கேள்வி : மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை (ராமர் பாலத்தை இடிக்காமல்) நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் பிற்போக்குச் சிந்தனை குறித்து?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்
பதில்: மாற்று வழி அல்ல அது; ஏமாற்று வழி – பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால்.
இந்த குறிப்பிட்ட ஆதாம் பாலப் பகுதியைத் தேர்வு செய்தது நீரி (NEERI) என்ற சுற்றுச்சூழல், பொறியியல் ஆய்வு நிறுவன ஆய்வாளர்கள். அதுவும் வாஜ்பேயி பிரதமராக இருந்த ஆட்சிக் காலத்தில், இன்றைய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, உமாபாரதி போன்ற பலரும் கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளனராம்!
அப்போது இல்லாத இராமர் பாலம் திடீரென்று முளைத்தது; தி.மு.கவும், அய்.மு. அரசுக்கும் பெருமை _ சேது சமுத்திரத் திட்டத்தால் வந்துவிடக் கூடாது என்ற அரசியல் உள்நோக்கத்துடன் கிளப்பப்பட்டது. தங்கள் தடங்களைத் தாங்களே_ இவ்வளவு செலவு செய்த பிறகும் கூறுவது அசல் கேலிக் கூத்து அல்லவா?
கேள்வி : சகாயம் குழு சுதந்திரமாகச் செயல்பட மாநில அரசு முழு ஒத்துழைப்புத் தரும் என கருதுகிறீர்களா? – கா.நறுமுகை, நுங்கம்பாக்கம்
பதில்: முதுகில் மூன்றாவது கை முளைத்தால் வசதியாகத்தான் இருக்கும். முளைக்குமா?
கேள்வி : தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய அரசும் மாநில பி.ஜே.பி.யும் ஆடும் நாடகத்தின் உண்மை நிலை எப்போது தெரிய வரும்?
– கோ.சுருதி, பெரியார் நகர்.
பதில்: உண்மை ஒரு நாள் வெளியாகும்; ஊரும் உலகமும் தெளிவாகும்!
கேள்வி : மிகப் பெரிய அரசியல் வல்லுநர்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த தலைவர்கள் ஆகியோருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்காத நிலையில், மிகச் சாதாரண தலைவர்கள் சர்வ சாதாரணமாக அதிகாரத்தின் உச்சிக்கு எப்படிச் செல்ல முடிகிறது? – மு. கார்வேந்தன், மதுரை
பதில்: வாக்கு வங்கியின் விசித்திரம் அது. ஜனநாயகத்தின் பலவீனங்களில் முதன்மையானது! மலிவு விலைக்கு வாக்குகள் கிடைப்பது மற்றொரு காரணம்.
கேள்வி : ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த கொள்கை முடிவே முக்கியக் காரணம் என்பது தெரியவந்ததன் மூலம், அதன் உண்மை முகமூடி கலைந்துள்ளது என உறுதியாகக் கூறலாமல்லவா?
– த.கன்னியப்பன், வேலூர்
பதில்: ஆம். உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்-பட்டுள்ளது. இந்தக் கொள்கை முடிவுக்கு பா.ஜ.க. அரசுதான் காரணகர்த்தாவாகும். அது இதில் தெளிவான பார்வை கொள்ள வேண்டும்.
கேள்வி : தகுதி இழப்பு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே தேர்தல் ஆணையம் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது?
– செ.சாந்தி, ஆளூர்
பதில்: தேர்தல் ஆணையத்தைப் பூணூல் முப்பிரிகள் – சுற்றி வைத்துள்ளதால்.
கேள்வி : மக்கள் புரட்சி என்ற எச்சரிக்கையைக் கொடுத்திருப்பதன் மூலம் கலைஞர், தமிழ்நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்திற்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி என எடுத்துக் கொள்ளலாமா? – பொ.மணிமாறன், ஜெயங்கொண்டம்
பதில்: அறிவும், தெளிவும், பொதுநல மனப்பான்மையும் உடையவர்கள் புரிந்துகொள்வார்கள்.
