வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம்…
குன்றக்குடி அடிகளார் தீட்டிய தலையங்கம்
அறிஞர் அண்ணாவின் பெயரில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட இருப்பது குறித்து அதனை வரவேற்று, வாழ்த்தியும், முக்கிய ஆலோசனை வழங்குமுகமாக அன்றைய தமிழக அரசுக்கு விடுதலை 7.4.1978 அன்று தலையங்கம் தீட்டியது. அண்ணாவின் பெயரால் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட இருப்பது கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம் – வரவேற்கின்றோம்.
இதற்குக் காரணமாக இருக்கக் கூடிய தமிழக அரசையும், குறிப்பாக முதலமைச்சரையும், கல்வி அமைச்சரையும் நன்றி உணர்வோடு பாராட்டுகிறோம். சாதாரண ஒரு குடும்பத்திலே குலப் பெருமையோ குடிப் பெருமையோ இல்லாத ஒரு குடும்பத்திலே பிறந்து, எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையே தட்டுத் தடுமாறி பட்ட மேற்படிப்புப் படித்து, தான் படித்த படிப்பைக் கொண்டு தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என்கிற சுயநலச் சக்கரமாகச் சுழலாமல், தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வளத்தால் கவர்ச்சிக்கப்பட்டு, சூத்திர மக்களின் விழிப்புக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
அத்தகைய ஒரு அறிஞரின் பெயராலே பல்கலைக்கழகம் அமைகிறது என்றால், தமிழன் என்ற உணர்வு உள்ள நல்ல ஒவ்வொரு-வனுடைய நெஞ்சமும் மகிழ்ச்சியால் துள்ளவே செய்யும்! என்றும்,
பார்ப்பனரல்லாதார் வாழ்வு வளரும் தன்மையைக் கெடுக்க மோகினி அவதாரம் போல் பார்ப்பனர் கண்டுபிடித்திருக்கும் சாதனம் எந்தக் காலத்திற்கும், எந்தப் பதவிக்கும் தகுதி திறமை வேண்டும் என்பதாகும் என்று பார்ப்பனரல்லாதாரின் பாதுகாப்புக் கவசமாகிய தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு நாம் செயல்பட்டாக வேண்டும்.
தகுதி திறமை இருக்கிறது. ஆகவே சமூக நீதியை ஒழித்து தாங்களே ஏகபோக உரிமை கொண்டாடலாம் என்று எண்ணி இறுமாந்து கிடந்தவர்களின் திறமையும், தகுதியும் நமக்குத் தெரியும். படித்ததை வாந்தி எடுப்பதாலோ, அத்திம்பேர் அம்மாமி என்று பேசி அதிக மார்க்குகள் வாங்குவதாலோ மோகனாஸ்திரம் விட்டு முன்னணியில் நிற்பதாலோ, நாம் ஏமாற வேண்டியதில்லை. தகுதி திறமையை நிர்ணயிக்கும் கருவியும் முறையும் மாறிவிட்டால் இவர்களுக்கு ஆபத்துத்தான்-_-ஆசையிலே மண்தான் என்று எவ்வளவு அழகாக அய்யாவின் அதே கருத்தைப் பேசிவிட்டிருக்கிறார் அண்ணா அவர்கள்!
அய்யா அவர்கள் எந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்களோ_அதே வார்த்தையைத்தான் அண்ணா அவர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அய்யா, மோகினி அவதாரம் என்றார். அண்ணா அவர்களோ மோகனாஸ்திரம் என்கிறார். எதிரிகளின் சூழ்ச்சியை நமக்குத் தெளிவாகப் புரியும்படி எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எதிரிகளின் இந்த யூகத்தை நாம் புரிந்துகொள்ளத் தவறுவோ-மேயானால் அந்த இடத்திலேயே நாம் நமக்குச் சவக்குழியை வெட்டிக் கொண்-டோம் என்று பொருள்.
அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் பல்கலைக்கழகத்தை நிறுவும்பொழுது இந்த அடிப்படைக் கண்ணோட்டத்தோடு விஷயங்களைத் தொடங்க வேண்டியது அவசியமாகும்.
கல்வி என்றால் இன்னது என்று தெரியாத முதல் தலைமுறையைச் சார்ந்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் சூழ்ச்சித் திறன்களால் தலைமுறை தலைமுறையாகக் கல்வியைத் தங்களுக்குள் மட்டும் வைத்துக்கொண்டுவிட்ட கூட்டத்தோடு இவ்வளவு தூரம் போட்டி போட வேண்டும் என்று எதிர்பார்ப்பது திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைச் சூறையாடுவதல்லாமல் வேறு என்ன?
அண்ணாவின் பெயரால் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்கிறபொழுது நமக்குப் பெருமகிழ்ச்சிதான். ஆனால், அந்தப் பெயரின் கீழ் மதிப்பெண்கள் பெயரால் ஒடுக்கப்-பட்டவர்களின் விலா எலும்பை முறிக்கும் யுக்தியை நினைக்கும்பொழுது வேதனை தாளவொண்ணாததாக இருக்கிறது.
அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்-படுவதற்கு அர்த்தமும், பொருத்தமும் உள்ளதாக இருக்க முடியும். இல்லை என்றால் ஊமைக்குப் போய் தேன்மொழி என்ற பெயர் வைத்த பொருத்தமற்ற பெயராகிவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று விரிவான தலையங்கம் தீட்டி மகிழ்ந்தது விடுதலை. எனக்கு தவத்திரு அடிகளார் உற்சாகப்-படுத்திடும் வகையில் ஒரு அருமையான கடிதம் எழுதினார்.
கழகப் பொதுச் செயலாளராக கி.வீரமணி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பாராட்டு தெரிவித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், தமது தமிழகம் திங்களிதழில் வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம் என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில்,
திராவிடர் கழகத்தின் ஆயுட்காலப் பொதுச்செயலாளராக அருமை நண்பர் திரு.கி.வீரமணி அவர்களை, மறைந்த அன்னை மணியம்மையார் அவர்கள் நியமனம் செய்து அந்த நியமனம் திராவிடர் கழகப் பொதுக் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப் பெற்றமை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அன்பர் திரு. வீரமணி ஆண்டில் இளையர் ஆயினும்; பல ஆண்டுகள் தந்தை பெரியாரிடத்தும் அன்னை மணியம்மை-யாரிடத்தும் இருந்து பணி செய்த வகையில் நிறைந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இயல்பாக அவருக்கிருக்கும் நுண்ணறி-வோடு அனுபவமும் இயைந்து பொலிவுறுகிறது. எதிர்காலக் கணிப்பு பற்றிய அறிவுத் திட்பம் அவருக்கு நிறைய உண்டு. அவரோடு கலந்து பேசிய பொழு-தெல்லாம் அவர் எண்ணிக் கோடிட்டுக் காட்டிய எதிர்கால நிகழ்வுகள் அப்படியே நடந்தன. பழகுதற்கினிய பண்பாளர்; இனநலம், இனமானம் காப்பதில் உறுதியான பிடிப்புள்ளவர்; சிறந்த பேச்சாளர்; ஆற்றல்மிக்க எழுத்தாளர்; இயக்கத்தின் நோக்கங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் திறனுடையவர்; இனிய நண்பர் வீரமணி அவர்களை திராவிடர் கழகம் பொதுச்செயலாளராகப் பெற்றுள்ள இந்த ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு. இந்தத் தலைமுறையின் புதிய வரலா-று படைப்பதில் அவர்கள் வெற்றி பெறுமாறு பாராட்டி வாழ்த்துகின்றோம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் 1967இல் முதல் அமைச்சர் பொறுப்பேற்ற நிலையில் சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. அது பார்ப்பனர் சமுதாயத்தவருக்கும்கூட எப்படி வாழ்வளித்தது பயன் அடையச் செய்தது என்ற ஒரு வழக்கு வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், அன்று விடுதலையில் வெளியிட்ட ஒரு முக்கியச் செய்தி பலருக்கும் வியப்பை அளிக்கும்! அதனை இங்கே குறிப்பிடுகிறேன். தேவகோட்டையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று தேவகோட்டை உதவி செசன்சு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டது (24.04.1978).
இந்தத் தீர்ப்பு தேவகோட்டை திருப்பத்தூர் ரோட்டில் டைப்-ரைட்டிங் பள்ளிக்கூடம் வைத்-திருந்தவர் டி.ஆர்.சீனிவாச ராகவ அய்யங்கார் என்ற ராஜாமணி. இவர் 1945ஆம் வருடம் தன் அய்யங்கார் ஜாதியில் கோமள-வல்லி என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு நவநீத கிருஷ்ணன், ஜெயராமன், குணசீலன் ஆகிய 3 ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் கோமளவல்லிக்கு இரண்டு தடவை வயிற்றில் ஆப்பரேஷன் நடந்ததால் மருத்துவர்கள் இனி கோமளவல்லி கணவனுடன் குடும்ப வாழ்க்கை நடத்தக் கூடாது என்று சிபாரிசு செய்தார்கள்.
நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே தன் உடல்நிலையால் கணவன் வாழ்க்கையை இழக்கக்கூடாது என்று கருதிய கோமளவல்லி தன் கணவர் சீனிவாச ராகவ அய்யங்காருக்கு மதுரை தேவகோட்டை டிரான்ஸ்போர்ட்டில் டிரைவராக இருந்த குருசாமி நாயுடு மகள் மேற்படி டைப்ரைட்டிங் பள்ளியிலேயே படித்துக்கொண்டு இருந்த சரஸ்வதியை கலப்புத் திருமணமாக செய்து வைக்க சரஸ்வதியின் பெற்றோர்களிடம் பெண்-கேட்டு தானே உடன் இருந்து 8.7.1962இல் திருப்பதியில் திருமணம் செய்து பின் தேவகோட்டையில் தடபுடலாக வரவேற்பும் நடைபெற்றது.
கோமளவல்லி அம்மாள் 11.8.63இல் காலமானார். கோமளவல்லி அம்மாள் காலமான உடன் அவரின் பெற்றோர்கள் சீனிவாச ராகவனுக்கு முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது சரஸ்வதியை கலப்புத் திருமணம் செய்தது செல்லாது. ஆகவே நம் ஜாதியில் வேறு ஒரு திருமணம் செய்யவேண்டும் என்று பிரஸ்தாபம் செய்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட சரஸ்வதி கணவனிடம் சொல்ல சீனிவாச ராகவனும் அட்வகேட்டைக் கலந்து 30.10.63இல் தனது டைப்ரைட்டிங் பள்ளியில் வைத்து தனது நண்பர்கள் நிருபர் ஆர்.சிவசூரியன், நகரமன்ற உறுப்பினர் என்.பரஞ்சோதி, சுந்தரம் என்ற சுந்தரராச அய்யங்கார், முருகா என்ற மாணிக்கவாசகம் செட்டியார் மற்றும் பலர் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார். தாலி கட்டி மாலை மாற்றிக் கொண்டார்கள். பின் சரஸ்வதியும், சீனிவாசராகவனும் 1963 முதல் 1976 வரை வாழ்க்கை நடத்தி வந்தார்கள். இவர்களுக்கு வெங்கட கணபதி என்ற ஆண் குழந்தையும், ராஜேஸ்வரி என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
சீனிவாச ராகவன் 12.11.1976இல் திடீரென மரணம் அடைந்தார். இதன் தொடர்பாக நடந்த சகல சடங்குகளையும் குடும்பத்துடனேயே இருந்து சரஸ்வதி செய்தார்.
எல்லாச் சடங்குகளும் நடந்து முடிந்தபின் சீனிவாசராகவனின் முதல் மனைவியின் மக்கள், முதல் பையன் ஆசிரியராகவும், 2ஆவது பையன் ஸ்டேட் பேங்கிலும், 3ஆவதுபையன் சப் கலெக்டர் அலுவலகத்திலும் வேலை செய்ததால் தனக்கும் தன் குழந்தைகள் வாழ்க்கைச் செலவுக்கும் டைப்ரைட்டிங் பள்ளியைத் தானே நடத்தி அதன்மூலம் வரும் வருமானத்திலிருந்து தன் குடும்பத்தை நடத்த எண்ணினார் சரஸ்வதி. சரஸ்வதி டி.காம் படித்தார்.
சரஸ்வதியை டைப்ரைட்டிங் பள்ளிக்கு வரக்கூடாது என்று மூத்த மனைவியின் மக்கள் தடுத்தார்கள். சரஸ்வதிக்குப் பங்கு கொடுக்க மறுத்தார்கள். சரஸ்வதியின் திருமணம் செல்லாது. ஆகவே பங்குதர முடியாது என்றார்கள்.
அதன்பேரில் சரஸ்வதி தேவகோட்டை சப்கோர்ட்டில் பாகப் பிரிவினை கோரி வழக்குப் போட்டார். வழக்கு விசாரணை தேவகோட்டை உதவி செசன்சு நீதிபதி திரு.ராமதாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சரஸ்வதி தரப்பில் 6 சாட்சிகளும் பிரதிவாதி தரப்பில் சீனிவாச ராகவனின் தாயார் அலமேலு அம்மாள், மகன் நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரும் சாட்சியம் அளித்தார்கள்.
நீதிபதி தனது தீர்ப்பில் சரஸ்வதியின் சுயமரியாதைத் திருமணம் 30.10.63இல் நடந்தது செல்லும். சீனிவாச ராகவனின் டைப்ரைட்டிங் பள்ளி, வீடு, நிலம் ஆகிய சொத்துகளில் சரஸ்வதிக்கும், அவள் குழந்தைகளுக்கும் பங்கு உண்டு. சீனிவாச ராகவன் இறந்தது முதல் டைப்ரைட்டிங் பள்ளி மற்றும் இதர சொத்துகளில் வந்த வருமானங்களுக்கு நவநீத கிருஷ்ணன் வகையறா கணக்குக் கொடுக்கும்-படியும் தீர்ப்புக் கூறினார். இந்த வெற்றி தந்தை பெரியார் அவர்களின் இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.
நினைவுகள் நீளும்…