பெரிய காற்றாடிகளை அமைத்து காற்றாலை மின்சாரம் அமைப்பதன் குறுகிய வடிவமே மரத்திலிருந்து மின்சாரம் பெறும் முறையாகும்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நியூ விண்ட் நிறுவனப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டு காற்று மரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 25 அடி உயர மரத்தில் 100 இலைகள் இருக்கும். இலை என்பது இங்கே சின்னச் சின்னக் காற்றாலைகள் ஆகும். காற்றில் காற்றாலைகள் சுழலும்போது மரமானது மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடுகிறது.
இந்தக் காற்று மரம் குறித்து இதன் நிறுவனர் ஜெரோம் லாரிவியர், பெரிய காற்றாலைகளுக்குக் குறிப்பிட்ட வரையறைகள் உண்டு. அதிகமாகக் காற்று வீசும் இடங்களில் மட்டுமே அவை பயன் தரும். ஓர் ஆண்டில் அய்ந்து அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே பயன் கிடைக்கும். காற்று மரத்தில் அப்படி அல்ல. நெரிசலான நகரத்தின் வணிக வளாகங்களின் வாசலில்கூட இந்த மரத்தினை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சுமார் ஒன்றரை அடி உயரத்திலிருக்கும் இலைகள் என்னும் பிளாஸ்டிக் சுழல் பிளேடுகளில் காற்று உள்ளே சென்றதும் இவை சுற்றி, விசையானது மின்சாரமாக மாற்றப்படும். இயற்கையான இலைகளிலிருந்தே நார் எடுத்து இந்த மரத்துக்கு இலைகளை உருவாக்கும் திட்டம் உள்ளது. காற்று மரத்தை மொட்டை மாடிகள், சாய்வான வீட்டுக் கூரைகளிலும் அமைப்பதுடன், இதிலேயே சூரிய மின்சாரத்தை உருவாக்கும் தகடுகளைப் பதித்து இரண்டு வகைகளில் பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், 2015ஆம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ள இந்த மரத்தின் தற்போதைய விலை 22 லட்சம் ரூபாயாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், நல்ல காற்று வரும் இடத்தில் அமைத்த ஓர் ஆண்டிலேயே முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடலாம் என்றும் ஜெரோம் கூறியுள்ளார்.