கேமராக்காரன் எங்கப்பா?
போட்டோ எடுத்தாச்சா…?
“தோழரே என்னது நம்ம தெருவுல வெடிச்சத்தமெல்லாம் காதைக் கிழிக்குது? எதும் அரசியல் கட்சி மீட்டிங்கா?” என்று கேட்டபடியே சலூனிற்குள் நுழைந்தார் தோழர் மகேந்திரன்.
“இந்த க்ளீன் இந்தியா திட்டத்துக்காக இன்னைக்கு பி.ஜே.பி. கட்சியிலிருந்து யாரோ ஒரு வி..அய்.பி. இந்தத் தெருவைச் சுத்தம் பண்ண வர்றாராம்! அவருக்கு வரவேற்புதான்!”
“நம்ம தெரு ஏற்கெனவே சுத்தமாத்தான இருந்துச்சு? இப்ப தெருவெல்லாம் வெடிக்குப்பை மட்டும் தான் இருக்கு!”
“அதேதான் தோழர்! ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மாதிரி இந்தக் குப்பைய அந்த வி.அய்.பி.யே பெருக்கப் போறாரு!”
“இதெல்லாம் ஒரு பொழப்பா?!”
“குப்பையே இல்லாத இடத்துல குப்பையைக் கொட்டுறதும், அதை புது விளக்குமாறால கூட்டுற மாதிரி போஸ் கொடுக்குறதுமாத்தான் கூத்தடிக்கிறாங்க தோழரே! வாழ்க்கையில ஒரே ஒரு தடவை வௌக்கமாத்தைப் புடிச்சுக்கிட்டு இம்புட்டு சீன் போடுறாங்களே, நான் ஒவ்வொரு வாடிக்கையாளர் வந்துட்டுப் போன பிறகும் கூட்டிப் பெருக்கிட்டுதான் இருக்கேன்! இதெல்லாம் இவங்களுக்குத் தெரியுமா?”
“அருமை! இப்படி உங்களை மாதிரி ஆளாளுக்குக் கேள்வி கேட்டால்தான் இவங்க கேமராவுக்கு முன்னால நடிக்கிறதை நிறுத்துவாங்க!”
“பின்ன என்ன சார், தூய்மை இந்தியா தூய்மை இந்தியான்னு சொல்றாங்களே, ஒருத்தராவது சாக்கடையை அள்ளுறாங்களா? அல்லது உண்மையிலேயே குப்பைக்காடா கிடக்குற இடத்துல போயி வேலை செய்யறாங்களா? நம்ம மக்களையெல்லாம் அடிமுட்டாள்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க தோழரே!
“சரியா சொன்னிங்க! கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு இவங்க சாக்கடைக்குள்ள இறங்குனால் சாக்கடையே கொந்தளிச்சு சுனாமி வந்திடும் போங்க!”
“ஹ! ஹ! ஹ! நம்ம மக்களையெல்லாம் இப்படி வௌக்கமாத்தைக் காட்டியே ஏமாத்திட்டு, சைக்கிள் கேப்புல ஆஸ்திரேலியாவுல போயி ஒப்பந்தம் போட்டுட்டார்னு பேசிக்கிறாங்களே தோழரே… அது என்ன விஷயம்?”
“நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். காங்கிரஸைக் குத்தம் சொல்லி ஆட்சிக்கு வந்த சூட்டோட ஆர்.எஸ்.எ.ஸ். கொள்கையைப் புகுத்துறதிலும், மோடியோ தொழிலதிபர் நண்பர்களைப் பாதுகாக்கிறதிலும்தான் அக்கறையா இருக்காங்க!”
“ஓகோ! அப்போ ஆஸ்திரேலியா போனது நம்ம நாட்டு மக்களுக்காக இல்லையா?”
“அதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் தோழர். உண்மையில மோடியோட நண்பர் அதானிக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு வியாபாரத்தைப் பேசி முடிக்கிறதுக்காகத்தான் போனதே!”
“அதுக்காக அம்புட்டு தூரம் இவரு போகணுமா என்ன?”
“பின்ன, இதென்ன பத்தாயிரம் இருபதாயிரம் ரூபாய் விஷயமா? ஒரு பில்லியன் டாலர் வியாபாரமாச்சே! நம்ம ஊர் மதிப்புக்கு 6,500 கோடி ரூபாய்! அதுவும் ஆஸ்திரேலியாவுல அதானி தொழில் தொடங்குறதுக்கு நம்மூரு ஸ்டேட் பேங்குதான் கடனுதவி பண்ணுது!”
