புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?
தமிழ் மொழி, இலக்கியங்கள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு திடீர்த் தமிழ்ப் பற்றாளர்களும், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியமும் காட்டும் எதிர்ப்புகளுக்கு அன்றே மிகத் தெளிவாக பதில் அறைந்திருக்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
குயில் இதழ்களிலிருந்து புரட்சிக் கவிஞரின் கேட்டலும் கிளத்தலும்….. கே: சிலப்பதிகாரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ஆரியத்தைத் தமிழரிடம் புகுத்தும் நோக்க-முடையது என்று பெரியார் சொல்லலாமா?
கி: கதையமைப்பு நன்று. தமிழர் வாழ்க்கை முறைகள் சில நல்லன. பொருந்தாதவை பகுத்தறிவுக் கொவ்வாதவையாய் இருக்கின்றன. பாடம் சொல்லும் புலவர்கள் இவைகளை மாணவர்கட்கு எடுத்து விளக்குவதில்லை.
அதனால் ஆரியம் தமிழகத்தில் வலியுறு-கின்றது. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம், பண்பாடுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. புதியதொரு சிலப்பதிகாரம் எழுதிக் கொள்ளலாமன்றோ!
கே: தொல்காப்பியம் ஒரு தமிழனால் செய்யப்படவில்லை. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம் அதில் மறுக்கப்படுகின்றன என்று கூறலாமா பெரியார்?
கி: ஆயிரம் முறை கூறலாம். வெள்ளை வாரணனாரும் பிறரும், தொல்காப்பியத்தில் பார்ப்பனரைப் பற்றிய செய்யுட்களை இடைச் செருகல் செய்துள்ளார்கள் என்று கூறினார்கள்.
இடைச் செருகல்களை நீக்கிப் பதிப்பிக்கலா-மன்றோ புலவர்கள்! செய்யட்டும் செய்த பிறகு பெரியார் அவ்வாறு கூற மாட்டார்.
(குயில் 16.2.1960) * * *
கே: தமிழரசர்கள் முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள் என்று பெரியார் சொல்லலாமா?
கி: ஏன் சொல்லக் கூடாது? தெருவில் கிடக்கும் நாய் விட்டையில் சிவனைக் கண்டான். கண்டவன் சும்மாவா இருந்தான். கோவில் கட்டி அதில் நிறுவிக் கும்பிடவும் வைத்தான்.இப்படி ஒரு தமிழரசன்.
வடநாட்டினின்று ஆரியப் பார்ப்பனர்களை அழைத்து தமிழர் மேல் ஏறிச் சவாரி செய்யச் சொல்லுகிறான். இப்படி ஒரு தமிழரசன்! இப்படிப்பட்டவர்கள் எல்லாம் பிற்கால மன்னர் தாமே அதற்கு முற்காலத்தில் இருந்தவர்கள் நாகரிகம் உள்ளவர்களல்லவா என்று கூறலாம்.
நாகரிகம் உள்ளவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் ஆகிய இருவகையாரில் கொள்கையில் வெற்றி பெற்றவர்கள் எவர்?
நாகரிகம் இல்லாதவரல்லவா? அவர் கட்டிய கோவில், அவர் காட்டிய நாய் விட்டைகள் தாமே இன்று ஆட்சி நடத்துகின்றன?
தமிழகத்தில் பற்றுள்ள புலவர்கள், நாகரிக-மில்லாதவர் கண்ட கோவில் நாய் விட்டை-களை ஒதுக்கியும், நாகரிகம் கொண்டிருந்த மன்னரின் நாட்டுத் தொண்டைப் போற்றியும் நூற்கள் செய்ததுண்டா? செய்ய வேண்டு-மல்லவா! அவ்வாறு அவர்களைச் செய்யத் தூண்டுவதுதான் பெரியாரின் பேச்சு!
கே: தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?
கி: இராமாயணத்தையும் பாரதத்தையும் ஆரியரின் காட்டுமிராண்டித்தனத்தைப் பின்பற்றி எழுந்த புராணம் முதலியவற்றையும் நம் இலக்கியம் நம் இலக்கியம் என்று கூறுவதன்றி தமிழர் இலக்கியங்கள் இன்னின்னவை என்று எடுத்துக் காட்டும் வலி இருந்ததா புலவர்களிடம்? அமைச்சர்களிடம்?
தமிழிலக்கியத்தை முன்னுக்குக் கொண்டு வாருங்கள், அவைகளைப் பின்பற்றி இலக்கியத்தைக் குவியுங்கள். சீர்திருத்தக்-காரர்களை எதிர்ப்பதன் மூலம் வயிறு வளர்க்க எண்ணாதீர்கள் என்பதுதான் பெரியார் சொல்வதன் பொருள்.
(குயில் 23.2.1960)