குறளுடன் ஒப்பிட கீதைக்குத்தகுதி உண்டா?

டிசம்பர் 16-31

கவிஞர் கலி.பூங்குன்றன்

புதுடில்லியில் செங்கோட்டை மைதானத்தில் பகவத்கீதை தொடர்பான விழா கடந்த ஞாயிறன்று (7.12.2014) நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஸ்வ ஹிந்துபரிஷத் அசோக் சிங்கால் ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தேசியப் புனித நூலாக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவ்விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதனை வழிமொழிகின்ற வகையிலே பேசி இருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு அதிபர் ஒபாமாவிற்குப் பகவத் கீதையைப் பரிசளித்தார்.

 

அப்போதே அதற்கு தேசியப் புனித நூல் அந்தஸ்து வழங்கப்பட்டது என்றார். அனைவரின் பிரச்சினைக்கும் பதிலையும், தீர்வையும் பகவத் கீதை அளிக்கிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் நான் பேசும்போது, பகவத்கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கான அறிவிப்பு மட்டும்தான் இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் (ஆதாரம்: தினமணி 8.12.2014 – பக்கம் 11) அசோக் சிங்கால் குறிப்பிடும் பொழுதே ஒன்றைக் கவனமாகவே குறிப்பிட்டுள்ளார். ஹிந்துக்களின் புனித நூலான  கீதை என்று குறிப்பிட்டதன் மூலம் கீதை இந்து மதத்திற்கானது என்பது வெளிப்படுத்தப்-பட்டது.

இந்த நிலையில் குறிப்பிட்ட ஹிந்து மத நூலை மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்திற்குச் சத்திய பிரமாணம் செய்து பதவியை ஏற்றவர்கள், அதற்கு மாறாக ஹிந்து மதத்தின் ஒரு நூலை தேசியப் புனித நூலாக அறிவிக்கும் மாபெரும் குற்றத்தைச் செய்கிறார்கள் என்பது எடுத்த எடுப்பிலேயே விளங்கிவிட்ட உண்மையாகும்.

இந்தியா என்பது ஹிந்துக்களின் நாடல்ல; பல மதங்களும், மதமற்றவர்களும் வாழ்கின்ற ஒரு துணைக்கண்டமாகும். அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது வலியுறுத்தப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்ன? ஜாதியின் மீது நம்பிக்கை வைப்பதுதானே? அவர்களின் குருநாதரான எம்.எஸ்.கோல்வாக்கர் ஞானகங்கையில் வெளிப்படையாகவே கூறியுள்ளாரே!

ஜாதி அமைப்பு முறையைச் சிலர் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். பழங்காலத்தில் ஜாதி அமைப்பு முறை இருந்து வந்தது. நாம் அதன் உச்சியிலே இருந்தோம். ஆனால் இந்த ஜாதி அமைப்பு முறை நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

உண்மையிலேயே இந்த ஜாதி அமைப்பு முறை சமூகத்தில் ஒற்றுமையை வளர்ப்பதற்கே பயன்பட்டிருக்கிறது என்ற உண்மையைத் தலைகீழாகப் புரட்டிச் சொல்லுகிறார்.

பகவத் கீதையும் இந்த வர்ண ஜாதி அமைப்பு முறையை வலியுறுத்துவதால் அவர்களின் இந்துத்துவா கொள்கைப்படி இந்த நூலைப் புனித நூலாக அறிவித்திட முயலுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வர்ணதர்மத்தை நானே படைத்தேன் என்று கிருஷ்ணர் சொல்லுகிறாரே என்று கேட்டால் மிகுந்த சாமர்த்தியம் என்று நினைத்துக்-கொண்டு குண கர்ம அடிப்படையில் படைத்ததாக வெண்டைக்காய், விளக்-கெண்ணெய் வியாக்கியானங்களைச் செய்கின்றனர் சிலர்.

பிர்மாவின் நெற்றியில் பிராமணன் பிறந்தான்; தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான்; இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தான்; பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று பிறக்கும் போதே முத்திரை குத்திவிட்ட பிறகு, குணத்தின் அடிப்படையில் வந்தவர் என்ற கேள்வி எங்கே இருந்து வந்ததாம்?

ஆனால் இவர்கள் சொல்லுவது போல காஞ்சி சங்கராச்சாரியார் சமாதானம் சொல்லவில்லை.

எத்தனை வயதுக்கு மேல் இப்படிக் குணத்தை அறிந்து அதனை அனுசரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாசம் பண்ணுவது? முக்கியமாக பிராமணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரண்டு ஆண்டுகளில் தன் தொழிலுக்-கானவற்றைப் படித்துவிட்டு பிறகு அவற்றில்-தானே அனுஷ்டானம் பண்ண வேண்டியும் உள்ளவனாகவும், பிறருக்குப் போதிக்க வேண்டியதைப் போதிக்கவும் முடியும் குணம். திளிஸிவி ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால் கற்க வேண்டியது இளவயசு முழுதும் பலபேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப்பிடிக்காமல் இருப்பதாகவே ஆகும். (தெய்வத்தின் குரல் – முதல் பாகம் பக்கம் 1001_1003)

குணத்தின் அடிப்படையில்தான் பகவான் வருணத்தைப் படைத்தான் என்று வியாக்கியானம் செய்து தப்பிக்கப் பார்ப்பவர்-களுக்கு காஞ்சி சங்கராச்சாரியாரின் இந்தக் கருத்தைச் சமர்ப்பிக்கிறோம். முடிந்தால் சங்கராச்சாரியார் உளறிக் கொட்டியுள்ளார் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

பூரி சங்கராச்சாரியாரோ ஒரு படி மேலே தாவி, பெரிய மேதாவியாகப் பேசுகிறார். ஆனந்த விகடன் சார்பில் மணியன் பூரி சங்கராச்-சாரியாரிடம் பேட்டி கண்ட போது என்ன சொல்லுகிறார்?

இந்தக் காலத்துக்கு கர்மங்களின் அடிப்படையில் அல்ல, முப்பிறவியில் அவர்கள் செய்த குணம் கர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், சத்திரியர்கள் என்றும் படைக்கப்-பட்டிருக்கிறார்கள் (ஆனந்த விகடன்_16.6.1974) என்று சொன்னாரே! இதற்கு என்ன பதில்?

பகவத் கீதை என்பது பிறப்பிலே பேதம் வளர்க்கும் நூல் என்பது வெளிப்படை. சுதந்திர நாடு என்று கூறப்-படும் ஒரு நாட்டில் இத்தகைய நூல்தான் புனித நூலா?

இன்னொன்றும் முக்கியமானது. மக்கள்-தொகையில் சரி பகுதியினரான பெண்கள் பற்றி இதே பகவத் கீதை என்ன சொல்லுகிறது?

பெண்களும், வைஸ்யர்-களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள். (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

இப்படிப்பட்ட கேவலமான நூலை இந்தியாவின் தேசியப் புனித நூல் பகவத் கீதை என்று ஒரு பெண் அமைச்சரே கூறுவதுதான் அதிர்ச்சிக்-குரியது.

பொதுவாக இந்து மத நூல்கள் அனைத்துமே பெண்-களைக் கேவலப்படுத்து-கின்றன என்பது வெளிப்படை!

சுஷ்மா ஸ்வராஜின் இந்த அறிவிப்பை முதலில் கடுமையாக எதிர்க்க வேண்டியவர்கள் பெண்கள்தான்.

மூன்றாவது முக்கியமானது கீதை ஒரு கொலை நூல் – கொலை செய்யத் தூண்டக் கூடியது; தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் நின்றபோது தனது கொலைக்கு ஆதாரமாக கீதையிலிருந்துதான் சுலோகத்தைச் சொன்னான், தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச் செய்யலாம் என்று கீதையில் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லவில்லயா?

காந்தியாரைக் கொல்லுவதற்குத் தூண்டுகோலாக கீதை இருந்தது என்பது – பகவத் கீதை புனித நூலாக அறிவிக்கப்படுவதற்கான கூடுதல் தகுதியாக பி.ஜே.பி.யினர் கருதியிருக்கக்கூடும்.

குருசேத்திரப் போரில் அர்ஜூனன் வில்லேந்தி நிற்கிறான்; எதிரே படைகள் – பார்த்தசாரதியாக கிருஷ்ணன்; தனக்கு முன் திரண்டு நின்ற தம் சுற்றத்தார் மீது கணைகளை ஏவத் தயங்குகிறான் அர்ஜூனன்.

நீ சத்திரியன் யுத்தம் செய்வது உன் வருண தர்மம், தயங்காதே என்று கொலை செய்யத் தூண்டுகிறான் பகவான் கிருஷ்ணன்.

அந்த நேரத்தில்கூட அர்ஜூனன் என்ன சொல்லுகிறான்? நான் எனக்கு முன்னால் எனது சகோதரர்களையும், சுற்றத்தாரையும் மாமன் மைத்துனர்களையும், சித்தப்பன் பெரியப்பாமார்களையும், அவர்களுடைய பிள்ளைகளையும் எனது முன்னோர்களையும், பாட்டன்மார்களையும், எனது உறவின் முறையினரையும் காண்கிறேன். அவர்களையெல்லாம் கொல்லுவதனால் நமது குலத்தையே அழிப்பதாகும். அவ்வாறு அழிப்பது என்றால் நமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். இந்தத் தவற்றைச் செய்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்று கதறுகிறான் அர்ஜூனன்.

சுற்றத்தார் கொல்லப்படுவதுகூட அவனுக்கு முக்கியமானதாகத் தெரியவில்லை, குலதர்மம் அழிந்துவிடுமாம். கணவன்மார்களை இழந்த பெண்கள் வேறு குலங்களில் திருமணம் செய்து கொள்வார்களாம். ஆனால் பார்த்தசாரதியாகிய கிருஷ்ணன் என்ன சொல்லுகிறான்?

உன் எதிரில் உள்ளவர்களின் உடலைத்தான் அழிக்கிறாய் – ஆன்மாவையல்ல – ஆன்மாவை யாரும் அழிக்க முடியாது என்று கூறுகிறான்.

இது உண்மையா? கொலை செய்பவன் எல்லாம் நான் என் எதிரியின் உடலைத்தான் அழித்தேன்;- ஆன்மாவையல்ல _- ஆன்மா அழியாதது என்று சொன்னால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

அந்த வகையில் பார்த்தால் கீதை ஒரு கொலை நூல் என்றாகவில்லையா?

கீதை ஒரு முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னாரே – கீதையைப் படிப்பதை விட கால் பந்து விளையாட்டைக் கற்று கொள் என்று இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தர் சொன்னாரே!

கீதையை இந்துவாக இருக்கிறவர்கள் கூட ஏற்றுக் கொள்ளாத நிலையில் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் ஏனைய மதக்காரர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் கண்டிப்பாக ஒப்புக் கொள்ளாத நிலையில், அந்நூலைத் தேசியப் புனித நூலாக அறிவிக்கலாம் என்று நினைப்பது ஜனநாயகம் அல்ல, பச்சையான சர்வாதிகாரம்_கண்மூடித்தனமான மத வெறித்தனத்தின் உச்சம்.

கீதையைத் தேசியப் புனித நூலாக அறிவிப்பதன் மூலம் இந்த நூலோர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உடைக்கிறார்கள். அதன் ஆணி வேரை வெட்டுகிறார்களா, இல்லையா?