கேள்வி : அ.தி.மு.க. அதிகாரத்திற்கு வந்தால் கட்டண உயர்வுகளும் நீதித்துறை மேல்முறையீடுகளும் நிரந்தர கொள்கைகளாகவே மாறிவிடும்போல் தோன்றுகிறதே?
– ப.மாணிக்கவேல், மாயவரம்
பதில்: உங்களைப் போல் புரிந்துகொள்ளும் மக்கள் எண்ணிக்கை பெருக வேண்டும். அப்போதுதான் விடியல் ஏற்படும்.
கேள்வி : கருப்புப் பணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு பொதுமக்களிடம் தகவல் கோரி பெறுவது என்பது நழுவலுக்கான அடிப்படையா?
– மா. சாரதி, திருச்சி
பதில்: திசை திருப்பல் நாடகம்; பொதுமக்கள் குரலுக்கு மதிப்பளிப்-பார்களா? நம் கருப்புப் பணம் உள்ள இடம் திருப்பதி உண்டியல்தான். சுவிஸ் வங்கியைப் போல என்று கூறினால், அங்கே செல்வார்களா?
சினிமா நடிகர்கள் வாங்கும் பணம் எல்லாம் வெள்ளையா? அடானிகளும், அத்வானிகளும், அரசியல்வாதிகளும் வெள்ளைப் பணமா வைத்துள்ளார்கள்?
கேள்வி : தமிழ்த் திரைப்படங்களில் இன்று பரவலாக பாலியல் வக்கிரங்களும் வன்முறைகளும் இடம் பெறுகின்றன. இதற்கு யார் பொறுப்பு?
– கவின்பரிதி, ஊற்றங்கரை
பதில்: தணிக்கைக் குழுவினர் ஒருபுறம், மலிவான உணர்வுகளுக்குத் தீனி போடும் படம் பார்ப்பவர்கள் மறுபுறம்!
கேள்வி : வெளிநாட்டில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்திய ஏழைகட்கு இலட்சம் இலட்சமாகப் பங்கிட்டு அளிப்பதாக அளந்துவிட்ட மோடி, இன்று கருப்புப் பணம் எவ்வளவு என்று தெரியவில்லை என்பது நியாயமா? பங்கு வைப்பதில் பாரபட்சமா?
– ச.பூங்குழலி, திருவரங்கம்
பதில்: போகப் போகப் புரியும். பொல்லாங்கு எங்கே என்பது தெரியும்!
கேள்வி : பெருகிவரும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உலக வங்கி எச்சரித்துள்ளதே, அய்.நா.சபை தீவிரமாக அதை அமல்படுத்தினால் என்ன? தங்கள் கருத்து?
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
பதில்: தந்தை பெரியார் தம் மண்டைச் சுரப்பை உலகு பின்பற்றும் காலத்தின் தொடக்கம் இது. அவர் கூறிய கருத்துகள் உலகை ஆளத் தொடங்கிவிட்டன என்பதற்கான எடுத்துக்காட்டு. மெல்ல வெற்றி பெறும்.
கேள்வி : காந்தியாருக்கு துப்பாக்கித் தோட்டாக்களைப் பரிசாகத் தந்த இந்துத்துவா, அரியணை ஏறி அவரது கல்லறையிலேயே மலர்வளையம் வைப்பது எதைக் காட்டுகிறது?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில்: நல்ல நாடகத்தின் அரங்கேற்றம் அது!
கேள்வி : ஆண்ட, ஆளும் அரசுகளின் கொள்கை முடிவினால் அனுமதிக்கப்பட்டு, அந்நிய நாட்டு முதலீடுகளின் ஆதரவுடன் இந்தியாவில் தொடங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் எதிர்காலம் பல ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய நோக்கியா நிறுவனத்தினைப் போன்று அமையக் கூடுமோ? தங்கள் கருத்து என்ன?
– த. சுரேஷ், நாகர்கோவில்
பதில்: நோக்கியா நிறுவனம் மூடப்பட நமது மாநில அரசும் _ மத்திய அரசும், இறுதியாக அக்கம்பெனி நிர்வாகமும்தான் காரணம். இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்படாவிட்டால், மக்கள் வேதனை _ வேலையற்ற நிலை பெருகும் அபாயமும் அதிகரிக்கக்கூடும்!
கேள்வி : உலகம் முழுவதும் உள்ள கழகத் தோழர்கள், தந்தை பெரியார் பற்றாளர்கள், கழக ஆர்வலர்கள், சமூக நீதியாளர்கள், இன உணர்வாளர்களுடன் கலந்துரையாட, கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முகநூல், டுவிட்டர் தாங்கள் தொடங்கி உள்ளீர்களா?
– மன்னை சித்து, மன்னார்குடி
பதில்: நமது தோழர்கள் தொடங்கி நடத்திக் கொண்டுள்ளார்களே! இயக்கம் இதில் மேலும் கவனம் செலுத்தி, உங்களது ஆசையை நிறைவேற்றும்.
கேள்வி : வடநாட்டில் அம்பேத்கரை ஏற்பவர்கள் பெரியாரை ஏன் ஏற்பதில்லை எனும் தமிழனின் கருத்துப் பதிவை குமுதம்- தீராநதியில் இந்த மாதம் படித்தீர்களா?
– சின்னவெங்காயம், சென்னை
பதில்: அக்கருத்து தவறு. ஓரிரு இடங்களில் அப்படி இருக்கலாம்; பெரும் பகுதியில் ஏற்கிறார்கள் _ மும்பையில் அம்பேத்கர் நினைவிடம் அருகில் புத்தகங்கள் விற்கும். அதிக ஆங்கில அறிவு இல்லாத மராத்திய நண்பர் கூறினார். இங்கே பெரியார் படத்தை எங்கள் வீடுகளில் ஏராளம் வீட்டுக்கு வீடு மாட்டியுள்ளோம் என்று. நாம் அறிந்தவரை சில விஷமிகள் செய்யும் தவறான பிரச்சாரம் இது!
இங்கேயே சில மேதாவிலாசங்களும், அறிவு ஜீவிகளும் அப்படிப்பட்ட மனப்பான்மையுடன் இருக்கும்போது, வெளியே இருந்தால்கூட அதிசயமில்லையே!
சூரியனையும், காற்றையும் யார் அங்கீகரிக்கா-விட்டால் என்ன? (குப்பைகளைப் படித்துக் குழம்பாதீர்).
கேள்வி : எப்பாடுபட்டாகிலும் கல்வித் திட்டத்தில் காவித் திட்டம் செயல்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட, இந்து தேசியவாதி என்பதில் பெருமை பெறுவதாக தம்மை அறிமுகப்படுத்தும் பிரதமர் மோடியின் அரசு மேற்கொள்ளும் கல்விக் கொள்கை பற்றி…
– வே.சொர்ணம், ஊற்றங்கரை
பதில்: பலத்த எதிர்ப்பு _ நாடு தழுவிய அளவில் ஏற்படும். எனவே, அதை வரவேற்கவே செய்கிறோம்.
கேள்வி : பாகிஸ்தானில் உள்ள 500 நாத்திகர்களுக்கு பெரியார் பன்னாட்டு மய்யம் மற்றும் உலக நாத்திக அமைப்போடு தொடர்பு உள்ளதா?
– திங்கள் நகர் நூர்தீன், குமரி
பதில்: இல்லை. அப்படி இருப்பதும் நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. 2-016 இல் உலக நாத்திகர் மாநாட்டிற்கு வரும் (ஜூன், ஜூலையில் தமிழ்நாட்டில்) நபர்களாக அவர்கள் இருந்தால் வரவேற்போம் _ கொள்கை அடிப்படையில்!