குழந்தைத் தொழிலாளர்கள்
சர்க்கசில் அடிமைகளாக வேலை செய்யும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று, தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சர்க்கஸ் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதற்குத் தடை விதித்தனர். மேலும், அதிரடி சோதனை நடத்தி, சர்க்கசில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கத் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆணையிட்டனர்.
பெண்ணுரிமைக்கு முன்னோடியான பின்லாந்து
வடக்கு அய்ரோப்பிய நாடான பின்லாந்தின் நாடாளுமன்றத் தேர்தலில் 86 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நாட்டின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 200. இதில், 43 சதவீதம் பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 75 பெண்களும், 2007 இல் 84 பெண்களுமாக இருந்த எண்ணிக்கை தற்போது 86 ஆகியுள்ளது. பெண்களை அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பின்லாந்து பெற்றுள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 545. இதில் 11 சதவீதம் பெண்கள். அதாவது 59 பேர் மட்டுமே பெண்கள்.