யார் இந்த “மண்ணுருண்டை மாளவியா?”

ஜனவரி 01-15

இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடியரசு நாளான ஜனவரி 26இல்தான் – முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.

ஆனால் இம்முறை – பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற _ மனிதநேய அடிப்படையில் _ வாழ்த்துகிறோம் – அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).

அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி _ பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் _- வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி).

இன்றைய தலைமுறையினரில் பலருக்கு பண்டித மதன் மோகன் மாளவியா யார் என்றே தெரிந்திருக்காது. தெரிய வாய்ப்பில்லை.

இவரது 152ஆவது பிறந்த நாளையொட்டி இவருக்கு மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேரன் கூறுகிறார்!
19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவருக்கு 21ஆம் நூற்றாண்டில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

இவர் ஹிந்து மஹாசபா என்ற சனாதன மதத்தைப் பரப்ப, பாதுகாக்கவே ஒரு அமைப்பை 1915இல் நிறுவியவர்.

RSS என்ற அமைப்புக்கு முன்னோடி இந்த ஹிந்து மகாசபை _- அதன் பெயர் பச்சையாக, வெளிப்படையாகத் தெரிவதை மறைத்து, ஏதோ சேவைக்காகவே தோற்றுவிக்கப்பட்ட தேசிய அமைப்பு என்ற ஒரு உருமாற்றத்தை புனே சித்பவன் -பிரிவு பார்ப்பனர் டாக்டர் ஹெட்கேவாரால், ஹிந்து மஹாசபை தோற்றுவிக்கப்-பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு _ 1925இல் ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கப்பட்டது. அதே நோக்கத்தோடு!

பண்டித மதன்மோகன் மாளவியா என்ற ஹிந்து சனாதனி _- கீழ்க்கண்ட அமைப்பு-களுடன் அதிக தொடர்பு கொண்டவர்.

அ) பிரக்ய ஹிந்து சமாஜ்.

ஆ) பாரத் தர்ம மகாமண்டல்.

இ) சனாதன தர்ம மஹாசபா போன்ற மத அமைப்புகளுடன் இணைந்து, வேத வைதிக சனாதனத்தைப் புகுத்துவதை தமது வாழ்நாள் பணியாகச் செய்தவர்.

இவரது சனாதன உணர்வு எவ்வளவு தீவிரம் என்றால் இவர் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் (1930) கலந்து கொள்ளச் சென்ற போது, ஓர் சனாதன ஹிந்து – கடல் கடக்கக் கூடாது என்ற வேத அய்தீகத்திற்கு மாற்று கண்டுபிடித்து (!) _- ஒரு பிடிமண்ணை எடுத்து உருண்டையாக்கி, அதை எடுத்துக் கொண்டே சென்று வெளிநாட்டில் தங்கினால், சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்று வியாக்கியானம்  கூறிக் கொண்டு, கப்பலில் மண் உருண்டையுடன் சென்றவர். எனவே இவரை அக்காலத்தில் மேடைகளில் பேசும்போது மண்ணுருண்டை மாளவியா என்று அழைப்பது வழக்கம்.

(பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது மாளவியாவைப் பின்பற்றுவதில்லை!)
இந்நாட்டின் பாரத ரத்னமாகிய (?) இவரின் மிகப் பெரிய சாதனை _- காசி ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியது.

பல்கலைக்கழகம் நிறுவியது எல்லோருக்கும் கல்வி தர என்றால், அதற்கு ஏன் ஹிந்து பல்கலைக்கழகம் என்று பெயர் இட வேண்டும்? இதன் விளைவாக அதே உ.பி.யில் அலிகார் என்ற இடத்தில் இஸ்லாமியர்களுக்காகப்  பல்கலைக்கழகம் ஒன்றும் ஏற்பட்டது!

நம் மக்களின் ஒருமைப்பாடு பட்டபாடு இது! கல்விகூட மதக் கண்ணோட்டத்துடன் என்பதே இந்த நாட்டின் தனிச் சிறப்பு!

ஹிந்து மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான சனாதன தர்மத்தின் முக்கியக் கூறான வர்ணாஸ்ரம தர்மம் அதாவது ஜாதி அமைப்பு ஒழியக் கூடாது; நிலைத்து நிற்க வேண்டும் என்று 1929 மே முதல் வாரத்தில் சென்னைக்கு வந்தும், அதன்பின் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளிலும் சென்று தீவிரமான சனாதனக் கருத்துகளைப் பரப்பியவர்.

சென்னையில் 1929 மே முதல் வாரத்தில் வந்து பேசிய பண்டித மதன்மோகன் மாளவியா. ஜாதியை ஒரு போதும் ஒழிக்க முடியாது என்றார்!

1. ஜாதி தர்மம் என்பது ஹிந்து தர்மம் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையிலேயே கூறும் தர்மம்!

2. தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கம், இந்த வேண்டாத வேலையில் -_ ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகிறது; அதனை முளையிலேயே இங்குள்ளவர்கள் கிள்ளி எறிய வேண்டும்.
(இன்று சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள 89 ஆண்டு கால இயக்கம் என்பது கல் போன்ற உண்மை).

3. கோவில்களில் எல்லா  இடங்களிலும் நுழைய வேண்டும் என்று கூறுவது தவறு, எதனால் பிரச்சினைகளும், போராட்டங்களும் ஏற்படுகின்றன என்றால், யார் யார் (எந்தெந்த ஜாதிக்காரர்) எங்கெங்கே, எதுவரை செல்லலாம் என்று நன்கு விளம்பரப்படுத்தி, அறிவிப்புச் செய்யாததாலேயே ஏற்பட்ட தீய விளைவு அது என்று கூறி, ஜாதிமுறைகளை நியாயப்-படுத்தினார்.

4. குழந்தை மணம் (பால்ய விவாஹம்) தடை பற்றி விவாதம் எழுந்தபோது, குழந்தை மணம் தேவை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறி வாதாடியவர் பண்டித மதன்மோகன் மாளவியா.

இவரை 1929 மே முதல் வாரம் (8.5.1929) கோட்டயத்தில் நடந்த S.N.D.P. யோகம் என்ற சிறீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையார் நடத்திய மாநாட்டிற்கு அழைத்துப் பேசச் சொன்னபோது, அவர் ஜாதியை ஒழிக்க முடியாது; அது வீண் வேலை, தீண்டாமைக்கு ஹிந்து சாஸ்திரங்களில் இடமில்லை என்று கூறியதோடு, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்-களையும் தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்ப சுத்தி மூலம் அழைத்து வர வேண்டும்; வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசியபோது அங்கே கூடியிருந்தோர் பொறுமை இழந்து, எதிர்க் கேள்வி கேட்டனர்!

அவர்கள் ஹிந்து மதத்திற்குத் திரும்பினால் எந்த ஜாதியில் அவர்கள் வைக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் கேட்டபோது, மாளவியா பதில் அளிப்பதைத் தவிர்த்தார்! கீதை சொல்லும் குணகர்மப்படி சிறந்தவர்களை உயர் ஜாதியில்  வைப்பார்களா என்று கேட்டனர்.

வைதீக சனாதனிகளும் இவரது குறிப்பிட்ட அளவு தீண்டாமை எதிர்ப்புப் பேச்சைக்கூட ஏற்காமல், எதிர்த்தனர்.

சென்னையில் திரும்பி வந்துபேசும் போது, மதராஸ் சாஸ்திரிகள் ஆன பார்ப்பனர்-களிடம் வேதத்தில் தீண்டாமைக்கான சுலோகங்கள் இல்லை என்று கூறி மாளவியா சில சுலோகங்களையும் கூறினார். மதராஸ் சாஸ்திரிகளோ அதை மறுத்து எங்களிடம் ஆதாரம் உண்டு. வேதம் சனாதன மதம் தீண்டாமையைக் கூறியுள்ளது என்று பதில் கூறினர்.

ஆதாரம் காட்ட  முடியுமா உங்களால் என்று இந்தப் பார்ப்பனர்களை அவர் கேட்க, அவர்கள் அச்சிட்ட சமஸ்கிருத வேத சாஸ்திர புத்தகங்களைக் கொண்டு வந்து காட்ட, இவர் வேறு வழியின்றி, அடுத்து எப்படியிருந்தாலும் இப்படிப்பட்ட மக்களிடம் பரிதாபம் காட்ட வேண்டாமா? என்று அய்யோபாவம் ஆர்கியுமெண்டைப் பேசி, பின்வாங்கினார்.

5. சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்கு வதற்குப் பதிலாக ஹிந்தியைப் பொது மொழியாக வைக்க வேண்டும் என்று (ஒரு தந்திரமாக) பேசியவர்.

மேற்காட்டிய அத்துணையும் அந்தக் கால 1929 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளன _- குடிஅரசு -”Revolt’ ஏடுகளில் இவரது பேச்சுகளையும் -_ கருத்துகளையும் மறுத்து பல கட்டுரைகள் வெளிவந்து விளாசித் தள்ளியுள்ளனர் _ ஆதாரப்பூர்வமாக! உ.பி.யைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதியே இன்று அவரது கருத்தாக (இணையத்தில்) வாஜ்பேயிக்கும், மதன்மோகன் மாளவியாவுக்கும் பாரத ரத்னா; விருது அறிவித்தது எவ்வகையிலும் ஏற்கக்கூடியது அல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்!
எனவே,

1. இரு விருதுகளும், இரு பார்ப்பனப் பெரு மக்களுக்கு,

2. ஜாதி வர்ண தர்மக் காப்பாளர்களுக்கு,

3. சனாதனப் பாதுகாவலர்களுக்கு,

4. மக்களின் ஒருமைப்பாட்டை உடைத்து – மத அடிப்படையில், ஜாதி அடிப்படையில், அவர்களை வைத்திருப்பது நீடித்து நிலைத்து இருப்பதற்கு.

5. மதமாற்றங்களுக்கு முன்னோடித்தனத்தின் சன்மானம் – இத்தியாதி! இத்தியாதி.

காந்தியைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.-காரரான நாதுராம் கோட்சே என்றால், கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல, அவர் இந்து மஹா சபையைச் சேர்ந்தவர் என்று வெகு சாமர்த்தியமாக பிஜேபிகாரர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கூறுவதுண்டு.

அப்படியே பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த ஹிந்து மஹா சபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? படுகொலைக்குப் பரிசு பாரத ரத்னாவா?

மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆறு மாத நிறைவு எத்தனை சாதனைகளைக் குவிக்கிறது –  பார்த்தீர்களா? _ புரிந்து கொள்ளுங்கள்!

இளைஞர்களே, இளைய தலைமுறையாக பழைய வரலாற்றுச் சுவடுகளை உற்று நோக்கி உண்மையை உணருங்கள்!

ஏமாந்தவர்களாக இனியும் இரோம் என்று விழிப்புற்று எழுக! எழுகவே!!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *