– அறிஞர் அண்ணா
வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே, நம் நாட்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது என நம்நாட்டு நிலையைப் பற்றி அறிஞர்கள் கூறுவர்.
பெரிதும் விவசாயத்தையே உறுதுணையாகக் கொண்டு வாழும் நாடு இது. 100-க்கு 80-க்கு மேற்பட்டவர்கள் கலப்பையையே கருவூலமாக நம்பி வாழுகின்றனர்.
கவிகள் வேண்டுமானால் மேழிச் செல்வத்தைப் பற்றியும் ஏரடிக்கும் சிறுகோலைப் பற்றியும், வெண்பாக்கள் அமைத்துப் பாடலாம். வேளாண்மையின் சீரையும் சிறப்பையும் பற்றிப் பேசி மகிழலாம்.
ஆனால் விவசாயம் ஒன்றையே நம்பி வாழும் எந்த நாடும், நாகரிக உலகில் நல்லதொரு இடம் பெற்று இனி வாழ முடியாது என்பதை உலக வளர்ச்சி சரிதம் விளக்கிக் கூறுகிறது.
விவசாயம் மட்டுமே நடத்தி, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து குவித்து, தொழிலுக்கு உதவும் வேறு உற்பத்திப் பொருள்களை உண்டாக்கி அவைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, வாழ்ந்து வந்ததே, பொருளாதாரத் துறையில் நம் நாடு நசித்து வருவதற்கு முக்கியமான காரணம். மேனாடுகளில் உள்ளதைப் போலவே, தொழில் வளர்ச்சியும், விவசாயத்தோடு இணைந்து இருந்தால் மட்டுமே, நாட்டுச் செல்வ நிலையைப் பண்படுத்திப் பெருக்க முடியும்.
விவசாயத் தொழில், இந்தியாவில் உள்ளதைப்போல வேறு எங்கும் மோசமாக இல்லவே இல்லை. இங்குதான், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற எலும்பும் தோலுமாக உள்ள உழவனும், அவனது இளைத்துப்போன எருதும், மூதாதையர் தந்த கலப்பையும், முதுகை நெரிக்கும் சுமையும் உள்ளன.
இந்த நாட்டில்தான் இன்றளவும், வறண்ட நிலமும், வற்றிப்போன குட்டையும், வாழ்க்கையில் இன்பமென்பது யாது என அறியாது வறுமையிற் பிறந்து வளர்ந்து, வறுமையின் மடிமீது படுத்துத் தூங்கும் அடிமைகளும் உள்ளனர். ஏர் உழுவது, முதற்கொண்டு அறுவடை வரையில் நம் நாட்டார் மட்டுமே பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்த பழைமையான முறைகளையே கையாண்டு வருகின்றனர்.
பழைமையின் கடைசிப் புகலிடம் கிராமங்களே! பழைமைப்பித்து முற்றிலும் கொண்டவர்களும் கிராமத்தவரே, ஒன்றரை ஏக்கர் நிலத்திலே ஒன்பது பாகம்! உழுது பயிரிடுவோரின் உழைப்போ, மிருக உழைப்பு! மிராசுதாரரோ நிலத்தை உழவனிடம் தந்து, நெற்கதிரைத் தம்மிடம் கொண்டு வாழுபவர்.
மாற்றம், காலப்போக்கின் கண்ணோட்டம், நாகரிகம் கிராமங்களுக்குச் செல்வதில்லை, அன்று இருந்த அவதியே இன்றுமிருக்கிறது. அதே நிலையில் கிராமங்கள் என்றென்றும் இருக்கவேண்டுமென்பதே, காந்தியாரின் கிராமப் புனருத்தாரணத் திட்டம்.
ஆம்! உள்ளபடி, மேனாடுகளில் இதே விவசாயம் நடத்தப்படும் வித்தையும், அவர்கள் அங்கு கையாளும் முறைகளையும் கண்டவர் நம் நாட்டு விவசாயத்தையுங் காணில் இதனை கிராமவாசியின் கர்ம பலன் என்று கூறுவரேயன்றி நாட்டின் நல்வாழ்வுச் சாதனம் என்று கூறார்.
இன்றைய விவசாய முறையால் வரும் கேடுகள் யாவை? விவசாயமுறை பெரிதும் பழைமையை வளர்த்து கிராமத்தில் காட்டுமிராண்டித் தன்மையைத் தந்து வருவது மறைமுகமான கேடு என்ற போதிலும் மற்றைய கேடுகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் நாயகமாக விளங்குகிறது.
வாழ்க்கையில் கசப்பு, மனச்-சோர்வு, தன்னம்பிக்கை அற்ற தன்மையையே அது வளர்க்கிறது. ஒரு விதமான பரபரப்பு, சுறுசுறுப்பு, வேகம், எழுச்சி, விழிப்பு வருவதாகக் காணோம். கோழி கூவும்போது கூரைவீட்டில் குறட்டை விட்டுத் தூங்கும் உழவன், எழுந்திருந்து கோணல் கலப்பையைத் தூக்கிக் கொண்டு கொடிவழி நடந்து நிலம் சேர்ந்து நெற்றி வியர்வை நிலத்துசிந்த மாலை இருள் வரும் வரை உழைக்கிறான், நரம்புகள் அத்தனைக்கும் வேலை.
கை கால்கள் கசக்கப்படுகின்றன. மேனி கறுத்து அவன் ஒரு தனி ஜாதியானோ என அய்யுறுமாறு மாறிவிடுகிறான். இவ்வளவு கஷ்டப்பட்டும் பட்டபாட்டிற்கு தக்க பலன் உண்டா? இல்லை! விளைவு முன்பு இருந்ததைவிட வளர்ந்ததா? கிடையாது.
முன்பிருந்ததைவிட வேறுவிதமான, வகையான பொருள்கள் விளைகிறதோ? அஃதும் இல்லை. ஏன்? இன்னமும் உழவன் பழைமையில் நெளிகிறானே தவிர, விஞ்ஞானத்தைத் துணை கொண்டு வாழ முற்படவில்லை. இன்றளவும் அவனைச் சுற்றி அந்தகாரம் இருக்கிறதேயல்லாமல் நவநாகரிகச் சுடர் காணப்படுவதில்லை.
உழைப்பு இந்நாட்டில் மட்டுமே மிக மிக அலட்சியமாகக் கருதப்பட்டு வருகிறது. உழைப்பு மட்டுமா? உயிரும் அப்படியே! ஏதோ மனிதன் பிறந்தான் _ – மாயப்பிரபஞ்சத்தில் சின்னாள் இருப்பான், பிறகு மறு உலகு சென்று மகேஸ்வரனோடு கலந்து மலரும் மணமும் போல இருப்பான் என்று கருதப்படும் நாடு இஃதேயன்றோ! ஆகவேதான் இங்கு மனித உழைப்பு, உழைப்பிற்கேற்ற பலன் பெறாத முறையில் வகுக்கப்பட்டுள்ள உழவு முறைக்குப் பலியாக்கப்பட்டு
வருகிறது.
எத்துணை சேதம்! எவ்வளவு அமோகமான உழைப்பு வீணாகிறது! எத்தனை ஆயிரக்கணக்-கானவர்கள் எலும்பு நொறுங்க வேலைசெய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாழ்க்கை-யிலும், வெறும் நடைப்பிணங்களாகவன்றோ உள்ளனர்.
உழவு பயனற்றதா? அல்ல! உழவு நம் நாட்டவருக்குப் பசிபோக பண்டந்தரவல்ல-தன்றோ! செல்வம் கொழித்து நம் நாட்டவர் சீருடன் வாழவும், தேயிலைத் தோட்டம் சென்று தேம்பி வாழும் தமிழர் யாவரும் தமிழகத்திலேயே தன்மதிப்போடு வாழவும் முடியும். எப்போது? உழவு வெறும் உழைப்பாக மட்டுமன்றி உழவுத் தொழிலாக, விஞ்ஞான முறையைத் துணைக் கொண்டு நடத்தப்படின்.
நூல்: பேரறிஞர் அண்ணாவின் அறிவூட்டும் கட்டுரைகள்