– பிரபாகரன் அழகர்சாமி
இந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்), த்ரீ இடியட்ஸ் (தமிழில் நண்பன்) போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், முன்னணித் திரைநட்சத்திரமான அமீர்கான் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இந்தித் திரைப்படம் பிகே (PK).
இந்தித் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம், இப்போது உலகெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மிகுந்த சமூக அக்கறையுடனும், தேர்ந்த படைப்-பாற்றலோடும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் பகுத்தறிவாளர்களால் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு. மதங்கள் இல்லாத, கடவுள்கள் இல்லாத, கடவுள்களிடம் பேசுவதற்கு இடைத்தரகர்கள் இல்லாத ஒரு கிரகம்.
அந்தக் கிரகத்தில் மனிதர்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு உடை கிடையாது, தனிப் பெயர்கள் கிடையாது, மொழிகூடக் கிடையாது. அப்படி ஒரு கிரகம். அதிசய கிரகம் என்று சொல்லிவிட முடியாது.
ஏனென்றால் இந்தப் பூமியில் மனித இனம் தோன்றியபோது எப்படி இருந்ததோ அப்படிப்பட்ட ஒரு கிரகம்தான் அது. அந்தக் கிரகத்தில் இருந்து பூமிக்கு ஒரு மனிதனை விண்கலத்தில் அனுப்புகிறார்கள்.
ராஜஸ்தான் பாலைவனத்தில் அவனை இறக்கிவிட்டுச் செல்கிறது அந்த விண்கலம். தன்னுடைய சொந்தக் கிரகத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்றால், அந்த விண்கலத்தை அழைப்பதற்கு டாலர் வடிவில் உள்ள ஒரு கருவியைக் கழுத்தில் மாட்டியிருக்கிறான் அவன். இந்தப் பூமியில் அவன் சந்திக்கும் முதல் மனிதன், அந்தக் கருவியைப் பிடிங்கிக்கொண்டு ஓடிவிடுகிறான்.
அந்தக் கருவியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவன் ஊர் ஊராக அலைகிறான். அதில் அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுடைய நம்பிக்கைகள், என்ன செய்தால் இழந்த பொருளை மீட்க முடியும் என்று மனிதர்களைப் பார்த்து இவன் பின்பற்றும் வழிமுறைகள் என்று விரிகிறது படம்.
என்ன இது எதுவும் நம்பும்படி இல்லையே என நீங்கள் நினைக்கலாம்
.உண்மைதான், இதெல்லாம் சினிமாத்தனம்தான். இந்த நம்பமுடியாத சினிமாத்தனத்தை வைத்துக்-கொண்டு, மக்கள் நம்பிக் கொண்டிருக்கிற பல கற்பிதங்களின் மீது கேள்விக்கணைகளைத் தொடுத்துத் தகர்த்தெறிந்திருக்கிறார்கள்.
படத்தில் இன்னொரு சிறிய துணைக்கதையும் உண்டு. வெளிநாடு ஒன்றில் மேற்படிப்பிற்காகச் சென்ற ஜனனி அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சர் ஃபராஸ் மீது காதல் கொள்கிறாள். இந்து ஆன்மீக குரு (சாமியார்) ஒருவர் மீது தீவிரபக்தி கொண்ட குடும்பம் ஜனனியுடையது. அவளுடைய காதல்பற்றித் தெரிந்தவுடன் அவளுடைய அப்பா சாமியாரிடம் முறையிடுகிறார். அந்த முஸ்லிம் இளைஞனை நம்பாதே அவன் உன்னை ஏமாற்றிவிடுவான் என்று ஜனனியிடம் சொல்கிறார் சாமியார். சாமியார் சொன்னதுபோலவே ஜனனியின் காதல் முறிந்துவிடுகிறது.
அந்தப் பாகிஸ்தான் முஸ்லிம் இளைஞன் உண்மையிலேயே ஜனனியை ஏமாற்றினானா, சாமியார் சொன்னது போலவேதான் அது நடந்ததா, முடிவில் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்று போகிறது அந்தக் கதை.
நீ இழந்ததை மீட்க வேண்டுமா, உன் கோரிக்கை நிறைவேற வேண்டுமா, கடவுளிடம் முறையிடு, அவர் நிறைவேற்றி வைப்பார் என்று வேற்றுக்கிரகவாசியிடம் அறிவுறுத்துகிறார்கள் பூலோக மனிதர்கள்.
அவனுக்குத்தான் மதமே கிடையாதே, எந்தக் கடவுளிடம் முறையிடுவது.
இந்து, முஸ்லிம், கிறித்தவ, சீக்கிய, சமணம் என எல்லா மதக் கடவுளையும் வேண்டுகிறான். எல்லா மத வழிபாடுகளையும் செய்கிறான்.
வெள்ளிக்கிழமை விரதம் இருக்கச் சொல்கிறது ஒரு மதம்.- செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கச் சொல்கிறது இன்னொரு மதம். பகலிலே உணவருந்தாதே என்கிறது ஒரு மதம், அனைத்தையும் பின்பற்றுகிறான். தன் உடலை வருத்திக்கொண்டு பல மத வழிபாடுகளையும் செய்கிறான். என்ன செய்தாலும் ஒரு பயனும் இல்லை. எந்தக் கடவுளும் வந்து இழந்த பொருளை மீட்டுத் தந்துவிட மாட்டார் என்று பார்வையாளனையே சொல்ல வைத்துவிடுகிறார் படத்தின் இயக்குநர்.
ஒரு மதத்தின் கடவுளை இன்னொரு மதம் ஏற்பதில்லை. ஒரு மதத்தின் வழிபாட்டு முறைக்கும் இன்னொரு மதத்தின் வழிபாட்டு முறைக்கும் சம்பந்தமே இல்லை.
ஒரு மதத்தின் பழக்கவழக்கம் இன்னொரு மதத்தோடு முரண்படுகிறது. ஒரு மதத்தில் வெள்ளை உடை அணிந்த பெண்விதவை. அதை நம்பி, வெள்ளை கவுன் அணிந்த மணப்பெண்ணிடம் போய் விதவையா என்று கேட்டு அடி வாங்குகிறார். அந்த மதத்தில் விதவை என்றால் கருப்பு உடை அணிவது வழக்கமாம்.
சரியென்று, கருப்பு பர்தா அணிந்த மூன்று பெண்களைப் பார்த்து விதவையா எனக் கேட்கப் போய், அந்த மூவருக்கும் கணவனான ஒருவர் இவனை அடிக்கத் துரத்துகிறார். ஒரு மதத்தில் பக்தர்களுக்கு மதுவை (ஒயின்) தீர்த்தமென வழங்குகிறார் பாதிரியார். அதை நம்பி கடவுளுக்குக் காணிக்கையாக மதுபாட்டில்-களோடு தர்காவிற்குச் சென்று அடி வாங்குகிறார். அந்த மதத்தில் மது அருந்துவது பாவச்செயலாம்.
இந்தக் கோவிலில் உள்ள கடவுள் சக்தி வாய்ந்த கடவுள். இந்தக் கடவுளிடம் வேண்டி காணிக்கை செலுத்தினால் உன் வேண்டுதல் நிறைவேறும் என்கிறார்கள். அதை நம்பி, கூட்ட நெரிசலில் சிக்கி, நீண்ட வரிசையில் போய்க் காணிக்கை செலுத்தியும் தன் வேண்டுதல் நிறைவேறாததால், காவல் நிலையத்தில் போய் கடவுள் மீது மோசடி செய்துவிட்டதாகப் புகார் கொடுத்து அங்கும் அடி வாங்குகிறார்.
அவன் கேட்கின்ற கேள்விகளையும் நடந்து கொள்கின்ற முறையையும் பார்த்து அவன் ஏதோ மது போதையில் இருக்கிறான் என்று நினைத்து மக்கள் அவனைப் பிகே என்று அழைக்கிறார்கள். பிகே என்றால் இந்தி பேச்சுவழக்கில் போதை அல்லது போதையில் இருப்பவர் என்று பொருள்.
ஒரு கட்டத்தில், தொலைக்காட்சி ஊடகவியலாளராகப் பணிபுரியும் ஜனனி, பிகேவைச் சந்திக்கிறார். பிகேவைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்கிறார்.
அவர் மட்டுமே பிகே வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர் என்பதை நம்புகிறார்.
அவருக்கு உதவ விரும்புகிறார். பிகே தொலைத்த அந்த அதிசயக் கருவி, ஜனனியின் குடும்பம் பின்பற்றுகிற சாமியாரிடம் இப்போது இருப்பது தெரிய வருகிறது. அது சிவன் தன் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் என்று அந்தச் சாமியார் மக்களை ஏமாற்றி வருகிறார். அந்தச் சாமியாரின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தினால்தான் அதை மீட்க முடியும் என்று ஜனனியும் பிகேவும் உணர்கிறார்கள்.
ஆன்மிக குரு என்ற பெயரில் கடவுளின் ஏஜெண்டுகளாக இருக்கிற சாமியார்களின் மோசடித்தனங்களைத் தன்னுடைய எளிமையான வெகுளித்தனமான கேள்விகளின் மூலம் அம்பலப்படுத்துகிறார்.
ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் பக்தனை மேலும் துன்பப்படுத்தும் வகையில் ஆயிரம் மைல் கடந்துபோய் இமயமலையில் இருக்கும் கடவுளை வணங்கச் சொல்லும் சாமியார் உண்மையான கடவுளிடம்தான் பேசுகிறாரா.
தன் பக்தனைத் துன்பப்படுத்தும் கடவுள் உண்மையிலேயே கடவுள்தானா என்று பல கேள்விகளைக் கேட்டு சாமியாரைத் திக்குமுக்காடச் செய்கிறார்.
இவன் வேறு மதத்துக்காரன் அதனால்தான் தன் மீது குற்றம் சுமத்துகிறான் என்று சாமியார் சமாளிக்கிறார். குழந்தை பிறக்கும்போது அது எந்த மதம் என்று அதன் உடலில் ஏதாவது லேபிலோடு பிறக்கிறதா, இங்கே யாருடைய உடலிலாவது மதம் என்ன என்று லேபில் ஏதாவது இருக்கிறதா என்பது போன்ற எளிமையான கேள்விகளைப் பிகே கேட்கிறார்.
இவையெல்லாம் தொலைகாட்சியில் ஒளிபரப்-பப்படுகிறது. நாடெங்கும் பல சாமியார்களை அவர்களுடைய பக்தர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள்.
மந்திரத்தால் தங்கச் சங்கிலி வரவழைக்கும் சாமியாரிடம், இதை வைத்தே நீங்கள் உலகத்தின் வறுமையைப் போக்கி-விடலாமே என்று கேட்கிறார் ஒரு பக்தர். பக்தி என்பது பயத்தில் இருந்துதான் பிறக்கிறது என்பதை மிக எளிமையான செயல்முறை விளக்கத்தின் மூலம் புரியவைக்கிறார் இயக்குநர்.
தேர்வுக்காலத்தில் ஒரு கல்லூரியின் வாசலில் ஒரு கல்லை வைத்து, அதற்கு ஒரு குங்குமப் பொட்டும் வைத்து, அதன் முன் சில சில்லறைக் காசுகளைப்போட்டுப் பாருங்கள். சீக்கிரமே, தேர்வு பயத்தில் இருக்கும் மாணவர்களிடையே அந்தக் கல் ஒரு கடவுளாகச் செல்வாக்கு பெறும் என்ற எளிய உண்மையை விளக்குகிறார். மதங்களையும் கடவுள்களையும் கற்பித்தவன் மனிதன். மதம் மனிதர்களைப் பிரிக்கிறது, மனிதர்களுக்குள் பகையை வளர்க்கிறது. மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள் மனிதனைப் போலவே கோபப்படுகிறது, பொருட்களின் மீது ஆசைப்படுகிறது, மனிதன் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கிறது, பழிவாங்கிறது.
அப்படிப்-பட்ட மதமும் கடவுளும் மனிதர்களுக்குத் தேவையில்லை என்பதுவே இந்தப் படம் முன்வைக்கும் வலுவான கருத்து. மதமும் கடவுளும் என்னவென்று அறியாத ஒருவனுடைய பார்வையில் இந்தக் கற்பிதங்களின் மீது எழும் கேள்விகள்தான் படத்தின் கதை. அதற்காக வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மனிதர் என்ற உத்தியை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு கடினமான கருத்தை, முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியிலேயே கதையை அமைத்துக் கொண்டு செல்வதற்கு இந்த உத்தி உதவியும் இருக்கிறது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும், மதம், கடவுள்,மொழி, தேசம் என்ற எதுவும் அறியாத இந்த வேற்றுக்கிரக மனிதரைப் போலவே நிர்வாணமாய்ப் பிறக்கிறது.
பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களைப் பற்றிக்கொண்டு மறுபிறவி, மறுமை வாழ்வு, சொர்க்கம் போன்ற இல்லாத அடுத்த உலகத்தை அடைவதற்கான சாவியைத் தேடுவதே வாழ்க்கை என வாழ்ந்து முடிக்கிறான். பகுத்தறிவின் அடிப்படையே தர்க்கரீதியான கேள்விகளை எழுப்பி அதற்கு விடைகாணும் முயற்சிதான்.
அந்தக் கேள்விகள் பெரும்பாலும் எளிமையான கேள்விகள்தாம். முன்முடிவு-களைக் களைந்து, மனத்தடைகளைக் கடந்து எழும் கேள்விகள். குழந்தைகள் கேட்குமே அதுபோன்ற வெகுளித்தனமான கேள்விகள்.
அதைத்தான் இந்தத் திரைப்படம் செய்கிறது. பிகே ஒரு முழுநீளப் பகுத்தறிவு திரைப்படம். மதத்திற்கு மாற்றாக மனிதநேயத்தை முன்வைக்கும் திரைப்படம். மதம் ஒரு போதை (பிகே) என்று உணர்த்தும் திரைப்படம்.