புராணங்களில் அறிவியலைத் தேடலாமா?

டிசம்பர் 01-15

வீரமணி

தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியை முழுமையாக வழிநடத்தும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரியக் கலாச்சாரப் போர்வையில் அரசியல் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் ஆவார்கள்.

அவர்களது கொள்கையைத் திணித்து, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் என்ற தத்துவங்களை கரையான்கள் எப்படிப் புகுந்து அமைதியாகவே புத்தகங்களை அரித்துத் தின்று விடுகின்றவோ அதேபோல், பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புல்லட் ரயில் வேகத்தில் செய்துவிட ஆங்காங்கே முக்கியப் பதவிகளில் எல்லாம் அமைச்சரவை தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். மயமாகி அதன்மூலம் பச்சையாக ஹிந்துத்துவாவை ஆட்சிப்  பீடமேற்றிட ஆலாய்ப் பறக்கின்றனர்!

ஹிந்துத்வா என்பதை உருவாக்கிய வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் முக்கியமான கோல்வால்கர் போன்றவர்களின் தத்துவங்களை ஆட்சியின்மூலம் அமலாக்கிட அதிவேக அவசரம் காட்டுகின்றனர்.

அதற்கான முன்னேற்பாடாக, முக்கிய அறிவியல், வரலாறு, கல்வி போன்ற அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொணர்ந்து அமர்த்தி, அதை நிறைவேற்றிட துடியாய்த் துடிக்கின்றனர்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் என்ற அமைப்பிற்கு வி.சுதர்சனராவ் என்ற ஒரு பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரை நியமனம் செய்து அவர் புராணங்கள், இதிகாசங்கள் இவைகளை, வரலாறுகளாக மாற்றிடத் திட்டமிட்டு, பிரச்சார திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.

வரலாற்றுப் பாடப் புத்தகங்களையே புரட்டிப் போட்டு ஹிந்துத்வாவின் கையேடுகளாக்கிட முனைப்புடன் செயலாற்றி முனைந்து நிற்கின்றனர்.

நாட்டின் பிரபல வரலாற்றுப் பேராசிரியர்களான ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்றவர்களுக்கு மார்க்சிய இடதுசாரி முத்திரை குத்திவிட்டு, தமது கருத்துகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் கூச்சநாச்சமின்றி ஈடுபட்டுள்ளனர்!

ஹிந்துத்துவா கருத்தியலையும் சொல்லையும் உருவாக்கிய வி.டி.சாவர்க்கர் அவரது நூலில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

‘Hinduise  Military
Militarise Hindus’

இராணுவத்தை ஹிந்து மயமாக்கு
ஹிந்துக்களை இராணுவமாக்கு
என்பதே அவ்விரு கட்டளைகள். அதுபோலத்தான் இப்போது,
வரலாற்றைக் காவிமயமாக்கு

காவி(இந்து)_புராண இதிகாசங்களை வரலாறாக்கு என்ற முயற்சியோடு முன்பு வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் முயன்றதைத் தொடருகிறார்கள்.

அதிகப் பெரும்பான்மை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதற்குமேல் ஒருபடி சென்று, இப்போது, ஹிந்துத்துவ புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகளை அறிவியலுக்கு முன்னோடி என்ற ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுதர்சன ராவ் போன்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள்வரை கட்டவிழ்த்துவிட்டு நடத்தி வருகின்றனர்.
இராமாயணம் நடந்த கதை என்கிறார்கள்.

மரபணு ஆராய்ச்சி மஹாபாரதத்திலேயே உள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி – (Transplantation) உறுப்பை வெட்டி இணைத்தல் வினாயகர் கதை மூலம் நமது பரமசிவனே செய்துள்ளார்.

ராக்கெட்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானம் _ இராமாயணத்திலேயே உள்ளது என்று கூறி கொயபெல்ஸின் குருநாதர்களாக ஆகியுள்ளன!.

இதை எதிர்த்து கரன் தாப்பர் போன்ற விமர்சகர்கள் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர்.

ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இதனை மறுத்துக் கூறுகின்றனர்.

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றாளர்களுக்கே அதிக அறிமுகமில்லாத ஆர்.எஸ்.எஸ். நபரான ஆந்திரத்து சுதர்சனராவ் என்பவர் பொறுப்பேற்றதிலிருந்து, தாப்பர் போன்றோர்மீது மார்க்சிஸ்டுகள் என்று சாயம் பூசுவதோடு, வெள்ளைக்காரர்கள் புராணங்களை கட்டுக் கதைகள் என்று கூறிவிட்டனர். இதனை மாற்றி ‘விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ’ இந்தியாவின் வரலாறு இதிகாச புராணங்களிலிருந்து உருவாக வேண்டும் என்று மனம் போனபடி பேசியுள்ளார். எப்படி இனி செய்யப் போகிறார்கள் என்பதற்கான மணியோசை இது. இதனை அத்தனை முற்போக்கு சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்த்தாக வேண்டும். இந்த பத்தாம் பசலித்தன புதுப்பித்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஆங்காங்கு கருத்தரங்கங்களை நடத்திட முன்வர வேண்டும்.

இந்நாட்டு அறிவியலாளர்கள் (Scientists) ஏன் மறுத்து அறிக்கைகள் விடவில்லை என்றுகூட கரன் தாப்பர் போன்றவர்கள் கேட்கின்றனர்.

அதற்கு விடை வெளிப்படையானது. பெரும்பாலான விஞ்ஞானிகள் மத்திய அரசு ஊழியர்கள். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இப்படி அபத்தமான கருத்துகளைக் கூறும்போது அவர்களால் மறுத்துப் பேச முடியாதே; தனியார் துறை விஞ்ஞானிகளும்கூட, பல முதலாளிகளின் அமைப்புகளில் அல்லவா பணிபுரிகிறார்கள்? இவர்கள் அதனால் வாய்மூடி மவுனத்தில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *