”கட்டாயம் நான் புத்தந்தான்”

டிசம்பர் 16-31

அய்யாவுக்கு புத்தரை மிகவும் பிடிக்கும். ஏனெனில் கௌதம புத்தர் மனிதர்களிடம் நீயே உன் விளக்கு என்றார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மகாபோதி சங்க மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தபோது ஆசிரியர் அவர்கள் அய்யாவை புத்தர் என்றார்.

வீரமணி என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நான் புத்தர்தான் என்றார் அய்யா.

புத்தரைப் பற்றி அய்யா கூறியது வருமாறு:

புத்தியை, அதாவது அறிவை உடையவன் புத்தன். அதேதான் சித்தன் என்பதும்.  அறிவைப் பயன்படுத்தச் சித்தத்தை உறுதியுடன் அடக்கிக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துகிறவன் சித்தன்.

புத்தியை முக்கியமாகக் கொண்டது பவுத்தம்….. நான் மாத்திரம் அல்ல; புத்தியை உபயோகப்படுத்துகிற எல்லோரும் புத்தர்கள்தாம். இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுள் இல்லையென்பவன் என்றாக்கி விட்டார்கள். தர்க்க ரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன். ….. அப்படி புத்தியை உபயோகப்படுத்துகிறவன்தான் புத்தன். … … அபிதான சிந்தாமணி, என்சைக்ளோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் புத்தியைக் கொண்டு _ அறிவைக் கொண்டு பார்ப்பவர்கள், குருட்டுத்தனமாக நம்பாதவர்கள் என்றே பொருள் கூறியிருக்கிறார்கள். – பெரியார் புத்தநெறி ப.6

இன்று நீ பெரிய புத்தனா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்கிறோம். மௌனமாக, அடுத்தவர் கொடுக்கும் அடியைப் பெற்றுக்கொண்டு நியாயப்படித் தேவைப்படினும் எதிர்க்காமல் நிற்பவன் என்ற அளவில் மக்கள் _ புத்தரைப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையே அக்கேள்வி காட்டுகிறது.

ஆனால் புத்தர், தமது வாழ்வின் இறுதி நிமிடங்கள் நெருங்கியபோதும் தம் தலைமைச் சீடரான ஆனந்தரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: நீயே உன் தீவு; நீயே உன் விளக்கு. உனக்கு வழங்கப்பட்டுள்ள தம்மத்தை (பௌத்தக் கொள்கைகளை) அறிந்து தம் வாழ்வில் ஒருவர் தானே புரிதலுடன் ஒளியேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். நான்தான் தலைவர், என் வாய்மொழியை அப்படியே ஏற்றுக்கொள், அதன்படி நட என்று கூறவில்லை.

அய்யாவும் அப்படித்தான். உலகில் தாம் கண்டது, கேட்டது அனைத்தையும் பகுத்தறிவுடன் அலசி ஆய்ந்து அவற்றின் நன்மை தீமைகளைத் தயங்காமல் சுட்டி, சுயமரியாதை நிறைந்த சமுதாய நீதியுடன் கூடிய வாழ்க்கையை மனித சமுதாயம் பெற தேவை ஏற்பட்டபோதெல்லாம் போராடினார்.

இடையில் பௌத்த மடாலயங்களில் சடங்குகள் புகுந்ததை ஏற்றுக் கொள்ளாவிடினும் புத்தர் மீது அவர் வைத்த மரியாதை இறுதிவரை நிலைத்தது. 19.12.1973 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சிந்தனையாளர் மன்றக் கூட்டத்தில் அய்யா தன் வாழ்வின் இறுதி உரையை (மரண சாசனம்) ஆற்றினார். அவ்வுரையிலும், நம்பிவிடாதீர்கள் _ சிந்தியுங்கள் என்றான் புத்தன் என்று சுட்டிக் காட்டுகிறார். மேலும், புத்தர் கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், மனிதனைப் பற்றிக் கவலைப்படு என்றார். ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். முக்கியமாக அறிவுதான் இன்றியமையாதது என்றுரைத்தார். யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொன்னதால் அவரை தாம் மகிழ்வுடன் ஏற்றுக்  கொள்வதாகக் கூறினார் அய்யா.

– பேராசிரியர் முனைவர்
இரா.பே.வே.இசையமுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *