டிரஸ்ட் வழக்கு
அம்மா அவர்களால் கழகத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் நான் பொதுச்செயலாளர் என்ற முறையில் தாக்கல் செய்த எதிர் மனுவின் முக்கிய சாரங்களை 03.05.1978 விடுதலையில் வெளியிட்டோம். அதனை அப்படியே இங்கு தருகிறேன். ஏன் எனில் கழகத் தோழர்கள், கழகத்திற்கு எதிரான துரோக வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் அது பயன்படும் என்பதால்.
(திருவாளர்கள் டி.எம்.சண்முகம், சிதம்பரம் கிருஷ்ணசாமி, கே.தங்கராசு ஆகியவர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு, செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த எதிர்மனுவின் விவரம்.)
அடையாறு கஸ்தூரிபாய் நகர், 1ஆவது மெயின் சாலையிலுள்ள 13ஆம் எண் வீட்டில் வசிக்கும், கி.வீரமணியாகிய நான் கீழ்க்கண்டவாறு, உறுதிமொழி மூலம் கூறுவதாவது:
என்னுடைய தகப்பனார் பெயர் சி.எஸ்.கிருஷ்ணசாமி எனக்கு வயது 44 ஆகிறது.
(1) நான் இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி. இந்த உறுதிமொழிப் பத்திரத்தை என் சார்பிலும் முதல் எதிர்வழக்காளர் (நிறுவனம்) சார்பிலும் நான் சமர்ப்பிக்கிறேன்.
(2) தாவா மனுவிற்கு ஆதாரமாக சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டவைகளுள் குறிப்பாக இங்கே ஒப்புக்கொள்ளப்படுபவைகளைத் தவிர, மற்றவற்றை நான் மறுக்கிறேன். பிராதில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்குப் பதில்கூற முழு விவரமான தனி ஒரு எழுத்தறிக்கை Written statement தர எனக்குள்ள உரிமையைப் பிறகு பயன்படுத்துவேன் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(3) நான் மிகவும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் 1860ஆம் ஆண்டு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டப்படிப் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன சட்ட விதிகளின் 21ஆவது பிரிவுப்படி, திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களால் நான் எழுத்து மூலமாக ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இந்த நியமனப் பத்திரம் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களினால் 2.1.1978இல் ஏழு நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் எழுதி, கையெழுத்திடப்பட்டதாகும். (இதில் இனி நான் நிறுவனம் (ஸ்தாபனம்) என்று குறிப்பிடுவது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தையே சாரும்).
(வழக்குத் தலைப்பில் மனுதாரர்கள் என்னை செயலாளர் என்று அழைக்கப்படுகிறவர் _என்று குறிப்பிட்டுள்ளார்கள். நான் செயலாளராக இருக்க உரிமை உடையவன் அல்ல என்பது போன்று அவர்கள் கொண்டுள்ள கருத்து தவறான அடிப்படையில் அவர்களால் எடுக்கப்பட்டதொரு நிலையாகும்.)
அமலுக்கு வராத சட்டம்
(4) வாதிகளின் மனு ஒரு தவறான அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 1975ஆவது ஆண்டு தமிழ்நாடு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டம் (சென்னை-_27 1975 என்கிற சட்டம்) தான் 1860ஆவது ஆண்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சொசைட்டிகளுக்குப் பொருந்தும். நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் சில 27/1975 சட்டத்துக்குப் புறம்பான விதிகளைக் கொண்டதாக இருப்பதாலும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் 21ஆவது விதியானது தமிழ்நாடு சட்டம் 27/1975இல் உள்ள 15ஆவது விதிக்கு முரணானதாலும் இந்த 21ஆவது விதியின் அடிப்படையில் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை என்னை ஆயுள் செயலாளராக நியமித்துள்ளது செல்லத்தக்கதல்ல என்றும் இந்த அடிப்படையில் இந்த நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கு ஒரு தனிச் செயல் திட்டத்திற்கு (A Scheme) உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரியுள்ளார்கள்.
