எத்தனை எத்தனை சடங்குகள்
– சு.அறிவுக்கரசு
இதனை வணங்கிய பின், உள்ளே போய் புத்தாடை அணிந்துவந்து, மணமகன் இடப்பக்கமும் மணமகள் வலப்பக்கமும் அமரவேண்டும். இவர்களும் கிழக்கு நோக்கியே அமரவேண்டும்.
மணமகனின் வலது கையில் காப்பு கட்டப்படும் பார்ப்பனப் புரோகித முறையில் கங்கணம் என்பது தமிழ் முறையில் காப்பு. பின்னர் மணமகள் கையில் மணமகன் காப்பு கட்டுவார். இது இடக்கையில் கட்டப்படும். திருமண வினைகள் வில்லங்கங்கள் எதுவும் ஏற்படாமல் நடைபெறுவதற்கான முன் எச்சரிக்கைச் சடங்காம். மணமக்களின் கைகளில் ஏன் இட, வல மாறுதல்?
மணமகன் எதிரில் தாம்பாளத் தட்டு வைக்கப்பட்டு அவனின் பெற்றோர் அல்லது அந்த ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்விப்போரை நிற்கவைத்து அவர்களின் பாதங்களைக் கழுவி, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, மலர் தூவி, கர்ப்பூரம் கொளுத்திக்காட்டி பாதபூஜை செய்ய வேண்டும். மணமகன் அவர்களை வணங்க வேண்டும். மணமகனை அவர்கள் அரிசி தூவி வாழ்த்த வேண்டும். இதைப்போலவே மணமகள் தம் பெற்றோரை வணங்கி வாழ்த்துப் பெற வேண்டும்.
ஓம் நுழைகிறது
மணப்பந்தலில் மணல் ஓரடி சதுர அளவில் பரப்பி வைக்கப்பட்டு தமிழ்ப் புரோகிதர் அதில் ஓம் என எழுதுவார். ஓம் என்பது பிரணவ மந்திரம் என்பர். இதனைத் தன் தந்தையின் காதில் முருகன் ஓதினான் என்பர். மகனிடம் தந்தை பாடம் கேட்ட ஊர் சாமிமலை என்பர். ஓம் என்பது யோனி என்று பொருள் கூறுகின்றனர் வடமொழிக்காரர்கள். பொதுவாகவே இந்துமதச் சின்னங்கள் எல்லாமே பிறப்பு உறுப்புகளை (நிமீஸீவீணீறீ) அடிப்படையாகக் கொண்டவையே!
மணல் சதுரத்தில் தென்முகமாக ஓம் எழுதவேண்டும் என்கிறார்கள். முக்கோணம் வரைந்து அதனுள் வட்டம் வரைந்து அதன் கீழ் பிறை வரைய வேண்டுமாம். அறம், பொருள், இன்பம் என்பவற்றைக் குறிக்கிறதாம்.
எப்படியோ, ஓம் எழுதி அதன் மீது சுள்ளிகளைப் பரப்பி (வடசொல்: சமித்து) நெய் தெளித்து கர்ப்பூரம் கொளுத்திப் பற்ற வைக்க வேண்டும். அப்போது தமிழ்ப் புரோகிதர்,
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமானனா பெறியுங் காற்றுமாகி
அரு நிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாச மாயட்ட மூர்த்தியாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும்ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி
தெருதலையாய் இன்றாகி நாளையாகி
நிமிர்புன் சபையடிகள் நின்றவாறே
எனப் பாடிப் பின்னர் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி எனத் தொடங்கும் தேவாரப் பாடல் முழுவதையும் பாடுவார். தாலி சுற்றிய தேங்காய் சபையோரின் வாழ்த்துக்காக அனைவரிடமும் காட்டப்பட்டுத் திரும்பக் கொண்டு வரப்படும். மணமகனின் சகோதரி விளக்கேற்றிக் கொண்டு (பகலில்தான்) மணமகளின் பின்னால் நிற்க வேண்டும். பிறகு மணமகன் தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுப் போடுவார். அம்முடிச்சுகளின் மீது மஞ்சள் குங்குமம் பூசுவர். (அரக்கு வைத்துச் சீல் இடுவதற்கு மாற்று முறையோ?)
