காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் சுரேஷ் கல்மாடியை ஏப்ரல் 25 அன்று கைது செய்தனர்.
குற்றம் செய்ததற்காக விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்துக்குப் பிறகும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்குத் தடையை ஏற்படுத்தும் விதத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் சட்ட விரோதமானவை என்று ஏப்ரல் 27 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
திபெத் அரசின் புதிய பிரதமராக லாப்சங் சாங்கே ஏப்ரல் 27 இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லிபியத் தலைவர் கடாபியின் குடியிருப்பின்மீது நேட்டோ விமானப் படைகள் ஏப்ரல் 30 அன்று குண்டுவீசித் தாக்கியதில் அவரது இளைய மகன் சயீப் அல் அரப், மற்றும் மூன்று பேரக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பதவிக்காலம் ஏப்ரல் 31 அன்று முடிவடைந்து மீண்டும் மே 1 இல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சர்வதேசப் பயங்கரவாதியும், அல்கொய்தா இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் மே 2 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
அருணாசலப் பிரதேச முதல் அமைச்சர் டோர்ஜி காண்டு ஏப்ரல் 30 அன்று தவாங் நகரிலிருந்து இடா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது புறப்பட்ட 20 நிமிடங்களில் காணாமல் போய் மே 4 அன்று அவரது சிதைந்த உடல் லோத்தால் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது மறைவையடுத்து இம்மாநில மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஜர்பம் காம்லின் மே 5 அன்று அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 அன்று வெளியாகின. ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி 1190 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தையும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேல்முருகன் என்ற மாணவர் 1186 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவிகிதம் 85.9.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை இடைக்காலத் தடை செய்து மே 9 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.