கடவுள் தாயம் விளையாடுவதில்லை (God doesn’t play Dice) ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் (1879 -_ 1955) இந்தப் புகழ்பெற்ற வரிகளை வைத்துக் கொண்டு அவரைக் கடவுள் நம்பிக்கையாளர் என்று நிறுவுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்குறிப்பிட்ட வரிகளை அய்ன்ஸ்டைன் எந்தச் சூழலில் குறிப்பிட்டார் என்பது பலரும் அறியாதது. குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) எனும் நவீன இயற்பியல் பிரிவு உருவாவதற்கான அடிப்படைக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய அய்ன்ஸ்டைன், அதுவரை அலை என்று நம்பப்பட்டு வந்த ஒளியை துகள் என்று நிரூபித்தார். இதுவே குவாண்டம் இயற்பியல் பிறக்க அடிகோலியது. இந்தக் கண்டு-பிடிப்புக்காகவே அய்ன்ஸ்டைனுக்கு 1921ஆம் ஆண்டில் நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
குவாண்டம் இயற்பியலின் பிறப்பானது மரபார்ந்த பல்வேறு நம்பிக்கைகளுக்குக் கொள்ளி வைத்தது. நியூட்டனின் விதிகளால் உலகம் ஆளப்படுவதாக நம்பப்பட்டுவந்த காலம் வரை, பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை அறிவியலால் கணிக்கமுடியும் என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால், துகள்களின் இயக்கம் உள்ளிட்டவற்றைத் துல்லியமாகக் கணிக்க முடியாது, நிகழ்தகவின் அடிப்படையிலான வாய்ப்பின் மூலமே கூறமுடியும் என்று குவாண்டம் இயற்பியல் பறைசாற்றியது. மாபெரும் மேதையான அய்ன்ஸ்டைனால் இதனை ஏற்க முடியவில்லை.
1927 சால்வேயில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் நீல்ஸ்போர், ஹெய்சன்பர்க் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்களுடன் குவாண்டம் இயற்பியலுக்கு எதிராக அய்ன்ஸ்டைன் பகல், இரவு பாராமல் நிகழ்த்திய உரையாடல்கள் பிரசித்தி பெற்றவை. அப்போதுதான், பிரபஞ்சத்துடன் கடவுள் தாயம் ஆடுவதில்லை என்று அய்ன்ஸ்டைன் காட்டமாகக் கூறினார்.
ஆனால், உண்மை வேறாக இருந்தது. குவாண்டம் இயற்பியலின் கூற்றுக்கான ஆதாரங்களும், தரவுகளும் கிடைக்கத் தொடங்கின. 1930ஆம் ஆண்டு அய்ன்ஸ்டைன் அடி பணிந்தார். நமது சம காலத்தில் மிகவும் வெற்றிவாகை சூடிய அறிவியல் கோட்பாடு குவாண்டம் இயற்பியல் என்று அய்ன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்.
தனிநபர் போல் (Personal God) கருதப்படும் ஒரு கடவுளை நான் நம்பவில்லை என்று அய்ன்ஸ்டைன் வெளிப்படையாக அறிவித்திருந்தும், அவரைக் கடவுள் நம்பிக்கையாளர் என்று நிறுவுவதற்குத் தீவிர முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அய்ன்ஸ்டைன் கடவுளாகக் குறிப்பிட்டதெல்லாம், பிரபஞ்சத்தை _- இயற்கை விந்தையை வியக்கும், நேசிக்கும் உணர்வை மட்டும்தான்.
தன்னுடைய கடவுள் கோட்பாடு என்பது ஸ்பினோசாவின் கடவுளுடன் ஒப்பத்தக்கது என்றார் அய்ன்ஸ்டைன். யூதர்களின் புனித நூல்கள் எல்லாம் பாலஸ்தீன ஆடு மேய்ப்பவர்-களால் எழுதப்பட்டது என்று கூறியதால் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தவர் ஸ்பினோசா… தனி ஒரு கடவுள் உலகைப் படைத்து, காத்து, அழிக்கும் வேலையைச் செய்து வருவதாய் நம்பாமல், ஒட்டுமொத்த இயற்கையின் வடிவமுமே தெய்வீகமானது என்று ஸ்பினோசா கருதினார்.
அய்ன்ஸ்டைன் கடவுள் மறுப்பாளர் என்பதால் அமெரிக்காவில் வசித்த காலத்தில் அவர் கடுமையாகப் பழிக்கப்பட்டார். அமெரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் புல்டன் ஜே. ஷூன் உள்ளிட்டோர் அய்ன்ஸ்டைனைக் கடுமையாகப் பகடி செய்தனர். இது தொடர்பாக அய்ன்ஸ்டைனுக்கு வந்த பல்வேறு கடிதங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. அவருக்கு வந்த ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகள் இவை: கடவுளிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், நீங்கள் எங்கிருந்து (அமெரிக்கா) வந்தீர்களோ (ஜெர்மனி) அங்கேயே திரும்பிச் செல்லலாம்…
(பிறப்பால் யூதரான அந்த மாமேதையின் தலைக்கு 20 ஆயிரம் மார்க்குகள் (ஜெர்மன் பணம்) ஹிட்லர் பரிசு அறிவித்திருந்ததால் அவர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தது குறிப்பிடத்தக்கது).
இவர்கள் கூறுவதைப் போல் படைத்து, காத்து, அழிக்கவல்ல தனி ஒரு கடவுளை அய்ன்ஸ்டைன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இவற்றின் மூலம் நாம் உணர முடியும். ஒரு மாபெரும் ஆளுமையின் படைப்புகளில் ஒருசில வரிகளைக் கொண்டு நாம் அந்த ஆளுமைக்கு முழுவதிலும் எதிரான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முடியும். தற்போது இஸ்லாமியர்களில் சிலர் தந்தை பெரியாருக்குப் புதிய பிம்பம் கற்பிப்பதைப் போல…
பெரியார் ஒருக்காலும் கடவுளை ஏற்றுக் கொண்டதில்லை… மறுபிறவியையும் அவர் துளியும் நம்பியதில்லை… அதனை, தன்னைச் சார்ந்தோருக்கும் அவர் போதித்தார்.
மீண்டும் அய்ன்ஸ்டைனுக்கு வருவோம்… கடவுள் குறித்து அய்ன்ஸ்டைன் ஒரு இடத்தில் தெளிவாகக் குறிப்பிட்டதை இங்கு காண்போம்…
கடவுளைப் பொறுத்தவரையில், நான் மதச்சபையின் (Church) அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்த எந்த நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து பொதுஜனங்களுக்குக் கோட்பாட்டு நம்பிக்கைகள் கொடுக்கப்படுவதை நான் விரும்பியதில்லை. இம்மை குறித்த அச்சம், மறுமை குறித்த அச்சம், கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றை நான் ஏற்றுக்-கொண்டதே இல்லை. ஆளுமைத்துவமுடைய இறைவன் இல்லை என நான் உங்களுக்கு நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் (கடவுள் எனும் போது) அத்தகைய இறைவனைக் குறித்துப் பேசுவதாக இருந்தால், என்னைப் பொய்யன் என்றுதான் சொல்ல வேண்டும். இறையியல் கற்பிக்கும், நன்மைகளுக்குப் பரிசும், தீமைகளுக்குத் தண்டனையும் வழங்கும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
இதுதான் கடவுள் குறித்த அய்ன்ஸ்டைனின் கருத்து. பிற்காலங்களில் இடதுசாரிப் பார்வையுள்ள அரசியல் சிந்தையாளராக இயங்கிய அய்ன்ஸ்டைனை முடக்க அமெரிக்க உளவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது நாம் அறிய வேண்டியது. 1948ஆ-ம் ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்கள் ஒடுக்கப்பட்ட போது அதற்கு எதிராக அய்ன்ஸ்டைன் குரல் கொடுத்தார். அய்ன்ஸ்டைனின் கடைசிக்காலம் வரை அமெரிக்க உளவுநிறுவமான திஙிமி-ஆல் அவர் உளவு பார்க்கப்பட்டார். அய்ன்ஸ்டைன் 34 கம்யூனிச சார்புள்ள இயக்கங்களில் பங்கு வகிப்பவர் என்றும், 3 கம்யூனிஸ்ட் நிறுவனங்-களுக்குத் தலைவர் என்றும் அந்நாட்டு அரசுக்கு ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது. அய்ன்ஸ்டைனுக்கு எதிரான சில அறிவியல் அறிஞர்களுக்குப் பண உதவி செய்த அமெரிக்க உளவு நிறுவனம், அய்ன்ஸ்டைனின் கண்டு-பிடிப்புகள் தவறு என நிரூபிக்க எவ்வளவோ பிரயத்தனப்பட்டது. ஆனால், பாவம் அவர்களது பணம் நம்மூரில் தீபாவளிக்குக் கரியாக்கப்படுவது போல், வீணாய்ப் போனது…
கடவுள் நம்பிக்கை எனும் மூடநம்பிக்கைக்கும், அறிவுக்கும் இடையிலான போரின் நமது நிலைப்பாடு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அய்ன்ஸ்டைனின் கீழ்க்காணும் வரிகளுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
– கோ.பிரின்ஸ்