இவ்விடம் அரசியல் பேசலாம்

டிசம்பர் 16-31

கொண்டையை மறைக்க முடியாதே

– கல்வெட்டான்

தோழர் சந்தானத்தின் சலூன் கடையில் பரபரப்புக் குறைந்த ஓய்வான நேரத்தில் சரியாக உள்நுழைந்தார் தோழர் மகேந்திரன். என்ன தோழர் கூட்டத்தையே காணும்? இது மத்தியான நேரம் தோழர்! அவனவன் நல்லா சாப்பிட்டு முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் கண்ணசரலாம்னு தூங்கற நேரத்துல இங்க வந்தாலும் தூங்கத்தான் போறாங்க! அவங்க என்ன கலைஞரா? சட்டசபைல போயி மக்கள் பிரச்சனையப் பேசறதுக்கு?

 

எங்க கலைஞருக்கே சீட்டு ஒதுக்கித் தர மாட்டிங்கறாங்களே!

நீங்க வேற! முதல்வரே அவரோட சீட்டுல உட்காரப் பயந்துக்கிட்டு ஓர் ஓரமா பட்டும்படாமல் உட்கார்ந்துக்கிட்டிருக்காரு! இதுல கலைஞருக்குச் சீட்டு ஒதுக்கித் தந்தால் இவங்க சீட்டுக் கிழிஞ்சிடுமே!
அதுசரி தோழர்! இந்த உலகத்திலேயே அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி கஸ்டமருக்கு சொகுசா சேர் போட்டு கவனிச்சுக்குற ஒரே இடம் சலூன் கடைதான்!

அது மட்டுமா? இங்க மட்டும்தான் ஓனர் நின்னுக்கிட்டு கஸ்டமரை உட்காரச் சொல்றதும் வழக்கம்!

அட ஆமால்ல!

என்ன இருந்தாலும் கல்யாணத்துல வச்சிருக்குற பன்னீரு நிலைமையும் நம்ம முதல்வர் பன்னீரு நிலைமையும் இப்படி ஆயிருக்கக்கூடாது! வரவேற்புல முதல் ஆளா நின்னாலும் யாரு மேல தெளிக்கணும்ங்கறத முடிவு பண்றதென்னவோ இன்னொருத்தர்-தான்!

சரியாச் சொன்னீங்க! அவனவன் பதவிக்காக அடிச்சுக்கற காலத்துல கிடைச்ச பதவியை அனுபவிக்க முடியாததெல்லாம் ஒரு வாழ்க்கையா?

அதான! பிரபல எழுத்தாளரே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரி, யோகி ராம்சுரத் குமார் பெயரச் சொல்லிக்கிட்டு தானும் ஒரு சாமியாரா மாறணும்னு ப்ளான் போட்டுக்கிட்டு வர்றாராமே, கேள்விப்பட்டீங்களா?

ஆமா சத்த(!) சங்கம்னு ஒரு அமைப்பைத் தொடங்கிட்டு அதை வச்சுக்கிட்டு தன்னை ஒரு தலைவனா காட்டிக்க ட்ரை பண்றாராமே!

அதேதான்! கொஞ்ச வயசுல தண்ணியடிச்சுக்கிட்டு தாறுமாறா சுத்திட்டு, அப்புறமா தன்னோட எழுத்துக்குக் கிடைச்ச கூட்டத்தை வச்சு இப்ப கல்லா கட்ட பெரிய அளவுல ப்ளான் போடுறாப்புல போல!
ஆமா ஆமா! சாமியார்னாலே பெண்கள் விஷயம் இல்லாமலா? இவரும் முகநூலில் பெண்களுக்கு நூல் விட்டு அசிங்கப்பட்டிருக்கார் போல! தன்னோட எழுத்தை வைத்து எவ்வளவோ நூல் விட்டவராச்சே!

இதுல அவரை மட்டும் சொல்லி ஒன்னுமில்ல, எத்தனை சாமியார்கள் மோசடி பண்ணி மாட்டிக்கிட்டாலும் தொடர்ந்து நம்புறதுக்கும் குருவே சரணம் சொல்றதுக்கும் ஆட்கள் இருக்குற வரைக்கும் பாலகுமாரன்கள் அவதரிச்சுக்கிட்டேதான் இருப்பாங்க!

சரியாச் சொன்னீங்க தோழர்! நாமதான் சாமியார்களை மத்திய அமைச்சராவே ஆக்கி அசிங்கப்படுற குரூப்பாச்சே!

அதானே! அந்தச் சாமியார் அமைச்சர் என்னா தெனாவெட்டு இருந்தால் இந்துக்களும் முஸ்லீம்களும் ராமரோட பிள்ளைகள்னு சொல்லும்!

ராமரை வச்சுக்கிட்டு இவங்க இப்படிக் குண்டக்கமண்டக்க பேசிக்கிட்டுத் திரியறதப் பார்க்கறப்ப எனக்கு கமல் சொல்றது தான் தோழர் நினைவுக்கு வருது!

அதென்ன தோழர்?

கடவுள் இல்லைன்னு சொல்லல, இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொல்றேன்னு சொன்னார்ல!

அதே மாதிரி, ராமர் இல்லைங்கறது உண்மைன்னாலும் இவனுங்க பண்ற அட்டூழியத்துக்காவது நான் இங்கல்லாம் பொறக்கலப்பா, எனக்குப் பிள்ளைகளும் இல்லப்பான்னெல்லாம் ராமர் வந்து சாட்சி சொல்லிட்டுப் போனால் நல்லது!

அவரெல்லாம் வந்து சாட்சி சொல்வார்னு பயம் இருந்தால் ராமர் பாலம் பொய்னு தெரிஞ்சும் இம்புட்டுப் பிரச்சினை பண்ணுவானுங்களா?!

ம்ம்ம்… இது பெரியார் பண்படுத்துன பூமின்னு தெரிஞ்சுக்கிட்டே இங்க இந்து தீவிரவாதக் கூட்டத்தை வளர்க்கணும்னு ப்ளான் போட்டுக்கிட்டிருக்கானுங்களே!

ஆமா ஆமா இந்துக்களையெல்லாம் ஒன்னு திரட்டப்போறதா சொல்லிக்கிட்டு மாநாடு கூட்டம்னு போடுறானுங்க! இதுல பக்தி வியாபாரிங்க கூட்டணி மாதிரி மேல்மருவத்தூர் பங்காருவையும் சேர்த்துக்கிறானுங்க!

இவங்க என்னதான் இந்துக்கள் இந்துக்கள்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும் கொண்டையை மறைக்க முடியாதே தோழர்! இந்துக்கள்னு சொல்ற அத்தனைபேரும் அர்ச்சகராக இவங்க ஒத்துப்பானுங்களா?

காலங்காலமா மக்களை மதத்தின் பெயரால் அடிமையாக்கி தன்னோட ஜாதி மக்கள் மட்டுமே சொகுசா, உழைக்காமல் தீபாராதனை கலெக்சன் காணிக்கை கலெக்சன்னு வச்சுக்கிட்டு வாழணும்ங்கிறது இவங்க ப்ளான்!

அப்படித்தான் தோழர் தெரியுது! கோவில்கள் இருக்குற வரைக்கும் இவனுங்க ஆட்டமும் இருந்துக்கிட்டேதான் இருக்கும்-போல! இந்த ராஜா பார்த்திங்களா எம்புட்டு சவடால் பேச்சுன்னு!

அட நீங்க வேற தோழர்! நெட்ல யூ ட்யூப் ஓபன் பண்ணாலே இந்தாளோட காமெடிதான் பேமஸா ஓடிக்கிட்டிருக்கு! சன் டி.வி.யில ஒரு விவாதத்துல காந்தியையும் ஜின்னாவையும் பத்தி, தான் சொன்னதையே, சொல்லவேயில்லைன்னு மறுத்து எல்லோருக்கும் ஷாக் கொடுப்பாரு! அவரோட பேச்சே வெத்துச் சவடால்தான்!

இதுவேறயா! இவங்க தொடர்ச்சியா பண்ற அலப்பறைல முன்ன இருந்த காங்கிரஸ் கவர்மெண்ட்டே பரவாயில்லைன்னு மக்களெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க! மோடி சாயம் ரொம்பச் சீக்கிரமே வெளுக்க ஆரம்பிச்சிடுச்சே!

பின்ன எப்பப் பார்த்தாலும் வெளிநாடுகளுக்கே சுத்துறதும் அதானி மாதிரி ஆட்களுக்காக ஆட்சி நடத்துறதுமாயிருந்தால் எப்படி? இப்பப் பாருங்க, ரேசன்ல மண்ணெண்ணெய்க்கான மானியத்தை கட் பண்ற எண்ணத்துல இருக்காங்க! தூய்மை இந்தியாங்கற பெயர்ல ஏழைங்களுக்குக் கிடைக்கிற அத்தனை சலுகைகளையும் சுத்தமா துடைக்கறதத்தான் வேலையா வச்சிருக்காங்க!

அப்ப மோடி மஸ்தான் வித்தையெல்லாம் செல்லுபடியாகாதுன்னு சொல்ல வர்றிங்களா தோழர்?

பின்ன நிஜத்தை விட்டுட்டு வெறும் புகைப்படத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தினால் எப்படி தோழர்? அந்த 11 பேர் குழு நம்மூரு பவர் ஸ்டாருக்கு வேணும்னா சரிப்படலாம்! அதுக்காக அம்புட்டுப் பேரும் பவர் ஸ்டாராக ஆசைப்படலாமா என்ன?!

“ஹஹஹஹ! அதுவும் சரிதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *