– கோசின்ரா
ஒளிப்பழம் பறித்து உண்போம்
மழைப்பாலை அருந்துவோம்
நிலத்திற்கும் அருந்தத் தருவோம்
இரவு குளத்தில் இறங்கி
நிலவைக் கரைக்கு இழுத்து வருவோம்
நீரின் நூலால் நெய்யப்பட்ட ஆடையணிந்து
நதிகளோடு அந்தரங்கத்தைப் பகிர்வோம்
நீங்கள் ஒளிப்பழம் உதிர்க்கும் சூரியனுக்கு
சட்டை மாட்டினீர்கள்
சமத்துவம் கசியும் நதிகளுக்கு
பெண் வேடம் கட்டினீர்கள்…
நெருப்புக்கு மழைக்கு ஆகாயத்திற்கு
மனித உடல்களை மாட்டினீர்கள்…
படைப்பு சக்திகளின் வடிவங்களான
ஆணுறுப்பிற்கு சிவனென்றும்
பெண்ணுறுப்பிற்கு சக்தியென்றும்
பெயர் சூட்டி புராணங்களில் ஏற்றினீர்கள்!
வளர் அறிவு
உங்கள் கற்பிதங்களைத் திருப்பி அனுப்பி விட்டது
அதை இழுத்து வந்து
வித்தைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள் சிறுபான்மையென்று
உங்களுக்குத் தெரியும்
உங்களுக்கென்று பூமியில்லை
அதுவும் தெரியும்
இந்த பூமி எல்லோருக்கும் சொந்தமானது
நீங்கள் சில நூற்றாண்டுகளாக
எங்களுடன் இருக்கிறீர்கள்
இருந்துவிட்டுப் போங்கள்
உங்கள் சொற்களுக்குத் தலையாட்டிப் பொம்மைகளாய் இருந்து
மக்களை அடக்கிவைத்த மன்னர்களை
ஜனநாயகம் துரத்திவிட்டது
பூர்வீக அடையாளங்களை அழிப்பது
கைவந்த கலையாக இருக்கலாம்
எல்லாவற்றையும் கடந்துவிடுங்கள்
கடவுளின் உதடுகளில் புரண்டு
மந்திரங்களின் ஆடையை அணிந்து
மலை முகடுகளில் உங்கள் மொழி
ஆடிய ஆட்டங்களை
காலப்பருந்து தின்றுவிட்டது
முன்னொரு காலத்தில்
ஈயக்கரைசல்களின் அகழிகளுக்குள்ளே இருந்தது
சாமான்யன் தீண்டக்கூடாதவாறு
கொடிய தண்டனைகளால்
வேலியிடப்பட்டிருந்தது
கடவுளாலும் கைவிடப்பட்ட நிலையில்
சாமன்யர்களின் தெருக்களில் நிற்கிறது
யார் பேசுவார்கள்
தீண்டிய நாவுகளை அறுத்தெறிந்த காலம்
புதைந்து போயிருக்கலாம்
அதன் வலிகள் இங்கேயே இருக்கிறது
அதிசயங்கள் நிகழட்டும்
அது பிழைக்கட்டும்
அதன் வானம் அப்படியே இருக்கிறது
சிறகு முளைத்துப் பறக்கட்டும்
என் நிலத்தில் அது படரக்கூடாது
என் வேர்களைத் தின்றுவிடக்கூடாது
என் வானத்தின் கதவுகளை அது திறக்கக்கூடாது
என் கருமேகங்களை அது கலைக்கக்கூடாது
பழைய அதிகாரத்தோடு என் தெருக்களில் நடமாடக்கூடாது
தமிழுக்காகத் தீக்குளித்தவர்கள்
ஒவ்வொரு நாளும்
சூரியனின் ஒளிக்கற்றைகளில்
இறங்கி வருகிறார்கள் தமிழ் நிலத்திற்கு
எங்கள் வரலாறுகளை உரக்கச் சொல்லிக்கொண்டு.