குறுங்கதை : மடச்சாம்பிராணி

டிசம்பர் 16-31

– வீரன்வயல் வி.உதயக்குமரன்

சதாசிவ குருக்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டைக் கவனமாக ஆராய்ந்த டாக்டர் சீனிவாசன் நிதானமாக விளக்கினார்.

அய்யரே… உங்க நுரையீரல் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு… பீடி சிகரெட் பழக்கம் இருந்தா விட்டுடுங்க
சதாசிவ குருக்களுக்கு, கோபம் குமுறிக் கொண்டு வந்தது.

அபச்சாரம்… அபச்சாரம்.. யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க

 

அய்யரே கோபப்பட்டு பிரயோசனமில்ல… புகைப் பிடிக்கிற பழக்கம் இருந்தாலொழிய இந்த நோய் வர சான்சே இல்லை

நான் வேற டாக்டரைப் பாத்துக்கறேன்… எவனாவது பீடி சிகரெட் குடிச்சா பத்து அடி தள்ளியே நிப்பேன்… என்னைப் போயி…

அப்படின்னா… உங்களுக்குப் புகைப் பழக்கமே இல்லேன்னு சொல்றீங்க அப்படித்தானே

நான் மூனு வேளை செய்யுற அந்தக் கடவுள் மேல சத்தியமா கிடையாதும் ஓய்

மூனு வேளை எப்படி பூஜை செய்றீங்க

சாம்பிராணி, சூடம், பத்தி, இதெல்லாம் வச்சித்தான்

அப்ப பிரச்சினையே அதுலதான். இதையெல்லாம் நிறுத்தினா சரியாயிடும்.

பூஜையவா நிறுத்தச் சொல்றேள்? ஆண்டவனுக்கு கற்பூரம் காட்டி செய்யிற பூஜைன்னால நோய் வரும்னு சொல்றேளா… இது அடுக்குமா உங்களுக்கு? கர்ப்பக் கிரகத்தில இருக்கிற வைப்ரேசனும், கடவுளைச் சுற்றி இருக்கிற தூய்மையும் வேற எங்க வரும்?

அய்யரே… வாசனையைக் கூட்ட கண்ட கண்ட கெமிக்கலைச் சேக்குறான்… சிகரெட் பீடி புகையைவிட மோசமாப் போச்சி இந்த சூடம் சாம்பிராணி ஊதுபத்திப் புகை… ஒரு மாதம் கடவுள் பக்கம் போகாம இருங்க, உங்களுக்கே உண்மை தெரியும்.

அதுக்கு என் பிராணனை விட்டுடுவேன். கடவுளுக்கு ஆறது நேக்கு ஆகாதா?

இதையே தொடர்ந்து செஞ்சா விடத்தான் வேண்டியிருக்கும். கடவுளுக்கு நுரையீரல் இல்லை… அவர் சுவாசிக்கப் போறதும் இல்லை. பிரச்சினையில்லை. நீங்க கற்சிலை இல்லைல்ல… சுவாசிக்க வேண்டாமா? டாக்டரே… என் பொழப்பே அந்த பெருமானை நம்பித்தானே

ஒரு மாசம் மணி ஆட்டுனா… அஞ்சாயிரமோ பத்தாயிரமோ கிடைக்கும்… இந்த வியாதி முத்திப் போனா அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ ஆகும். செலவை உங்க பெருமான் கொடுப்பாரா ஓய்?

டாக்டரே… நீதான்யா எனக்குக் கடவுள்… இனிமே மணி ஆட்டுற தொழிலே வேண்டாம்.

சதாசிவ குருக்கள் கையெடுத்துக் கும்பிட்டார்… டாக்டர் சீனிவாசன்.. அறை அதிரச் சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *