ஆசிரியர் பதில்கள்
கேள்வி : அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்பப் பெறப்பட்ட 2 லட்சம் விண்ணப்பதாரர்களை ஏமாற்றி பல லட்சங்கள் பெறும் முயற்சியில் ஆளும் கட்சியினர் மேற்கொண்டிருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறதே? – நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்
பதில் : இதுபற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னமும் சரியாக ஏற்பட-வில்லையே என்செய்வது? பாதிக்கப்-பட்டவர்களோ அவர்களுக்காக பொது-நலவாதிகளோ உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்; அரசு ஊழியர் தேர்வை – தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்த வேண்டும்; இடஒதுக்கீடும் பாதுகாக்க அதன்மூலம் வழி ஏற்படக்கூடும்.
கேள்வி : எண்பத்து இரண்டிலும், இருபத்து எட்டுப் போல் இருக்கும் தங்கள் எழிலின் ரகசியம் என்ன? அதன் மகத்துவத்தை உங்கள் வாசகருக்காகக் கொஞ்சம் கூறுங்களேன்?
– தி.பொ.ச., திட்டக்குடி
பதில் : நான் முகமனுக்கு ஏமாறுபவன் அல்ல. ஆனபடியால் இப்படி என்னை ஏமாற்ற முயற்சிக்கலாமா? இல்லை என்பது உங்கள் பதில் ஆனால்… என் பதில், செய்யும் பணியில் முழு ஈடுபாடு கொண்டு உழைப்பது காரணமாக ஒருவேளை இருக்கக் கூடும்; இரண்டு, வயது ஏறிவிட்டது என்ற நினைப்பே எனக்கு வருவதில்லை! தோழர்கள்தான் நினைவூட்டுகின்றனர்.
கேள்வி : அரியானா மாநில அரசு ரூ. 15.43 கோடி, பஞ்சாப் மாநில அரசு ரூ. 4.34 கோடி, சண்டிகர் மாவட்ட நிருவாகம் ரூ. 3.29 கோடி, மத்திய அரசு ரூ. 3.55 கோடி என மொத்தம் ரூ. 26 கோடி செலவிட்டு அடாவடி சாமியார் ராம்பாலைக் கைது செய்துள்ளதாக பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தில் அரியானா மாநில காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளதே? – மன்னை சித்து, மன்னார்குடி
பதில் : 66 ஆண்டுகால இந்திய சுதந்திரத்தின் ஈடு இணையற்ற பெருமை இது!
கேள்வி : மக்கள் முதல்வர் என முனைந்து முன்னிறுத்தப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்படி (சட்டத்தின் இரட்டைப் பார்வையால்) குற்றமற்றவராக விடுதலை ஆவார் என எதிர்பார்க்கலாமா? – வே.சொர்ணம், ஊற்றங்கரை
பதில் : இந்த நாட்டில் எதுவும் நடக்கும். எனவே எதிர்பார்க்கலாம்.
கேள்வி : இந்தியாவில் மட்டுமே பிறப்பில் பேதங்கள் காணப்படும் கொடுமைபற்றி வெகுண்டு சண்டமாருதமாய்ச் சாடுகிறாரே பிகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி அவர்கள்…? – க.முல்லைவேந்தன், சேலம்
பதில் : எருதின் புண் வலி எருதுக்குத் தானே தெரியும். அண்மையில் ஒரு கோவிலுக்குச் சென்று அவர் பட்ட வேதனையை அவரின்றி வேறு யார் அறிவார். அதன் எதிரொலி இது!
கேள்வி : வருகிற சிறீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா தி.மு.க. தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்குச் செல்லலாம் என ஒரு சிலர் கூறுகிறார்களே… தீர்ப்புப்படி அது சரியா? தவறா?
– சுமதி சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : தீர்ப்பின்படி அவர்தான் தேர்தலில் நிற்க முடியாதே தவிர, பிரச்சாரம் செய்ய சட்டப்படி அவருக்குத் தடையேதும் கிடையாது; போட்டியிடும் எதிர்க்கட்சிகளுக்குத் தீனி கிடைக்கும்!
கேள்வி : உலகின் உயரிய தொன்மை மொழிகளில் ஒன்றான செம்மொழியாம் நம் தமிழ் மொழி, தமிழகத்தின் அரியாசனத்தில் அமராமல் போனதற்கு யார் காரணம்? நீதிமன்றங்களில் தமிழ் வலம் வரும் நாள் எந்நாள்? அனைத்துப் பெயர்ப் பலகைகளிலும் தமிழ் முதலிடம் பெறுவது எப்போது? – அ.கன்னியப்பன், வேலூர்
பதில் : ஆண்டவர்களும், ஆளுபவர்களும் அதுபற்றி போதிய விழிப்புணர்வு காட்டாத நிலையில் நாமும் _ அனைவருமே காரணம் (அ) நம் மக்களுக்குப் போதிய அறிவு வரும்போது!
கேள்வி : மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் சுற்றுலா நடத்துவோர் பெரும்பாலும் ஆன்மீகத் தொடர்புடைய இடங்களை உள்ளடக்கியே பிரயாணங்களை நிர்ணயிக்கும் போக்கு வளர்ந்து வருகிறதே? – பி.குணசேகரன், களியக்காவிளை
பதில் : பக்தி வியாபாரம் பலன் தரும் லாபத்தொழில் என்பதால்தான்!
கேள்வி : திருவள்ளுவர் தினத்தை நாடு முழுக்கக் கொண்டாடுவோம் என பி.ஜே.பி. அரசு அறிவித்துள்ளதே? தருண் விஜய் முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதானே இது?
– வெ.கனியமுது, திருச்செந்தூர்
பதில் : அவருக்கு நல்ல விளம்பரம் _ வெற்றிதான். பொறுத்திருந்து பார்த்து, விளைவுகளுக்குப் பின் முழுமையாகப் பாராட்டுவோமாக!
கேள்வி : திருவள்ளுவர் தினம் தை மாதம் பொங்கலுக்கு அடுத்து வரும் நாளா? வைகாசி விசாகமா என்ற சந்தேகத்தை மத்திய அரசு தீர்க்க வேண்டுமென்று சிலர் கேட்கத் தொடங்கியுள்ளார்களே? – பா.தர்மராசு, திருப்பரங்குன்றம்
பதில் : குறுக்குசால் ஓட்டாவிட்டால் ஆரிய நச்சரவுகளுக்கும் அதன் அடிமைகளுக்கும் தூக்கம் வராதே. ஒரு மாநில அரசு நீண்ட காலம் கடைப்பிடித்து வருவதை – அதுவும் தமிழ்நாடு அரசு _ அதை அப்படியே பின்பற்றுவதுதானே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
கேள்வி : இப்படி ஒரு உலகம் சுற்றும் பிரதமரை இதுவரை நீங்கள் கண்டதுண்டா?
– த.பொற்கொடி, பாலையம்பட்டி
பதில் : உலகம் சுற்றும் பிரதமர் என்ற பெருமை படைத்தவரின் பல்வேறு முழக்கங்கள், நடைமுறை இரட்டைத்தனங்களை நினைத்தால் எவருக்கும் தலைசுற்ற வேண்டுமே!
கேள்வி : நீங்கள் ராமனுக்குப் பிறந்தீர்களா இல்லை முறை தவறிப் பிறந்தீர்களா? என்று ஒரு மத்திய அமைச்சரே பேசியிருப்பது இந்நாட்டிற்கு உகந்ததா?
– ச.தாமரைச்செல்வன், மன்னார்குடி
பதில் : அப்படியென்ன அந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகப் பெண்மணி கேட்டுவிட்டார்? மகாபாரதக் கலாச்சாரத்தைத்தானே வேறுமுறையில் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். அவாள் கலாச்சாரம் மகாபாரதக் கலாச்சாரம்தானே!
இராமாயணத்தில்கூட இராமனுக்கே ஒரு சந்தேகம் தோன்றித்தானே நிறைமாத கர்ப்பிணியான சீதையைகாட்டுக்கனுப்பி பிரசவிக்கச் செய்தான் _ எனவே அந்தக் கதைதான் பாரதக் கலாச்சார பிரதிபலிப்பு. அட வெட்கம்கெட்ட மூளையே!
கேள்வி : 2014ஆம் ஆண்டின் மிக முக்கிய நிகழ்வுகளாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
– இரா. செந்தூர்பாண்டியன், நாமக்கல்
பதில் : காங்கிரசின் மீது ஏற்பட்ட வெறுப்பால் மதவாதக் கொள்ளிக் கட்டையை எடுத்து இந்திய வாக்காளர்கள் தலையைச் சொரிந்து கொண்டுள்ள தேர்தல் முடிவுகளே மிக முக்கியம்.
கேள்வி : சமையல் எரிவாயு மானிய விலையில் பெற வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் அவசியம் எனவும், மானியம் இல்லாமல் பெற்றுக்கொண்டு மானியத் தொகையை வங்கியில் செலுத்தும் திட்டம் படிக்காதவர்களை ஏழைகளைப் பாதிக்காதா?
– நி.கார்த்திகேயன், வில்லிவாக்கம்
பதில் : நிச்சயம் பாதிக்கும். எனவே இம்முறை ஏழை, எளிய பாமரர்களுக்கு உகந்த முறை அல்ல. சுற்றிவளைத்து மூக்கைத் தொடலாமா?