுத்து வைத்திருப்பது பார்ப்பனர்களின் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது.
சங்கராச்சாரியார் கையில் வைத்திருக்கும் குச்சியும் அதன் நுனியில் கட்டப்பட்டிருக்கும் கந்தல் துணியும்தான் வேத கால விமானங்களின் ரேடாராக இருந்திருக்க வேண்டும்.
ஓவியம்: கி.சொ