இவ்விடம் அரசியல் பேசலாம்
எது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது
“வணக்கம் தோழரே!” என்றபடியே சந்தானத்தின் சலூன் கடைக்குள் நுழைந்தார் மகேந்திரன். “இப்போ கொஞ்ச நாளாகவே க்ளைமேட் ரொம்ப ரம்மியமா இருக்கு பார்த்திங்களா? குளிர்ந்த காற்றும் அடிக்கறதால வெயிலே தெரியல!” என்று மகேந்திரன் சொன்னதுமே தனது வழக்கமான சரவெடியை எடுத்துவிட்டார் சந்தானம்.
“ஆமா ஆமா! பூமி குளிர்ந்து இருந்தாலோ, ஊருக்குள்ள இருக்கறவங்க சந்தோஷமா இருந்தாலோ, சிலருக்கு மட்டும் புடிக்கவே புடிக்காதுங்கற மாதிரி இந்த பி.ஜே.பி. தலைவருங்க பண்ற அலும்பு தாங்கல பார்த்திங்களா?”
“அதுசரி, நாட்டுல யாருமே முடிவெட்ட மாட்டோம்னு முடிவெடுத்துட்டா நீங்க எப்படிக் கடை நடத்துவீங்க? அதேமாதிரி, நாட்டுல பிரச்சினையே இல்லைன்னா அவங்க எப்படிக் கட்சிய நடத்துவாங்க?”
“சைக்கிள் கேப்புல எனக்கே ஆப்பா?! நான் என்ன அந்த சூனா சாமி முஸ்லிம்களுக்-கெல்லாம் ஓட்டுரிமையே கொடுக்கக் கூடாதுன்னு சொன்ன மாதிரி குண்டக்க மண்டக்கவா பேசிட்டு இருக்கேன்?!”
“ஹஹஹ! சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன் தோழர்! அவங்களுக்கு மக்களிடம் பெயரெடுக்கணும்னு கட்டாயம் வந்தால் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்குவாங்க! தேவையில்லைன்னா உனக்கே ஓட்டுரிமை இல்லைன்னும் சொல்வாங்க! அதான அவங்க வழக்கமே!”
“ஆமா ஆமா, காதுல மாட்டுன இயர்போன்ல ஏ.ஆர்.ரஹ்மானோட லிங்கா பாட்டை ரசிச்சுக்கிட்டே முஸ்லிம்னாலே பிடிக்காதுன்னு சொல்வாங்க! சொல்வாங்க!”
“இதாவது பரவாயில்ல, இன்னொரு பக்கம் உத்தர பிரதேசத்து பி.ஜே.பி.க்காரங்க தாஜ்மஹாலை இடிக்கணும்னு சொல்லியிருக்-கறதைப் பார்த்திங்களா?
“அவங்க இப்படிச் சொன்னால் அது வெறும் அரசியல் செய்தி, அதேநேரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலைத் தகர்ப்போம்னு யாராவது சொன்னால் அதைத் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்னு சொல்வாங்க! தீவிரவாதத்துக்கே இன்னும் நம்மூரு அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் சரியான அர்த்தம் தெரியலைன்னுதான் தோனுது தோழரே!
“உண்மைதான் தோழர். அந்தம்மா சுஷ்மா ஸ்வராஜ், பகவத் கீதையை தேசியப் புனித நூலா அறிவிக்கணும்னு சொல்லியிருக்காங்க பார்த்திங்களா?”
“எப்பவும் பூணூலைத்தான் புனித நூல்னு சொல்வாங்க! இப்போ கொஞ்சம் மனசு மாறி, பகவத் கீதைன்னு வந்திருக்காங்க போல!”
“அவங்க பகவத் கீதையைப் புனித நூலா கொண்டு வர்றாங்களோ இல்லையோ, கருநாடக பி.ஜே.பி. எம். எல். ஏ.க்கள் கிருஷ்ணலீலாவைப் புனித நூலா கொண்டு வந்திடுவாங்க போல!”
“எந்த லீலையைச் சொல்றீங்க தோழர்?”
“அதான் சட்டசபைலயே செல்போன்ல ஆபாச கோணத்துல படம் பார்த்துக்கிட்டிருந்-தாங்கல்ல! அதைத்தான்!”
“ஆமா, ஆமா, நானும் கேள்விப்பட்டேன்! பகவத் கீதையைப் புனித நூலாக பி.ஜே.பி.க்காரங்-களுக்கு மட்டுமாவது அறிவிச்சு அவங்க சொல்ற அந்த கலாச்சாரத்தைக் காப்பாத்தச் சொல்லணும் முதலில்!”
“வேணும்னால் அந்த கீதாபதேசத்தை, “செல்போனில் எது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது; எது தெரிகிறதோ அது நன்றாகவே தெரிகிறது; எது தெரியுமோ அதுவும் நன்றாகவே தெரியும்,. இன்று இது யாருடைய ஆபாசப் படமோ, அது நாளை மற்றவருடையதாகி விடும்!”னு மாற்றி எழுதச் சொல்ல வேண்டியதுதான்!
“அதுசரி, இந்த பி.ஜே.பி.க்கார தலைகளோட ஒவ்வொரு நாள் அறிக்கையையும் பார்த்தால் சினிமாவுக்கு நடிக்கிறதுக்கு வாய்ப்புத் தேடிப் போறவங்க விதவிதமான ஆக்சன்ல நடிச்சுக் காட்டிப் பாராட்டு வாங்கத் துடிக்கிறதுதான் ஞாபகத்துக்கு வருது தோழர்!”
“அட, சினிமா பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கீங்களே!
“நானும் சினிமா வாய்ப்பெல்லாம் தேடிட்டு, ஒன்னும் செட்டாகாமல்தான் தோழர் இந்தக் கடையப் போட்டுட்டு உட்கார்ந்திட்டேன்! ரஜினி ரசிகர்கள், “அரசியலுக்கு ரஜினி வருவாரு வருவாரு”ன்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்குற மாதிரி என்னால எதிர்பார்த்துக்கிட்டு இருக்க முடியல தோழரே! குடும்பத்தைக் காப்பாத்தறதுதானே நம்மோட முதல் கடமை!
“ரொம்பச் சரி தோழர்! ரஜினியும் சரி, நரேந்திர மோடியும் சரி, மோடி மஸ்தான் வித்தையில ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை! ரெண்டு பேரையும் நம்பி ஏமாந்து போறதென்னவோ மக்கள்தான்!
“இதுக்கு முன்ன இருந்த மன்மோகனை செயல்படாத பிரதமர்னு சொன்னாங்க. அவரு அமைதியாக இருந்தாலும் மத்தவங்க இந்த அளவுக்கு ஆட்டம் போடல. அதிலும் ஆட்சிக்கு வந்த ஆறே மாசத்துல ஒவ்வொரு பி.ஜே.பி. தலைவருமே ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கும் பேட்டை ரவுடி ரேஞ்சுக்கும்ல பேசுறாங்க!”
“பேட்டை ரவுடின்னு நம்மூரு ராஜாவை மனசுல வச்சுத்தானே சொன்னிங்க?”
“பின்ன, எங்க ஏரியாப்பக்கம் வந்தேன்னா காலை உடைப்பேன், கையை உடைப்பேன், உயிரோட திரும்பிப் போக முடியாதுன்னுல்லாம் படத்துல ரவுடிங்கதானே பேசுவாங்க!”
“ஆமாங்க தோழர். லேட்டஸ்ட்டா ஆர். எஸ். எஸ். ஹிந்து மகா சபாங்கற தீவிரவாத அமைப்பிலிருந்து காந்தியைக் கொன்ற கோட்சேவைப் பாராட்டியதோட அடங்காமல் கோட்சேவுக்குச் சிலை வைகக்ணும்னும் சொல்லியிருக்காங்க பார்த்தீங்களா?”
“காந்தியை ஓரங்கட்டி படேலை முன்னணி தேசத் தந்தையா காட்டணும்னு பி.ஜே.பி. தலைமை முடிவு பண்ணினப்பவே இப்படியெல்லாம் ஆகும்னு தெரியும்! தலை எப்படியோ, அதே மாதிரி தானே வாலும் இருக்கும்?”
“நாட்டுல அவனவனுக்கு கக்கூஸ்கூட இல்லாம ஓரஞ்சாரம் போயிட்டுத் திரியிறாங்க. இவனுங்க என்னடான்னா கோட்சே சிலைக்கு மூவாயிரம் கோடி, நாலாயிரம் கோடின்னு வீம்புக்குச் செலவழிக்கிறானுங்க!”
“ஆமா, பொதுமக்களுக்கு எத்தனையோ அடிப்படை வசதிகளைச் செய்து முடிக்கத் தேவையான அரசுப் பணத்தை இப்படி வீணடிக்கிறாங்க! வயித்தெரிச்சலாத்தான் இருக்கு!”
“அவனுங்கதான் அப்படின்னா, நம்ம மாநில அரசோட நிலவரமோ இன்னும் கலவரமாத்தான் இருக்கு! மொத்த நிர்வாகமும் முடங்கிப் போயிருக்கு பார்த்திங்களா!”
“ஆமாம் தோழர்! அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கறிங்க! சென்ட்ரல் கவர்மெண்டு என்னடான்னா ஆதார் அட்டை வாங்கிட்டியா வாங்கிட்டியான்னு கேட்டு டார்ச்சர் பண்றானுங்க! ஸ்டேட் கவர்மெண்டு என்னடான்னா ரேஷன் அட்டையைக் கூட புதுசாத் தர மாட்டிங்கறானுங்க!”
“அதானே, ரேஷன் அட்டையே கிடைக்கலையாம்… இதுல ஆதார்னு உதார் வேற!”
“இதுல வருஷா வருஷம் அடிஷனல் சீட்டை மட்டும் சேர்த்துக்கறானுங்க!”
“ஒன்னு சொல்லட்டா? நானெல்லாம் படிக்கிற காலத்துல எக்ஸாமுக்குக் கூட அடிசனல் பேப்பர் வாங்கினதில்லை தோழர்! என்னைக்கூட அடிஷனல் சீட்டு வாங்க வச்சிட்டாங்க!”
“ஹஹஹஹ!”
– கல்வெட்டான்
Leave a Reply