27/1975 என்ற இந்தத் தமிழ்நாடு சட்டம் அமலுக்கு வரும் தேதியை மாநில அரசு இதுவரையில் (வாதி மனுபோட்டு அதற்குப் பதில் தரும் இதுநாள் வரை) பிறப்பிக்கவில்லை என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு 1975 சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டம் இதுவரை அமலில் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே 1860ஆம் ஆண்டு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் விதிமுறைகள் செல்லத்தக்கவைகளே. அந்த விதிமுறைகளுக்கு இணங்க நான் அந்த நிறுவனத்தின ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டப்படி சரியானதே ஆகும். வாதிகள் தங்களது மனுவில் கூறியுள்ள காரணங்கள் சட்டப்படி செல்லத் தக்கவையல்ல. எனவே மனுவும் தாவாவும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியவையாகும். ஏனென்றால், அமலுக்கு வராத 27/1975ஆவது தமிழ்நாடு சட்டத்தின் அடிப்படையில்தான் இந்த தாவா மனு போடப்பட்டுள்ளது. சட்டமே அமலுக்கு வராத நிலையில் இந்த மனுதாரர் வாதம் செல்லாதவைகளாகின்றன. மேலும் சட்டப்படி இந்த மனு செல்லத்தக்கதல்ல. காரணம், நிறுவனத்தின் மற்ற நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
உறுப்பினர்கள் அல்ல
(5) இந்த மனுதாரர்கள் தாங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்றும், அந்த நிறுவனம் நிலைத்து நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்பதில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் அவர்கள் மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். அதனடிப்படையில்தான் பெரியார் அவர்கள் 1968இல் அவர்களை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தார் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் இவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினர்களே அல்ல. அவர்கள் மனுவில் கூறியுள்ளவைகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாததாகும். நிறுவனத்தின் சட்டதிட்டங்களின் 5ஆவது விதிப்படி, ஒரு குறிப்பிட்ட வயதடைந்தவர்களும் நிறுவனத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதோடு நிர்வாகக் கமிட்டியின் ஒப்புதலையும் பெற்றவர்கள்தான் உறுப்பினராக முடியும். மனுதாரர்களை நிறுவனத்தின் சாதாரண உறுப்பினர்களாகக்கூட நிர்வாகக் குழு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சாதாரண உறுப்பினர்களாகவே இல்லாத நிலையில், எப்படி நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருக்கத் தகுதி படைத்தவர்களாக முடியும்? அவர்கள் 1968ஆவது ஆண்டில் நிர்வாகக் குழு உறுப்பினர்களானார்கள் என்பதை நான் மறுக்கிறேன். நிறுவனத்தின் கடந்தகால ஆதாரங்கள் மூலமே இது உரிய முறையில் நிரூபிக்கப்படும்.
(6) மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் என்ற மனுதாரர்களின் கூற்று பொய்யானது என்பதே மனுதாரர்கட்கே தெரியும். சமுதாயத்தில் நிலவிய ஜாதி, மூடநம்பிக்கைகளின் அடிப்படையில், ஒரு பிரிவினர் கொண்டிருந்த ஆதிக்கத்தை எதிர்த்து 1925இல் மறைந்த பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்திலிருந்து முளைத்ததே இந்த நிறுவனமாகும். 1925இல் ஏற்படுத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்துக்கு 1944இல் திராவிடர் கழகம் என்று புதிய பெயரிடப்பட்டது. அந்த நிறுவனமானது அரசியலுக்கு அப்பாற்பட்டது ஆகும். சமுதாய சம்பந்தமான பணிகளுடன் அறநிலையப் பணிகளையும் இணைத்து நடத்தும் ஒரு நிறுவனமாகும். மறைந்த பெரியார் அவர்கள், இந்த நிறுவனத்தைத் தொடங்கி நீண்டகாலம் நடத்தி வந்தார்கள். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், இவற்றின் லட்சியங்களைப் பரப்புவதே இந்த நிறுவனத்தின் செயல் திட்டமாகும். இவைதான் இந்த நிறுவனத்தின் நோக்கங்களாகும். இது இந்த நிறுவனத்தின் சட்ட விதிகளில் தெளிவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலையில் பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் ஒரேவிதமான சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துக்களைக் கொண்ட அடிப்படையால் ஒன்றான இரு அமைப்புகளாகும். மறைந்த பெரியார் அவர்கள் ஆயுள் காலத்தில் இந்த இரண்டு ஸ்தாபனங்களும் (சுயமரியாதை இயக்கம் _ திராவிடர் கழகம் ஒரு அமைப்பு; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றொரு அமைப்பு) அவருடைய அறிவுரை, மேற்பார்வையின் கீழ் நிர்வகித்து, நடத்தி வரப்பட்டன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கோ அல்லது பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகக் கொள்கைக்கோ உடன்பாடு இல்லாத யாரும் இந்த நிறுவனத்தின் லட்சியங்களையும் கொள்கைத் திட்டங்களையும் நடைமுறைப்-படுத்த முடியாது.
பெரியார் தந்த மறுப்பு
(7) மனுவில் கண்டுள்ள மூன்றாவது வாதியாகிய திருவாரூர் கே.தங்கராசு தன்னை ஆசிரியராகக் கொண்ட பகுத்தறிவு என்னும் ஏட்டில் 1963 ஆகஸ்டில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் அவர் மறைந்த காமராசரால் தீர்மானிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கவர் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் அந்தக் கருத்து பெரியார் அவர்களுடைய கருத்துக்கு உடன்பாடு உடையதாக அமையவில்லை. எனவே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வமான ஏடான விடுதலையில் 17.8.1963 அன்று தங்கராசின் கருத்தை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது:-_ தங்கராசால் பகுத்தறிவு ஏட்டில் வெளியிடப்பட்ட கருத்து தனக்கோ திராவிடர் கழகத்துக்கோ உடன்பாடானது அல்ல என்று பெரியார் தெளிவுபடுத்தினார். மேலே குறிப்பிடப்பட்ட பெரியாரின் அந்த அறிக்கையானது மூன்றாவது வாதி (தங்கராசு) மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவரல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மூன்றாவது வாதியுடன் இணைந்துள்ள மற்ற வாதிகளும் தங்கராசு போன்றே பெரியாருடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் அல்ல.