அரசமைப்புச் சட்டத்தின் சரத்தினைக் காப்பாற்றத் தவறியதன் மூலம் ஆட்சி அதிகாரப் பொறுப்பில் இருக்க பி.ஜே.பி.யினர் தகுதியற்றவர்-களாகி விட்டார்கள் என்று கூடப் பொருள் கொள்ளலாம்

பி.ஜே.பி அரசு மதவாத வெறிபிடித்தது. மதவெறி யானையாக கண்மண் தெரியாமல் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டது.  அனேகமாக அதுவே அவர்களின் சவக்குழிக்குச் சரியான ஏற்பாடாகப் போகிறது என்பது மட்டும் உண்மை.

வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் நூல் புனித நூலாக அறிவிக்கப்படுமானால்; பெரும்பான்மை மக்களான சூத்திர பஞ்சம மக்களின் எழுச்சியால், அதற்குக் காரணமான ஆட்சியின் கடையாணி கழற்றப்படும். பாவயோனியில் பிறந்தவர் பெண்கள் என்று கூறப்படுவதால், அந்தப் பெண்கள் அக்னிக் குஞ்சுகளாகி, ஆட்சி அதிகாரத்தை அக்னிப் பரிட்சைக்கு ஆளாக்குவார்கள். கொலைகார நூலே ஆட்சியின் தற்கொலைக்குப் பாடம் கற்பித்துக் கொடுக்கப்போகிறது- இது நிச்சயம்!

திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் பிஜேபியினருக்கு அப்படி என்ன கரை புரண்ட காதல். இந்தியாவெங்கும் திருவள்ளுவர் நாளைக் கொண்டாடப்போகிறோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆராதிக்கிறாரே இதன் பின்னணி என்ன?

திருக்குறளை மதிப்பதாக இருந்தால் அதில் திருவள்ளுவர் கூறிய கருத்துகளை கருவூலம் போன்ற நெறிகளை மதிப்பதாகத்தான் பொருள் கொள்ள முடியும்.

அத்தகு எண்ணம் அவர்கள் இதயத்தில் பூத்துக்குலுங்குமேயானால் கீதையை, இந்தியாவின் தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போவதாகச் சொல்லுவார்களா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திருக்குறள். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்பது கீதையின் குரல். நான்குவகை வருணங்களையும் நானே உண்டாக்கினேன். அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர்கள் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது.
(கீதை அத்தியாயம் 4 சுலோகம் 13)

குறள் கூறும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும், நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்று கூறும் கீதையின் கருத்தும் அசல் முரண்பாட்டின் முகவரியல்லவா?
குறளும், கீதையும் எப்படி ஒன்றாகப் பயணிக்க முடியும்? திருக்குறளை அதன் உன்னதத் தத்துவங்களுக்காக உயர்த்திப் பிடிப்பது உண்மையென்றால் கீதையைக் கிழித்துக் குப்பை மேட்டில் அல்லவா தூக்கி எறிய வேண்டும். இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மானாக் கடை

என்ற வள்ளுவர் எங்கே? – பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறுகிற கிருஷ்ணனின் கீதை எங்கே?! கொல்லாமை பற்றி தனி அதிகாரம் பாடிய திருவள்ளுவர் எங்கே? கொலை செய் – அது உன் குலதர்மம் என்று கூறிய கிருஷ்ணனின் கீதை எங்கே திருக்குறளைத் தேசிய நூலாக இவர்கள் அறிவிக்கவில்லை. மாறாக மக்களைப் பிறப்பின் அடிப்படையிலேயே பேதப்படுத்தும், பிளவுபடுத்தும் கீதையைத்தான் தேசியப் புனித நூலாக அறிவிக்கிறார்கள்.

இதன் பொருள் என்ன? பி.ஜே.பி.யாக இருக்கட்டும், சங்பரிவார்களாக இருக்கட்டும் – அவர்கள் தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டுமானால், தமிழ் உணர்வைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் போற்றும் திருக்குறளை மதிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.

அதற்கான சூழ்ச்சி வலைதான் இது என்பதைத் தமிழர்கள் உணரத் தவறினால், ஆரியத்தின் பரம்பரைக் குணம் என்னும் வஞ்சகத் தூண்டிலுக்குத்தான் இரையாக நேரும்.

திருக்குறள் பற்றி பார்ப்பனர்களின் கருத்து என்னவென்று நமக்குத் தெரியாதா? மற்ற சராசரி மனிதர்களை விட்டுத் தள்ளுங்கள், அவாளின் ஜெகத்குருவான சிறீலசிறீ சங்கராச்சாரியார், மறைந்த சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர  சரஸ்வதியின் மனப்பான்மை என்ன?

வைணவப் பெண்மணி

சூடிக் கொடுத்த சுடர்க் கொடி என்று போற்றப்படும் வைணவப் பெண்மணி ஆண்டாள் அம்மையார் எழுதியதாக கூறப்படும் (ராஜாஜி அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இந்த பெண்ணின் தோப்பனார் பெரியாழ்வார் எழுதி ஆண்டாள் பெயரில் வெளியிட்டார் என்று கூறுகிறார் – அசல் வைணவரான ராஜகோபாலாச்சாரியார்) திருப்பாவையிலே ஒரு பாடல்:

நாட்காலே நீர் ஆடி மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம். செய்யாதன செய்யோம். தீக்குறளைச் சென்றோதோம், அய்யமும் பிச்சையும் ஆம் தனையும் காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் என்பது திருப்பாவையின் இரண்டாம் பாடலாகும். இதற்கு ஜெகத் குரு சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பாஷ்யம் செய்தார்?

செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் என்பதில் உள்ள இரண்டாவது அடிக்கு பெரியவாள் என்ன பொருள் கூறுகிறார்? தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று வியாக்கியானம் செய்தாரா இல்லையா?

தீக்குறளை என்பதற்கு உண்மையிலேயே என்ன பொருள்? குறளை என்பதற்கு என்ன பொருள்? மதுரைத் தமிழ்ப் பேரகராதி தரும் பொருள் என்ன?

குறளை – குள்ளம், கோட் சொல், குற்றம் என்று பொருள் கூறுகிறது. தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்று பொருள் இருக்க தங்கள் இனத்திற்கே உரித்தான காழ்ப்புணர்வோடு, தமிழ் என்றாலே நீசமொழி என்று கருதுகிற மனப்பான்மை வெறியோடு இப்படிப் பொருள் கூறுகிறார் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறக்கூடாது.

மூத்தவர்தான் இப்படி என்றால் அவரின் சீடரான தலைக்காவேரி புகழ் – கொலை வழக்குச் சாமியார் ஜெயேந்திர சரஸ்வதியின் திருவாய் எப்படி மலர்கிறது.

திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே ஆகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது (தினத்தந்தி 15.4.2004) என்று கூறினாரே.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் பரிமேலழகரைத்தான் பெரிதாகக் கூறுவார்கள். இந்தப் பரிமேலழகரே என்ன எழுதுகிறார்?

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் என்று குறிப்பிடுகிறார் பரிமேலழகர்.

மனு தர்மத்தில் விதிக்கப்பட்ட(விதித்தன)வற்றை ஏற்றும், மனு விலக்கியவற்றை விலக்கியும் எழுதப்பட்ட நூலா திருக்குறள்?

பரிமேலழகர் உரையும், ஜெயேந்திரர் கூற்றும் ஒரே தொப்புள் கொடி உறவாக இருப்பதைப் புரிந்து கொண்டால் தமிழ் மீதும், தமிழர் மீதும் அவர்களின் எண்ணத்தின் வேரில் பழுத்துள்ள நச்சுக் கனியைப் புரிந்து கொள்ள முடியும் இந்தப் பார்ப்பனர்களின் நச்சுப் பல்லைப் பிடுங்கும் வகையில்தான், பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடினார். வள்ளுவன் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்குகொரு நீதி என்று நாக்கைப் பிடுங்குமாறு நச்சென்று கேட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *