மத பீடத்தில் ஏறிய மாந்தரே

ஜனவரி 01-15

ஆசிரியர் விடையளிக்கிறார்

அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளே தயாராவீர்!

கேள்வி : தி.மு.க.வினரை மைனாரிட்டி அரசு என குறிப்பிட்ட அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. அரசை பினாமி அரசு என தி.மு.க. விமர்சிப்பதை ஏற்க மறுப்பதேன்?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : மறுப்பதற்குக் காரணம், பினாமி அரசு என்று கூறாதீர்கள். பொம்மலாட்ட அரசு என்று பொருத்தமாகக் கூறுங்கள் என்பதால் இருக்கலாம்!

கேள்வி : தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி அமைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?
– க.அன்புக்கரசன், சென்னை

பதில் : மோடி அரசின் போக்கும், மாநிலத்தின் அரசும் நிச்சயம் பலரை ஒன்று சேர்க்கும். பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி : அகில இந்திய அரசியல் தத்துவம் இனி எடுபடாது என தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ள கருத்துக் குறித்து?
– கோ.சுருதி, பெரியார் நகர்

பதில் : காலங்கடந்த ஞானோதயம் என்றாலும் வரவேற்கத்தக்க உண்மையேயாகும்.

கேள்வி : நேபாளத்தில் மதச் சடங்கு என்ற பெயரில் மதவெறிக் கூட்டம் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி பீடத்தில் ஏற்றிக் கொல்லும் காட்சிகள் மனித குலத்தையே உலுக்கி உள்ளதே?
– வி.இலக்கியன், திருவனந்தபுரம்

பதில் : புரட்சிக்கவிஞர் தொலைநோக்குடனும் அறிவியல் ரீதியாகவும் கவிதைகள் மூலம் கேட்டார். மத பீடத்தில் ஏறிய மாந்தரே
பலி பீடத்தில் வீழ்ந்தீரே என்று. அதை நாடும் நாமும் கண்டு வேதனையுறுகிறோம்.

கேள்வி : நன்மையும் தீமையும் மனிதர்கள் வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் இயற்கை நிகழ்வு. ஆனால் அதை மறந்து பெரும்பாலானவர்கள் வழிபாட்டுத் தலங்களை நோக்கிப் படையெடுக்கக் காரணம் என்ன?
– செ.உமா, பெரம்பலூர்

பதில் : பகுத்தறிவு வழி சிந்திக்காததன் விளைவும், குறுக்கு வழியில் _ லஞ்சம் போன்று, கடவுளுக்குக் கொடுத்த பிரார்த்தனையும் ஒருபோதும் கைகொடுக்காது என்ற தெளிவு இன்மையும் ஆகும்!

கேள்வி : யாரையோ திருப்திப்படுத்த யானைகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து புத்துணர்ச்சி முகாம்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் அரசு செலவில் அனுப்பப்படும் அவலம் தமிழ்நாட்டில் நிறைவேறும் போக்கு தொடர்கிறதே?
– ச.பெரியார் செல்வன், கன்னியாகுமரி

பதில் : பென்ஷன்தாரர்களுக்கு _ முதியோர்-களுக்கு அந்த ஒரு கோடியைத் தந்தால் வாழ்த்துவார்களே! என்ன செய்வது, ஜோதிடர்கள் இதைக் கூறவில்லையே _ அதனால்தான்…!

கேள்வி : மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத் துறை அமைச்சரான எனக்கு ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்க கீதைதான் கை கொடுத்தது என கூறியுள்ளது பித்தலாட்டம் இல்லையா?
– த.அறிவுமதி, திருவண்ணாமலை

பதில் : வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா என்ற பார்ப்பன அமைச்சர் அதை விளக்கியிருக்கலாமே! போர் புரிவதில் தயங்காதே என்று கூறும் நூலை வழிகாட்டியாகக் கொண்டால், உலக நாடுகளிடையே அமைதி நிலவச் செய்ய இவர் கண்ணோட்டம்… அணுகுமுறை பயன்தருமா? பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் பெண்கள் என்ற சுலோகத்தை ஏற்கிறாரா இந்த அம்மையார்?

கேள்வி : தமிழக மக்கள் மீது தமிழக அரசு, தொடர்ந்து பல துறைகளிலும் கடுமையாக விலையை ஏற்றி சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கி வரும் நிலை தொடர்கிறதே?
– கோ.நளினி, பெரியார் நகர்

பதில் : என்றாலும் மக்கள் தேர்தலில் ஏமாறத் தயாராக இருக்கிறார்களே; இப்போதுள்ள உணர்வும் விழிப்பும் தொடர வேண்டாமா? அறிவுள்ளோருக்கு அதுதானே அழகு?

கேள்வி : உத்தர பிரதேச மாநில ஆளுநர் ராம்நாயக், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் என தெரிவித்திருப்பது அரசியல் சட்ட வரம்பை மீறிய பேச்சு இல்லையா?
– இ.செந்தமிழ்ச் செல்வன், திருச்சி

பதில் : கவர்னர் பதவியிலிருந்து இந்நேரம் டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் குடியரசுத் தலைவர் _ செய்யவில்லையே! என்செய்வது?

கேள்வி : மகாபாரதமும், இராமாயணமும் அரசியல் அறிவுக் களஞ்சியம் என ஒரு கோமாளி உளறி இருக்கிறாரே? (பதிப்பு தினகரன் 15.12.2014)
– பெ.எழிலரசன், திருத்துறைப்பூண்டி

பதில் : நீங்களே சொல்லிவிட்ட பிறகு கோமாளிகளின் உளறல்களுக்கு என்னைப் பதில் கூற வைப்பது நியாயமா?

கேள்வி : பாலகுமாரன் வரிசையில் பிரபஞ்சன், ஜெயமோகன் போன்ற நவீன எழுத்துச் சாமியார்கள் புதிதாய் வந்திருக்கிறார்களே? – சின்ன வெங்காயம், கலைஞர் கருணாநிதி நகர்

பதில் : பக்தி வியாபாரத்தில் இது ஒரு புதுவகை டெக்னிக் _ மோஸ்தர்! அவ்வளவுதான். கிடைத்தவரை லாபம்தானே!

கேள்வி : கருநாடக மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக அம்மாநில அமைச்சர் மாண்புமிகு சதீஷ்ஜார் கிஹேலி அவர்கள் ஒருநாள் முழுவதும் சுடுகாட்டில் தங்கி, சமைத்துச் சாப்பிட்டதுடன் மக்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரக் கருத்துகளைப் பரப்பி, இரவு தனிமையில் தங்கியுள்ளார். மேலும், ஜாதி, பெண்ணடிமைக்கு எதிராகப் போராடப் போவதாகவும் அறிவிப்பு செய்துள்ளாரே? அவரை பெரியார் திடலுக்கு அழைத்து பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தலாமே? – மன்னை சித்து, மன்னார்குடி

பதில் : நடத்துவோம் – நிச்சயமாக!

கேள்வி : மீத்தேன் வாயுத் திட்டம் டெல்டா மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறதே? – ப.இராசாராம், திருச்செந்தூர்

பதில் : முதன்முதலில் மதுக்கூர் _ மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டித்து திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி, பிறகு தஞ்சையில் ஆர்ப்பாட்டமே நடத்தியுள்ளோம். மீத்தேன் எடுப்பு விரைவில் நிறுத்தப்படும் என்பது உறுதி.

கேள்வி : தமிழ்நாட்டில் இனி திராவிடக் கட்சிகளுக்கு வேலை இல்லை எனக் கூறுகிறாரே அமித் ஷா? – அ.தமிழ்மணி, தஞ்சாவூர்

பதில் : ஆசை யாரைவிட்டது? கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்ற ஒரு கதை உண்டு. இது குஜராத்தும் அல்ல _பாராளுமன்ற அறுவடை செய்த உ.பி.யும் அல்ல. பெரியார் பூமி! மோடி அலை முன்பே வீசவில்லை.

6 மாதங்களில் கூட்டணி கலகலத்துவிட்டது! அழைத்தவர்கள் அனைவரும் டாட்டா காட்டிவிட்டனர். எனவே அவருக்கு ஆள்தேடும் வேலை அதிகம் உள்ளதைத்தான் இப்படிக் கூறியிருக்கிறார் போலும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *