நாட்டில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் மனிதவளத் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணியிடம் இருக்கும் போது அவர் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கையை நீட்டி நான் டில்லிக்கு முதல்வர் ஆகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகருக்கு அருகில் உள்ள பில்வாடா என்ற ஊரில் 23.11.2014 அன்று மனிதவளத்துறை அமைச்சர் அவரது ஆஸ்தான ஜோதிடரான நதுலால் வியாஸைச் சந்தித்தார். அப்போது அவர் ஜோதிடரிடம், நான் உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பு உங்களைச் சந்தித்த போது எனது ராசிபலனின்படி நீ கேபினட் அமைச்சராவாய் என்று கூறினீர்கள். நீங்கள் கூறியது போலவே நான் தற்போது அமைச்சராகிவிட்டேன். விரைவில் டில்லி மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு என்னை முதல்வராக்க மோடி விருப்பம் தெரிவித்திருக்கிறார். தற்போது எனது ஜாதகப்படி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறுமா, நான் டில்லிக்கு முதல்வராகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட நந்துலால் வியாஸ், உடனே கையில் சிலேட்டை எடுத்து ஸ்மிருதி இராணியின் ஜாதகத்தைக் கணிக்க ஆரம்பித்துவிட்டார். சுமார் அரைமணிநேரம் சிலேட்டில் கட்டங்களைப் போட்டு பல்வேறு கணக்குகளைப் பார்த்த வியாஸ் இறுதியாக ஸ்மிருதி இராணியின் நெற்றியில் திலகமிட்டார். அப்போது அவர் கூறியதாவது, நீண்ட காலமாக உனது ஜாதகத்தைக் கணித்து வருகிறேன். முதலிலேயே நீ மிகவும் உயர்ந்த பதவியை அடைவாய் என்று கூறியுள்ளேன். அதே போல் நீ கேபினெட் மந்திரியாகிவிட்டாய், உனது ஜாதகத்தில் உச்சம்தான் உள்ளது. உனது அரசியல் வாழ்க்கையில் இனி உனக்கு எதிரி என்று யாரும் இருக்கமாட்டார்கள். அரசியல் வாழ்வில் நீ இன்னும் அதிக உயரத்திற்குச் செல்வாய், வரும் தேர்தல் உனக்கு நல்ல ஒரு செய்தியைத் தரும், தற்போது இருக்கும் பதவி இனி வரும் பதவி இரண்டுமே உனக்கு பேரும் புகழும் தரும் பதவிகள் ஆகும் என்று கூறினார்.
மேலும், தனது குடும்ப நலன் பற்றியும் ஆலோசனை கேட்டார். அதற்கு ஜோதிடர், குடும்ப நலத்திற்கு மஹாமிருதுஞ்சய் யாகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தற்போது அவர் கெட்டவர்களின் பார்வை பாதிப்பிலிருந்து விலகி இருக்க, 13 தோல் நீக்காத உளுந்தை எப்போதும் அவரது ஆடையில் முடிந்து வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீர குடும்பத்தினருடன் உஜ்ஜைன் மகாபைரவர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சுமார் 4 மணிநேரம் ஜோதிடரிடம் தனது அரசியல் எதிர்காலம் பற்றி விவாதித்தார். அதன் பிறகு பில்வாடா அனுமன் கோவிலுக்குச் சென்ற ஸ்மிருதி இராணி அனுமானுக்கு சனிதோச பூசைகள் செய்தார். ஸ்மிருதி இராணியின் பில்வாட பயணத்தின் போது அவருக்கு என சிறப்பு இசட் பிளஸ் பாதுகாப்புப் படைவீரர்களுடன் பல்வேறு வசதிகளுடனுள்ள இரண்டு அரசு வாகனங்களும் உடன் சென்றன.
விரைவில் குடியரசுத் தலைவர் ஆவாராம்
ஸ்மிருதி இராணி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கும்போதே என்னிடம் ஜாதகம் பார்த்தார். நான் அவரது பிறந்த நாள், நேரம் பற்றித் துல்லியமாகக் கணித்து திரைப்பட உலகில் மிகவும் முக்கியமான நபராய் வருவாய் என்றேன். அதன்படி அவர் மிகவும் பிரபல சின்னத்திரை நடிகராக முன்னுக்கு வந்தார். நான் அவருக்கு ஜோதிடம் பார்த்த சில ஆண்டுகளிலேயே அவர் பிரபலமாகிவிட்டார். அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு மீண்டும் என்னிடம் வந்தார். அப்போது நான், நாட்டின் முக்கியத் தலைவராக 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு வருவாய் என்றேன். அதே போல் தற்போது அவர் கேபினெட் அமைச்சராகிவிட்டார். விரைவில் அவர் மீண்டும் ஒரு மிகவும் முக்கியப் பதவியை அடைய இருக்கிறார். அவருக்கு ஜனாதிபதி ஆகும் தகுதி இருக்கிறது என்று அவரது ராசி கூறுகிறது என்று ஸ்மிருதி இராணி சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
ஆனால் ஸ்மிரிதி இராணி அரசியல் வாழ்க்கையிலும், சின்னத்திரை, பெரிய திரை நடிப்பிலும் பெரிய வெற்றிபெற்ற நபரல்ல. கல்வித் துறையிலும் பெரும் ஆர்வம் கொண்டவரல்ல என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்மிருதி இராணியுடன் அவரது கணவரும் வந்திருந்தார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள ஒரு தொழில் நிறுவனத்திற்காக ஆலோசனை பெற்றார். மனிதவளத்துறை அமைச்சர் ஜோதிடம் பார்த்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
நாட்டின் கல்வித்துறை உள்ளடக்கிய ஒரு துறையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி 5-ஆம் வகுப்பு வரை படித்த ஒருவரிடம் கைநீட்டி தனது எதிர்காலம் குறித்துக் கேட்பது மிகவும் கேவலமான ஓர் எடுத்துக்காட்டாகும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டிற்கும் அந்தப் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும் என்று ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
– சரவணா ராஜேந்திரன்