மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 4
– அறிவழகன் கைவல்யம்
இந்தோ – ஆரிய மொழிக்குடும்பம் மற்றும் திராவிட மொழிக் குடும்ப வகைகளில் காணப்படுகிற மொழிகளையும், மொழியினங்களையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளும் போதுதான் மனித இனக்குழு வரலாறு குறித்த தெளிவான ஒரு புரிதலுக்கு நம்மால் வர இயலும். சுருக்கமாக இந்த மொழிக் குடும்பங்களின் கிளைகளைப் பற்றி அறிவதற்கு முன்னதாக ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
போலி ஆரியக் கோட்பாட்டின் கொடியை உயர்த்திப் பிடிக்கும் இந்தியப் பார்ப்பனர்களில் பலர், சுப்பிரமணிய சாமியில் தொடங்கி தருண் விஜய் வரைக்கும் சமஸ்கிருதம் உலகின் தொன்மையான முதல் மொழி என்கிற தோற்றத்தை உருவாக்குவதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களின் வேரை ஆய்வு செய்த மொழியியல் அறிஞர்களே நம்பிவிடுமளவுக்குத் தங்களது வழக்கமான சித்து வேலைகளை அவர்கள் தொடக்கத்தில் நிகழ்த்தினார்கள்.
அவர்களின் கற்பனைக் கதைகளின்படி இந்தோ அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவையும், பாரசீகத்தையும் தாக்கி வெற்றி கொண்டார்கள் என்றும், அந்த வெற்றிக்குப் பிறகு அந்த நாட்டின் மக்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று வெற்றி முழக்கம் இட்டு தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள் என்றும் கதைகட்டி விட்டார்கள். உயரமான, உடல் வாகையும், நீல வண்ண விழிகளையும், பழுப்பு கொண்ட அய்ரோப்பிய உயிரியல் பேரினத்தையும் அவர்கள் ஆரியர்கள் என்று கதை கட்டினார்கள். இவர்களின் கற்பனைக் கதைப்படிப் பார்த்தால் இந்தோ அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் எல்லா மனித இனங்களும் ஒரே மாதிரியான உயிரியல் கூறுகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மாறாக, இந்தோ அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் பல்வேறு மனிதர்களின் உடல் அமைப்பு, தோலின் நிறம், விழி நிறம் எல்லாம் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. அதாவது, தாங்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று உரிமை கோரி ஆரிய இடப்பெயர்வு நிகழவில்லை என்று வாதிடும் அதே ஆரியக் கோட்பாட்டின் இந்திய நாயகர்களான பார்ப்பனர்கள் இங்கே தங்கள் மொழியும், இருப்பும் உயர்வானதென்று நிறுவ ஒரு போலியான படையெடுப்பையும், வரலாற்றையும் உருவாக்குகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, குர்து இன மக்களிலும் வேறு சில அய்ரோப்பிய இனக்குழுக்களின் கிளைகளிலும் அடர்த்தியான கருமை நிற முடியும், பழுப்பு அல்லது வெளிர் நிற விழிகளும் மிக அரிதாகவே அவர்களிடத்தில் காணப்படுகிறது. கற்பனையாகச் சொல்லப்படும் ஆரியக் கதாபாத்திரங்களின் உடலியல் கூறுகள் இந்த இந்தோ அய்ரோப்பிய மொழிக்குடும்ப மனிதர்களிடம் காணப்படவில்லை. மேலும், உயரமான வெண்ணிற அல்லது பழுப்பு நிற முடியும், வெளுத்த விழிகளும் கொண்ட எஸ்தோனியர்கள், பின்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளைச் சேர்ந்த உடற்கூறுகளில் ஆரியக் கதாபாத்திரங்களை ஒட்டிய மனித இனக்குழுக்களின் கிளைகள் ஆரிய மொழிகள் என்று சொல்லக் கூடிய இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களோடு எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. ஒரு மொழி பேசும் மக்கள் இன ரீதியில் ஒரே உயிரியல் மனித இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. வெவ்வேறு மனித இனக்குழுக்களின் கிளைகள் சேர்ந்து ஒரு மொழி பேசும் மக்களாக அறியப்படுகிறார்கள்.
நீக்ரோக்கள் வட அமெரிக்காவில் ஆங்கிலமும், தென் அமெரிக்காவில் ஸ்பானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் அறியப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த ஜெர்மனியின் மனித இனம் வெவ்வேறு மாறுபட்ட ஆறு உயிரியல் கூறுகளைக் கொண்டதாக அறியப்படுகிறது. ஆகவே மொழிக்கும், உயிரியல் இனக்குழு அடையாளங்களுக்கும் எந்த அறிவியல் அடிப்படையிலான தொடர்பும் இல்லை என்பதை நாம் உறுதியாக உரக்கச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.
மொழி சமூக வளர்ச்சி, பண்பாட்டுக் கூறுகள், நிலவியல் கூறுகள் இவற்றைச் சார்ந்து வளர்கிறது. அதே காரணிகளால் அழிந்தும் விடுகிறது. உயிரியல் குழுக்கள் மனித மொழிக் குடும்பங்களோடு எந்த விதமான தொடர்பும் இல்லாதவை என்று தொடர்ந்து நிறுவப்பட்டு வந்திருக்கிறது. உலகின் எல்லா இனக்குழுக் கிளைகளின் மனிதர்களும் பத்து மிகப்பெரிய மொழிக்குடும்ப மொழிகளைப் பேசுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் பேசுவதன் அடிப்படையில், அதாவது எண்ணிக்கையின் அடிப்படையில் அவை பின்வருமாறு:
1) இந்தோ – அய்ரோப்பிய மொழிக்குடும்பம் (Indo – European Language Family) அய்ரோப்பிய நாடுகள், தென்மேற்கு மற்றும் தெற்காசிய நாடுகள், வடக்கு ஆசிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஒசெனியா நாடுகள், தென் ஆப்பிரிக்கா உள்ளடக்கிய நிலப்பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ 46 விழுக்காடு மக்கள் இந்த மொழிக்குடும்ப மொழிகளைப் பேசுகிறார்கள்.
2) சைனோ – திபெத்திய மொழிக்குடும்பம் (Sino – Tibetan Language Family)
கிழக்கு ஆசிய நாடுகளில் ஏறத்தாழ 21 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
3) நைஜீரிய – காங்கோ மொழிக்குடும்பம் (Niger – Congo Language Family)
சகாரா பாலைவனத்தின் தென்பகுதியில் இருக்கும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் 6.4 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
4) ஆப்பிரிக்க – ஆசிய மொழிக்குடும்பம் (Afroasiatic Language Family)வட ஆப்ரிக்கா, மத்திய ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வாழும் ஏறத்தாழ 6 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
5) ஆஸ்திரேலியா – ஆசிய மொழிக்குடும்பம் (Austroasian Language Family)
சில ஒசெனியா நாடுகள், மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் வாழும் 5.9 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
6) திராவிட மொழிக்குடும்பம் (Dravidian Language Family)
தெற்காசியாவின் 3.7 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
7) அட்லாண்டிய மொழிக்குடும்பம் -(Atlantic Language Family)
துருக்கிய, மங்கோலிய மற்றும் துன்குசிக் மொழிக்குடும்பங்களின் கலவையாக வரையறுக்கப்படாத சில குழப்பங்களைக் கொண்ட 2.3 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம், மத்திய ஆசிய நாடுகள், வடக்கு ஆசியா, அனோடோலியா மற்றும் சைபீரிய நாடுகளில் வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது.
8) ஜப்பானிய மொழிக்குடும்பம் (Japonic Language Family)
ஜப்பானிய நிலப்பகுதியில் வாழும் 2.1 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
9) ஆஸ்ட்ரோ ஆசிய மொழிக்குடும்பம் (Austroasiatic Language Family)
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏறத்தாழ 1.6 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம்.
10) தாய் – கடாய் மொழிக்குடும்பம் (Thai – Kadai Language Family)
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 1.3 விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழிக்குடும்பம். இவை தவிர்த்து அதிக மொழிக் கிளைகளைக் கொண்டவை, அட்டவணையில் இடம் பெறுபவை, வழக்கொழிந்தவை, புதிய பரிணாம வளர்ச்சி கொண்டவை என்று ஏறத்தாழ 6500 மொழிகள் உலகில் அடையாளம் காணப்படுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 2000 மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படுகின்றன. இங்கு ஒரு மிக முக்கியமான பொருள் குறித்து நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
– (தொடரும்)