இப்படி ஓர் அமைச்சர்!!

டிசம்பர் 16-31

கர்நாடக சட்ட மன்றத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற உழைப்பவர்களுள் முக்கியமானவர் அம்மாநில அரசின் எக்ஸைஸ் அமைச்-சரான சதீஷ் ஜார்கிகோலி. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு தனது மூட நம்பிக்கைப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக பேய்கள் உலவும் இடமாய் கருதப்படும் பெலகாவியில் உள்ள வைகுந்தம் எனும் சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை உண்டதுடன், சுடுகாட்டிலேயே இரவு முழுவதும் தூங்கினார்.

இது குறித்து அமைச்சர் சதீஷ் கூறுகையில், முதல் முறையாக நான் சுடுகாட்டில் இரவு முழுவதையும் கழித்துள்ளேன். முதலில், சுடுகாட்டில் பேய்கள் தங்கியிருந்து, நடமாடும் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன். இரண்டாவது, சுடுகாட்டைப் பற்றிய அச்சத்தை மக்களிடமிருந்து போக்க விரும்புகிறேன். உண்மையில், சுடுகாடுகள் புனிதமான இடங்களாகும்.

என்னுடைய பதவியே போனாலும், மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். லட்சுமியை பில்கேட்ஸ் வணங்கவில்லை. ஆனால், அவர்தான் உலக பணக்காரர்களுள் ஒருவராக உள்ளார்.

நான்கூட லட்சுமியை வணங்குவது கிடையாது. ஆனால், எனது வணிகத்தில் ரூ. 600 கோடிவரை எனக்கு பணம் புரள்கிறது என்று  அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.

பெலகாவி நகராட்சியின் கீழ் வரும் வைகுந்தம் எனும் சுடுகாட்டில் அமைச்சர் இந்தக் “காரியத்தை” வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

ஓட்டினை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் அரசியல் சூழலில் இது போன்று பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கதியில் மக்கள் பிரதிநிதிகள் இறங்குவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

– இளங்கோவன் பாலகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *