Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

விவேகானந்தர் – ஓர் எக்ஸ்ரே பார்வை

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் :

விவேகானந்தர் – ஓர் எக்ஸ்ரே பார்வை


நூல்: கடவுளின் கதை – பகுதி IV

ஆசிரியர்: அருணன்

வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்,
69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை – 625 001.
தொலைப்பேசி: 0452-2621997
பக்கங்கள்: 288
விலை: ரூ.200/-

நாடறிந்த முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களது கடவுளின் கதை மிக்ஷி _ என்ற அரிய ஆராய்ச்சி நூல் _ நான்காம் தொகுதி மற்ற மூன்று தொகுதிகளைப் போலவே மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டில் எப்படி மேற்கிலும் கிழக்கிலும் கடவுள் _ மதப் பரப்புகள் – புரட்டுகள் – திட்டமிட்டு நடைபெற்றன. எதிர் சிந்தனையாளர்களின் கருத்துப்போரும் அறிவாயுதங்களும் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல வாத ஆதாரங்களை முன்னிறுத்தி மிக சுவையான, ஆழமான, ஆய்வு நூலாக இந்நூல் – வழமைபோல் அமைந்துள்ளது!

விவேகானந்தர் இப்போது ஆர்.எஸ்.எஸுக்குக் கிடைத்த அருமையான மயக்க பிஸ்கட் ஆகும்.

படித்த நம்மில் பலரே இதில் மயங்கி வருகின்றனர்; அவர்களது மயக்கம் தெளிந்து சரியான புரிதல் பார்வையைப் பெற இந்த நூல் விவேகானந்தரை மிகவும் துல்லியமாக எக்ஸ்ரே எடுத்துப் புரியவைத்துள்ளது.

அவசியம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்இது.

பேச்சாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கையேடுபோல் பயன்படக் கூடும்.

– ஆசிரியர் கி.வீரமணி

அந்நூலின் ஒரு பகுதி:

கல்கத்தாவில் 1863இல் ஒரு பாரம்பரியமான காயஸ்தா குடும்பத்தில் பிறந்தார் நரேந்திரநாத் தத்தா. தந்தையார் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நரேந்திராவுக்கு பிரம்மோ சமாஜ இயக்கத்தில் பற்றுதல் ஏற்பட்டது. அதன் வருணாசிரம மறுப்பு, பிரம்மோ இறையியல் அந்த பிராமணரல்லாத மாணவரை  ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இதை ராமகிருஷ்ணரைப் பற்றிய பதிவுகளைத் தந்த மகேந்திரநாத் குப்தா இப்படியாகக் குறிப்பிட்டுள்ளார்: பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு வாலிபரைப் பார்த்து பல விஷயங்களை ஆனந்தமாகப் பேசினார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த வாலிபர் நரேந்திரா. அவர் கல்லூரி மாணவர்; சாதாரண பிரம்மோ சமாஜத்திற்கு அடிக்கடி செல்பவர்.

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை எழுதியுள்ள நிகிலானந்தாவும் இப்படிச் சித்தரித்துள்ளார்: நரேந்திரா நவீன உணர்வின் அடையாளமாக இருந்தார். பிரம்மோ சமாஜத்தின் விசுவாசமான உறுப்பினர் என்ற முறையில் இந்து மதத்தின் உருவ வழிபாடு மற்றும் இதர சடங்குகளை அவர் விமர்சித்து வந்தார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே குருமார்கள் தேவையில்லை என்று நினைத்தார். கடவுள்கள் மற்றும் தேவதைகள் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ணரின் தரிசனங்களை அவர் கேலி செய்தார், அவை பொய்த்தோற்றங்கள் என்றார்.

கேசவ சந்திரசென், விஜய் போன்ற பிரம்மோ சமாஜத் தலைவர்கள் ராமகிருஷ்ணரைச் சந்தித்து வந்தார்கள் என்பதைக் கண்டோம். அப்படிப்பட்ட சூழலில்தான் 1881 நவம்பரில் அவரை நரேந்திராவும் சந்தித்துப் பேசினார். அவரது ஆற்றலைச் சட்டென்று உணர்ந்து கொண்ட ராமகிருஷ்ணர் அவரைத் தனது ஆளுகைக்குள் கொண்டுவர முடிவு செய்தார்; குறிவைத்து வலை விரித்தார். தனது சீடர் (நரேந்திரா) சென்றிருந்த பிரம்மோ ஆலயத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருநாள் சென்றார். அவர் சென்றபோது நரேந்திரா மற்ற பிரம்மோக்களுடன் சேர்ந்து பாடிக்-கொண்டிருந்தார். நரேந்திராவின் குரலைக் கேட்டதும் ஸ்ரீராமகிருஷ்ணர் அருள் வந்தவராக ஆடினார். கூடியிருந்தவர்கள் பார்வையெல்லாம் அவர் மீது திரும்ப, அங்கே பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்று விவரித்துள்ளார் நிகிலானந்தா.

பிரம்மோ சமாஜக் கூட்டத்திற்கே சென்று நரேந்திராவை இப்படியாக அங்கிருந்து இழுத்துவரும் வேலையில் இறங்கினார். அப்படியும் நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணரின் வலையில் விழவில்லை. உலகம் மாயை, பிரம்மம் எனப்பட்ட கடவுள் ஒன்றே மெய்ப்பொருள் எனும் அத்வைதம் அவருக்கு இயல்பானதாகப் படவில்லை. பூங்காவில் உலவிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த இரும்புக் கம்பத்தில் தனது தலையைப் பலமுறை மோதி இந்த உலகம் மெய்யா அல்லது மனதின் மாயையா என்று சோதனை செய்தார் என்கிறார் நிகிலானந்தா. நிச்சயம் உலகம் மாயை அல்ல என்பதை நெற்றிப்-பொட்டின் வலி காட்டிக் கொடுத்திருக்கும்!

அப்படியும் முடிவில் நரேந்திரா ராமகிருஷ்ணரின் அத்வைதத்தையும், காளி வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டார் என்றால் அதற்குச் சிந்தாந்தக் காரணமும், வாழ்வியல் காரணமும் இருந்தன. அந்த 19 வயது இளைஞர், சந்திக்கிற பெரிய மனிதர்களிடம் எல்லாம் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டு வந்தார். பிரம்மோ சமாஜத்தின் தேவேந்திரநாத் தாகூரிடம் அப்படிக் கேட்டபோது அவர் பேச்சை மாற்றிவிட்டார்.

அதே கேள்வியை ராமகிருஷ்ணரிடம் கேட்டபோது அவர் தயங்காமல் சொன்னார்: ஆமாம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் பார்ப்பது போல, சொல்லப்-போனால் இதையும்விடத் தெளிவாக அவரைப் பார்க்கிறேன். கடவுளைப் பார்க்க முடியும், அவரோடு பேச முடியும். ஆனால் கடவுளைப் பார்க்க யார் பிரியப்படுகிறார்கள்? தங்களது மனைவி, குழந்தைகள், சொத்து ஆகியவற்றுக்குத்-தான் மனிதர்கள் குடம்குடமாகக் கண்ணீர் விடுகிறார்களே தவிர கடவுள் தரிசனத்திற்காக யார் அழுகிறார்கள்? கடவுளுக்காக ஒருவன் உண்மையில் கதறினால் நிச்சயம் அவரைக் காண்பான். இந்தப் பதிலைக் கேட்டு அசந்துபோனார் நரேந்திரா.

விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை என்று மரணத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பாமரர்களும் ஜாக்கிரதை-யாகவே பேசி வந்த இந்த நாட்டில் மகான்கள் எனப்பட்டோரே இப்படிச் சொல்லும் அசட்டுத் துணிச்சலைப் பெற்றிருந்தார்கள். கடவுள் எனும் கற்பிதத்தைக் கண்ணாரக் கண்டதாகச் சொன்னால் அதன் அர்த்தம் அந்தக் கற்பிதத்தின் மீது அவர்களுக்கிருந்த உறுதி-தானே தவிர புலனறிவால் ஒரு பவுதீக வஸ்துவைப் பார்த்த அர்த்தம் அல்ல என்று பின்னர் விளக்கினால் யாரால் மறுக்க முடியும்?

அந்தத் தைரியம்தான் அவர்களை இப்படிப் பேச வைத்தது. அது மட்டுமல்ல, உண்மையில் கதறினால் என்று ஓர் இக்கு வைத்திருப்-பதையும் கவனிக்க வேண்டும். கடவுளின் தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையென்று ஒரு பக்தன் புகார் கூறினால் இந்த நிபந்தனையை நினைவுபடுத்தியும் அவர்களால் சமாளிக்க முடியும். உண்மையில் என்பதற்கு யாரால் இலக்கணம் தர முடியும்? இப்போதும்கூட நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணர் பின்னால் சென்றுவிடவில்லை. அவருக்கும் பிரம்மோ சமாஜத்திற்கும் இடையே அல்லாடினார். அந்தச் சமயத்தில்தான் – 1884இல் – அவரது தந்தையார் அகால மரண-மடைய, அவரது குடும்பம் நடுத்தெருவில் நின்றது பணச்சிக்கலில்மாட்டி. அதில் திகைத்துப்போன நரேந்திரா தனது குடும்பத்திற்காகக் காளியைப் பிரார்த்திக்குமாறு வேண்டினார் ராமகிருஷ்ணரிடம். அவரோ மிகச் சாதுரியமாக அவரையே நேரடியாகப் பிரார்த்திக்கச் சொன்னார். நரேந்திரா துறவு வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் விரும்பினார். அப்படி-யெனில், தனது குடும்பத்திற்கு ஏதாவது செய்யுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் நரேந்திரா. காளியைப் பிரபஞ்சத்தின் தெய்வத் தாயாக ஏற்றுக் கொண்டவர், அவளின் பக்தராக மாறினார் என்று விளக்கியிருக்கிறார் நிகிலானந்தா. வாழ்வின் எதிர்பாராத துயரங்கள் மனிதர்களை கடவுள் நம்பிக்கை-யாளர்-களாக மாற்றுகின்றன என்றால், அத்தகைய துயரம் ஒன்று இங்கே ஒரு பிரம்மோவை உருவ வழிபாட்டாளராக மாற்றியது! இதற்குப் பிறகு பிரம்மோ சமாஜத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை நரேந்திரா. அந்த சமாஜத்திற்கு மூடுவிழா காணும் முயற்சியில் இப்படியும் வெற்றிபெற்றார் ராமகிருஷ்ணர்.

* * *

1889 இறுதியிலிருந்து நரேந்திராவும் அப்படியொரு பாரத யாத்திரையை மேற்கொண்டார்.

இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் இந்து சமஸ்தானங்களாகப் பார்த்து அவர் விஜயம் செய்தது, அவற்றின் ராஜாக்களைச் சந்தித்து அளவளாவியது. அவர்களில் பெரும்பாலோர் இந்துப் பழமைவாதிகளாக இருந்தார்கள்; இவரை அன்போடு உபசரித்து மகிழ்ந்தார்கள். மேற்கத்திய நவீனக் கல்விக்கு ஆட்பட்டு இந்துப் பழமைவாதத்தை சில ராஜாக்கள் விமர்சித்தபோது அவர்களைக் கண்டிக்கத் தவறவில்லை நரேந்திரா. அல்வார் மகாராஜாவை 1891 பிப்ரவரியில் சந்தித்தபோது அவர் உருவ வழிபாட்டைக் கேலி செய்ததை இவர் கேட்கவும் சகிக்கவில்லை. அவருக்குப் புத்தி புகட்டி அங்கிருந்து புறப்பட்டார்.

கத்தியவார் ராஜாதான் இவரை மேற்குலகிற்குப் பயணம் செய்யுமாறு முதலில் ஆலோசனை சொன்னவர். அத்தகைய ஆலோசனையை ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி மூலமும் கேட்டார் நரேந்திரா. அமெரிக்காவில் நடக்கவிருந்த மதங்களின் நாடாளுமன்றம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், அதற்கு நிதி உதவி செய்வதாகவும் அவர் கூறினார்.

கேத்ரி ராஜாவின் வேண்டுகோளின்படிதான் விவேகானந்தர் எனும் பெயரைச் சூட்டிக்-கொண்டார் நரேந்திரா. இதே ராஜா பட்டுக் காவி ஆடை, காவித் தலைப்பாகை, பெரிய பணமுடிப்பு, 1893 மே 31இல் கிளம்பவிருந்த எஸ்.எஸ்.பெனின்கலார் கப்பலில் ஒரு முதல் வகுப்பு டிக்கெட் என்று கொடுத்துதவினார் என்கிறார் நிகிலானந்தா. இந்த ராஜாக்களின் உதவி மட்டுமல்லாது இன்னும் மைசூர் மகாராஜா மற்றும் சமஸ்தானங்களது மந்திரிமார்களின் உதவியும் விவேகானந்தருக்கு இருந்தது என்கிறார் அவரே. ஆக, பாரதத்தின் பக்கா பழமைவாத நிலப்பிரபுத்துவ குறுநில மன்னர்களின் பிரதிநிதியாகத்தான் மனிதர் மேற்குலகிற்குப் பயணித்தார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவைக் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடித்ததன் நானூறாவது ஆண்டு விழாவை ஒட்டி அங்கே பலவித நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அப்படியொரு நிகழ்ச்சிதான் சிக்காகோ நகரில் நடந்த மதங்களின் நாடாளுமன்றம் எனும் கூட்டம். அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதில் பலரும் சீமான்களே! சீமாட்டிகளே! என்று விளித்துப் பேசியபோது விவேகானந்தர் சகோதரர்களே! சகோதரிகளே! என்று அழைத்துப் பேசியது இன்றளவும் பெரிதாகப் போற்றப்படுகிறது. ஆனால், அங்கே அவர் பேசிய பேச்சுகளைப் படித்துப் பார்த்தால் அப்படியொன்றும் சகோதரத்துவம் பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடியதாகத் தெரியவில்லை. அவருடைய கவலை எல்லாம் பாரதத்தில் நடந்து வந்த கிறிஸ்தவ மத மாற்றமே, அதைத் தடுக்க பிராமணிய இந்து மதத்தின் பெருமைகள் எனப்பட்டவற்றைப் பறைசாற்றுவதே. அந்தக் காரியத்தையே திறம்படச் செய்தார். அதனாலேயே அவரது அமெரிக்க விஜயத்தை அன்றும் இன்றும் இந்துப் பழமைவாதிகள் புகழ்ந்துரைக்கிறார்கள்.

செப்டம்பர் 20ஆம் தேதி அந்த நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சின் தலைப்பே இந்தியாவின் உடனடித் தேவை  மதம் அல்ல என்பதுதான். அதாவது கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றார். பேச்சைக் கேளுங்கள்: பரசமயத்தவரின் ஆன்மாவைக் காப்பாற்ற மிஷனரிகளை அனுப்புவதில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மிக ஆர்வத்தோடு இருக்கிறீர்கள். ஏன் நீங்கள் பசியிலிருந்து அவர்களது உடலைக் காப்பாற்ற முயற்சி செய்யக்கூடாது?

இந்தியாவில் கொடூரமான பஞ்சங்களின்போது பசியால் ஆயிரக்கணக்கானோர் மாண்டுபோகிறார்கள். அப்படியும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏதும் செய்வதில்லை. இந்தியா முழுக்க நீங்கள் தேவாலயங்களைக் கட்டுகிறீர்கள். ஆனால் இந்தியர்கள் ஏற்கெனவே போதுமான அளவுக்கு மதத்தைக் கொண்டிருக்கிறார்கள். எரியும் இந்தியாவின் கோடிக்கணக்கான வறியவர் தொண்டை வறளக் கத்துவது ரொட்டிக்காகத்தான்.

இந்தியாவில் பஞ்சம் நேர்ந்தபோது நிவாரணம் தந்தவர்கள், கஞ்சித் தொட்டி திறந்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளே என்பது வரலாற்று உண்மை.

இந்துமடாதிபதிகள் அப்படியெல்லாம் பஞ்ச நிவாரண வேலையில் இறங்கியதில்லை. பிராமணர்களுக்குப் போஜனம் செய்விப்பதே சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும் வழி என தர்ம சாஸ்திரங்கள் சொல்லியதை அட்சரம் பிசகாமல் பின்-பற்றினார்கள்.

அடித்தட்டு ஜாதியினர் பஞ்சத்தால் செத்தால் அது அவர்களது பூர்வஜென்ம வினை. அதில் தாங்கள் தலையிடக் கூடாது என்றிருந்தார்கள்.

அமெரிக்காவுக்குப் போன விவேகானந்தரோ கிறிஸ்தவ மிஷனரி-களின் பணிகளை அப்படியே மூடிமறைத்துப் பேசினார்.

ஓர் உண்மையை மட்டும் ஒப்புக்கொண்டார். இங்கே பஞ்சகாலத்தில் பாமரர்கள் பசியால் மாண்டார்கள் என்பதை. ஆனால் அப்போது அவரது பெருமைமிகு இந்து மதம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை மட்டும் சொல்லவில்லை. அந்த அந்நியர்களிடம் ரொட்டிக்காக இவரும் சேர்ந்து கையேந்த வேண்டிய நிலை ஏன் வந்தது என்றும் சொல்லவில்லை.

அவரது கவலை எல்லாம் அவரது சொந்த மதத்தை _ பசியால் வாடினாலும் கோடிக்கணக்கான இந்தியர்-களுக்குச் சோறு போடாத பிராமணிய மதத்தை _ கட்டிக் காப்பதுதான். அதைச் சரியவைக்கும் வேலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபடக்கூடாது என்றவர், மாற்று வழியாக ரொட்டி கொடுக்கும் வேலையைச் செய்யச் சொன்னார்! ஆதாயம் இல்லாமல் யாரேனும் உபகாரம் செய்வார்களோ அடுத்த நாட்டவருக்கு என்பதையும் மறந்தார்!
தனது சொந்த மதம் தனது சொந்த மக்களுக்குச் சோறு போடவில்லை என்பதை நாசூக்காக மறைத்துவிட்டு அதன் பெருமை-களை எடுத்தோத ஆரம்பித்தார் அமெரிக்கர்-களுக்கு.சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எதன் எதிரொலியாக இருக்கின்றனவோ அந்த உயர் ஆன்மிகமாகிய வேதாந்தத் தத்துவம் முதல் பலவித புராணங்களைக் கொண்ட தாழ்நிலையான உருவ வழிபாடு வரை, பவுத்தர்களின் அறியொணாவாதமும் சமணர்-களின் நாத்திகமும் என்று சகலமும் இந்து மதத்தில் இடம் பெற்றுள்ளன என்று ஒரு போடு போட்டார். நவீன விஞ்ஞானங்கள் எல்லாம் தங்கள் வேதங்களில் இருப்பதாக மார்தட்டுகிற இந்துப் பழமைவாதிகள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் முன்னோடி விவேகானந்தர். எல்லாம் வேதங்களில் உள்ளன என்றால் ஏன் நீராவிச் சக்தியையும், அதில் இயங்கும் இயந்திரங்களையும், அதில் ஓடும் ரயிலையும் இந்து அறிவுஜீவிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதை மட்டும் அவரும் விளக்கவில்லை, அவருக்குப் பின்பு வந்தவர்களும் விளக்கவில்லை. மற்றொரு பொய்யுரை பவுத்தமும் சமணமும் இந்து மதத்தின் அங்கங்கள் என்று அவர் பேசியது. அவற்றை ஒழித்துக்கட்ட ஆதிசங்கரர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்ததை, முதன்முதலில் நானாதிசைகளிலும் மடங்கள் அமைத்து ஆள் திரட்டியதைத் திட்டமிட்டு மறைத்தார். இன்றளவும் பவுத்தமும், சமணமும் உலகில் தனித்தனி மதங்களாகத்தான் இயங்குகின்றன எனும் நடப்பு யதார்த்தத்தைக்-கூட கணக்கில் கொள்ளவில்லை மனிதர்.

இந்து மதம் ஜாதியை ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது எனும் விஷயம் அமெரிக்கா வரை போயிருந்தது. அந்த உண்மையை ஒப்புக்கொண்டு பேசவில்லை விவேகானந்தர். மாறாக முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தார். காணுங்கள் அதை: இந்துக்களின் மதம் இரு பகுதிகளைக் கொண்டது.

அவை: 1. சடங்குப் பூர்வமானது. 2. ஆன்மிகப் பூர்வமானது.

பிந்தியதைத் துறவிகள் சிறப்பாக ஆராய்கிறார்கள். அங்கே ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும், மிகத் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும் இந்தியாவில் துறவியாகலாம்; இரண்டு ஜாதிகளும் சமமாக மாறுகின்றன. மதத்தில் ஜாதி இல்லை; ஜாதி என்பது ஒரு சமூக நிறுவனமே. (செப்.26இல் நிகழ்த்திய உரை)

– மேலும் அறிய, புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!