(8) (நான் மேலும் கூறுவது என்ன-வென்றால்) முதல் வாதியை (டி.எம்.சண்முகம்) 27.12.1974இல் கழகத்தின் தலைவராகிய ஈ.வெ.ரா.மணியம்மை திராவிடர் கழகத்திலிருந்து விலக்கிவிட்டார். ஏனென்றால் அந்த முதல்வாதி கழக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு கழக சம்பந்தமான முக்கிய நடவடிக்கைகளுக்குத் தன்னுடைய ஒத்துழைப்பைத் தராததுமே ஆகும். 27.12.1974இல் தன்னால் கையெழுத்திட்டு விடுதலையில் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் மேற்கண்ட தனது முடிவை கழகத் தலைவர் மணியம்மையார் வெளிப்படுத்தினார். இரண்டாவது வாதியும் (சிதம்பரம் கிருஷ்ணசாமி) மற்றும் சிலரும் கழகத்திலிருந்து, கழக எதிர்ப்பு நடவடிக்கைக்காக விலக்கப்பட்டார்கள். அவர்களை விலக்கிய செய்தி 17.10.1975 விடுதலையில் வெளியிடப்-பட்டுள்ளது. மூன்றாவது வாதியும் (தங்கராசு) அதுபோலவே அந்த விதமான கழக எதிர்ப்பு நடவடிக்கைக்காக 23.9.1975இல் கழகத்திலிருந்து விலக்கப்பட்டார் இவரை விலக்கிய செய்தி கழகத் தலைவர் கையெழுத்தோடு 23.9.1975 விடுதலையில் வெளியிடப்பட்டுள்ளது.
16.11.1975இல் திருச்சியில் கூடிய திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாக கமிட்டி திராவிடர் கழகத்திலிருந்து வாதிகளையும் மற்றும் சிலரையும் ஏற்கெனவே விலக்கியிருந்ததை ஒரு தீர்மானம் மூலம் தலைவரின் முடிவை ஒப்புக்கொண்டும் இருக்கிறது. (Ratified).
வாதிகள் தங்களைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டவுடன் வேறு ஒரு எதிர்ப்பு ஸ்தாபனத்தைத் தொடங்கினார்கள் என்று தெரிய வருகிறது. அந்த ஸ்தாபனத்திற்குக் குறிப்பிடத்தக்க ஆதரவாளர்களும் இல்லை. அந்த ஸ்தாபனத்திற்கு திராவிடர் கழகம் என்று அவர்களே பெயர் சூட்டிக் கொண்டார்கள். மூன்றாவது வாதியால் வெளியிடப்பட்ட பகுத்தறிவு என்னும் ஏட்டில் 4-.11.1975இல் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில் தங்களைத் திராவிடர் கழகத்தார் என்று கூறிக்கொள்ளும் அவர்கள் 26.10.1975இல் திருச்சியில் கூடி மறைந்த திருமதி ஈ.வெ.ரா. மணியம்மை மீதும் என் மீதும் நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்கள். மற்றும், இரண்டாவது வாதி, திருமதி ஈ.வெ.ரா. மணியம்மையாருக்குப் பதிலாக திராவிடர் கழகத் தலைவராகவும், மூன்றாவது வாதி எனக்குப் பதிலாக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தீர்மானமும், மற்றொரு தீர்மானத்தில் திராவிடர் கழகத்தினுடைய சொத்துக்கள், அது சம்பந்தமான தஸ்தாவேஜுகள், கணக்குகள், திராவிடர் கழக டெபாசிட்டுகள் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்தப் பகுத்தறிவு ஏட்டில் செய்தி வந்துள்ளது.
மேலே கூறப்பட்டவை எதைப் புலப்படுத்துகின்றன? வாதிகள் பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் அல்ல என்பதோடு திராவிடர் கழகத்துடன் எல்லாவிதமான தொடர்பையும் மேற்கூறியவாறு அறுத்துக் கொண்டவர்கள் ஆவார்கள் என்பதும் புலனாகிறது. அது மாத்திரமல்லாது அவர்கள் திராவிடர் கழகத்தின்பாலும் நிறுவனத்தின்பாலும் விரோத மனப்பான்மை உடையவர்களும் ஆவார்கள்.
– நினைவுகள் நீளும்