தாலி கட்டிய பின்
அதன் பிறகு மணமக்கள் மூன்றுமுறை மாலை மாற்றிக் கொள்வர். மணமகனுக்கு மெட்டி அணிவித்தல், பெண்ணுக்குச் சுற்றிடுதல், இருவர்க்கும் பட்டங் கட்டுதல் முடிந்ததும் மணமக்கள் இருவரும் கைகளைப் பிடித்தவாறு மணப் பந்தலை மூன்று முறை வலம் வரவேண்டுமாம். முதல் சுற்று முடிந்ததும் மணமகளின் சகோதரனுக்குப் பொரியிட்டு அதனை அவனைக் கொண்டு மணமகன் கையில் விடச்செய்து அதனை மணமகளின் கையில் விடச்செய்து கடைசியில் நெருப்பில் இட்டுவிட வேண்டுமாம். மூன்று சுற்றின் முடிவின்போதும் இப்படியே பொரி விடவேண்டும். அதன்பின் மணமகன் தன் மைத்துனனின் விரலுக்கு மோதிரம் அணிவிக்க வேண்டும்.
பிறகு இடம் மாறி, மணமகன் வலப்புறமும் மணமகள் இடப்புறமும் உட்கார வைக்கப்பட வேண்டும். தமிழ்ப் புரோகிதர் அட்சதை போட்டு வாழ்த்துவார். மற்றையோர் தொடர்ந்து வாழ்த்துவர்.
பிறகு மணப் பந்தலை வலம் வந்து மணமக்கள் அமர வைக்கப்படுவர். பின் மணமகன் கையிலுள்ள காப்பு நாண் களையப்பட்டு தேங்காய் மேல் வைக்கப்படும். மணமகள் கையிலுள்ள காப்பு நாணை மணமகன் களைந்து அதே தேங்காய் மீது வைக்கப்படும். அந்தத் தேங்காய் வைக்கப்பட்ட அரிசியை மேளக்காரருக்குக் கொடுக்க வேண்டும்.
ஆலத்தி சுற்றி மணமக்களை எழுப்பி விளக்கேற்றிப் பிடித்த பெண் முன்னே செல்ல, முளைப் பாலிகை தூக்கிய பெண்கள் உடன் செல்ல மணமக்கள் மணப் பந்தலை வலமாக மூன்றுமுறை சுற்றி வந்து அமர வைக்கப்பட்டுப் பாலும் பழமும் தருவார்கள். மணவிருந்து பின்னர் நடைபெறும்.
செம்மறியாட்டின் தயிரில் வரகரிசி போட்டு வேகவைத்து அத்துடன் ஈசலையும் இட்டுச் சமைத்த இனிய புளிப்பு வாய்ந்த விருப்பம் தரும் சோற்றின் மீது பசு நெய் பெய்து மணநாளில் பரிமாறினர் என்று அகநானூறு (பாடல் 394) பாடுவதைப் போல அளிப்பார்களா? இனிய நெய் மிக்க வெள்ளிய சோறு என்று அகநானூறு 136ஆம் பாடல் வருணிக்கும் உணவை விருந்தாக அளிப்பார்களா? அல்லது நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பாடியதைப் போல, கண்ணாலஞ் செய்யக் கறியும் கலத்த
தரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா! நீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல்
கோலஞ் செய்திங்கேயிரு
என்று கறிகலந்த சோறு என்றால் மட்டன் பிரியாணியா? மரக்கறி கலந்த வெஜ் பிரியாணியா?
வைதீகமும் புரோகிதமும்
பார்ப்பனப் புரோகிதர் நடத்தி வைக்கும் திருமணத்தைச் சிலர் வைதீகத் திருமணம் என்றும் சிலர் புரோகிதத் திருமணம் என்றும் கூறுகின்றனர். இரண்டும் ஒன்றல்ல. தனித்தனி. பார்ப்பனர்க்குச் செய்து வைக்கப்படுவது வைதீகத் திருமணம். வேதங்களின் அடிப்படையில் நடைபெறுவதால் இவை வைதீகம் எனப்படுகிறது. வேதங்கள் பார்ப்பனர்க்குரியன.
வேதங்கள் பார்ப்பனர் அல்லாதார்க்கு உரியன அல்ல. வேதங்களைக் கேட்டலும் கற்றலும் குற்றங்கள். கடும் தண்டனைக்கு உரிய குற்றங்கள். வேதங்களை ஓதுபவன் பக்கத்தில் உட்கார்ந்தால்கூடக் குண்டி அறுக்கப்படக்கூடிய தண்டனை உண்டு. இந்த வேதங்களின்படி சூத்திர நான்காம் ஜாதியினர்க்குத் திருமணம் செய்துகொள்ளும் தகுதியே இல்லையாம். உரிமை கிடையாதாம். ஆதலால் இவர்களுக்குப் புராணங்களின் அடிப்படையில்தான் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே இவை புரோகிதத் திருமணங்களே! வைதீகத் திருமணங்கள் அல்லவே அல்ல!
வேதப் பார்ப்பனர்கள் விஜய நகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ஆந்திரத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். பார்ப்பன, சத்திரிய, வைசியர் ஆகிய மூன்று ஜாதியினர்க்கு மட்டும் வேதமுறைப்படி திருமணம் செய்யும் தொழிலைச் செய்தனர். அம்மூன்று ஜாதியார் தமிழ்நாட்டில் குறைவு. பார்ப்பனர் மட்டும் இங்கு உள்ளனர். சத்திரிய, வைசியர் கிடையாது என்பதை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளேகூட உறுதி செய்துள்ளன. எனவே, பிழைப்புக்கு வழி தேடிய பார்ப்பனப் புரோகிதர்களைக் காப்பாற்றும் வகையில் மன்னர்கள் கூறிய வழிமுறையின்படி நான்காம் ஜாதியினர் தற்காலிகமாக ஜாதி உயர்வு தரப்பட்டனர். சத்திரியராகவோ, வைசியராகவோ உயர்த்தப்பட்டனர். அதற்காகத்தான் திருமண நாள் அன்று மட்டும் அவர்களுக்குப் பூணூல் அணிவிக்கப்படுகிறது. இது அம்மக்களை அவமரியாதை செய்யும் முறை அல்லவா?
புரோகித முறைப்படித் திருமணங்கள் செய்விக்கப்படுகின்றபோது ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொருவித சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சடங்குகள் செய்யப்படுகின்றன. நாளடைவில் இவை சமயக் கோட்பாடுகளாகக் கருதப்பட்டுத் தெய்வீகத் தன்மை கற்பிக்கப்பட்டுவிட்டன.
சடங்குகள் ஏன்?
ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பிப் பழகி இல்லறம் நடத்திய நிலை. இதற்குச் சடங்கும் இல்லை. பிறர் சான்றும் இல்லை.
யாயும் ஞாயும் யாராகியரே
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே
என்று குறுந்தொகைப் பாடல் 40 கூறுவதுபோல வாழ்ந்தனர். காலப்போக்கில் ஒருவரை மற்றவர் ஏய்க்கும் நிலை ஏற்பட்டு, அன்னார் காதல் வாழ்க்கையில் களங்கம் ஏற்பட்டு இருக்கலாம். இன்றும்கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வோர் (லிவீஸ்வீஸீரீ ஜிஷீரீமீலீமீக்ஷீ) பிரிந்துபோகும் நிலையைப் பார்க்கிறோம். பிளவும் பிரிவும் ஏற்பட்டுப் பொய்யும் குற்றங்கூறலும் தோன்றிய பிறகு சடங்குகளின் தேவை உணரப்பட்டிருக்கலாம். சிலர் அல்லது பலர் முன்னிலையில் இவர்களின் பிணைப்பு நடைபெற வேண்டும் எனக் கருதப்பட்டு விழாக்கள் உருவாக்கப்-பட்டிருக்கலாம். இதனைத் தொல்காப்பியம் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், அய்யர் யாத்தனர் கரணம் என்ப என்கிறது. கரணம் என்பதை திருமணச் சடங்குகள் என்று பொருள் கூறுகின்றனர்.
தொல்காப்பிய ஆராய்ச்சி உரை எழுதிய பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார், கரணம் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். இக்காலத்தும் கரணம் என்று சொல்லப்படுபவர்கள் ஊர்க் கணக்கு எழுதும் கணக்கப் பிள்ளைகள் ஆவர். கரணம் கணக்கு எழுதுவோரைக் குறிப்பதால் எழுதுதலையும் குறிப்பதாகும். ஆதலின் இன்ன ஆடவனுக்கு இன்ன பெண், மனைவி என்று எழுதிக்கொள்ளும் பழக்கமும் இருந்திருக்கலாம் அன்றோ? அவ்வாறு எழுதுதலையே ஆசிரியர் தொல்காப்பியர் கரணம் என்று குறித்திருக்கலாம் அன்றோ? இன்றும் பழங்கால முறைப்படி திருமணம் கொள்வோர், திருமணத்திற்கு முன்னால் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டில்கூடி இவ்வாறு எழுதி உறுதிப்படுத்துவதைக் காணலாம். இந்நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்றும் நிச்சயதார்த்தம் என்றும் வெற்றிலை பாக்கு மாற்றல் என்றும் அழைப்பர். தொல்காப்பியர் காலத்து வழக்கமே இன்றும் தொடர்ந்து வந்துள்ளது என்று கொண்டால் குற்றம் என்ன? என்று கேட்கிறார்!
அப்படியென்றால், மேலோர் மூவர்க்குப் புணர்ந்த கரணம்/கீழோர்க்கான காலமும் உண்டே என்கிறதே தொல்காப்பியம்! மேலோர் மூவர் என்றால், ஆரிய வருணாசிரமக் கோட்பாட்டின்படி மேல் மூன்று வருணம்/ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கான கரணம் கீழ்ஜாதி/வருணம் சார்ந்த சூத்திரப் பார்ப்பனர் அல்லாதவர்க்கும் பொருந்துமாறு ஆகிவிட்டதா? பொய்யும் வழுவும் முதலில் மேலோர் மத்தியில் தொடங்கியதா? பையப் பையக் கீழோர் மத்தியில் பரவத் தொடங்கியதா? இருக்கலாம்! அதே வகையில் மேலோர் எனும் மூன்று ஜாதியாரின் சடங்குகள் பார்ப்பனர் அல்லாதார் மத்தியிலும் நுழைந்து விட்டதா? இருக்கலாம்.
மேலோர் கீழோர் எனும் பாகுபாட்டினை எதிர்த்தவர் மறைமலை அடிகள். ஆரியர் சேர்க்கை தமிழுக்கும் தமிழர்க்கும் ஆகாது என்று அறிவுரைக் கொத்து எழுதியவர். ஆகவே தமிழையும் தமிழரையும் காத்திட வகுப்பு உணர்ச்சியின் அடிப்படையில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடும் நிலையை எதிர்த்தார். மாற்றினார் தம் திருமண முறையில்!
பார்ப்பானை மாற்றியவர் பார்ப்பனச் சடங்குகளை மாற்றவில்லையே, ஏன்? இந்தச் சடங்குகள் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத் தாக்கத்தைத் தமிழர் மத்தியில் இன்றளவும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதையும் தாங்கிச் சுமந்து கொண்டிருப்பதையும் தமிழ்த் திருமண ஆர்வலர்களும் இன்னும உணராமல் இருப்பது ஏன்? அச்சடங்குகளை உதறித் தள்ளாமல் இருப்பதும் ஏன்? ஆகாது என்று அடிகளார் கூறியதை அகற்றாமல் செய்து கொண்டிருப்பது ஏன்?
இவை என்ன ஆதியிலிருந்தே இடம் பெற்றவையா? இல்லையே! பாதியில் நுழைக்கப்பட்டவைதானே! இவை எங்ஙனம் தமிழ்முறை அல்லது தமிழர் முறை ஆகும்?
(தொடரும்)
Leave a Reply