மார்க் எடுக்காத குழந்தைகள் மக்குகளா?

நவம்பர் 16-30

படிப்பில் ஆர்வம் குறைந்த பள்ளிக் குழந்தைகளுக்கான சிகிச்சைகளும் தீர்வுகளும்

– டாக்டர் ம.அமலி விக்டோரியா மஸ்கரன்ஹஸ் எம்.டி (மனநலம்)

 

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் உட்கார்ந்து, அவர்களின் வீட்டுப்பாடங்களை முடிப்பதற்கு உதவி செய்வது பொதுவான ஒரு காட்சிதான். பெற்றோரின் எதிர்பார்ப்பு-களுக்கேற்ப பிள்ளைகள் தங்களின் வீட்டுப்-பாடங்களைச் செய்து முடித்தால் அந்த மாலை நேரம் அமைதியானதாகவும் இனிமையான-தாகவும் அமையும். இல்லையென்றால், கீழ்க்காணும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்றையாவது நாம் கேட்க நேரிடும்.

 

இதைக்கூட புரிஞ்சிக்க மாட்டியா?, திரும்பத் திரும்ப ஒரே பாடத்தை எத்தனை தடவை சொல்லிக்கொடுக்கிறது?, நீ கவனிக்கிறியா, தூங்கிக்கிட்டே கனவு காணுறியா?, மனப்பாடம் செஞ்சி எழுது. காப்பியடிக்காதே?, கணக்குன்னா ஏன் இப்படிப் பயந்து சாகுறே?

-இப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒரு சிலவேனும் நம் காதுகளில் விழும். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கேற்ப பிள்ளைகள் வீட்டுப்-பாடத்தைச் செய்யாமல் இருப்பதற்கு சோம்-பேறித்தனமும் ஆர்வமின்மையும் காரணமாக இருக்கலாம். (அவர்களுக்கு ஆர்வம் தரக்கூடிய ஒரு நிகழ்ச்சி கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் அந்த நேரம் ஓடிக்கொண்டிருக்கலாம்). அதே நேரத்தில், சில குழந்தைகளிடம் காணப்படும் குறிப்பிடத்தக்க குறைபாடுகளே வீட்டுப்பாடம் செய்ய முடியாமல் போவதற்கான ஆணிவேர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம். இந்தக் குறைபாடுகள் பள்ளியிலும் குழந்தைகளின் செயல்பாடுகளில் தலை-காட்டுவதால், இயல்பான புத்திசாலித்-தனத்துடன் இருக்கும் பிள்ளைகளும் சரி, கூடுதல் புத்திக்கூர்மையுடன் உள்ள பிள்ளைகளும் சரி, குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்குக் காரணமாக அமைகிறது.

இயல்பான புத்திசாலித்தனத்துடனான பிள்ளைகளும் புத்திக்கூர்மையுடன் உள்ள பிள்ளைகளும் தேர்வில் மதிப்பெண்களைக் குறைவாகப் பெறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் மட்டுமே குழந்தைகளின் அறிவை அளவிடும் அளவுகோலாக நீண்டகாலமாக இருந்து வருவதால், துரதிர்ஷ்டவசமாக இத்தகைய குழந்தைகள், பள்ளிகளில் மக்குப் பிள்ளைகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள். உண்மையிலேயே இக்குழந்தைகளில் பலர் நல்ல  புத்திக்-கூர்மையுடன் மட்டுமின்றி ஒழுக்கம், அர்ப்-பணிப்பு, கடின உழைப்பு கொண்டவர்களாக இருந்தும் அவர்களால் பள்ளிக்கல்வியைச் சரியாக முடிக்க முடியாமல் பாதியிலேயே பள்ளியைவிட்டு நிற்க வேண்டிய சூழலுக்-குள்ளாகிறார்கள். இந்த இடைநிற்றலுக்குக் காரணம், அவர்களுக்குரிய பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணப்படாததும், அது குறித்த அவர்களின் பெற்றோரின் குறைவான விழிப்புணர்வுமேயாகும். எனினும், இது இப்போது உருவான பிரச்சினை அல்ல. இக்காலத்தில் நம்மால் இப்பிரச்சினைகள் குறித்து ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு பெருமளவில் சரி செய்யமுடியும். அதன் மூலமாக குழந்தைகளை இத்தகைய சூழல்களிலிருந்து மீட்டு, படிப்பில் அவர்களுக்குள்ள குறை-பாடுகளைச் சரிசெய்ய முடியும்.

இயல்பான அறிவாற்றல் உள்ள குழந்தைகள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதற்கான காரணங்கள்

குழந்தைகளில் இயல்பான அறிவாற்றலும் கூடுதல் அறிவாற்றலும் உள்ளவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, மக்குப் பிள்ளைகள் எனப் பள்ளிகளில் முத்திரை குத்தப்படுவதற்கு பின்வரும் நிலைப்பாடுகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களோ இருக்கும்.

உடல்ரீதியான காரணங்கள், தாமதமான வளர்ச்சி, மொழி _ -பேச்சு -_- உடல் செயல்-பாட்டுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள், கல்வித் திறனில் குறிப்பிடத்தக்க தாமதம், கவனச்சிதறல், உணர்ச்சிவயப்படுதல், நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளிட்டவை அத்தகைய காரணங்களாகும்.

இதுகுறித்த விவரத்திற்குள் நாம் செல்வதற்கு முன், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மனிதர்களைப் பொறுத்தவரை, இயல்பான என்ற வார்த்தை, குறிப்பிட்ட மதிப்பைக் குறிப்பிடுவது அல்ல. குறிப்பிட்ட வரையறையைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, இயல்பான உயரம் என்று குறிப்பிட்ட அளவு எதுவும் கிடையாது. ஆனால் இத்தனை அடியிலிருந்து இத்தனை அடி வரை இருந்தால் இயல்பான உயரம் என வரையறை செய்துள்ளோம். அதுபோலவே உணவுக்கு முன்பாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுக்கும் இயல்பான வரையறை ஒன்று இருக்கிறது. உதாரணமாக, 80 – 120 mg/dl எனக் கொள்கிறோம். அதுபோல மனது மற்றும் உடலுக்கான இயல்பான வளர்சசி என ஒரு வரையறை உண்டு.

குறைந்த கல்வித்திறனுடன் இருப்பதற்கான உடல்ரீதியான காரணங்கள்

பள்ளியில் குறைந்த திறனை வெளிப்படுத்தும் பிள்ளைகளுக்கு மூன்று வகையில் உடல்சார்ந்த பிரச்சினைகள் இருக்கலாம். பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மூளைத்திறன் குறைபாடு. ஆகியவையாகும். கரும்பலகையில் எழுதிப்போடுவதை நோட்டுப்-புத்தகத்தில் எழுத முடியாமலோ, அல்லது ஆசிரியர் சொல்வதைக் குறிப்பெடுக்க முடியாமலோ உள்ள குழந்தைகளைக் கவனக்-குறைவான குழந்தைகள் என்றோ, சோம்பேறிக் குழந்தைகள் என்றோ முடிவு கட்டிவிடாமல், அவர்களுக்கு பார்வைக் குறைபாடோ அல்லது செவித்திறன் குறைபாடோ நிச்சயமாக  இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கண் மருத்துவரிடமோ, காது-_மூக்கு_-தொண்டை மருத்துவரிடமோ அவர்களைக் காட்டுவது, பள்ளியில் அந்தக் குழந்தைகளின் செயல்-பாடுகளை அதிகரிக்க உதவும்.

நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய மூளைத்திறன்  குறைபாடு என்பது மற்றொரு முக்கிய அம்சமாகும். நரம்பு பாதிப்பு என்ற சொல்லைக் குறிப்பிட்டதும் வலிப்பினால் கை, கால்களை உதறும் மனிதர்களின் பயங்கரமான உருவம் உங்கள் மனக்கண்ணில் தோன்றக்கூடும். பள்ளிக்குழந்தைகளைப் பொறுத்தவரை திடீரென அவர்களின் நினைவாற்றலில் ஒரு தேக்கம் ஏற்படும். அது பழைய நினைவுகளை இழக்கும் அளவிற்கு இருக்காது. சில விநாடிகளுக்கு மட்டுமேயான இந்த நரம்பு மண்டல பாதிப்பும் நினைவாற்றல் தடுமாற்றமும் மீண்டும் சரியாகிவிடும். எனினும், இத்தகையை குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் திடீர் திடீரென விழிப்பதும், கண்களைச் சிமிட்டுவதும், கைகளை உதறுவதுமாக இருக்கும்.

மரபணு சார்ந்த இத்தகைய குறைபாடுகள் 4 முதல் 8 வயது வரையிலோ, அல்லது பதின்-பருவ வயதின் தொடக்கத்திலோ 15 முதல் 20 விழுக்காடு குழந்தைகளுக்கு இருக்கிறது.

இத்தகைய நினைவாற்றல் தேக்கம் ஒரு-நாளைக்கு நூற்றுக்கணக்கான தடவை  அந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்டாலும் அவை அதுபற்றி உணரக்கூடியவைகளாகவோ அது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடிய அளவிலோ இருக்காது. அந்தளவுக்கு இந்தப் பிரச்சினை மிக நுண்ணிய அளவில் இருப்பதால், இதுகுறித்த முன் அனுபவம் ஏதுமற்ற பெற்றோர்களாலும் இதைக் கண்டுபிடிப்பது கடினம். இந்தக் குறைபாட்டை சரியாக உணர்ந்து, உரிய முறையில் சிகிச்சை  அளித்தால், அத்தகைய குழந்தைகள் ஒரு சில வாரங்களில் தங்கள் கல்வித்திறனில் மேம்பாடு அடையும்.

தாமதமான  வளர்ச்சி

ஒரே  நாளில் விதைக்கப்பட்ட எல்லா விதைகளும் எப்படி ஒரே நாளில் சீராக முளைத்து-விடுவதில்லையோ அதுபோலவே எல்லாக் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் வளர்ச்சியும் ஒரே சீராக இருப்பதில்லை. சிலருடைய வளர்ச்சி மெதுவாகவே இருக்கும்.

மொழி – பேச்சு – உடல்திறன் மேம்பாட்டு சிக்கல்கள்

படிப்பது, எழுதுவது, ஒரு கோடு வரைவது எல்லாமே குழந்தைகளுக்குச் சிக்கலான செயல்பாடுகள்தான். இதற்கு நன்கு வளர்ச்சி-பெற்ற மூளை, நரம்பு, தசை, மூட்டு ஆகியவை தேவை.

I என்ற ஆங்கில எழுத்தை எழுதுவதற்கு ஒரு டஜன் தசைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவற்றை மூளை கட்டுப்படுத்தும்.

G என்ற ஆங்கில எழுத்தை எழுதுவது கூடுதல் சிக்கலானது. வலது கையில் உள்ள 40 தசைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில குழந்தைகளுக்கு எலும்புகள், மூட்டுகள், தசைகள், சவ்வுகள் ஆகியவை விரைவாக வளர்ச்சியடைந்துவிடும். சில குழந்தைகளுக்கு இவற்றில் ஒரு சில மெதுவாக வளர்ச்சியடையும். அதனால் அவற்றின் செயல்பாட்டின் மூலமாக செய்ய வேண்டிய பணிகளில் அத்தகைய குழந்தைகள் சிரமப்படும். எனினும் அவை சீராக வளர்ந்தபிறகு, மற்ற குழந்தைகளைப் போல இந்தக் குழந்தைகளும் செயல்படும். இது குறித்து கவனம் செலுத்தி, குழந்தைகளின் வளர்ச்சி நிலை குறித்த உண்மையை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

வளர்ப்போம்…

அண்மையில் மறைந்த டாக்டர் அமலி விக்டோரியா அவர்கள், குழந்தைகளின் படிப்பார்வம் குறித்தும், அவற்றை மேம்படுத்துவது குறித்தும் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *