கோட்சேவுக்கு சிலை

ஜனவரி 16-31

இந்துத்துவா

கோட்சேவுக்கு சிலை

பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டு மதவெறியை எதிர்த்த காரணத்தால் அண்ணல் காந்தியாரை, அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக் கொலை நிரூபிக்கப்பட்டு, கோட்சேவிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், இந்துத்துவக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார்.

இது, நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற் குள்ளாகிக் கொண்டுள்ள நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப்பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையைத் திறக்க முடிவு செய்துள்ளதாம்.

இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில்  நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம்.

இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்குச் சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக்கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.

நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம்.  மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலையில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்குச் சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது.

விரைவில் நாடெங்கும் கோட்சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார். கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில்தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில்தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார்.

அவருக்குப் புகலிடமும், திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்-தான். 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தர-விடப்பட்டு, இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம்.

காந்தியைக் கொலைசெய்வதற்கு முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுடப் பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களை முதலில் மறுத்த பா.ஜ.க. இப்போது மெல்ல மெல்ல கோட்சே ஒரு தேசபக்தன்தான் என்று சொல்லத் தொடங்கியுள்ளது. காந்தியைக் கொன்ற கோட்சேவின் இயக்கத் தலைவருக்கு பாரத ரத்னா கொடுத்த அரசு வேறு எப்படியிருக்கும்?

தமிழ்நாட்டில் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஒருவர் வேகமாக சுவரொட்டி அடித்து ஒட்டினார். ஈரோட்டில் அப்படிப் பரபரப்பை ஏற்படுத்திய சுபாஷ் சுவாமிநாதன் யார் தெரியுமா? இதோ நக்கீரன் (2015, ஜன. 03_06) இதழ் சொல்கிறது.
யார் இவர்? எதற்காக இந்தக் கொடிய கோரிக்கை? விசாரணையில் இறங்கினோம்.

100 நாளில் கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்று திருச்சியில் பல நூறு மக்களிடம் வசூல் செய்து கோடீஸ்வரரான ரவிச்சந்திரனின் பார்ட்னராக இருந்தவர்தான் இந்த சுபாஷ் சுவாமிநாதன். பணமோசடி, முறைகேடுகள் என பல புகார்கள் இவர்மீது உள்ளன. அவற்றிலிருந்து தப்பிப்பதற் காகவே அகில பாரத இந்து மகா சபா கட்சி என்றொரு லெட்டர் பேடு கட்சியை ஆரம்பித்து அதன் இளைஞர் அணி தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.

எனக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பஜ்ரங்தள் எல்லாம் ஆதரவு தெரிவித்துள்ளன என்று பலரிடமும் தெரிவித் திருக்கிறார் இந்த சுபாஷ்.
அயோக்கியத்தனத்தின்  பிறப்பிடமும் புகலிடமுமாக காவிதானே இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *