மார்க் எடுக்காத குழந்தைகள் மக்குகளா? – 2

டிசம்பர் 01-15

– டாக்டர் ம.அமலி விக்டோரியா மஸ்கரன்ஹஸ் எம்.டி (மனநலம்)

கல்வித் திறனில் குறிப்பிடத்தக்க தாமதம்

படிப்பதிலும் எழுதுவதிலும்  தாமதமான வளர்ச்சி பெறும் குழந்தைகளில் சிலர் குறிப்பிடத்தக்க சில திறன்களில் மிகவும் பின்தங்கியிருப்பார்கள். அதில் ஒன்று, டிஸ்லெக்சியா எனப்படுகிறது. இத்தகைய குழந்தைகளுக்கு எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் இருக்கும். டிஸ்லெக்சியா குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இயல்பான புத்திசாலித்தனம் இருந்தாலும் அவர்களால் மிகவும் எளிமையான வாக்கியங்களைக்கூடப் படிக்க முடியாது. இத்தகைய பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்குப் படிப்பது ஒன்றுதான் சிரமமே தவிர மற்ற வகையான தகவல் தொடர்புகள் அனைத்தையும் புரிந்துகொள்ளும்.

இன்னொரு குறைபாட்டுக்குப் பெயர் டிஸ்கிராபியா. இந்தக் குறைபாடு  கொண்ட குழந்தைகளுக்கு எழுதுவது என்பது மிகவும் சிரமமானது. கேள்விகளுக்குப் பதில் கேட்டால் இந்தக் குழந்தைகள் டக்டக்.. எனச் சொல்லிவிடும். ஆனால், அதையே எழுதச் சொன்னால் சிரமப்படும். நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றில் இந்தக் குழந்தைகள் சிறப்பாகச் செயல்படும்.

அதேநேரத்தில், ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டுமென்றால் ரொம்பவும் கஷ்டப்படும். நாம் எல்லோருமே எப்படி ஏ.ஆர்.ரகுமானைப்போல பியானோவை வாசிக்க முடியாதோ, சச்சினைப் போல கிரிக்கெட்டில் ஸ்டிரைட்  ட்ரைவ் அடிக்கமுடியாதோ அதுபோலத்தான் அந்தக் குழந்தைகளும் கேள்விகளுக்கு வாயால் பதிலளித்துவிட்டு, அதையே எழுதுவதற்குச் சிரமப்படும். இன்றைய  சூழலில் இத்தகைய குழந்தைகளுக்குத் தேர்வின் போது, எழுதுவதற்கு ஒருவரைத் துணையாக வைத்துக்கொள்ள  சில பள்ளிகளில் அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், இத்தகைய குழந்தைகளுக்கு எழுதுவது மட்டும்தான் சிரமம் என்பதையும், கேள்விகளுக்-குரிய விடைகள் அவர்களுக்குத் தெரியும் என்பதையும் பெற்றோரும் ஆசிரியர்களும் உணர்ந்திருக்க  வேண்டியது அவசியமாகும். இன்னொரு குறைபாட்டின் பெயர், டிஸ்கால்குலியா. இந்தக் குழந்தைகளுக்கு எண்கள்(நம்பர்)தான் பிரச்சினை. இவர்களின் மொழியாற்றல் நன்றாக இருக்கும். இந்தக் குழந்தைகள் ஷேக்ஸ்பியரின் நாடக வசனங்களை மனப்பாடமாகச் சொல்லும். திருக்குறளையும் அதற்கான ஒரு டஜன் விளக்கங்களையும் தெளிவாகச் சொல்லும். ஆனால்,  அவர்களிடம் 12அய் 13ஆல் பெருக்கினால் என்ன வரும் என்று கேட்டால் ரொம்பக் கஷ்டப்படுவார்கள். மொழிப்பாடம், அறிவியல்,  சமூக அறிவியல் பாடங்களில் இந்தக் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கணக்கு மட்டும்தான் தகராறு.

கவனக்குறைவும் அதீத செயல்பாடும் உள்ள குழந்தைகள்

எந்தக் குழந்தையும் எல்லா நேரத்திலும் கவனத்தோடு இருப்பதில்லை. (ஏன் பெரியவர்களேகூட அப்படி  இருப்பதில்லை). அதுபோலவே எல்லாக் குழந்தைகளும் எப்போதுமே அதீத செயல்பாடுகளில் (அதிகப்பிரசங்கித்தனமாக) ஈடுபடுகின்றன என்றும் சொல்லிவிட முடியாது. எனினும், கவனக்குறைவும் அதீத  செயல்பாடும் உள்ள நிலைமைகள் இருக்கவே செய்கின்றன. இத்தகைய குழந்தைகளுக்கு ஆசிரியர்களிட-மிருந்து  தொடர்ந்து தண்டனையோ பெற்றோரின் கோபமான திட்டுகளோ தீர்வாகாது. மனநல மருத்துவரிடம் முறையான சிகிச்சையே இதற்குத் தீர்வாகும். ஆனால், பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த நிலை குறித்து கவனத்துடன் இருப்பதில்லை.

உணர்ச்சிவசப்படுதல்

பள்ளியில் கல்வித்திறன் குறைவாக இருப்பதற்கு குழந்தைகளை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. வீடுகளில் (அடிக்கடி) உருவாகும் பிரச்சினைகளும், பள்ளிகளில் (அவ்வப்போது) நடக்கும் பிரச்சினைகளும் குழந்தைகளை உணர்ச்சிவசப்-படவைத்து மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. சரிப்படுத்துவது எப்படி?

நாம்  இங்கே குறிப்பிட்டுள்ள குறைபாடுகள் அனைத்தும் சரிசெய்யக்கூடியவையே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவற்றை அடையாளம் காண்பது மட்டுமே சவாலான பணியாகும். கூடுதல் அக்கறை  செலுத்த வேண்டிய குழந்தைகளின் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்துவிட்டோமென்றால், விரைவாக சிகிச்சையளித்து நல்ல பலனைக் காண முடியும்.

சிகிச்சை என்பது காதுகளில் அடைத்துள்ள அழுக்கை நீக்குவது, கண்பார்வையைச் சீராக்க கண்ணாடி அணியச் செய்வது போன்ற எளிமையான முறையில் தொடங்கி, இக்குறைபாடுகளைச் சீராக்கும் மருந்து -மாத்திரைகள்வரை செல்லும். இந்தச் சிகிச்சை முறைகளில், மற்றக் குழந்தைகளுக்கு இணையாக இந்தக் குழந்தைகளும் செயல்படும் வகையிலான பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும். அதன் மூலமாக அவர்களின் குறைபாடுகள் களையப்படும். சில அபூர்வமான சூழல்களில் இந்தக் குறைபாடுகளைச் சரி செய்யவே முடியாத அளவிற்கும் ஒருசில குழந்தைகள் இருக்கக்கூடும். அவர்களுக்கு உரிய மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டு அதன் மூலமாக டிஸ்லெக்சியா போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் தேர்வெழுதும்போது துணைக்கு ஒரு நபரை வைத்துக்கொள்வதற்கும், டிஸ்கால்குலியா போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு கால்குலேட்டர் போன்ற வசதிகளை அனுமதிக்கவும், கூடுதல் தேர்வு நேரம் வழங்கவும் அனுமதி பெறப்படும். நிறைவாக..

கல்வித்திறன் குறைவாக உள்ள குழந்தைகளை, இவர்கள் புத்திசாலிகளில்லை _ மக்குகள் எனப் பெற்றோரும் ஆசிரியரும் முடிவு செய்துவிடக்கூடாது. (அப்படிச் செய்வதுதான் அறியாமையாகும்) குழந்தைகளின் குறை-பாடுகளை உரிய சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.

தமிழில் : கோவி.லெனின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *