கொலை நூலா தேசிய நூல்?

ஜனவரி 01-15

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புகள் எல்லா பக்கமும் தொடங்கிய நிலையில், அத்தனை முற்போக்குக் குரல்களையும் ஒருங்கிணைத்தது பெரியார் திடல். பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்கள் ஒன்றாகக் கொடுத்த குரல் இந்தியாவுக்கே வழிகாட்டியுள்ளது. மதவாத அரசினை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கான கூர்முனையைத் தீட்டியது 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டம். பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், பல்துறை சான்றோர் பெருமக்கள் என சமூக அக்கறை கொண்ட மக்களால் பெரியார் திடலின் எம்.ஆர்.ராதா மன்றம் நிரம்பி வழிந்தது. பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்று அசோக் சிங்கால் கூட்டிய கூட்டத்தில் பேசியுள்ள சுஷ்மா சுவராஜ் கிருஷ்ணனின் விளையாட்டை தேசிய விளையாட்டு என்று அறிவித்திட அவர் கட்சிப் பெண்கள் ஏற்பார்களா?

மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தின் நூல் பொதுவான நூலாக இருக்க முடியுமா? கீதை இந்து மதத்துக்கான நூலும் அல்ல. 3 விழுக்காடு பார்ப்பனர்களுக்கான நூல். வருண அமைப்பை வலியுறுத்தும் நூல். வன்முறையைத் தூண்டும் நூல். தத்துவக் குழப்பங்கள் கொண்ட நூல் ஆகும்.

கீதை சொல்லக்கூடிய தர்மம் என்பது வருண தர்மமே. மகாபாரதத்தில் இடைச்செருகல் செய்யப்பட்டதுதான் கீதை.  தந்தை பெரியார் மகாபாரதம் குறித்துக் கூறும்போது, அது ஒரு விபச்சாரப் புத்தகம் என்று கூறுவார். ஒருத்தனும் ஒருத்தனுக்கே பிறந்தவன் இல்லை. 5 பேருமே பாண்டுவுக்குப் பிறக்காதவர்கள்.

பாடநூலாகக் கூட இருக்கக் கூடாத நூல். தேசிய நூலாக இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மன்ற கவுரவத் தலைவர் அருணன் பேசும்போது,

1. முதலில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்று இருக்க முடியுமா? தேசியப் பறவை, தேசிய விலங்கு போல் தேசிய நூல் இருக்க முடியுமா?

2. நூலின் கருத்தியல்படி தேசியப் புனித நூல் என்று இருக்க முடியாது. 3. மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசில் ஒரு மத நூல் தேசிய நூல் என்பது சட்ட விரோதம். மதச்சார்பற்ற அரசு என்று சொன்னால் மதங்களைச் சாராத அரசு என்றுதான் பொருள். பெரியார் சொல்வார், கன்னி என்று சொன்னால் அனைத்து ஆண்களுடன் சேர்ந்திருப்பது என்றா பொருள்? ஆண்களிட-மிருந்து விலகி இருப்பதுதானே பொருள் என்று கேட்பார்.

அப்படியே எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்றால் கீதை ஒரு மதத்தின் நூல் இல்லையா? அது வைணவ நூல். 80விழுக்காடு இந்துமதத்தினர், 14 விழுக்காடு முசுலீம்கள், 2 விழுக்காட்டினர் கிறித்தவர்கள் உள்ள நாட்டில் எப்படி ஏற்கமுடியும்?

தேசியப் புனித நூல் யோக்கியதை கீதைக்கு உண்டா?

போர்க்களத்தில் இவ்வளவு பேர் சத்திரியர்களைத் தீர்த்துவிட்டால் பெண்-களிடையே வருணக் கலப்பு ஏற்பட்டுவிடுமாம்.

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கூறிவிட்டு அவனாலேயே மாற்ற முடியாது என்றால் என்ன கடவுள்?

சங்கராச்சாரி  சந்திரசேகரேந்திர சரசுவதி கூறும்போது, ஜாதி பேதம் குணத்தின் அடிப் படையில் அல்ல, பிறப்பின் அடிப்படையில் தான் பகவான் சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளார். ஆகவே, கீதையை தேசிய நூல் ஆக்கக்கூடாது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர்   தா.பாண்டியன் பேசியபோது, இலக்கியம் என்கிற வகையில் தொன்மை என்று 2000 ஆண்டுகள் முன்பு என்று காலத்தின் தொன்மைப்படிக் கூறவேண்டும் என்றால், திருக்குறள் உலகப் பொது அறம் சார்ந்த நூல். அதனுடன் கீதையை ஒப்பிட்டுக்கூடப்  பேசக்கூடாது.

சூத்திரர்கள் போராடிய காரணத்தால் சுதந்திரம் பெற்றோம். இசுரேலிடம் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்? 7 சக்கரம் குதிரைகள், வில் அம்பு கொடுத்து உபதேசம் செய்ய வேண்டியதுதானே?

47 வருடங்களாக பாகிஸ்தான் இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவருகிறான். கண்ணன் என்ன செய்கிறான்? அப்போதும் அதிகாரம் இருந்த இடத்தில் இருந்தவன் நீதானே?

எழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. நேரம் கடந்து விட்டது புல்லர்களை வீழ்த்த. நம்மை அடிமை யாக்கும் தத்துவம் பகவத்கீதை!

விஞ்ஞானத்தில் மனித இனம் முன்னேறுகிறது. நவீன முலாம் பூசி அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். முன்னோர்களைப்போல இப்போது நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய போது குறிப்பிட்டதாவது:

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோமோ அதையெல்லாம் செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும். இராமாயணம், மகாபாரதம் கற்பனை, உண்மை அல்ல என்பது மோடிக்கும், சுஷ்மா சுவராஜூக்கும் தெரியும். ராமன் பாலம் கட்டப்படவில்லை என்பதும் தெரியும். இந்தியாவை இந்துஸ்தான் என்று அறிவிப்பதே ஆர்.எஸ்.எஸ். திட்டம். தாழ்த்தப்பட்டவர்களைக் குறிவைத்து அம்பேத்கர் ஜெயந்தி என்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:-

கீதையினுடைய நோக்கம் என்ன? கீதையினுடைய மறுபக்கம் என்று  சொல்லக்-கூடிய இந்த நூலில் நாம் சொல்லியிருக்-கிறோமே.

முதலில் எந்த கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கேள்வி கேட்டால், அவர்களால் பதில் சொல்ல முடியாது. எத்தனை கீதைகள்!

கீதை என்பது, பாலகங்காதர திலகர் சொல்கிறார்:

கீதை என்பது, ஒரு கீதை, இரண்டு கீதையல்ல. ஏராளமான கீதைகள் இருக்கின்றன. அவதூர் கீதை,  அஷ்டா வர்த்தன கீதை, ஈஸ்வர கீதை, கபில கீதை, கணேச கீதை, தேவி கீதை, உத்தர கீதை, பாண்டவர் கீதை, பிரம கீதை, சுஜ்ஜி கீதை, யவ கீதை, ராக கீதை, வியாச கீதை, சிவ கீதை, சுப கீதை, சூர்யகீதை  என்று திலகர் எழுதியிருக்கிறார்.

ராமன் எத்தனை ராமனடி  கேட்டதுபோல, கீதை எத்தனை கீதைகள்; இவற்றில் எந்தக் கீதையை அறிவிக்கப் போகிறார்கள் என்று கேட்டால், நாங்கள் விரும்பும் கீதை.

ஏனென்றால், இடையில் உள்ளே புகுத்தப்பட்டதுதானே கீதை. மகாபாரதத்தில் ஏது கீதை?  அதுமட்டுமல்ல, கொஞ்சம் அறிவுள்ளவர்கள் யாராவது கேள்வி கேட்கமாட்டானா? 700 சுலோகங்கள்கூட இல்லை; அதைவிட அதிகமான சுலோகங்கள் உள்ளன என்று சொல்லி, அதில் எழுதி யிருக்கிறார். இந்து பத்திரிகையில் வெளிவந்த ஆதாரத்தை எடுத்து இந்தப் புத்தகத்தில் போட்டிருக்கிறோம். 745 சுலோகங்களுக்குமேல் இருக்கக்கூடிய  ஒரிஜினல் கீதைகள் வேறு; இப்பொழுது இருக்கக்கூடிய டூப்ளிகேட் கீதை என்று அந்தக் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் எழுதியிருக்கிறார்கள். யாராவது இதனை அறிவுபூர்வமாக விவாதிக்கட்டும். இதற்கு மறுப்பு சொல்லட்டும். யாரும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இவர்களால் கீதையை முழுக்கப் படிக்க முடியாது; 700 சுலோகங்கள் முழுவதும் படித்தார்கள் என்றால், அவர்களுக்குத் தனிப்பரிசே கொடுக்கலாம். அந்தத் தண்டனையை இரண்டாண்டு காலம் ஏற்றுக்கொண்டவன் நான்தான்.

அவ்வளவையும் படித்து, அந்தச் சுலோகங்களையும் கீதையின் மறுப்பு நூலில் எடுத்துக்காட்டியுள்ளோம். அந்த சுலோகங்களைப் படித்தால், தலைவலி வரும்; புரிந்துகொள்ள முடியாது. ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கும். ஆனால், எல்லோரும் என்ன சொல்லுவார்கள் என்றால், பகவான் கண்ணன் கீதையில் சொன்னபடி,

எது சரியாக நடந்ததோ; அது சரியாக நடந்தது

எது சரியாக முடிந்ததோ, அது சரியாக முடிந்தது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள்.

இங்கே மிக அழகாகச் சொன்னார் சுப.வீ. அவர்கள்.

மேற்கண்ட வாசகமே கீதையில் கிடையாது.

கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லும்பொழுது, கடமை என்பது என்ன தெரியுமா? அதற்கு விளக்கம் சொல்கிறார் அம்பேத்கர் அவர்கள், ஜிலீமீ விமீஸீவீஷீஸீ ஷீஸீறீஹ் லீமீ சிணீமீ; ஜாதி தர்மக் கடமை; அந்தத் தர்மத்திலிருந்து நீ விலகாதே! நீ சாகடிக்கவேண்டும்; போர் செய்யவேண்டும்; எதிரில் இருப்பவன் சொந்தக்காரனா, சகோதரனா என்று பார்க்காதே!

அப்பொழுதும் அவன் தயங்குகிறான்!

அதற்கு ஒரு விளக்கம் சொன்னார்; அந்த விளக்கத்தை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆத்மா என்ற ஒன்று தனியாக இருக்கிறது; அது கூடு விட்டுக் கூடு பாயும்! அதை உன்னால் அழிக்க முடியாது; ஆத்மா அழிவில்லாதது; இந்த உடல்தான் அழியக்கூடியது. ஆகவே, இந்த உடலைத்தான் நீ சாகடிக்கிறாயே தவிர, ஆத்மாவை நீ சாகடிக்கவில்லை. உண்மை-யாகவே நீ அவர்களைச் சாகடிக்கிறாய் என்று வருத்தப்படாதே! ஆகவே, அந்த ஆத்மா எப்பொழுதும் வேறிடத்திற்குப் போய்விடுகிறது. ஆகவே, நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே, போரிடு! என்று சொன்னார்.

இதைச் சொன்னதுதான்; இதற்காக உபதேசம் செய்ததுதான் இந்தக் கீதை.

பகவான் கண்ணன் கீதையில் சொன்னபடி, யாரும், யாரையும் கொலை செய்ய முடியாது. ஏனென்றால், என்னதான் கொலை செய்தாலும், அவர் உடல்தான் அழியுமே தவிர, ஆத்மா அழியாது; ஆகவே, இது கொலையாகக் கருத முடியாது. எனவே, என்னுடைய கட்சிக்காரர் அவரைக் கத்தியால் குத்தினார் என்பது உண்மை; அவர் இறந்துவிட்டார் என்பதும் உண்மை. அதற்காக என்னுடைய கட்சிக்காரரை குற்றவாளி என்று கருத முடியாது. ஏனென்றால், பகவான் கண்ணன் கீதையில் சொல்லி-யிருக்கிறார், ஆத்மா என்பது அப்படியே வேறொரு இடத்திற்குப் போய் விடும். எனவே, என்னுடைய கட்சிக்காரரை விடுதலை செய்யவேண்டும் என்று வழக்குரைஞர் சொன்னால்,

இதைக் கேட்டுவிட்டு நீதிபதி என்ன தீர்ப்பு எழுதுவார்:

அற்புதமான விளக்கம்; இதுபோன்று இந்தியன் பீனல் கோட்டில் இதுபோன்ற விளக்கத்தை எந்த வழக்குரைஞரும் சொல்லியது கிடையாது. ஆகவே, நான் அவரை விடுதலை செய்துவிடுகிறேன் என்றா சொல்வார்? அப்படி அவர் விடுதலை செய்தால், அவருடைய நீதிபதி பதவிக்கே ஆபத்தாகிவிடும்.

மாறாக, அவர் ஒரு புத்திசாலியாக இருந்தால், பகுத்தறிவுவாதியாக இருந்தால் என்ன தீர்ப்பு எழுதுவார்?

உங்களுடைய வாதத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். யாரும், யாரையும் கொலை செய்ய முடியாது. ஆத்மா அழிவில்லாதது. ஆகவே, நான் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கிறேன். இவரும் தூக்குக் கயிற்றில் தொங்குவார். இவருடைய உடல்தான் அழியுமே தவிர, அவருடைய ஆத்மா அழியாது என்றுதானே அந்த நீதிபதி எழுதுவார்.

ஆகவே, நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். பகுத்தறிவிற்கு உடன்பாடானதா இந்த கீதை! தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது எல்லாம் பிறகு; முதலில் அதனை ஒரு சாதாரணமான நூலாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

கோட்சே நீதிமன்றத்திலே சொன்னபொழுது, பகவத் கீதையைத்தான் நான் படித்தேன். பகவத் கீதைதான் எனக்கு இதுபோன்று செய்வதற்கு அடித்தளமான ஒரு தைரியத்தை மிகத் தெளிவாகக் கொடுத்தது என்று அவர் சொல்லியிருக்கிறார்.

இதனை நான் கீதையின் மறுபக்கம் நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால், இதனைக் குறித்து வைத்துக்கொண்டு ஆதாரப்பூர்வமாக மறுக்கச் சொல்லுங்கள், பார்ப்போம்!

எனவே, சமுதாயத்தாலே கீதை புறக்கணிக்கப்-படவேண்டிய நூலே தவிர, ஜாதியை ஆதரிக்கின்ற நூலே தவிர வேறு கிடையாது என்று ஆதாரங்களுடன் உரையாற்றினார். அத்தனை எளிதில் இந்நாட்டை மதவாத நாடாக்கிவிட முடியாது; எப்பாடு பட்டாலும் முடியாது என்பதற்குக் கட்டியங்கூறும் நிகழ்ச்சியாக அன்றைய கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *