இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை, எந்தவிதத் திருத்தமுமின்றி முழுமையாக வெளியிடப்படும் என்று அய்.நா. சபை அறிவித்துள்ளது.
சேமித்து வைத்த பெண்ணின் சினை முட்டையுடன் ஆணின் விந்தணுவை இணையச் செய்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை பிறக்க வைத்துள்ளார் சென்னை அய்ஸ்வர்யா பெண்கள் மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மய்ய மருத்துவர் சந்திரலேகா.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் ஜூன் 30 ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்றும் அரசு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சீனாவின் மக்கள் தொகை 2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 132 கோடியாகும். (2000ஆம் ஆண்டு- 127 கோடி)
உடற்பயிற்சி மய்யத்தில் இளைஞர்களின் வியர்வையைப் பயன்படுத்தி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆடம்போசெல் மின்சாரம் தயாரித்து வருகிறார்.
வெறிநாய்க் கடிக்கு ஆண்டுதோறும் 20,000 பேர் பலியாகின்றனர் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
செயற்கை மூளை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலைஸ் பர்க்கர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசின் முயற்சிகளால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வரதட்சணைக் கொடுமையால் நடக்கும் இறப்புகள் குறைந்து வருகின்றன.
இந்த மாதம் கனடா நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்டீவன் ஹார்ப்பர் தலைமையிலான பழைமைவாதக் கட்சி ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றது. இந்தத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத்தமிழரான ராதிகா சிற்சபேசன் (வயது 30) வெற்றி பெற்றுள்ளார். இவரே கனடா நாடாளுமன்றம் செல்லும் முதல் தமிழர் ஆவார்.