“அடங்கொய்யால! நம்ம மக்கள் அஞ்சு பத்துன்னு கல்விக்கடன் வாங்கிட்டுக் கட்டலைன்னாலே திருடுன மாதிரி போட்டோவைப் போட்டு அசிங்கப்-படுத்துவாங்க. இதுவே அதானி, அம்பானின்னா மட்டும் “ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” மாதிரி அள்ளிக் கொடுக்குறாங்களா?! அநியாயமா இருக்கே தோழர்!”
“அநியாயம்தான் பண்றாங்க! தெரிஞ்சேதான் பண்றாங்க! இவங்களுக்குத்தான் தெரியுமே, மகாபாரதத்துலதான் அநியாயத்தத் தட்டிக் கேட்க கிருஷ்ணர் வருவாரு, ஆனால் உண்மையில எந்த கிருஷ்ணாவும் வரப்போற-தில்லைன்னு!
தோழரோடு பேசிக்கொண்டே முடி வெட்டி முடிந்ததும் இன்னொரு வாடிக்கையாளர் வருகிறார். அவர் பார்ப்பதற்கு சாமியார் போல முடி வளர்த்தும் காவி உடுத்தியும் இருக்கிறார். “பார்க்கறதுக்கு சாமியார் மாதிரி இருக்கீங்க உங்களுக்குக் கட்டிங்கா? இல்ல ஷேவிங்கா?” என சந்தானம் கேட்க,
“எனக்கு கட்டிங் ஷேவிங் ரெண்டும் தான்!” என்றவர், தொடர்ந்து, “நான் சாமியார்லாம் இல்லப்பா. இந்த சீசன்ல காவி கட்டுனாத்தான் மதிப்பா பார்ப்பானுங்கன்னு காவியில இருக்கேன்! அதுசரி, சாமியார்னாலே தாடிதான் வச்சிருக்கணுமா என்ன? அந்த ராம்பால்னு ஒரு சாமியார் கட்டிங்லாம் பண்ணி தொழிலதிபர் மாதிரியில்ல இருக்காரு!” என்று அவர் சொல்லவும், அவருக்குக் கட்டிங்கைப் பார்த்தபடியே சந்தானம் பேசத் தொடங்கினார்.
“இவர் சொன்ன மாதிரியே தான் தோழர் எனக்கும் டவுட்டா இருந்துச்சு! அப்படியே தொழிலதிபராட்டம்ல இருக்காரு!”
“அவரு உண்மையிலேயே தொழிலதிபர்தான் தோழர். ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியா இருந்ததாலதான் அந்த மாநில அரசாங்கமே அவர் மேல நடவடிக்கை எடுக்கத் தயங்குச்சு! இப்பல்லாம் எந்தச் சாமியார்தான் பூஜை பண்றதுல குறியா இருக்கானுங்க? உண்டியலைக் குறி வச்சுதானே சாமியாராகுறதே! நம்ம கறுப்புப் பணமெல்லாம் வெளி-நாட்டுல இருக்குங்கறதே பொய்யான பேச்சுதான். அம்புட்டும் இந்த மாதிரி கார்ப்பரேட் சாமியார்கள் கையிலதான் இருக்கு!”
“அப்படித்தான் தெரியுது தோழர்! அது-மட்டுமா? ஒன்னாம் நம்பர் கூலிப்படையால்ல இருக்கானுங்க! துப்பாக்கியால சுட வேண்டிய போலீசு கம்முன்னு இருக்கு, அந்தச் சாமியாரோட அடியாளுங்க துப்பாக்கியால போலீசைச் சுடுறானுங்க! ஒரு கொலைக்காக விசாரிக்கப் போயி அங்க ரெண்டு மூனு கொலை விழுந்திருக்குது போல! அவன்லாம் என் கையில சிக்குனான்னா ஒன்லி கட்டிங்தான் தோழர்!”
“இந்தச் சாமியார் போலீஸுக்கெதிரா துப்பாக்கியத் தூக்கினால், இன்னொரு சாமியார் பாபா ராம்தேவுக்கு துப்பாக்கி ஏந்திய இசட் பிரிவு பாதுகாப்புக் குடுக்குறானுங்க! என்ன கொடுமை பார்த்திங்களா தோழர்?”
“அந்த ராம்தேவ் இன்னொரு கறுப்புப்பண தொழிலதிபர்! எப்பப் பார்த்தாலும் சில்க் ஸ்மிதா மாதிரி கவர்ச்சி காட்டிக்கிட்டுத் திரிவான்! அவனுக்கெல்லாம் இசட் பிரிவு இல்ல, “ஏ” பிரிவு பாதுகாப்புதான் கொடுக்கணும்!”
“ஹஹஹ! சாமியார்னு சொன்னதும் தான் இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது, கோவிலில் பூசாரியா அவா மட்டும்தான் இருக்கணும், மத்தவாளுக்கு சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் தெரியாதுன்னு சொல்றாங்க, பின்ன எதுக்கு தெய்வபாஷை சமஸ்கிருதத்தை நாமளும் கத்துக்கணும்னு இந்தத் திணி திணிக்கிறானுங்க தோழர்?”
“இது வேறயா? ஏற்கெனவே இந்தியத்தான திணிச்சுக்கிட்டிருந்தானுங்க? செத்துப்போன சமஸ்கிருதத்தை எதுக்குத் திரும்பவும் திணிக்கிறானுங்க? அவாளுங்களி-லேயே பாதிப் பேருக்கு சமஸ்கிருதம் தெரியாதே!”
“அதேதான்! அதுவும் ஜெர்மன் மொழிக்குப் பதிலா சமஸ்கிருதத்தைத் திணிக்கப் பார்க்குறாங்க!”
“மொழின்னா என்ன தலைக்கு வச்சுத் தூங்குற தலகாணியில பஞ்சடைக்கிறதுன்னு நினைச்சுக்கிட்டாங்களா? கண்டதையும் இப்படித் திணிச்சா கடைசியில பேதி வந்த மாதிரி பாதியிலேயே ஆட்சியை விட்டுட்டு ஓடுற நிலமைதான் வரும்! நீங்க வேணா பாருங்க தோழர்!”
“இவங்க எங்க சுயமா ஆட்சி நடத்துறாங்க? எல்லாம் காங்கிரஸோட பார்ட் 2 தான நடக்குது! அவங்க கொண்டு வந்தப்ப எதையெல்லாம் எதிர்த்தாங்களோ அதை-யெல்லாம்தான் இப்பக் கொண்டு வர்றாங்க! ஆதார் அட்டையை கிண்டல் பண்ணாங்க! இப்போ அதையும் தூசி தட்டுறாங்க! சிலிண்டர் மானியத்தை காங்கிரஸ் சொன்ன மாதிரியே பேங்க்ல டெபாசிட் பண்ணப்போறாங்க!”
“அதான! பிரதமர் பதவின்னா வெளிநாடு சுத்துறதும், கேமராக்காரன் எங்கயிருக்குறான்னு கரெக்டா பார்த்து போஸ் குடுக்குறதும்தான்னு நினைச்சுக்கிட்டார் போல!”
“ஆட்சிக்கு வந்த சில மாதத்திலேயே இம்புட்டு வெறுப்பைச் சம்பாதிக்கிறதுக்குப் பதிலா அந்தப் பதவியை வேற யாருக்காவது குடுத்துட்டு இவரோட வாழறதுக்குத் தயாரா இருக்குற இவரோட முன்னாள் மனைவி-யோடயாவது சேர்ந்து வாழலாம்ல!”
“அதுசரி, ஊருக்குத்தானே கலாச்சாரம், கம்னாட்டியெல்லாம்! சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன ராமனோட வழித்தோன்றல் என்னைக்குப் பெண்ணோட மனசைப் புரிஞ்சு நடக்கும்?
“அதுசரி, முத்தப் போராட்டத்துக்கு எதிரா காறிக் காறித் துப்பும் போராட்டம்னு கலாச்சாரக் காவலர்கள் அறிவிச்சாங்களாமே? என்னாச்சாம்?”
“போராட்டமெல்லாம் நடத்திட்டாங்க!”
“அப்போ அப்படியே “க்ளீன் இந்தியா” திட்டத்தால துப்புனதையெல்லாம் அவங்-களையே துடைக்கச் சொல்லியிருக்கலாம்ல?!”
“ஹஹஹஹ! அதுவும் சரிதான் தோழர்!”
– கல்வெட்டான்