பொங்கல் கவிதை

ஜனவரி 16-31

பொங்கல் கவிதை

– கலைஞர்

மானத்திற்கு மறுபிறப்பு

ஞாயிறு போற்றுதும்;
ஞாயிறு போற்றுதும்!
சிலம்பொலி கேட்குது;
சிந்தையில் இனிக்குது!
ஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்;
ஆயிரம் கதிர்கள் ஆயிரம் ஆடவர்;
ஞாயிறு போற்றினர்!
ஞாயிறு போற்றினர்!
ஆயிரம் கோடியாய் ஆயினர் தமிழர்!
பாயிரம் பலப்பல பாடினர் தமிழர்!
ஞாயிறு போற்றியே கூடினர் பொங்கலில்!
ஞாயிறு போற்றியே ஆடினர் பொங்கலில்!
மாவிலை தோரணம் மஞ்சள் வாழை
கோவிலின் முரசம் கோலம் கண்டனர்!
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலமெனப்
பிரிந்து வாழினும் தமிழர் பண்பைப்
புரிந்து வாழ்ந்தனர்!
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றி மூத்தகுடி எனினும்
காடு கொன்று நாடாக்கக்
குளம் தொட்டு வளம் பெருக்கக் கற்றனர் அன்னார்!
வில் தோன்றும், தோள்களிலே – அது
வீரம் காட்டும்.
நெல் தோன்றும், வயல்களிலே – அது
வேளாண் திறத்தைக் காட்டும்.
சொல் தோன்றும் புதிது புதிதாக – அது
மொழியின் வளத்தைக் காட்டும்.
எழுத்து, சொல், இரண்டேயன்றி
பழுத்த நல் தொல்காப்பியன் – தமிழர்தம்
செழிப்பு மிகு வாழ்வுக்கும்
தொகுத்தளித்தான் இலக்கண நூல்!
கொய்யாக் கனித் தமிழால் – குறள்
நெய்தான் உலகுக்கு வள்ளுவனும்!
பெய்யா மழை பெய்தது போல் மகிழ்ச்சி கொள்வோம் – அவன்
பொய்யாமொழிக் கவி கேட்டு!

***
பல் முளைத்திடா மழலையருடன் பருவக் கிள்ளைகளுடன்
பண்பார் பிள்ளைகளுடன் பொங்கலோ பொங்கலெனப்
பொங்கும் மகிழ்வுடன் ஆடிப்பாடிடும் அழகுத் திருநாள்!
அன்புத் திருநாள்! அமுதத் திருநாள்! ஆம்; அன்றொரு நாள்!
இந்தப் பூமியில் ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை
என்றல்லவா வீரத்திற்கு இலக்கணம் தீட்டப் பட்டிருந்தது!
இன்றோ; இந்தத் தமிழ் நிலத்தில் வீரம், விலை கேட்கும் பொருளாகவும் – தீரம்,
திக்கற்ற குழந்தை போலவுமன்றோ ஆகிவிட்ட அவலம் காண்கிறோம்.
அகழ்வாரைத் தாங்கும் நிலமாய் இருக்கலாம்; அதற்காக; நம்மை, நமது
பண்பாட்டை இகழ்வாரைத் தாங்கும் நிலைப்பாடு இருக்கலாமா?
கொதித்தெழு; பிறரை வதைத்தெழ! என்று கூறமாட்டேன் – நம்மையே நாம்
பலியாக்கிக் கொள்ள நேரிடினும் பரவாயில்லை; நமது பழம் பெருமைக்கு ஊறு
நேரிடுகிறது எனக் காணும்போது, நமது வரலாறு மாய்க்கப்படுகிறது
என்கிறபோது, ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக் கிடக்காமல் அதற்கென
அமையும் களத்தில் உயிரைச் சாவில் நட்டு உரிமைகளை வாழ வைப்போம்
எனும் வீரம் கொள்வோம் என்றே இப்பொங்கல் நாளில் சூளுரையேற்க
அழைக்கிறேன்!

மறு பிறப்பு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை!
ஆனால்; தமிழினத்தின் மானத்திற்கு – வீரத்திற்கு – மறுபிறப்பு வேண்டுமென
மன்றாடுகிறேன்!
யாரிடம்?
தமிழன்; தமிழனிடம்தான் மன்றாடுகிறேன்!
என் கோரிக்கை நிறைவேறிட;
இந்தப் பொங்கல் இனிதே பொங்குக!
நூல்: கலைஞரின் கவிதை மழை

பொங்கல் விழா கவியரங்கில் கலைஞரின் தலைமைக் கவிதை (14.01.1975).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *