சிறப்புச் சிறுகதை-1
சொல்லாடல்
– கோவி.லெனின்
சபா களைகட்டியிருந்தது. குருநாதர் முன்பாக உட்கார்ந்திருந்த சீடர்களுக்குள் அப்படி ஒரு பரவச மனநிலை. தன்னுடைய புதிய படைப்பின் டீசர் வெளியீட்டுக்காகத்தான் இன்றைய சபையைக் கூட்டியிருந்தார் குருநாதர். வாசிக்கட்டுமா? என்று கு.நா. கேட்டதும் பலமாக ஆடியது சீடகோடிகளின் தலை.
உக்கிர சொரூப காளியின் சூலாயுதத்தில் பூத்திருந்தது கருமஞ்சள் பூ.
வானத்தில் ஆயிரங்கால் பூச்சி தொங்கியபடி ஊர்ந்தது. நியூயார்க்கின் உயரமான கட்டடத்தில் சிலுக்குவார்பட்டி அழகேசன் ரம்மி ஆடிக் கொண்டிருந்தான். சீட்டுக்கட்டு ஜோக்கர்களின் காமெடிக்கு கிங்கும் குயினும் ஜாக்கிபோல சிரிக்க, க்ளாவரும் ஸ்பேடும் கைதட்டி ரசித்தன.
டீசர் முடிவதற்கு முன்பாகவே, என்ன ஒரு படிமம் சார் என்றது சீடக்குரல் ஒன்று. சார்.. அதிபின்நவீனத்துவத்தை நீங்கதான் தமிழில் ஆரம்பிச்சி வச்சிருக்கீங்க. அபாரம் என்றது இன்னொரு சீடக்குரல்.
இல்லை.. உஸ்பெகிஸ்தானில் இப்படியொரு முயற்சி செய்து தோற்றுப் போயிட்டாங்க. ஆனா நீங்க ஓப்பனிங்லேயே அசத்திட்டீங்க குருவே.. உலகின் முதல் அதிபின்நவீனத்துவப் படைப்பை நீங்கதான் சரியாத் தொடங்கியிருக்கீங்க.
இன்னும் கரெக்ட்டா சொல்லணும்னா தமிழுக்கே நீங்க பெருமை சேர்த்திருக்கீங்க. இப்படிச் சொன்னா உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரியும் என்று மூன்றாவது சீடக்குரல் சொன்னபோது, கு.நா. தும்மலை அடக்குவதுபோல தனக்குள் பொங்கி வந்த பரவசத்தை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் காட்டிய முகபாவத்தில் ஞானம் வெளிப்படுவதாக சீடர்கள் சிலாகித்தார்கள். வௌக்குமாறு நாவலின் டீசர் தினத்தை உடனடியாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்கள் அனைத்தும் கொண்டாடின. நாவலின் தலைப்பே அதில் உள்ள அரசியலை அழுத்தமாகச் சொல்வதாகப் பதிவுகள் தம்பட்டமடித்தன.
இந்த அதிபின்நவீனத்துவ நாவலில் உள்அரசியல், வெளிஅரசியல், பக்கவாட்டு அரசியல், குறுக்குவெட்டு அரசியல் என அத்தனையும் தோலுரிக்கப்பட்டிருப்-பதாகவும், 2352 பக்க அளவிலான இந்த வௌக்குமாறு வெளியானதும் அத்தனை கட்சிகளும் ஆடிப்போய்விடும் என்றும் முன்னோட்டங்கள் வெளியாகிக்-கொண்டிருந்தன.
கு.நா.வின் ஒவ்வொரு புத்தகம் வருவதற்கு முன்பும் இப்படித்தான் அது பலமுறை அரசியலைப் புரட்டிப்போடுவதாக அவருடைய சீடகோடிகளும் வாசகர்களும் உறுதியாக நம்புகிறார்கள். போனமுறை பாராளுமன்றத்தில் நடந்த சட்டத்திருத்தம்கூட, கு.நாவின் நாவல் ஏற்படுத்திய தாக்கம்தான் என பிரபல நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரையில் கு.நா.வே எழுதியிருந்ததுதான் எல்லாவற்றையும்விட அதிகப்படியான புரட்டல்.
இருநூறு ஆண்டுகளாகப் புதுச் சொற்கள் இல்லாமல் பாசம்பிடித்திருந்த தமிழ்க்குளத்தின் படிக்கட்டுகளை ப்ளீச்சிங் பவுடர் போட்டு க்ளீன் செய்து, பல புதிய வார்த்தைகளை அவர்தான் தன்னுடைய படைப்புகள் மூலம் தந்திருக்கிறார் என்று ஒரு வாசகர் எழுதியிருந்த கடிதமும் அதில் அவர் குறிப்பிட்டிருந்த சதுரவட்டமுக்கோணம் என்கிற கு.நாவின் சொல்லாடலுக்கு இணையாக உலகின் எந்த மொழியிலும் வார்த்தை இல்லை என்கிற வரிகளும் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி, இரண்டு மாதங்களாக அதுகுறித்த ஆய்வுகளும் விவாதங்களும் தொலைக்காட்சி நேரலைகள் வரை முக்கியத்துவம் பெற்றன.
கு.நா. நேரடியாக எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை. அவரது சீடகோடிகள் மயிர்பிளக்கும் வாதங்களால் எதிராளிகளைத் திணறடித்தனர். வேதகால ஞானத்தின் நீட்சியாக எழுதிக்கொண்டிருந்கும் கு.நா.தான் அதிபின்நவீனத்துவத்தின் பீஷ்மர் என்பதை எல்லாத் தளங்களிலும் படாதபாடுபட்டு நிறுவிக்கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், பட்டுக்குஞ்சத்தால் கட்டப்பட்டிருந்த வௌக்குமாறு இலக்கிய ஜாம்பவான்களாலும் தொழிலதிபர்களாலும் கட்டு பிரிக்கப்பட்டுப் பிரமாதமாக வெளியிடப்பட்டது.
அரங்கில் 52 பேர் இருந்தார்கள். இரண்டு டன் ஏ.சி. 8 இருந்ததால் குளிர் அதிகமாக இருந்தது. புத்தகத்தைத் தானே வெளியிட்டுப் பேசிய கு.நா., அறிவுஜீவிகள் எல்லா நாட்டிலும் குறைவாகத்தான் இருப்பார்கள். டான்சானி-யாவின் பிரபல எழுத்தாளர் தன்னுடைய நூலை வெளியிட்டபோது 13 பேர்தான் இருந்தார்கள். அவர்கள்தான் அந்த நாட்டின் மொத்த அறிவுஜீவிகள். இங்குகூட 52 பேரும் அறிவுஜீவிகள் என நான் நம்பவில்லை.
27 பேர் மட்டுமே அறிவுஜீவிகளாகத் தெரிகிறார்கள். மற்ற 25 பேரும் இன்று முதல் அறிவுஜீவி-களாகும் நிலை உருவாகியிருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு புத்தகமும் வெளியாகும்-போது இப்படிப்பட்ட அறிவுஜீவிகள் உருவாகிறார்கள் என்பதை இலக்கிய உலகம் அறியும் என்றார்.
கு.நா.வின் பேச்சில் வெளிப்பட்டது அறச்சீற்றம் என்றும், குளிர் அரங்கத்தை அது உஷ்ணமாக்கிவிட்டது என்றும் அவருடைய சீடகோடிகளில் ஒருவரான பத்திரிகை நிருபர் அந்த வார இதழின் புத்தக வெடி பகுதியில் எழுதியிருந்தார். டீக்கடையில் நின்றிருந்த கு.நாவின் சீடகோடிகள் அந்த புத்தக வெடி பகுதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
எஃப்.எம் ரேடியோவில் ஜாக்கியாக இருக்கும் தீவிர வாசகர் ஒருவரும், டி.வி. காம்பியராக இருக்கும் சின்சியர் வாசகி ஒருவரும் பாடல்களுக்கு நடுநடுவே வௌக்குமாறு பற்றியும் கு.நா. பற்றியும் குறிப்புகளைச் சொல்ல அது காஃபி ஷாப், மல்ட்டிப்ளக்ஸ் போன்ற பல இடங்களிலும் கவனத்தை ஈர்த்தது.
வௌக்குமாறு வாங்கிட்டீங்களா? என்று கேட்பது சமூகத்தில் தவிர்க்க முடியாத சம்பிரதாயமாக மாறிவிட்டது.
புதுவாசகர் ஒருவர், வௌக்குமாறு படிச்சிட்டேன் என்றதும், படிச்சிட்டேன்னு சொல்லாதே, வாசிச்சதா சொல்லு. அதில்தான் ஒரு லயம் இருக்குது என்று திருத்திய நெடுங்கால வாசகர் ஒருவர், வாசிச்சேன்னு சொல்றப்ப இசை கேட்கிற மாதிரி இனிமையா இருக்கும்.
படிச்சிட்டேன்னு சொன்னா பள்ளிக்கூடப் புத்தகம் மாதிரி ரேஞ்ஜ் குறைஞ்சிடுது என்றார். ஆமாம் என்று தலையாட்டிய புதுவாசகர், வாசிக்கிறது எப்போதுமே இனிமைதான். நாம பீச்சுக்குப் போயிருந்த ராத்திரி நேரத்துல நீகூட நல்லா ஃப்ளூட் வாசிச்சியே என்று சொல்லி, வாசிப்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதை உணர்த்தினார்.
வௌக்குமாறு பற்றிய உரையாடல்கள்தான் இலக்கிய உலகத்தின் எல்லாத் திசைகளிலும் கேட்கிறது என கு.நாவின் வாசகர்களால் பேசப்பட்டுப் பதிவாக, அதை மறுத்த எழுத்தாளர் ராகுகாலன் (சுருக்கமாக ராகா) தன்னுடைய ஜால்ரா நாவலின் சத்தம்தான் எல்லா இடத்திலும் ஒலிக்கிறது என்றும் விற்பனையிலும் சக்கைப் போடு போடுகிறது என்றும் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கினார்.
ஜால்ரா நாவலே கு.நா.வையும் அவரது சீடகோடிகளையும் மய்ய இழையாக வைத்து எழுதப்பட்ட குறியீடுதான் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
கு.நா.வா, ராகாவா என்ற விவாதம் தீப்பற்றி எரிய, காஷ்மீர் பிரச்சினை முதல் காவிரிப் பிரச்சினை வரை அனைத்தும் பின்னுக்குப் போயின. இருதரப்பின் நேரடிச் சீடர்களும், ஆன்லைன் சீடர்களும் தூங்கிய நேரம்போக மிச்சப் பொழுதுகளை உரையாடல்களிலேயே கழித்தனர்.
அவர்களுடைய சொல்லாடல்கள் தமிழ் இலக்கியத்தின் விவாதப் பரப்பை ஏக்கர் கணக்கில் பெரிதாக்கியிருப்பதாக சிற்றிதழ்களில் கிலோமீட்டர் நீளத்திற்கான கட்டுரைகளும் அதையொட்டிய விவாதங்களும் தொடர்ந்தன. இது தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என இலக்கியப் பீடங்கள் பெருமைப்பட்டன.
உண்மையைச் சொன்னால், இரண்டு எழுத்தாளர்களும் ரகசியமாகப் பேசிவைத்துக்கொண்டு இப்படியொரு விவாதத்தை உருவாக்கி, புத்தக விற்பனையை அதிகமாக்கியிருக்கிறார்கள் என்கிற புலனாய்வுத் தகவலும் காதில் விழுந்தது.
புத்தகத் திருவிழாவில் ராகாவின் ஜால்ராவைவிட, கு.நாவின் வௌக்கமாறு 32 பிரதிகள் கூடுதலாக விற்றதாக ஜனரஞ்சக பத்திரிகையில் வெளியான புள்ளிவிவரம் குறித்து சிற்றிதழ் நேசர்கள் காரசாரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
கூடுதல் விற்பனையால் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்த கு.நாவின் சீடர்களுக்குப் பேரிடியாய் இறங்கியது டெல்லித் தகவல். இந்த ஆண்டுக்கான விருது, ராகாவின் ஜால்ரா_வுக்குத்தான் என்ற தகவலால் கொண்டாட்ட மனங்கள் இழவு வீடாயின.
வருத்தத்தோடு கூடியது சபா. சீடர்களின் முகத்தைப் பார்த்தபடி இருந்த கு.நா.வின் மனதில் வௌக்கமாறு விற்பனையின் ராயல்டி கணக்கு ஓட, அது அவரது முகத்தில் திருப்தியை வெளிப்படுத்தியது. சீடர்களிடம், ரிக்வேத ஆச்சரியங்கள் முதல் அடை-_அவியல் ரெசிபி வரை பேசிக்கொண்டே இருந்தார் குருநாதர்.
இந்த நிலையிலும் இப்படித் தெளிவாக வார்த்தைகளைக் கொட்டுகின்ற ஞானப்பேரரருவியை நினைத்து மீண்டும் சிலாகித்தது சீடர் வட்டம்.
தானே தயாரித்த, மணமணக்கும் சுக்கு டீயை சீடர்களுக்குக் கொடுத்த கு.நா., தனது அடுத்த படைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார். 5432 பக்கங்களுக்குத் திட்டமிட்டிருப்பதாகவும், நாவலை முடிக்கும்போது கடைசி வார்த்தையாக எது அமைகிறதோ அதையே நாவலின் தலைப்பாக வைக்கப்போவதாகவும் சொன்னார்.
இதை மீறி இன்னொரு கதைக்கு விருது கொடுத்துவிட முடியாது என்றனர் சீடகோடிகள். அதிபின்நவீனத்துவத்தின் அடுத்த கட்டம் பற்றிய உரையாடல்கள் பல கிலோ மீட்டர்களுக்குப் பயணிக்கத் தொடங்கின வேகமாகவும், அதிபயங்கரமாகவும்.