நூலின் பெயர்: ஜனநாயகம்
ஆசிரியர்: கவிஞர் நா.மா. முத்து
வெளியீடு: வள்ளிமயில் பதிப்பகம்,
32/1, கங்கை அம்மன் கோயில் தெரு,
வடபழநி, சென்னை – 600 026.
பக்கங்கள்: 144 விலை: ரூ.60/-
இன்றைய சமுதாயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. அமைதிப் புரட்சிக்கு வித்திட்டு, ஜோதிடத்தின் இன்றைய நிலையினை விளக்கி, விரட்டி அடிப்பதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
கடவுள் என்னும் கற்பனைப் பெயரால் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் விளக்கப்பட்டு உண்மை நிலை உணர்த்தப்பட்டுள்ளது. இங்கர்சால், லெனின், ஸ்டாலின் போன்ற பெருந்தலைவர்களின் கொள்கைகள் ஆங்காங்கே இழையோடுகின்றன.
காதல், ஊடல், திருமண வாழ்க்கை, அரவாணிகள், வாக்குச் சீட்டின் வல்லமை, நீதித்துறை, காவல்துறை என வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் அடிக்கோடிட்டுச் சொல்லியுள்ளது. உழவுத் தொழிலின் மேன்மை, மதுபானம், புகையினால் ஏற்படும் தீங்குகள் விளக்கப்பட்டுள்ளன.
சாமியார்களின் அடாவடித்தனங்கள் விளக்கப்பட்டு இந்த எத்தர்களை வெல்லும் வழி கூறி, எதார்த்த சூழ்நிலையை உணராமல் / சித்தாந்தம் பேசுவோர் / சிந்திக்கும் திறனற்ற முட்டாள்கள் / சமுதாய உணர்வற்ற சடலங்கள் / என்று சாடப்பட்டுள்ளது.
மனித இன வரலாற்றில் மதம் ஒரு கரும்புள்ளி என்பதனை விளக்கி, ஜல்லிக்கட்டில் ஏற்படும் உயிரிழப்பு, துன்பங்களைக் கூறி, காலம் மாறி வருகின்றது / கருத்துகளிலும் மாற்றம் தேவை/என்று பல கோணங்களில் ஆராயப்பட்டு சிந்தனைக்கு வித்திட்டிருப்பினும் பிற்பகுதியில் கவிதை வரிகள் மனதில் தொய்வினை ஏற்படுத்தியிருப்பதே ஜனநாயகம்.
நூலின் பெயர்: தமிழகத்தின் செல்வன்
ஆசிரியர்: அ. அய்யாசாமி
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை , பாலவாக்கம், சென்னை – 41.
பக்கங்கள்: 56 விலை: ரூ.40/-
இன்று பல்வேறு பரிமாணங்களுடன் பவனிவரும் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்வியல் – குணநலன்கள் – சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன
பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட விதம், மேயர் பதவிக்கே புதிய பொருள் உருவாக்கித் தந்தது, அமைச்சர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றியது, ஊராட்சிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டியது, சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிரை உயர்த்தியது, துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்று தொழில் வளம் கொழிக்கும் மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்த மேற்கொண்டு வரும் முயற்சிகள் சுருங்கச் சொல்லி விளக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற போது, எந்தப் பதவியாக இருந்தாலும் அதனை மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவதற்கான பொறுப்பு என்று கருத வேண்டுமே தவிர, அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்பு என்று எண்ணிவிடக் கூடாது என்று என் தந்தையாரிடமிருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அடக்கத்துடன் தெரிவித்த பெருமைக்குரியவர்.
கல்வியின் இன்றியமையாமையை விளக்கியுள்ள தன்மை, எந்தப் பணியையும் நேரில் சென்று பார்க்கும் பொறுப்புணர்வு, திறமைக்கு மதிப்புக் கொடுத்து பள்ளி மாணவிக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தது என்று மனிதநேயப் பண்பாளராக – சாதனையாளராகத் திகழ்பவரை, படிப்போர் அகத்தில் நீங்கா இடம் பெறச் செய்திருப்பதே தமிழகத்தின் செல்வன்.
– செல்வா